சீதைக்குத்தான் தாயே இல்லையே. ஜனக மகாராஜா ஒரு வேள்வி முடிந்ததும் பூமியைக் கலப்பை கொண்டு உழுதபோது பூமியில் இருந்து வெளிப்பட்டவள்தான் சீதை. மிகவும் அழகுடன் திகழ்ந்த அக்குழந்தையை ஜனகமகாராஜா தன் மகளாக எடுத்து வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அசோகவனத்தில் சீதையைக் காவல் காத்த இயக்கர்குலப் பெண்ணான திரிசடை சீதைக்கு எப்படித் தாயாவாள். அதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஆரண்யவாசத்தில் ஒரு நாள் மாரீச மாய மானை உண்மை மான் என நம்பி சீதை கேட்டதும் ராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அப்போது சந்நியாசி வேடத்தில் வந்து இராவணன் சீதையைப் பூமியோடு பேர்த்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு எடுத்துச் சென்று தன்னை மணக்கும் படி வேண்டினான். சீதை மறுக்கவே அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது அவளைக் காவல் காக்க பல இயக்கர் குலப் பெண்களை நியமித்தான். அவர்களுள் ஒருத்திதான் திரிசடை.
ஆமாம் யார் இந்த திரிசடை. அண்ணனே ஆனாலும் இராவணனின் அநியாயத்தை எதிர்த்து நியாயத்துக்குக் குரல் கொடுத்த விபீஷணனின் மகள்தான் இவள். இவளும் பண்பும் அன்பும் வாய்ந்தவள்.
சுற்றிலும் பெரிய உருவங்களாய் கடுமையான பார்வையோடு இயக்கர் குலப் பெண்கள் தீவிரமாய் காவல் இருக்கிறார்கள். இவர்கள் நடுவே அழுது வெம்பி துடித்துச் சோர்ந்து அமர்ந்து இருக்கிறாள் சீதை. சிலகணம் ராமனை எண்ணி ஏங்குவாள். மாய மானைப் பிடிக்கத் தான் இராமனை அனுப்பியது தவறு என வருந்துவாள்.
அப்போதெல்லாம் திரிசடை சீதையின் பக்கம் இருந்து தேற்றுவாள். சீதையும் தன் துயரை எல்லாம் தோழி போல திரிசடையிடம் சொல்லி ஆறுதல் அடைவாள். சீதையை விட இளையவள்தான் திரிசடை. ஆனால் இயக்கர் குலத்தில் பிறந்தாலும் அவள் பிற உயிர்க்குத் துன்பம் விளைவிக்க மாட்டாள். தன் உயிர்போல எண்ணுவாள்.
”திரிசடையே ,என் இனிய தோழியே இராமர் மிதிலைக்கு வில்லொடிக்க வந்தபோது என் இடது கண் துடித்தது. இன்றும் அதேபோல் இடது கண் துடிக்கிறது. இதனால் எனக்கு ஏதும் நன்மை உண்டா. ”
இதைக் கேட்ட திரிசடை ”தேவி நான் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பொன் நிறத் தும்பி உன் காதில் வந்து ஊதிப்போனது கண்டேன். அதனால் இராமர் வருவார். நீ அவரிடம் நலமுடன் சென்று சேர்வாய். இவர் அனுப்பும் தூதன் உன்னைக் காண வருவான். உனக்குக் கொடுமை செய்தவர்கள் அழிவார்கள். கவலைப்படாதே “ என்று ஆறுதல் கூறுகிறாள்.
“அஹா திரிசடை என் தாய் போல் நற்சொல் சொன்னாய். நன்றியம்மா உனக்கு “ என்று சீதை திரிசடையைத் தன் தாயாய்க் காண்கிறாள்.
ஆனால் மறுநாளே இராவணன் அரம்பையர் சூழ சீதை அருகே வருகிறான். வந்து ” என்னை மணந்து கொள். இல்லாவிட்டால் இராமனை மட்டுமல்ல. அயோத்தி சென்று பரதனையும் கூட அழிப்பேன். அதன் பின் உன்னையும் வந்து கொல்வேன். “ என்று கர்ஜித்துவிட்டு இயக்கர் குலப் பெண்களிடம் ‘சீதையை என் சொற்படி நடக்க வையுங்கள். இது என் ஆணை “ என்று கட்டளை இட்டுச் செல்கிறான்.
மன்னனின் ஆணை அல்லவா. இயக்கர்குலப் பெண்கள் சீதையை மிரட்டியும் அதட்டி உருட்டியும் பணிய வைக்க முயல்கிறார்கள். அப்போது அங்கே வருகிறாள் திரிசடை. ” என்னம்மா இது ? ஏன் இப்படி கலங்குகிறாய் ? உனக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன் கேள் “ என்று சீதையின் காதில் சொல்கிறாள். “ தேவி , இராவணன் எந்தப் பெண்ணையும் அவள் சம்மதமின்றித் தொட்டால் அவன் தலை வெடித்துவிடும் என்று சாபம் பெற்றிருக்கிறான். அதனால்தான் உன்னைத் தொடவில்லை. மேலும் அதனால்தான் உன்னை பூமியோடு பேர்த்து புஷ்பகவிமானத்தில் எடுத்து வந்திருக்கிறான். அதனால இராவணன் உன் விருப்பம் இல்லாமல் உன்னைத் தொடவே முடியாது. கவலைப் படாதே “ என்று ஆற்றுப்படுத்துகிறாள்.
“ஆஹா அம்மா திரிசடை இரண்டாம் முறையாகவும் நற்செய்தி சொன்னாயம்மா. என் தாய் போல ஆறுதல் கூறிக் காக்கும் உனக்கு என்ன செய்வேன் “ என நெகிழ்கிறாள்.
அத்தோடு விட்டானா இராவணன். மூன்றாம் முறையாக மாய ஜனகனை உருவாக்கி அவனை சங்கிலியால் பிணைத்து சீதையிடம் இழுத்து வருகிறான். மாய ஜனகன் சீதையை இராவணனை மணந்துகொள்ளச் சொல்ல திரிசடையோ அவன் மாய ஜனகன் உன் உண்மையா தந்தை ஜனகன் அல்ல என்று சீதையிடம் தெளிவுபடுத்துகிறாள்.
போர்க்களத்தில் இராவணன் மகன் இந்திரஜித் இராமர் படையை நோக்கி பிரம்மாஸ்திரம் எய்ததும் அனைவரும் மயங்கி விழுகிறார்கள். அப்போது புஷ்பக விமானத்தில் சீதையை ஏற்றிப் போய் இராவணன் இராமன் பக்கம் அனைவரும் இறந்துவிட்டார்கள். இராமனும் இறந்துவிட்டான் எனக் காட்டுகிறான்.
கலங்கும் சீதையிடம் திரிசடை ,” ஏனம்மா சும்மா சும்மா கலங்குகிறாய். இராவணன் அனைத்து மாயா வித்தைகளும் செய்வான். இராமர் உடலில் அம்பே பாயவில்லை பார் . அதுவும் போக இந்த புஷ்பகவிமானம் அமங்கலமான பெண்ணை சுமக்காது. எனவே நீ சுமங்கலிதான். இராமர் இன்னும் இறக்கவில்லை. அது மாயத் தோற்றம். “ என்கிறாள்.
மேலும் சீதையை அணைத்துக் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் மொழி சொல்கிறாள். அதைக் கேட்டதும் தெளிந்த சீதை “ திரிசடை நீ என்னை மும்முறை காத்தாய் . நீ எனக்குத் தாய் மட்டும் இல்லையம்மா. என் தெய்வமும் கூட. உன் வார்த்தைகளே நான் இதுவரை உயிர்வாழக் காரணம் “ என்று புளகாங்கிதம் அடைத்து திரிசடையை வாழ்த்துகிறாள்.
இயக்கர் குலப் பெண்ணானாலும் சீதையின் மனம் கவர்ந்து அவளின் ஆத்மார்த்தத் துணையாகித் தாயும் தெய்வமும் ஆன திரிசடையின் பண்பு சிறப்பானதுதானே குழந்தைகளே.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 13 .3. 2020 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 13 .3. 2020 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
அண்மையில் திரிசடை பற்றி பகிர்ந்திருந்தேன்
பதிலளிநீக்குவழக்கம்போல ரசித்துப் படித்தேன், மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபார்க்கிறேன் பாலா சார்
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!