எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். கலையரசியின் தட்டச்சு நினைவுகள்.

ஞா. கலையரசி.  இவர் எனக்கு வலைப்பூவின் மூலம்தான் அறிமுகம். எனது அன்னபட்சியைப் படித்து மிகச் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார். அட நம் கவிதை நூலுக்கு எங்கிருந்தோ ஒரு அங்கீகாரம் அதுவும் ஒரு வலைப்பதிவரிடமிருந்து என ஆச்சர்யமாக இருந்தது. மிக அருமையான விமர்சகர்.

இவரது சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறார். இரு குழந்தைகள். இருவருக்கும் மணமாகிவிட்டது.  கலையரசி ஸ்டேட்பாங்கில் சீனியர் ஸ்பெஷல் அசிஸ்டென்ட் ஆகப் பணிபுரிகிறார். வாசிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் இவரது தந்தையே எனக் கூறுவார். . இவரது தந்தை சொ. ஞானசம்பந்தன் அவர்கள் இலக்கியச்சாரல் எனும் வலைப்பூவை நடத்துகிறார்கள்.  நம்ம கீத்ஸ் என்னும் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இவரின் சொந்த தம்பி மனைவி. அவங்களும் சகலகலாவல்லி :)
 
தன்னைப் பற்றிக்கூறும்போது ஞா கலையரசி அவர்கள் “ உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ” என்கிறார். அருமையான நம்பிக்கையும் ஈடுபாடும். வாழ்த்துகள் கலை. 

என் ப்லாகுக்காக சாட்டர்டே போஸ்ட் ஏதும் எழுதித்தாங்க என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதியது இங்கே.


///தட்டச்சு நினைவலைகள்


கணிணி  புழக்கத்துக்கு வரத் துவங்கிய பிறகு, தட்டச்சு இயந்திரத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததுஅக்காலத்தில், அலுவலகப் பணிகளில், இந்த இயந்திரம் பிடித்திருந்த முக்கிய இடத்தை, இப்போது  கணிணி பிடித்து விட்டது. 

இதன் காரணமாக, மும்பையில் 1900 ஆண்டு முதல் இயங்கி வந்த  ’கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் கம்பெனி,  2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில், கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிய, பெரும்பாலான பட்டதாரிகளுக்குப் புகலிடம் அளித்தவை,  தட்டச்சுப் பயிற்சியகங்கள் தாம்.

பி., பி.எஸ்ஸி முடித்த பிறகு, மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், பொழுது போவதற்காக இதில் சேர்ந்தவர்களும் உண்டு. 

கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால்,  தட்டச்சுப் பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.  எனவே டிகிரி முடித்த பிறகு, எங்கள் ஊரில் ’ஸ்கூல் ஆப் காமர்ஸ், என்ற பெயரில் இயங்கிய தட்டச்சுப் பயிற்சியகத்தில்,  நானும் சேர்ந்தேன். 

எழுத்துக்கள் கைகளுக்கு, நன்கு பரிச்சயம் ஆகும்வரை தினமும் ஒரு மணி நேரமும், தேர்வுக்குச் செல்ல விருப்பவர்கள், இரண்டு மணி நேரமும் பயிற்சி எடுத்துக் கொள்வர்.  ஒரு மணி நேரத்திற்கு,  மாதம் இருபது ரூபாய்(!).   நாமே வீட்டிலிருந்து. தாள் எடுத்துச் செல்லவேண்டும். ஒரு மணி நேரத்துக்கொரு தடவை, இரண்டு தாள்களைக் கையில் சுருட்டியவண்ணம், இளவயது பெண்களும் ஆண்களும், இப்பயிற்சியகங்களுக்குப் படையெடுப்பது, கண்கொள்ளாக் காட்சி! 

முதல் வகுப்பில்  asdfgf ;lkjhj  அடித்துப் பழக வேண்டும்.  துவக்கத்தில், நல்ல இயந்திரத்தைத் தர மாட்டார்கள்.
ஒவ்வொரு விசையிலும் (KEY) ஏறி மிதித்தால் தான், கொஞ்சம் அசைந்து கொடுக்கும்.

அவ்வளவு பழமையானதும், தட்டச்சு கண்டுபிடித்த காலத்தைச் சேர்ந்ததும், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியதுமான, ஓட்டை இயந்திரங்களைப் புதிதாகச் சேருபவர்களுக்கென்றே, பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்திருப்பார்கள்! .

ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துப் பார்த்துத் அழுத்தி, அழுத்தித் தட்டச்சு செய்வதற்குள், விரல்கள் வீங்கி வலிக்கத் துவங்கும்.

பல  சமயங்களில், ஓர் எழுத்தின் மீது அமுக்கினால், இரண்டு மூன்று, எழுத்துக்கள் இணைபிரியா நண்பர்களாக ஒன்றொடு ஒன்று பின்னிக்கொண்டு, எழுந்து நின்று போஸ் கொடுக்கும்!.   

தலையில் ஒன்று வைத்து, ஒவ்வொன்றாக விலக்கிக் கீழே தள்ளி விட்டுத் தட்டச்சு செய்ய வேண்டும். 

சில எழுத்துக்களுக்குச் சுண்டு விரலைப் பயன்படுத்த வேண்டும். அதுநாள் வரை, இவ்விரலைத் தனியாக எதற்கும் பயன்படுத்திப் பழக்கப்படாததால், தட்டச்சு செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கும்.  எனவே வேறு ஒரு விரலால் சுண்டு விரலைப் பிடித்து, அழுத்தித்  தட்டச்சு செய்தது, இன்னும் நினைவில் இருக்கிறது.

துவக்க காலத்தில், பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள், இயந்திரத்தைப் பார்க்காமல்,  வேகமாகத் தட்டச்சு செய்வதைப் பார்த்து வியப்பாக இருக்கும்.  நாமும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற ஆசையில், இரண்டு மூன்று வரிகளைப் பார்க்காமல் அடித்து விட்டுத் திரும்பப் படித்துப் பார்த்தால், நம் தாளில், அகராதியில் இல்லாத புதுப்புது வார்த்தைகள்  இடம்பெற்று, ஆங்கில மொழிக்கு வளம் சேர்க்கும்!

சமயத்தில் கர்மமே கண்ணாகக் குனிந்து கொண்டே, தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தால், எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், இயந்திரம் தாவித் தாவிக் குதித்துப் போய்க் கடைகோடியில் நிற்கும்.

நாம் மாய்ந்து மாய்ந்து தட்டச்சு செய்தவை, தாள் முடிந்து போனதால்,அந்த உருளையின் மீதே பதிவாகியிருக்கும்.  இயந்திரத்தைத் திரும்பப் பழைய இடத்துக்குக் கொண்டு வந்து, மறுபடி தட்டச்சு செய்ய வேண்டும். 

இந்த லட்சணத்தில், ஏற்கெனவே பல மாதங்கள் உழைத்துழைத்து, உருக்குலைந்த சிவப்பு கருப்பு ரிப்பன், அடிக்கடி கழன்று கொண்டு, வெளியில் வந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தும்.  

’அப்படியும் விடுவேனா பார், என்று சொல்லி ரிப்பனைத் திரும்ப மாட்டி, நம் பலம் முழுவதையும் விசையின் மீது பிரயோகித்துத் தட்டச்சு செய்தால், ரிப்பன் நடுவில் கிழிந்து, நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்களின் நடுப்பகுதியைத் துண்டாக்கி பெப்பே காட்டும்!
இதனால் நாம் தட்டச்சு செய்த, எழுத்துக்களின் நடுப்பகுதி வெட்டப்பட்டு, மேற்புறமும், கீழ்ப்புறமும்  மட்டுமே பதிவாகிக் குற்றுயிரும், கொலையுயிருமாகக் காட்சியளிக்கும்!

கிடைக்கின்ற ஒரு மணி நேரத்தில், இயந்திரத்துடனான இத்தகைய  போராட்டத்தின் விளைவாக, கொஞ்ச நாட்களிலேயே  மாஸ்டரைக் கூப்பிடத் தேவையின்றி, ரிப்பன் மாட்டுவது  உட்பட, சின்னச் சின்ன மெக்கானிக் வேலைகளும், நமக்கு அத்துப்படியாகிவிடும்!

எல்லா எழுத்துக்களையும்  பழகிய பிறகு,  ‘Pack my box with five dozen liquor jugs,’ என்றோ  ‘The quick brown fox jumps over the lazy dog,’ என்றோ திரும்பத் திரும்ப அடித்துப் பழக்வேண்டும்.  இவற்றில் 26 ஆங்கில எழுத்துக்களும்  இருப்பதால், கைகளுக்கு நல்ல பயிற்சி. 

(இது போல் எல்லா எழுத்துக்களும் அடங்கிய வரிக்கு ஆங்கிலத்தில் PANGRAMS என்று பெயர்).

நாம் தட்டச்சு செய்தவற்றை, மாஸ்டரிடம் காட்டித் திருத்திக் கொண்டு செல்ல வேண்டும்.  தப்புத் தப்பாகத் தட்டச்சு செய்தவர்களைப் ”பாப்பாத்தியம்மா, மாடு கட்டுனா கட்டு; கட்டாட்டிப் போங்கிற கதையா, நீயும் டைப் அடிக்க வந்துட்டுப் போறே, என்று அர்ச்சனை செய்து கொண்டே மாஸ்டர் திருத்தித் தருவார். 

கிளார்க் வேலையில் சேர்ந்த பிறகு,  இந்தத் தட்டச்சுப் பயிற்சி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.  அக்காலத்தில் ஜெராக்ஸ் வசதியில்லை.  எனவே எல்லாவற்றையும் தட்டச்சு தான் செய்ய வேண்டும். இதில் தவறுகளை நீக்கவோ, அழிக்கவோ இயலாது.  எனவே தவறில்லாமல் தட்டச்சு செய்ய, மிகவும் கவனம் தேவை. இல்லையேல் திரும்பவும் செய்யச் சொல்லி விடுவார் மேலதிகாரி.

மூன்று நான்கு காப்பி எடுக்க வேண்டும் என்றால், கார்பன் வைத்து, விசையை மிகவும் அழுத்தித் தட்டச்சு செய்ய வேண்டும். அதற்கு மேல் காப்பி வேண்டும் என்றால், மீண்டும் முதலிலிருந்து தான், தட்டச்சு செய்ய வேண்டும். 

பத்துக்கு மேல் பக்கங்கள் தேவைப்பட்டால்,  ஸ்டென்சில் கட்டிங் என்று ஒன்று இருந்தது.  தாளை இயந்திரத்தில் வைத்துத் தட்டச்சு செய்து, அதனை பிரிண்ட் போட்டுக் கொள்வர்.

கணிணியில், இந்த இயந்திரத்தின் குறைகள் அனைத்தும் களையப்பட்டு, தட்டச்சு செய்வது மிகவும் எளிதான காரியமாகி விட்டது. எனவே இக்காலத்தில் இதைச் சீந்துவார் யாருமில்லை என்றாலும், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்களுக்கு, அந்நாட்களும், அனுபவங்களும், மிகவும் இனிமையானவை. 

முதல் வேலையில் சேர்வதற்கும்,  இன்று கணிணியில்  வேகமாகத் தட்டச்சு செய்வதற்கும் உதவிய, அந்தத் தட்டச்சு இயந்திரத்தை, நன்றியோடு நினைவு கூர்கிறேன். ///

டிஸ்கி:- அஹா என்னவொரு இனிமையான நினைவுகள். நானும் தட்டச்சியிருக்கிறேன். அதே asdfgf :lkjhj ஹிஹி. அதே 26 எழுத்துக்கள். அதே புராதன மிஷின்.பிட்டு பிட்டு எழுத்துக்கள். அதே ஸ்கூல் ஆஃப் காமர்ஸ், ( உரிமையாளர் எனத் தெரியாமல் வயதான வாத்தியாரிடம் மிஷினைக் கோள் சொல்லித் திட்டு வாங்கியது ) அதே மரப்படிகள். அதே கொப்புடையம்மன் கோயில் எதிரில் தேருக்குப் பக்கத்தில் அமர்ந்து பரிட்சைக்காக டைப்பியது. எல்லாம் மறக்க மனம் கூடுதில்லையே :) திரும்ப ஒருமுறை ஹையர் ஆங்கிலம் டைப்படித்து வந்தேன். ஷார்ட் ஹேண்ட், ஹிந்தி, எம் ஏ பொலிட்டிகல் சயின்ஸ்.. ஆனால் வேலைக்கு எல்லாம் போகலை. :)

ஆனா இன்னிக்கும் நான் ஃபாஸ்டா ஆர்ட்டிகிள் டைப்புறேன் என்றால் அது அந்த டைப்ரைட்டிங் பயிற்சியாலேதான். இன்னிக்கும் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் இருக்கு. அன்னிக்கும் டைப்பும் ஸைட்டும் இருந்தது. ( ஐ மீன் படங்களில் ஹிஹி ) இன்னிக்கு டைப் இருக்கு ஸைட் இருக்கான்னு தெரில. சினிமாக்கள் பார்க்குறதுல நான் பின் தங்கி இருக்கேன். :) 

நல்ல இடுகை கொடுத்து நினைவலைகளில் முக்கி எடுத்துத் தட்டாமாலை சுத்த வைச்சதுக்கு நன்னி கலை. :) :) :) சாட்டர்டே போஸ்டை மீளா நினைவுகளில் மீட்டியமைக்காக அன்பும் வாழ்த்தும். வாழ்க வளமுடன்.

36 கருத்துகள்:

  1. சிறந்த அறிஞரைப் பற்றி
    அறிய முடிந்தது சிறப்பு!

    அம்மா!
    "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
    அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
    முழு விரிப்புமறிய
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
  2. அட! நம் கலையரசி சகோதரி! அவரும் சகோ கீதா மதிவாணன் அவர்களும் உறவு என்பது புது தகவல் ஆனால் சகோ கீதா மதிவாணன் அவர்கள் தனது மாமனார் திரு சொ ஞானசம்பந்தனைப் பற்றி எழுதியிருந்த நினைவு....தட்டச்சுக்கலை! அதுதானே இன்று கணியில் அடிப்பதற்கு ஆதாரம்...நல்ல நினைவுப்பதிவு!!

    கீதா: மேற் சொன்ன கருத்துடன்....என் நினைவுகளை அப்படியே மீட்டெடுத்தது. நானும் தட்டச்சு லோயர் ஹையர் பாஸ் செய்திருக்கிறேன்....முதலில் கற்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும் இதோ இப்போது கணியில் வேகமாக என்னால் அடிக்க முடிகிறது என்றால் அன்று தட்டச்சு கற்ற காரணம்தான்...பார்க்காமலேயே அடித்துக் கொண்டு போகும் கை..இடது கை asdf....வலது கை ;lkj என்று அடித்து அடித்து ...
    கார்பன் வைத்து காப்பி எடுப்பது அழுத்தி அடிக்க வேண்டும் என்பது எல்லாம் அப்படியே நினைவுகளுக்குக் கொண்டு சென்றது...

    சகோ புதுச்சேரி என்பதும் தகவல். நான் 5 வருடங்கள் மகனின் படிப்பிற்காக புதுச்சேரியில்தான் இருந்தேன். இப்போதும் எனக்கு புதுச்சேரியுடனான உறவு தொடர்கிறது. அடிக்கடி பயணம் செய்யும் ஊர். எனக்குப் பிடித்த ஊரும் கூட...பகிர்விற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. கல்லூரிக் காலங்களில் விளையாட்டாகத் தட்டச்சு வகுப்பிற்குச் சென்றதுதான் இன்று வரை எனக்குக் கைகொடுத்து வருகிறது.
    பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தபோதும், சம்பளப் பட்டியலை மாதாமாதம் தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறேன்
    வலைப் பூ ஆரம்பித்த பிறகும் அந்த தட்டச்சு அனுபவம்தான் இன்றும் பேருதவியாய் இருக்கிறது
    தட்டச்சு வகுப்பிற்குச் சென்ற அக்கால நினைவுகளை மீண்டும் மனதில் வலம் வர வைத்துவிட்டார் சகோதரி
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. வங்கியில் பணிபுரியும் பலர் தமிழ்ப்பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள். கலையரசி மேடமும் வங்கியில் பணிபுரிகிறார் என்பது இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

    அன்று தட்டச்சு வகுப்பில் நானும் சேர்ந்து தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஹையர் பாஸ்! ஹிந்தி வகுப்பிலும், ஹிந்தித் தட்டச்சில் சேர்ந்தேன். ஹிந்தி பாஸ் செய்த அளவு கூட, ஹிந்தித் தட்டச்சு வகுப்புக்குச் செல்லவில்லை!

    PANGRAMS பயிற்சியின்கூடவே ஆங்கில ஆல்பபெட்ஸ் தலைகீழாகவும் தட்டச்ச வேண்டும். அந்த வழியில் ABCD தலைகீழாகச் சொல்ல மனனம் ஆகியிருந்தது அப்போது! இப்போது மறந்து விட்டது! வகுப்பில் மட்டமான இயந்திரங்களைத் தந்தாலும் தேர்வின்போது நல்ல மெஷின்கள் தருவார் மாஸ்டர், ஒரு எச்சரிக்கையோடு "வகுப்பில் அடிப்பது போல படபடவென அடிக்காதீங்க... போப் பரிக்கரா மாதிரி எழுத்துகளை பறிக்கனும் என்பார்!

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமான சாட்டர்டே போஸ்ட்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா.. அழகான மலரும் நினைவுகள்... தட்டச்சு பழகும் காலத்தில் என்னென்ன அனுபவங்கள்.. எப்படியெப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத் தேறினோம் என்று இப்போது நினைத்தாலும் வியப்புதான்.

    \\நாமும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற ஆசையில், இரண்டு மூன்று வரிகளைப் பார்க்காமல் அடித்து விட்டுத் திரும்பப் படித்துப் பார்த்தால், நம் தாளில், அகராதியில் இல்லாத புதுப்புது வார்த்தைகள் இடம்பெற்று, ஆங்கில மொழிக்கு வளம் சேர்க்கும்!\\ மிகவும் ரசித்து சிரித்த வரிகள். நம் தலைமுறையோடு முடிந்துவிட்ட பல அழகிய அனுபவங்களுள் இதுவும் ஒன்று. மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் அக்கா.

    தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று தட்டச்சுகளையும் ஒரே நேரத்தில் பயின்று ஒருநாளைக்கு ஐந்து முதல் ஆறுமணி நேரத்தைத் தட்டச்சியே கடத்தியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. தமிழும் ஆங்கிலமும் ஒரே தட்டச்சுப் பள்ளி என்றாலும் காலையில் தமிழ் முடித்தவுடன் 2 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டுக்குப் போய்விட்டு மதியம் வந்து ஆங்கிலம் அடி என்பார் மாஸ்டர். கெஞ்சினாலும் மனமிரங்கமாட்டார். கை சோர்ந்திருக்கும்போது அடுத்தது சரியாக அடிக்க வராது என்று கண்டிப்பாக சொல்லி வீட்டுக்குத் துரத்திவிடுவார். :)))

    கலையரசி அக்காவின் தட்டச்சு அனுபவங்களை அழகானப் பதிவாக்கி அதன் மூலம் எல்லோரது நினைவலைகளையும் எழுப்பிவிட்டீர்கள். நன்றி தேனம்மை.. என்னையும் இங்கு குறிப்பிட்டதற்கு நன்றிப்பா.

    பதிலளிநீக்கு
  7. என்னாலும் என்றுமே மறக்க இயலாத தட்டச்சு நினைவலைகள் அனைத்தையும் மிக அழகாகவும் நகைச்சுவை ததும்பவும் எழுதி அசத்தியுள்ளார்கள் திருமதி. கலையரசி மேடம் அவர்கள். ஒவ்வொன்றையும் மிகவும் ரஸித்து ருசித்துப் படித்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. 2)

    நானும் 1967-1969 காலக்கட்டத்தில் (என் 17-19 வயதுகளில்) திருச்சியில் வாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ் என்பதில் ஆங்கில லோயர், ஹையர், ஹை ஸ்பீடு ஆகிய மூன்றும் பாஸ் செய்துள்ளேன்.

    அப்போதெல்லாம் லோயருக்கு மட்டும், தினம் 1 மணி நேரத்திற்கு, ஒரு மாதத்திற்கு ரூ.5, இரண்டு மணி நேரங்களுக்கு ரூ.10 என வசூலித்தார்கள்.

    கீ போர்டைப் பார்த்து அடித்தால் பின்புறம் வரும் மாஸ்டர் (அவர் நல்ல குண்டாக இருப்பார்) முதுகில் கும்மாங்குத்து குத்துவார். அவர் மூலம் சிலமுறை நான் குத்து வாங்கியபோது என் மூச்சே நின்று விடுவது போல எனக்கு வலித்ததும் உண்டு.

    இதைப்படிப்பதற்கான செலவுகளுக்காகவே (Monthly Fees + Paper Cost) நான் மிகக்குறைவான சம்பளத்தில், ஓரிடத்தில் மிகக் கடுமையாக உழைத்துள்ளேன்.

    இதைப்பற்றிகூட என் பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் என்ற பகுதியில் நான் எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2012/03/6.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. 3)

    பாடாவதி மெஷின்கள், டைப்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு நட்டுக்கொண்டு நிற்பது, தேய்ந்து இத்துப்போன ரிப்பன்கள், அவற்றை நாம் கையெல்லாம் அழுக்காக மாற்றுவது, டைப் ரைட்டரில் பேப்பரே தீர்ந்து போனது தெரியாமல் அடிக்க அடிக்க மெஷினே கோபித்துக்கொண்டு இடம் மாறி நகர்ந்து போவது, ஸ்டென்ஸில் கட்டிங் செய்வது etc., etc., என்று ஒன்றையும் விட்டு விடாமல் மிகவும் அழகாக நினைவாக நகைச்சுவை மேலிட எழுதியுள்ளது என்னையும் அந்த நாளைக்கே அழைத்துப்போனது.

    இவர்கள் குடும்பமே மிகப் பிரபல எழுத்தாளர்களாக இருப்பதால் மட்டுமே, இதுபோல மிகவும் அருமையாக எழுத இவர்களால் முடிந்துள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. சுவராஸ்யம்... ஒரு நல்ல விமர்சகரை, பதிவரை அறியத் தந்தீர்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  11. 4)

    1971 to 1980 பத்தாண்டுகள் நான் என் அலுவலகத்தில் மாங்கு மாங்கு என்று ஏராளமாக டைப் அடித்துள்ளேன். சுமார் 50 பேர்களும், 7-8 அதிகாரிகளும் உள்ள ஒரு மிகப் பெரிய செக்‌ஷனில் நான் ஒரே க்ளெரிகல் ஸ்டாஃப் + டைப்பிஸ்ட் மட்டுமே.

    இப்போதுபோல கணினியோ, ஜிராக்ஸ் மெஷின்களோ வராத காலம் அது.

    அதில் MONTHLY HEADER SHOP PRODUCTION PLAN என்பதை A3 SIZE PAPER இல் BOTH VERTICAL & HORIZONTAL WITH SO MANY COLUMNS - 8 COPIES - MANIFOLDING PAPER இல், தவறே ஏதும் இல்லாமல் டைப் செய்து தரவேண்டும். A3 Size Stencil Paper என்பதே ஏதும் அப்போது கண்டு பிடிக்கப்படவில்லை. கடைகளில் எதிலும் கிடைக்காததோர் பொருளாகும். Standard A4 Size இல் Double என்பதே A3 Size ஆகும்.

    இந்த HEADER SHOP MONTHLY PRODUCTION PLAN என்பது எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரின் நேரடிப் பார்வைக்கும் போக வேண்டியதாகையால், அதில் MOST PERFECTION கொண்டு வரப்பட வேண்டும். அது என் ஒருவனால் மட்டுமே டைப் செய்யக்கூடிய, மிகக்கடுமையான வேலையாக இருந்து வந்தது.

    நான் வேலை பார்த்த அதே துறையில் வெவ்வேறு பிரிவுகளில் ஏராளமான டைப்பிஸ்ட்கள் இருந்தும், நானே விடுப்பில் செல்ல நேர்ந்தாலும், இதனை எடுத்து ஒருவரால் செய்து கொடுக்கவே முடியாததாக இருந்தது. இந்த ஒரு வேலைக்காக மட்டுமே, நீண்ட விடுப்பில் இருக்கும் என்னை, என் வீடுதேடி வந்து, கம்பெனி காரில் அவர்கள் அழைத்துப்போனதும் உண்டு.

    ஒவ்வொரு கீக்கும் அழுத்தம் கொடுத்துத்தான் அடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எட்டாவது காப்பியில் ஓரளவுக்காவது எழுத்துக்களும் நம்பர்களும் தெரியக்கூடும். நடுவில் ஏழு புது கார்பன் பேப்பர்கள் சொருகிக்கொள்வேன். இதற்காகவே என் மேலதிகாரிகள் பலரிடம் நான் பலமுறை பாராட்டுகள் பெற்றதும் உண்டு.

    மிகப்பெரிய சிலிண்டர் கொண்ட ’ரிமைங்க்டன் ராண்டு’ என்ற சூப்பராக புத்தம் புதிய டைப்ரைட்டிங் மெஷின் எனக்கு அன்று அளிக்கப்பட்டிருந்தது. அதுஒரு கற்காலம், ஆனாலும் உண்மை உழைப்புக்கு மதிப்புக்கொடுத்த பொற்காலம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.


    >>>>>

    பதிலளிநீக்கு
  12. 5)

    இன்று சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட நாம் அந்த பழங்காலத்தையும், இன்றைய நவீன கணினி காலத்தையும் பார்க்கும் பாக்யம் கிடைத்துள்ளவர்கள் என்பதில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே உள்ளது. அந்த நம்மின் பழங்கால கஷ்டங்களையும் வேதனைகளையும், நம்மால் என்றும் மறக்கவும் முடியாமல் உள்ளது.

    அதே போல அந்தக்கால லெட்ஜர் ரைட்டிங், கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்களை, கால்குலேட்டர் கூட இல்லாமல் மனக்கணக்காகவே, மிகச்சரியாக செய்தது; கேஷ் கெளண்டிங் மெஷின்களோ, கள்ள நோட்டுகள் கண்டு பிடிக்கும் மெஷின்களோ ஏதும் இல்லாமலேயே, கீரைக்கட்டுகள் போன்று வந்து குவியும் பல்வேறு டினாமினேஷன்களை லக்ஷக்கணக்கான .... ஏன் .... கோடிக்கணக்கான ரூபாய்கள் வரை, ஸ்பாஞ்சில் தண்ணீர் ஊற்றித் தொட்டுத்தொட்டு, எண்ணி எண்ணி செக்‌ஷன்களும், பண்டில்களும் போட்டது என நம் பழைய அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  13. 6)

    'குல தெய்வம்’ என்ற தலைப்பில் திருமதி. ஜெயந்தி ரமணி என்ற பதிவர் இதே போல பல்வேறு டைப்ரைட்டர் படங்களுடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதில் நான் ஏராளமான கமெண்ட்ஸ் கொடுத்துள்ளேன். முடிந்தால் போய்ப் பாருங்கோ:

    http://manammanamviisum.blogspot.in/2013/01/blog-post_5016.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  14. 7)

    சாட்டர் டே ஜாலி கார்னருக்கு இன்று முதன்முதலாக விஜயம் செய்து, இனிய நினைவலைகளை நம்முடன், நகைச்சுவை கலந்து பகிர்ந்துகொண்டு, சிறப்பித்துள்ள திருமதி. கலையரசி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதனை இன்று இங்கு வெளியிட்டு சிறப்பித்துள்ள நம் அன்புக்குரிய ஹனி மேடம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

    நானும் ஒரு சாட்டர் டே-யில் இதே இடத்தின் ஒரு கார்னரில் தோன்றியது என் நினைவில் ஏனோ இன்னும் பசுமையாக நிழலாடுகிறது. :)

    http://honeylaksh.blogspot.com/2014/05/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  15. தேன்
    ’சும்மா’ன்னு பெயரை வெச்சுண்டு எழுதி தள்ளிடறீங்க.
    எழுத நிறைய இருந்தாலும் ரெண்டு வாண்டுகளை வெச்சுண்டு ஒண்ணும் எழுத முடியல.

    ஆனா பெருங்காயப் பாண்டம் தான் நான்.
    நானெல்லாம் யாரு?
    இப்ப கூட abcd 26 எழுத்துக்களையும் தலை கீழா சொல்லுவோமில்ல. அதுக்குக் காரணம் தட்டச்சு தானே.

    கோபு அண்ணா
    உங்களுக்கு ரொம்ப நன்றி. இங்க என்னுடைய பதிவைப் பற்றி குறிப்பிட்டதற்கு.

    ..நானும் ஒரு சாட்டர் டே-யில் இதே இடத்தின் ஒரு கார்னரில் தோன்றியது என் நினைவில் ஏனோ இன்னும் பசுமையாக நிழலாடுகிறது. :)//

    தோன்றாமல் இருந்தால் தானே அது அதிசயம். நாங்களும் ஒருநாள் வருவோமில்ல.

    திருமதி. கலையரசி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. Jayanthi Jaya சொன்னது… // நாங்களும் ஒருநாள் வருவோமில்ல. //

    அன்புள்ள ஹனி மேடம்.

    உங்களுக்கு, இன்னொரு சாடர்டே ஜாலி கார்னருக்கு, மிகவும் ஜாலியான ஒரு நபரைப் பிடித்துக்கொடுத்திருக்கிறேன் ... பாருங்கோ.

    இனி உங்களுக்கு ஆச்சு ..... ஜெயாவுக்கு ஆச்சு.

    ஏதேனும் புரோக்கர் கமிஷன் உண்டென்றால் இருவரும் எனக்கு அனுப்பி வைக்கவும். :)))))

    பதிலளிநீக்கு
  17. நான் தட்டச்சு பயின்றதில்லை இப்போது கணினியில் ஒரு விரல் கிருஷ்ணராவ் தான் சுமாரான வேகத்தில் செய்யவும் முடிகிறது என் மனைவியும் மகனும் தட்டச்சு பயின்றவர்கள்

    பதிலளிநீக்கு
  18. @Jeevalingam Kasirajalingam - தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. @ கீதா: மேற் சொன்ன கருத்துடன்....என் நினைவுகளை அப்படியே மீட்டெடுத்தது தட்டச்சு பயின்றது பற்றிய உங்கள் நினைவலைகளை மீட்டெடுத்தது அறிந்து மகிழ்கிறேன் கீதா. மிகவும் நன்றி. புதுவையில் 5 ஆண்டுகள் இருந்ததாகத் தெரிந்து மகிழ்ச்சி. அடுத்த முறை புதுவை வரும் போது, கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். சந்திக்க மிகவும் ஆவலாயிருக்கிறேன். திரு துளசிதரன் அவர்களுக்கும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. @ கரந்தை ஜெயக்குமார் - தட்டச்சு வகுப்பிற்குச் சென்ற அக்கால நினைவுகளை மீண்டும் மனதில் வலம் வர வைத்துவிட்டார் சகோதரி. - தங்கள் கருத்து கண்டு மகிழ்கிறேன் சகோ! மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  21. @ ஸ்ரீராம் - சுவாரஸ்யமான சாட்டர்டே போஸ்ட்.- சுவாரசியமாய் இருந்தது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம்! தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  22. @ கீதசரி - "ஆஹா.. அழகான மலரும் நினைவுகள்... தட்டச்சு பழகும் காலத்தில் என்னென்ன அனுபவங்கள்.. எப்படியெப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத் தேறினோம் என்று இப்போது நினைத்தாலும் வியப்புதான். " உன் அனுபவங்களையும் இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கீதா! அழகான நினைவுகள் என்ற பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  23. @ வை.கோபாலகிருஷ்ணன் - "என்னாலும் என்றுமே மறக்க இயலாத தட்டச்சு நினைவலைகள் அனைத்தையும் மிக அழகாகவும் நகைச்சுவை ததும்பவும் எழுதி அசத்தியுள்ளார்கள் திருமதி. கலையரசி மேடம் அவர்கள். ஒவ்வொன்றையும் மிகவும் ரஸித்து ருசித்துப் படித்தேன்." ஊக்கமிகு இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன் கோபு சார்! நகைச்சுவை எழுத்தில் வல்லவரான உங்களிடமிருந்து இப்படியொரு பாராட்டு என்பதால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறேன். அலுவலகத்தில் அந்நாளில் தட்டச்சு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும், விடுமுறை நாளில் கூட உங்களை அழைத்துச் செய்யச் சொன்ன விஷயம் பற்றியும் விரிவாக எழுதியதைப் படித்தேன். அந்தளவுக்குக் கர்ம சிரத்தையுடன் நீங்கள் வேலை பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதனால் தான் உங்கள் நிறுவனத்தின் உயர்ந்த பதவியை அடைய முடிந்திருக்கிறது. உங்கள் அனுபவம் பற்றியும் விரிவாக எழுதியமைக்கு மிகவும் நன்றி சார்! தொடர்ச்சியாகப் பாராட்டிக் கருத்துரைத்திருப்பதற்கு மீண்டும் நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  24. @ பரிவை சே. குமார் - சுவாரசியமாய் இருந்தது என்ற கருத்துக்கு மிகவும் நன்றி குமார்!

    பதிலளிநீக்கு
  25. திருமதி ஜெயந்தி ரமணி எழுதிய பதிவையும், சாட்டர்டே ஜாலிகார்னரில் நீங்கள் எழுதியதையும் விரைவில் படித்துக் கருத்திடுவேன் கோபு சார்! மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  26. @ ஜெயந்தி ஜெயா - உங்கள் பதிவை விரைவில் வாசிப்பேன். உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  27. சாட்டர்டே ஜாலி கார்னர் என்ற உங்கள் பிரபல பகுதியில் என்னிடமும் ஒரு கட்டுரை வாங்கிப் போட்டுச் சிறப்பித்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன் தேன்! மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  28. நான் எம் எஸ்.சி படித்தபிறகுதான் டைப் ரைட்டிங் போகலாம் என்று கிளம்பினேன். asdfgf :lkjhj -என்பதையே 15 நாட்கள் அடிக்கச்சொன்னார்கள். சரிதான் போடா என்று வந்துவிட்டேன். சிலநாட்களிலேயே KCUB இல் officer போஸ்ட் கிடைத்தது. அங்கு டைப் அடிக்க ஆள் இல்லை. மூன்றே நாளில் ஒற்றைவிரலில் அடித்தே கற்றுக்கொண்டுவிட்டேன். பில் கேட்ஸ் கூட ஒற்றைவிரல் டைப்பர் தான் ! அப்போதெல்லாம் டைப் ரைட்டிங் இருந்தால் தான் எல்லாம்- என்பதுபோல் ஒரு மாயை உண்டாகி இருந்தது. இன்று கணினி வந்துவிட்டபிறகு, பழங்கால முறைப்படி டைப் தெரிந்திருந்தால் அதுவே disadvantage என்று ஆகிவிட்டது. எல்லாம் நல்லதற்கே!
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  29. இனிய நினைவுகள். நானும் போயிருக்கேன்.... +2 முடித்தவுடன்....

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துகள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  31. @ G.M.Balasubramaniam - "நான் தட்டச்சு பயின்றதில்லை இப்போது கணினியில் ஒரு விரல் கிருஷ்ணராவ் தான் சுமாரான வேகத்தில் செய்யவும் முடிகிறது என் மனைவியும் மகனும் தட்டச்சு பயின்றவர்கள்"
    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  32. @Chellappa Yagyaswamy -“ நான் எம் எஸ்.சி படித்தபிறகுதான் டைப் ரைட்டிங் போகலாம் என்று கிளம்பினேன். asdfgf :lkjhj -என்பதையே 15 நாட்கள் அடிக்கச்சொன்னார்கள். சரிதான் போடா என்று வந்துவிட்டேன். சிலநாட்களிலேயே KCUB இல் officer போஸ்ட் கிடைத்தது. அங்கு டைப் அடிக்க ஆள் இல்லை. மூன்றே நாளில் ஒற்றைவிரலில் அடித்தே கற்றுக்கொண்டுவிட்டேன். பில் கேட்ஸ் கூட ஒற்றைவிரல் டைப்பர் தான்”
    மூன்றே நாளில் கற்றுக்கொண்டது பெரிய சாதனை தான். ஒரே விரலில் அடிக்கும் போது, விரல் மிக விரைவில் சோர்ந்துவிடும் என்பது மட்டுந்தான் பிரச்சினை. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  33. @ வெங்கட் நாகராஜ் – “இனிய நினைவுகள். நானும் போயிருக்கேன்.... +2 முடித்தவுடன்....”
    அப்படியானால் உங்களுக்கும் இந்த அனுபவங்கள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். நன்றி வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
  34. @கில்லர்ஜி – “வாழ்த்துகள் இருவருக்கும்”
    வருகைக்கும் வாழ்த்துக்கும், மிக்க நன்றி கில்லர்ஜி!.

    பதிலளிநீக்கு
  35. திருமதி கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. இளநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நான் பணிக்குச் செல்ல உதவியது நான் படித்த ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சே. இரண்டிலும் உயர்நிலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் தட்டச்சு கற்கும் காலத்தில் பிழையேயின்றி (Nil mistake) தட்டச்சு செய்வேன். அப்போது நான் தட்டச்சு செய்த தாளை அறிவிப்புப் பலகையில் வைத்து எனக்கு வாழ்த்து கூறுவர். என்னைப் போல தட்டச்சு செய்யவேண்டும் என்று அறிவுரையும் கூறியிருப்பர். தட்டச்சிடும்போதே தவறாக எழுத்தினை தட்டச்சு செய்யும் நிலை ஏற்படும்போது அப்படியே கையை பின்னோக்கி எடுத்துவிடுவேன். அந்த உத்தியே என்னை சிறந்த தட்டச்சாளனாக்கியது என்பதை உணர்கிறேன். தட்டச்சு கற்போர் பல புதிய சொற்களை கற்கும் வாய்ப்பினைப் பெறுவர். வாய்ப்பு கிடைக்கும்போது என் தட்டச்சு அனுபவத்தை எழுத எண்ணியிருந்தேன். இப்பதிவு என் ஆசையை மேம்படுத்திவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நன்றி யாழ்பாவண்ணன் சகோ.முயற்சிக்கிறேன்.

    அருமையான நினைவலைகள் துளசி சகோ & கீத்ஸ்.

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம். :)

    நன்றி கீத்ஸ்

    நன்றி விஜிகே சார். ஒரு இடுகை தேறும் அளவுக்குப் பின்னூட்டங்கள்ல கலக்கிட்டீங்க போங்க. அப்புறம் உங்க அலுவலக விஷயங்களில் உங்க முக்கியத்துவம் போற்றத்தக்கது. அப்ப உள்ள உங்களைப் போன்றவர்களை இப்போது பார்ப்பது அரிது.

    நன்றி குமார் சகோ

    ஜெயந்தி அடுத்து நீங்கதான். சீக்கிரம் எழுதி அனுப்புங்க.

    நன்றி பாலா சார். :)

    நன்றி கலை

    நன்றி செல்லப்பா சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி ஜம்பு சார். கட்டாயம் எழுதுங்க :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!


    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...