எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 மே, 2015

கூண்டுக்கிளி




கூண்டுக்கிளி:-
=================
அவள் தங்கக் கூண்டுப் பறவை. விநாயகா மில்ஸின் ஓனர் விஸ்வநாதனின் மகள் விசித்ரா.

அந்த ஆவேசக் கோஷங்கள் அவளுக்குப் புதியவை. அவளுக்கு ரொம்பவும் ஆச்சர்யமாய் இருந்தது இப்படியெல்லாம் கொடுமைகள் உண்டாவென்று. தானும் ஊர்வலம் போகும் அந்தப் பெண்களுடன் சேர்ந்து நடப்பதாய் நினைத்துப் பார்த்தாள். அது சுலபத்தில் நடக்கக் கூடியதில்லை. டாடி பார்த்தால் தன் மானமே போய்விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். மம்மியை நினைத்தவுடன் பிடரியில் வியர்த்தது அவளுக்கு.

அந்தப் பெண்கள் ‘லோயர் மிடில்’ வகுப்பைச் சார்ந்தவர்கள். சேலை அணிந்து கொண்டிருந்த அவர்கள் பெண் எரிப்பையும் வரதட்சணையையும் கண்டனம் செய்து கொண்டு சென்றார்கள்.

போர்டு வாசகங்கள், “ பெண் எரிப்பை ஒழிப்போம்” எனக் கூப்பிட்டன.

“ வாங்காதே.. வாங்காதே.. வாலிபமே.. வரதட்சணை வாங்காதே. “

கொடுக்காதே கொடுக்காதே பெண்குலமே வரதட்சணை கொடுக்காதே.. “

”பொறுத்தது போதும் பெண்ணே பொங்கி எழு..”

”பெண்களைக் கேவலப்படுத்தும் ஆபாசப் புத்தகங்கள் விளம்பரங்கள் படங்களைக் கொளுத்து. “

அவர்களின் வார்த்தைகள் சத்தியமானவையாய் வந்து காதை அறைந்தன. டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணியதும்தான் தான் உறைந்து போயிருப்பது அவளுக்கு உறைத்தது.


வீட்டுக்குப் போனதும் போகாததுமாய் அம்மா போர்ட்டிக்கோவில் நின்று கூச்சலிட்டாள். “ ஏண்டி இவ்ளோ லேட்.. ?” சடபடவெனப் பொரிய இவள் மௌனித்தாள். அம்மாவின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாலும் இப்போதைக்கு ஏறாது.

“ஏண்டி பிரெஞ்சு மாஸ்டர் அப்பவே வந்துட்டுப் போயிட்டார். பியானோ மிஸ்ஸும் போயிட்டா நேரமாயிட்டதுன்னு. உனக்கு ஏண்டி லேட்.. ஊரைச் சுத்திட்டு வர்றியோ மகாராணி.. : இடையிடையே டிரைவருக்கு வேறு அர்ச்சனை.

அவளுக்கு லேசாய் இன்றைக்கு மட்டும் அதிகமாய் ஒரு எரிச்சலேற்பட்டது. என்ன நினைத்துக் கொண்டாள் இந்த அம்மா.. ஹூம் சொற்ப நேர சிந்தனை பலத்தில் வந்த அசட்டுத் தைரியத்தில் வார்த்தைகளைப் பிரசவித்தாள்.

“என்னம்மா நீ.. ! ஏன் கத்தறே..! ஒரு பெண்கள் உரிமை இயக்க ஊர்வலம் போனிச்சு.  லேட்டாயிடுச்..” பளாரென ஒரு அறை அவள் கன்னத்திற்கு விரல்களைப் பரிசளித்துப் பிரசுரித்தது. விக்கித்துப் போய் நிற்க..

“ஊம்.. மாடிக்குப் போ.. ! உன்னைப் பார்த்துக்கறேன். என்னையா எதிர்த்துப் பேசினே.. இத்தனை நாள்ல வாய் திறக்காத நீ இன்னைக்குப் பேசுறே. எல்லாம் காலேஜ் படிக்கிற திமிர்.. நாளைக்குக் கிளாசுக்குப் போக வேண்டாம். “ இந்த இரசாபாசத்தை எதிர்பார்க்காத டிரைவர் விதிர்விதிர்த்துப் போயிருந்தார்.

“ஓய் .. சதாசிவம். நீர் வேலையிலிருந்து நின்னுக்கிடும். இந்தாரும் பத்து நாள் சம்பளம். வேற டிரைவரை வச்சுக்கிறம். பொண்ணை இனிமே வீட்லதான் வைக்கப் போறேன். “

அவர் காலில் விழாத குறையாக கண்களில் நீர் கொட்டக் கொட்டக் கெஞ்ச, அம்மா லேசாய் மசிந்து, ‘பெரிய மனது பண்ணி’ அவரின் பிள்ளை குட்டிகளுக்காக இரங்கி – அல்லாது வேறு டிரைவரானால் சம்பளம் அதிகம் கொடுக்கணுமே. இவருக்கு 200 தானே என்று – சமாதானப்படுத்திக் கொண்டு இசைந்தாள்.

மறுநாள் காலை. அம்மாவை மீற முடியாமல் காலேஜ் போகாமல் ரூமில் உலாத்தியவள் திடீர் யோசனையில் வந்து வரவேற்பறை டீப்பாயில் கிடந்த பேப்பரைப் பார்த்தாள். அப்பா படிக்கும் ஆங்கிலப் பத்ரிக்கையில் பெண்கள் போராட்டத்தைப் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். பெண்ணுரிமை இயக்கத் தலைவியின் படமும் பேட்டியும் பிரசுரிக்கப்பட்டு இயக்கத்தின் அலுவலக முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அம்மா படிப்பதெல்லாம் மூன்றாந்தர தமிழ் புத்தகங்களே. அவற்றைப் படித்துப் படித்து மூளை மழுங்கி இருந்த அம்மா தன் பெண்ணையே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறாள்.

வாசலில் அழைப்பு மணி அடித்ததனால் இவள் போய்த் திறக்க சமையலறை சர்வாதிகார சாம்ராஜ்யத்திலிருந்து அம்மா விடுபட்டு ஓடிவந்து இவளைக் கண்டதும், ”ஏண்டி..! மாடிலே போய் ரூம்ல இருக்க வேண்டியதுதானே.. உனக்கு இங்கெல்லாம் என்ன வேலை. ? யார் வந்து கதவைத் திறக்கச் சொன்னாங்க..” எனக் கத்தினாள். இவளுள் பலமாகத் தோன்றிய எதிர்ப்புணர்ச்சி லேசாக பலமிழந்து அம்மாவின் பத்ரகாளித்தனத்தைக் கண்டதும் பயப்பிராந்தியைக் கிளப்பியது.

முணுமுணுத்த மனசை அடக்கிக்கொண்டு படியேறினாள். நேற்று அப்பாவிடம் அம்மா பற்றவைத்துவிட்டுத் தன் முடிவையும் சொன்ன பிறகு அப்பா ஒன்றுமே சொல்லவில்லை. இவளுள் ஏமாற்ற ரேகைகள் பலமாகப் படிந்து போயின.

அடுத்தமாதம் இவளின் பத்தொன்பதாவது பிறந்தநாள் வருகிறதாம். அம்மா தன் தோழிகளிடம் --  எல்லாருமே அப்பர் கிளாஸைச் சேர்ந்த மடிசஞ்சிப் பெண்மணிகள் – பெருமையடித்துக் கொண்டாள். ஏனெனில் இவளுடைய பரத நாட்டிய அரங்கேற்றம் பிறந்த நாளுக்கு மறுநாள் நிருத்ய நடன சபாவில் நடக்கப் போகிறதாம். இவளுள் எதுவுமே பதியவில்லை. மனம் மேலும் மேலும் படிக்க ஏங்கியது. அந்த வீட்டின் சுய நிறம் இவளை ரொம்பவும் பாதித்தது. ஏதோ ஒரு விடுதலையை எதிர்நோக்கும் சிறைக் கைதியின் நிலை.

அம்மாவுடன் ஒரு மாதம் கழித்து அன்றுதான் , அதுவும் அம்மாவின் கட்டளைப்படி தனக்குப் பிறந்தநாள் உடையைத் தேர்ந்தெடுக்கக் கிளம்பினாள். எதற்கு இவ்வளவு ஆடம்பரம் என அம்மாவைக் கேட்க நினைத்தாள். அது சாத்யமானதில்லை. காரிலேயே தன்னைச் சமாதியாக்கிவிடுவாள் அம்மா எனப் பயமேற்பட்டது. கடைவாசலில் அம்மா ஒரு தோழியுடன் நின்று பேசத் தொடங்கிவிட்டாள். இவளை மறந்து விட்டவள் போன்று அம்மாவும் அவள் தோழியும் உள்ளே சென்று புடவைகளில் உள்ள தப்புக்களை ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள்.

இவள் வந்து காரிலமர்ந்தாள். இவள் தோளை யாரோ தட்டி ஒரு நோட்டீசைக் கொடுத்துச் சென்றார்க்ள். பெண்ணுரிமை இயக்கம் என்ற தலைப்பைப் படித்ததுமே இவளுள் சந்தோஷமானதாய் ஏதோ ஒன்று பிரவாகித்தது. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு அவளிடம் அந்த இயக்கத்தைப் பற்றியும் அதன் குறிக்கோள் பற்றியும் , அதனால் செய்யப்பட்ட பணிகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். உடனே அந்தப் பெண் தன் தலைவியை அழைத்து வந்து இவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

தலைவி ” பணக்காரர்கள் பெண்ணுரிமை இயக்கத்திற்கு சப்போர்ட் பண்ணுவதென்றால் நம்ப முடியவில்லை “ என்றாள்.

விசித்ரா, “ யூ ஆர் மிஸ்டேக்கன் மீ மிஸ் பாகீரதி.. நான் உண்மையிலேயே ஈடுபாட்டோடுதான் கேக்கறேன். உங்க குழுவுல நானும் ஒரு மெம்பர்.” தன் குடும்பத்தைப் பற்றிக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு நிமிரும்போது அம்மா புலிப்பார்வையால் அவளை நெருங்கி அவர்கள் யாரெனக் கேட்க, இவள் தோழியும் அவள் அம்மாவும் என்க அம்மாவின் பார்வை நம்பமாட்டேன் என்றது.

மறுநாள் காலை அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அவளைச் சமாதானப்படுத்தி வேலைக்காரி பூரணியைத் துணையாகக் கூட்டிக் கொண்டு லைப்ரரி போவதாய்ச் சொல்லிவிட்டு பெண்ணுரிமை இயக்கத்தின் அலுவலகம் வந்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு அம்மாவுக்கு ஆங்கிலம் புரியாது என்ற நினைப்பில் வந்து பெண்ணுரிமை இயக்கத்தினைப் பற்றி நன்கு புரிந்து கொண்டாள். அவள் மனசில் ஒரு வைராக்கியம் வந்திருந்தது.

அவளை முதன்முதலில் அந்தப் பெண்ணுரிமை இயக்கத்தின் அலுவலகத்திற்குப் போகும் வழியில் பார்த்த ஸ்ரீதரன் மயங்கிப் போனான். அவள் பணக்காரப் பெண் . அதுவும் தன் தாய் கமலியின் நெருங்கிய சிநேகிதி சௌதாமினியின் மகள் எனத் தெரியவும், அவன் சௌதாமினி வீட்டிற்கு அடிக்கடி வருவதும் பழக்கமாயிற்று. சௌதாமினியும் அவனை மருமகனாக ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டாள்.

இந்தக் களேபரங்கள் எல்லாம் விசித்திராவைச் சலனப்படுத்தவில்லை. அவள் ஒரு தெள்ளிய நீரோடை போலத்தான். கல்லெறிந்தும் கலங்கிப் போகாதவளாகத் தூய்மையாக இருந்தாள். அவளிடம் ஸ்ரீதர் ஒரு முறை, “விசி.. இந்தப் பெண்ணுரிமை இயக்கத்தை விட்டு விலகி விடு.. ஏன்னா வரதட்சணை வாங்காமக் கொடுக்காம நம்ம அம்மாக்கள் இருக்கப் போறதில்லை. மேலும் என் அம்மா தன்னோட மருமகள் – ஹை ஃபாமிலி மருமகள் – ரோட்டில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் முன்னணி வகிப்பதை விரும்ப மாட்டாங்க. இதை நீ புரிஞ்சிக்கிட்டு அந்த இயக்கத்துலேருந்து விலகிடணும். “

சடாரெனத் திரும்பி அவனை முறைத்த அவள் “ என் பிறந்தநாள் அன்னிக்கு உங்களுக்கு ஒரு முடிவைச் சொல்றேன். “ . ‘ இந்தச் சிறையா.அந்தச் சிறையா..’ என மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.

விருந்தினர் கூட்டம் அலைமோதியது. ஸ்ரீதரன் காத்துக் கொண்டிருந்தான். பிறந்தநாள் அன்று மாலை மாடியிலிருந்து கருகமணி மாலையும் கண்ணாடி வளையல்களும் காட்டன் சாரியுமாய் இறங்கிய மகளைப் பார்த்து அம்மா வேகமாய் வந்து அவளை அடிக்குரலில் அதட்ட, இவள், “ அம்மா.. இரம்மா.. நீ அடிச்சாலும் அதற்காகப் பயப்படற சின்னக் குழந்தையா நான் இல்லேம்மா. நான் மேஜர். இது என்னோட பத்தொன்பதாவது பிறந்தநாள். நான் வீடுன்ற இந்தச் சிறையில இருக்க விரும்பல. அதுமாதிரி கல்யாணம் என்கிற பேர்ல இன்னொரு சிறைக்குப் போகவும் விரும்பல. நான் இனிமேலாவது சுதந்திரமா வாழ விரும்புறேன். என்னைப் போன்ற வயதுள்ள பெண்கள் படும் துன்பத்தைத் துடைக்க என் வாழ்வை அர்ப்பணிக்கப் போறேன். 

எஸ், பெண்ணுரிமை இயக்கத்திற்காக என்னையே நான் தியாகம் பண்ணப் போறேன். நீ என்னை வெளிப்பட விடாம அணை கட்டிக்கிட்டே வந்தே. நான் ஒருநாள் அணையைச் சிதறடிச்சுக்கிட்டுப் புறப்பட்டுட்டேன். குட்பைம்மா..” விருந்தினர்கள் விக்கித்து நின்றுவிட்டார்கள்.

எளிமையின் உருவாய் அவள் போய்க்கொண்டிருந்தாள். அவள் விசித்திரமானவள்தான்…

டிஸ்கி :- ‘85 ஆம் வருட டைரியிலிருந்து.

டிஸ்கி:- நவம்பர் 18, 2014 அவள் பக்கத்தில் வெளியானது. 


6 கருத்துகள்:

  1. சிந்திக்க வைக்கும் மிக அருமையான அற்புதமான ஆக்கம். :)

    தெளிந்த நல்ல நீரோட்டம் போன்ற எழுத்து நடை

    எளிமையான ஆனால் தீர்க்கமான முடிவு.

    // நவம்பர் 18, 2014 அவள் பக்கத்தில் வெளியானது. //

    இதுபோன்ற புதுமைப்பெண்களைத் தங்களால், தங்கள் தங்கமான எழுத்துக்களால் மட்டுமே, உருவாக்க முடியும். மிகவும் சந்தோஷம்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான சிறுகதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா மிக்க நன்றி கோபால் சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. தங்கக்கூண்டு கிளிக்கு விடுதலை கிடைத்துவிட்டது. ஆனந்தமாய்ச் சிறகடித்துப் பறக்கட்டும்! தெளிவான நடையில் பெண்களைச் சிந்திக்க வைக்கும் கதை! பாராட்டுக்கள் தேன்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...