சனி, 23 மே, 2015

"என் வானிலே" "டீக்கடைச் சூரியன்”


2. என் வானிலே :-

சென்ற ஆண்டு அகநாழிகையின் வெளியீடாக பல கவிதைத் தொகுதிகள் மலர்ந்துள்ளன அதில் ஒன்று நிம்மி சிவாவின் என் வானிலே. மிக எளிமையாக அதே சமயம் வலிமையான கவிதைகள் படைத்திருக்கிறார் ஜெர்மனியில் வசித்து வரும் நிம்மி சிவா.
முக்கால்வாசிக் கவிதைகளில் புலம் பெயர் வாழ்வும்.அதன் வெறுமையையும் அங்கு கொட்டிக் கிடக்கும் பனி ஒரு மனத் தடுப்பைப் புலப்படுத்துவதாகவும் சில சமயங்களின் மன அண்மையைப் புலப்படுத்துவதாகவும் சித்தரிக்கப்படுகிறது. புலம் பெயர் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் தமிழ் தன் மூச்சைச் செலுத்தி ஜீவித்து வருகிறது என்பதற்கு இவரது கவிதைகள் சாட்சி.

நான் மிக ரசித்த கவிதை இரு கவிதைகள்.

///தானாடாவிட்டாலும்:-

வானில் பறக்கும்போது
கூட்டிலிருக்கும்
குஞ்சுகளின் நினைவுகளே
தாய்ப்பறவையின்
இறகுகளை
ஓயாமல் இயங்க வைக்கும் ///

////வேரடி மண்:-

சலசலக்கும் பனைகளின்
இடைவெளியூடே
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம் பூச்சி போல
அலைந்து திரிந்ததை
தினமும் நினைத்து
சலனமேயில்லாத
நிசப்தங்களின் நடுவே
உரக்க அழுகிறது மனது. ///

நூல் :- என் வானிலே
ஆசிரியர் :- நிம்மி சிவா
பதிப்பகம் :- அகநாழிகை
விலை – ரூ 60.


5. டீக்கடைச் சூரியன்:-

அகஸ்டஸின் இக்கவிதைகள் சிந்தனையைத் தூண்டுபவை. சிலைகளும் நத்தைகளும் தங்கள் கவிதையைத் தானே செதுக்கிக் கொள்ளும் கல் நட்சத்திரங்கள் போன்றவை. மிக அருமையான இக்கவிதைகள் படித்தவுடன் உயிரற்றதெல்லாம் உயிர்பெற்று அசைவது போலும் உயிருள்ளனவெல்லாம் பேசுவது போலும் கூட ஒரு பிரமை உண்டாயிற்று. அதிலும் ஒரு கவிதையின் படமெடுத்தாடும் வாக்கியப் பாம்பும் இன்னொரு கவிதையில் வீடுபேற பெற ஏகும் நண்டும் படித்து பிரமித்தேன். நிறைய கவிதைகளில் நத்தை யதார்த்தத்தின் வசப்பட்டு மீளமுடியாத ஒரு குறியீடாக வருகிறது. கற்கள் சிலைகள் பற்றியும் வார்த்தைகள் பற்றியும் நிறைய கவிதைகள் தொடர்கின்றன.

எனக்குப் பிடித்த கவிதை :-

///சிலைகள் அமைதி இழக்கும் நாட்கள் :-

இடுப்புவரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல்தானென்றால்
கைகளால் விலக்கிக்
கால்களால் முன்னேறி
வெளிவந்து விடலாம்தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக் கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்புவரை
செதுக்கிவிடப்பட்ட சிலை. ///

நூல் – டீக்கடைச் சூரியன்
ஆசிரியர் – அகஸ்டஸ்
பதிப்பகம் – நிலா பதிப்பகம்
விலை – ரூ 50.

டிஸ்கி :- இவற்றையும் படிச்சுப் பாருங்க.
 

புதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.5 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கவிதை நால் அறிமுகங்கள் இரண்டுமே அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் வரிகள்...

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

அற்புதமான கவிதைகள்----சரஸ்வதிராசேந்திரன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி டிடி சகோ

நன்றி சரஸ் மேம்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...