திங்கள், 10 பிப்ரவரி, 2014

வாடகைத் தாய்களும் டிசைனர் குழந்தைகளும்.

வாடகைத்தாய்களும் டிசைனர் குழந்தைகளும்:-

.( SURROGATES AND DESIGNER BABIES)
***********************************************************************

”துரோணர்தான்” முதல் டெஸ்ட் ட்யூப் பேபி தெரியுமா.. இது கர்நாடகப் பாடத்திட்டத்தில் 9 ஆம் வகுப்பின் ஒரு புத்தகத்தில் 208, 209ஆம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கு.

புராண காலத்தில் இனப்பெருக்க முறை பற்றிக் குறிப்பிடப்படும்போது ( சிகித்ஸா 1979) இப்படி எழுதப்பட்டிருக்கிறது .,” மகாபாரதத்தில் வரும் துரோணர்தான் 7, 500 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த முதல் சோதனைக் குழாய்க் குழந்தை.ஒரு நாள் பரத்வாஜ முனிவர் கங்கைக்குக் குளிக்கச் சென்றபோது  எதிர்ப்பட்ட அழகான அப்சரசான க்ரிதாக்ஷியைப் பார்த்து காமவயப்பட்டு தன்னுடைய விந்தணுவைப் பிடித்து ஒரு மண்பானையில் போட அதிலிருந்து துரோணர் பிறந்தார் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. துரோண் என்றால் ஹிந்தியில் பானை என்று அர்த்தம். பானையில் இருந்து பிறந்ததால் துரோணர் என அழைக்கப்பட்டார்.

சாதாரண மக்களுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது காஸ்ட்லியான ஒரு விஷயம். வெளிநாட்டினர் மற்றும் செலிப்ரிட்டீஸ் இந்த முறையில் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு சில விதி முறைகள் இருக்கின்றன.
 மேரியேஜ் வெப்சைட்டுக்கள் போல SURROGACY AND SURROGATES வெப்சைட்டுகள் இருக்கின்றன.

இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம் வாடகைத் தாய்கள் இருக்கின்றார்கள். வெளிநாட்டினர் அதிகம் வந்து அங்கேதான் முற்றுகையிடுகின்றனர்.தாய்மை என்பது ஒரு வியாபாரம் போலாகிவிட்டது. அம்மா அப்பாவை வாங்க முடியாது. என்பார்கள். இப்போது அதையும் வாங்கிவிடலாம். குழந்தையின் பிறப்பு எப்போது எனத் தெரியாது என்பார்கள். சிசேரியன் மூலம் அதையும் நிர்ணயிக்கிறார்கள்.

மைக்கேல் ஜாக்சனின் மூன்றாவது குழந்தைக்குத் ( வாடகை)தாய் யார் என பத்ரிக்கைகள் இன்வெஸ்டிகேட் செய்து அவர் ஒரு நர்ஸ் பேர் ஹெலனா என்பதை வெளியிட்டிருக்கின்றன.

ஹிந்தியின் பிரபல நடிகர் ஷாருக் கான், கௌரி தம்பதியினருக்கு ஆர்யன் , சுகானா என இரு குழந்தைகள் உண்டு. மூன்றாவதாக சரோகசி மூலம் ஆப்ராம் என்ற குழந்தையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 1.5 கிலோ எடையுள்ள அக்குழந்தையை  லண்டனைச் சேர்ந்த கௌரியின் உறவினர் ஒருவரே பெற்றுக் கொடுத்திருக்கிறார். குழந்தையின் பாலினம் குறித்து கர்ப்பத்தில் இருக்கும்போதே ஸ்கான் செய்தார்கள் என்பது இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு.

பொதுவாக ஒரு ஆணின் விந்தணுக் குறைபாடு, விந்தணுவின் செயல் குறைபாடு இருந்தால் விந்தணு தானம் பெறப்பட்டு கணவன் , மனைவி சம்மதத்துடன் மனைவியின் கரு முட்டையோடு இணைக்கப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். மனைவிக்கும் கரு முட்டை, கருப்பைக் குறைபாடு, நீர்க்கட்டிகள், கான்சர் போன்றவை இருந்தால் கணவரின் விந்தணுவை இன்னொரு வாடகைத் தாயின் கருமுட்டையோடு செலுத்திக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

இருவருக்கும் குறைபாடு இருந்தால் விந்தணு தானம் பெறப்பட்டு கருமுட்டையும் தானம் பெறப்பட்டு செலுத்தப்பட்டுக் கரு உருவாக்கப்பட்டு இன்னொரு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்துகிறார்கள். பொதுவாகக் கருவை வெளியே உருவாக்கி சொந்தத் தாய் அல்லது வாடகைத் தாய்க்குச் செலுத்தலுக்கு  ஐவிஎஃப்  என்று பெயர். IN VITRO FERTILISATION.

இந்த முறையில் கர்நாடகாவில் மனோஜ் மிஸ்ரா மற்றும் கீர்த்தி மிஸ்ரா தம்பதியினருக்கு 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. தாமதத் திருமணத்தினால் குழந்தைப் பேறின்றித் தவித்த இவர்களுக்கு 4 குழந்தைகள் கிடைத்ததும் -- இரண்டு ஆண், இரண்டு பெண் - நிர்ணய், நைனி, நிர்பய்,நீரா -- ஆகியோரில் மூவரைத் தாங்களே வளர்ப்பதாகவும். நீராவை குழந்தையில்லாமல் தவிக்கும் ஒரு தம்பதியினருக்குத் புத்திரி தானம் அளிப்பதாகவும் பேட்டி கொடுத்துள்ளார்கள். பலமுறை கருச்சிதைவு ஆன அந்தத் தம்பதிகளுக்குத் தங்களுடைய குழந்தையைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆனந்தம் அடைவதாகவும் தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியைக் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்கள்.

வாடகைத் தாய் முறையிலும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் உள்ளன. நிறைய ஷரத்துக்களில் உடன்படிக்கைக் கையெழுத்திட வேண்டும். அதற்கு அரசு ஏகப்பட்ட விதிமுறைகள் விதித்துள்ளது. ஒரு வெளிநாட்டினர் இந்தியாவில் தம்பதியினராக வந்து  வாடகைத் தாயை நியமித்துக் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் குழந்தை பெற்றபின் தம்பதியினராகவே வந்து வாங்கிச் செல்ல வேண்டும். இதன்படி ஒரு வாடகைத் தாயை நியமித்த ஒரு ஜப்பான் ஜோடி திடீரென விவாகரத்து செய்துவிட்டதால் கணவனின் விந்தணுவைச் செலுத்தி உருவாக்கப்பட்ட குழந்தை பிறந்தபின் அந்தக் குழந்தையைத் தம்பதிசமேதராக வாங்க விவாகரத்தான மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வரவில்லை. ஆனால் அரசாங்க சட்ட திட்டமோ அதை ஒப்புக் கொள்ளவில்லை. அந்த ஜப்பானிய ஆண் தன் குழந்தையை இந்தச் சிக்கல்களில் இருந்து விடுவித்துத் தனக்கு அளிக்குமாறு அரசாங்கத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.

வாடகைத் தாய் முறையில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. வாடகைத் தாயை நியமிப்பவர்கள் அவரது ஹெல்த் செக்கப், கரு உருவாக்கத்துக்கான செலவு, பிரசவ கால செலவு, பிரசவத்தில் ஏதேனும் தாய்க்கு நிகழ்ந்து விட்டால் இன்சூரன்ஸ், பிரசவத்துக்குப்பின்னான சில நாட்கள் செலவு, குழந்தை பெற்றுக் கொடுத்ததற்கான கூலி ஆகியவற்றை அக்ரிமெண்டில் கையெழுத்திட்டபடிக் கொடுக்க வேண்டும். இத்தனை விதிமுறைகளையும் ஏற்றுக் கொண்டு குழந்தை பெற்றுக் கொடுத்துவிட்டால் அதன் பின் அந்தத் தாய்க்கும் சேய்க்கும் தொடர்பு இல்லை என்ற காண்ட்ராக்டிலும் கையெழுத்திட வேண்டும்.

கணவனின் விந்தணு, மனைவியின் கருமுட்டை செயலிழந்து இருந்தால் விக்கி டோனரிடம் இருந்து விந்தணுவும், ஆரோக்கியமான பெண்ணிடம் கருமுட்டையும் பெறப்பட்டு கரு உருவாக்கப்படுகிறது. சிலருக்கு கணவனின் விந்தணு பெறப்பட்டு உறை விந்தணுவாக சேமித்துப் பாதுகாக்கப்படுகிறது. ஒரு சில முறை தோல்வி அடைந்தாலும் அந்த விந்தணுக்களை திரும்ப உபயோகப்படுத்தி கரு உருவாக்கம் செய்ய முயற்சிக்கப்படுகிறது.

டாக்டர்கள், கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்களின் மற்றும் ஆரோக்கியமானவர்களின் விந்தணுக்கள் தானமாகப் பெறப்படுகின்றன. அதிலும் இந்த உயரம்,இந்தக் கண், இந்த முடி, இந்த பர்சனாலிட்டி,  இந்த உடலமைப்பு , இந்த விளையாட்டுத் திறமை, இந்த அறிவாளிமற்றும் நோய் தாக்காமல் இருப்பது  போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து விக்கி டோனர்களிடம் இருந்து விந்தணுவைப் பெற்றுக் குழந்தை பெற விரும்புகிறார்கள்.

குழந்தைக்கு அதிக ஆயுள் வேண்டும். நோய் நொடியே வரக்கூடாது. அதற்கு அதிகம் செலவழிக்கக்கூடாது என்பதெல்லாம் குறிப்பிடுகின்றார்கள். தடகள வீரர்களைப் போல ரொம்ப ஆக்டிவான குழந்தை வேண்டும். இந்த சயிண்டிஸ்ட் போல வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் மற்ற விருப்பங்கள்.  வாடகைத் தாய் மற்றும் விந்தணுவை வாங்கி வழங்கும் கம்பெனிகள் இந்தக் கோரிக்கைகளுக்கு எல்லாம் ஓரளவு செவிசாய்த்துச் செய்தாலும் பிறக்கும் குழந்தை எந்த ஜீன்ஸில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற ரிஸ்கைப் பதிவு செய்து சொல்லி விடுகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனம் இந்த மாதிரி டிசைனர் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான பேட்டண்ட் பற்றித் தெரிவித்துள்ளது. இதற்கு பாலினம், மற்றும் ரேசிஸம் பற்றிக் குறிப்பிட்டு இதற்குத் தடை விதிக்குமாறு உயிரி அறவியலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.

கர்நாடகாவில் ஒரு பெண் தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற பின் தன் நண்பர் ஒருவருடன் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது கணவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். திடீரென்று கரு உருவாகிவிட்டது. இதற்கு அவரின் கணவர் காரணமா( குழந்தை பேறு இல்லை என கணவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார் )  அல்லது நண்பர் காரணமா எனத் தெரியவில்லை எனவே அவர் 20 வார கர்ப்பமாக இருந்த போது இதற்காக PATERNITY TEST -- தந்தைமைச் சோதனை செய்துள்ளார்.

சோதனை செய்யுமுன்பு டாக்டர் காமினி ராவ் இதனால் 0.5 சதவிகிதம் கரு உருக்குலைய வாய்ப்பு இருப்பதாகக் கூறியும் செய்து கொண்டார். இந்தச் சோதனைக்கு அம்னியோசெண்டீசிஸ் (AMNIOCENTESIS) என்று பெயர். 5 மிலி அம்னியோடிக் திரவத்தைக் கருவில் இருந்து எடுத்து கணவர் மற்றும் நண்பர்  இருவரின் ரத்தமும் சாம்பிள் எடுத்து சோதனை செய்யப்பட்டு நண்பர்தான் அந்தக் குழந்தைக்குத் தந்தை என உறுதி செய்தனர்.. இருவருமே அந்தக் குழந்தை தன்னுடையதென்று எண்ணி இவருடன் வாழத் தயாராக இருந்ததாலேயே அவர் ரிஸ்க் எடுத்து இந்தச் சோதனையைச் செய்து கொண்டார்.

மெல்போர்னில் ராயல் மெல்போர்ன் ஹாஸ்பிட்டலில் கர்ப்பப்பையில் கான்சர் வந்த ஒரு தாய்க்கு ஓவரியன் திசுக்களை வயிற்றுக்கு ட்ரான்ஸ்ப்ளாண்ட் செய்து அந்தத் தாய்க்கு ( அவர் பெயர்  VALI ), இரட்டைக் கருமுட்டைகளை உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.. இதுபோல முன்பு செய்ததில் ஆஸ்த்ரேலியாவில் ஒரு குழந்தையும் உலகத்தில்  இதுவரை 30 குழந்தைகளும் பெறப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

குழந்தைகள் கட்டமைப்பு ( டிசைனர் குழந்தைகள் ) மட்டுமல்ல. FEMALE SPERM AND MALE EGGS   போன்ற ஆராய்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது. இதை கட்சுகிகோ ஹையாஷி ( KATSUHIKO HAYASHI )என்ற ஜப்பானின் கியோட்டோ யுனிவர்சிட்டியைச் சேர்ந்த  ப்ரொஃபசரும், அவரது சீனியர் ப்ரொஃபசர் மிடினொரி சைட்டௌவும் ( MITINORI SAITOU )பெண்ணின் உடம்பிலிருந்து ( தோலில் இருந்து ) செல்களை எடுத்து விந்தணு முட்டை உருவாக்க முடியுமா என சோதித்து வருகிறார்கள். வழக்கம் போல இந்தச் சோதனைக்கு எலிகளும், குரங்குகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ப்ரிமார்டியல் ஜெர்ம் செல்ஸ் ( PREMORDIAL GERM CELLS  -- PGC ) என்கிறார்கள். இதை ஜெனெடிக் ம்யூட்டேஷன் ( திடீர் மரபியல் மாற்றம்) என்கிறார்கள்.இதனால்  உருவாக்கப்படும் முட்டைகள் உடையும் தன்மை உடையனவாக இருப்பதாகவும் உருவமற்ற முட்டைகளாக இருப்பதாகவும்  கூறுகிறார்கள். தற்போது சோதனை லெவலிலேயே இருக்கிறது.  கிட்டத்தட்ட 10 முதல் 50 வருடங்களில் இது வெற்றியடையலாம்.

ஒருவருக்கு இருக்கும் நோய்களை டி என் ஏவிலேயே கண்டுபிடித்து சரி செய்து அவர்களைப் போலவே க்ளோனிங் உருவாக்கப்படும் நிலையும் வரலாம். அப்போது ஒரே டிசைனிலேயே அல்லது ஒருவரைப் போலவே அச்சு அச்சாக மனிதர்கள் பிறக்கலாம்.

 

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தோலில் இருந்தா...? என்னென்ன ஆய்வுகள்... ஆராய்ச்சிகள்...

ஏற்கனவே இன்றைக்கு பல வேடங்களில்... இதில் நம்மைப் போல ஒருவர்...! இந்த பூமி தாங்குமா...? ஹிஹி...

சே. குமார் சொன்னது…

நல்ல கட்டுரை...
வாழ்த்துக்கள் அக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.. ஆம்..:)

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

இதெல்லாம் விஞ்ஞான முன்னேற்றமா? கலாச்சார சீரழிவா ? கலிகாலம் வேறென்ன சொல்வது?---சரஸ்வதிராசேந்திரன்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...