எனது நூல்கள்.

சனி, 15 பிப்ரவரி, 2014

சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது.



சாந்தி மாரியப்பனின்  சிறகு விரிந்தது. :-
*****************************
குழந்தைகளைக் கொஞ்சியபின்னும் நம்மேல் ஒரு குழந்தை வாசம் அடித்துக் கொண்டேயிருக்கும். அது நம் வீட்டுக் குழந்தையாயினும் சரி. பக்கத்து வீட்டுக் குழந்தையாயினும் சரி. ஒரு குட்டிப் பயலின் குட்டிப் பெண்ணின் குழந்தமை வாசம் பட்டு நம் முந்தானையும் கழுத்தும் தோள்பட்டையும் திரும்பும்போதும் அசையும்போது காற்றில் ஒரு குழந்தைமை வாசத்தைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கும். அதே உணர்வுதான் ஏற்பட்டது சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்ததைப் படித்ததும்.

மழலைத் தூதுவர்களை ரசிப்பதா. தென்றல் தீட்டும் வானவில்லில் வண்ணங்களை பட்டாம்பூச்சி இறகுகளில் தொட்டுப் பார்ப்பதா, தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் பறவையைப் பிடிப்பதா, எனத் திகைக்கும்போது குழந்தைகள் பறவைகளாகி இங்குமங்கும் நம் எண்ணம் கொறிப்பதும், பறவைகள் குழந்தைகளைப் போன்று தத்தித் தத்திச் சிறகடிப்பதும் நிகழ்கிறது கவிதைத் தொகுதி வாசிக்கும்போது.
”அந்த இரவில’  மிகவும் நெகிழ வைத்த கவிதை. 

உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த் தருகிறார்
வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை
என் தகப்பன்.

’’பரஸ்பரம்” கடவுளும் குடிகாரனும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து விடமாட்டார்களா என எண்ணத் தூண்டிய வித்யாசமான கவிதைப் பார்வை. 

வென்றுவிட்டதாய்ப்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான  யுத்தங்கள்.
 
ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுக்குப் போகும்போது நினைக்கக்கூடியதுதான் ”வீடென்பது.”

அன்னியோன்யமாய் இருந்து வந்து
அடுத்த தலைமுறையின் முடிசூட்டலுக்குப் பின்
உரித்தெரியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப்பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு. 

இந்தத் தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்த கவிதை ’எவரேனும்’

தலைசாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின் கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
யாரேனும் இருக்கக் கூடுமோ..

குடும்பம், குழந்தைகள் இவற்றைச் சுற்றிவரும் சந்திரனாயும் சூரியனாயும் இருக்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குக் கிடைத்த சொற்ப வெளியில் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை வெற்றியைப் பிரகடனப் படுத்துகின்றன. 

வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன சாந்தி மாரியப்பனின் கவிதைகளில். சில சமயம் நம்மைக் கையகப்படுத்த மாட்டாரா என்ற ஏக்கத்தோடு சில காத்தும் கிடக்கின்றன. பொருத்தமான வார்த்தைகளில் பொருந்த வசீகரமாகச் சொல்லிச் செல்லும்போது அடுத்து நமக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என மிச்சமும் பின் தொடர்கின்றன. மொத்ததில் மிகவும் பாந்தமான சொற்களில் மென்மையான ஒரு கவிதைத் தொகுதியைப் படித்த சந்தோஷம் ஏற்பட்டது. 

கவிதை வாசிப்பது என்பதும் தானே உணரவேண்டிய ஒரு அனுபவம். உணர்ந்து பாருங்கள்.

 கிடைக்குமிடம்.:-
அகநாழிகை பதிப்பகம். சென்னை.

விலை ரூ.  80. 

இணையத்தில் வாங்க. 

www.aganazhigaibookstore.com

4 கருத்துகள் :

சாந்தி மாரியப்பன் சொன்னது…

மிக்க நன்றி தேனக்கா..

ராமலக்ஷ்மி சொன்னது…

சாந்தியின் அழகான கவிதைகளுக்குச் சிறப்பானதொரு மதிப்புரை. நன்றி தேனம்மை. நல்வாழ்த்துகள் சாந்தி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாந்தி

நன்றி ராமலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...