செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஒரு கோபுர (நி)தரிசனம்:-

ஒரு கோபுர (நி)தரிசனம்:-

ஆழ்கடல் தன்னுள்ளே
கரை தேடும்
அலைத் தலை நிமிர்த்தி.

செங்கால் நாரைகள்
நுரைப் பூவிலிருந்து
கால் எவ்விப் பறக்கும்.

மின்சாரக் கம்பிகளில்
கரிச்சான் குருவிகள்
தேன்நிலவு கொண்டாடும்.ஆற்றுச் செடிகளில்
கொக்குகள்
மீன் பறித்துப் போகும்.

காகங்கள்
எச்சில் துணுக்குக்காய்க்
கரைந்து கிடக்கும்.

பூக்கள்
புஷ்பவதியானதற்காகத்
தலைகுனிந்து வேதனைப்படும்.

மரங்கள்
காற்றுத் தின்னும்,
வயிறே இல்லாமல்..

காமிரா
சூட்கேசுள் குப்புறக்கிடந்து
மூக்குரசி மூச்சுத் திணறும்.

வாய்கள் சப்தம் மெல்லும்.
பாதங்கள் கொலுசு மோதிக்
காயம் வாங்கும்.

பேருந்து
ஹீனமாய் மூச்சுவிட்டு
முக்கி முனகி ஏறும்.

சாமி கதவு சார்த்தித்
துயில்வார்.

கவசமணிந்த அலங்காரத்தில்
கதவு திறக்கச் செய்வார்.

பக்தர்கள்
கதவு மோதி, முரண்டி
முன் இடம்பிடித்து
உரக்கக் கத்தி
உள் மறைத்துப் பக்தியாவார்கள்.

எந்நேரமும்
முன்புறங்கள் தூய்மையாயிருக்கும்
தொடர்ந்த துப்புரவுப் பணியில்.

உள்ளே
அர்ச்சிப்பவர்கள்
தாயத்து விற்பார்கள்.

கடவுள் அருள்
ஒரு ரூபாய் பிரசாதத்தில்
கைக்குள் வழங்கப்படும்.

மீன்வாசம் பிடித்துப்
படகுசுத்திக் கூடை பார்த்து
மூக்குநீட்டிப் பருந்துகள் நோட்டமிடும்.

கடலோரம்
வள்ளி ஒளிந்த இடம்
காசு கேட்கும்.

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட..! எத்தனை காட்சிகள் எனது மனதிலும் வந்து ரசிக்க வைக்கின்றன...!

வாழ்த்துக்கள் சகோதரி...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அழகுக்கவிதை தேனக்கா..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

நன்றி சாந்தி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை....

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...