திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழர்களும் தங்கமயில்களும்..:-

தமிழர்களும் தங்கமயில்களும்..:-

”தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ..”. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு ரசவாத வித்தை ஞாபகம் வரும். ஒரு முனிவர் இரும்பைத் தங்கமாக்க பல வித முயற்சி செய்து ஒரு திரவத்தைக் கண்டு பிடிப்பார். அதைச் செய்து முடித்தவுடன் அது ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பாறையிலேயே கொட்டிப் போய்விடும். அதைத் திரும்பச் செய்யவே முடியாது.


அதை மட்டும் கண்டுபிடித்துச் சொல்லி இருந்தால் இன்றைய காலகட்டத்தில் கல்யாணமாகாத கன்னிப் பெண்ணே இருக்க முடியாது. தமிழகத்தில் திருமணம் என்றால் இணுக்களவாவது தங்கமும் வெள்ளியும் இல்லாமல் நடக்கவே நடக்காது. கல்யாணப் பெண் காதிலும் மூக்கிலும் தோடு, மூக்குத்தி போட்டிருப்பார். வெள்ளிக் கொலுசு அணிந்திருப்பார். வீட்டு வேலை செய்யும் அஞ்சலையானாலும் சரி, காய்கறிக்கார பொன்னம்மாவாக இருந்தாலும் சரி தங்கச் சீட்டுப் போட்டு நகை வாங்கி இருப்பார்கள்.

ஐநூறு கழஞ்சு பொன் என்று செட்டிநாட்டுத் திருமண ஏடுகளில் குறித்திருப்பார்கள். பொதுவாக வராகன் என்று அந்தக் காலத்தில் கொடுப்பார்கள் 1 வராகன் என்றால் 3. 500 ரூபாய். தங்கத்தையும் வராகன் எடையிலேயே கொடுப்பார்கள்,

பணக்காரர்களின் திருமணங்களில் 200 பவுன், 500 பவுன் என தலை முதல் கால் வரை தங்கத்தாலே கவசம் செய்தது போல அணிவிப்பார்கள். வெளிநாடுகளில் வீரர்கள் விளையாடி தங்க மெடல்களாக சேர்த்து நாட்டுக்குப் பெருமை அளிப்பது போல இங்கே மக்கள் தம் பெண் மக்களைத் தங்கத்தாலேயே பூட்டி அழகுபடுத்தி பெருமைப்படுவார்கள்.

மனிதர்களின் தங்க வேட்டையும் வேட்கையும் இரும்பைக் கண்டுபிடித்த காலத்திலேயே துவங்கி இருக்கிறது. மெக்கன்னாஸ் கோல்டு போன்ற படங்களில் தங்கவேட்டைக்குப் புறப்பட்டு தங்க மலையைக் காண்பார்கள். மனிதர்களின் தங்க தாகம் மட்டும் அடங்குவதே இல்லை. அதிலும் முக்கியமாகப் பெண்களின் தங்க தாகம். இதில் எனக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் கம்யூனிஸ்ட்டுகளின் தேசம் என்றறியப்படக் கூடிய 100 % எழுத்தறிவு மிக்க கேரளாவிலேயே மக்கள் தங்க மோகத்துக்கு ஆட்பட்டு இருப்பதுதான்.

சில மாதங்களுக்கு முன் கேரளா சென்றிருந்த போது ஆலாபாட், ஆட்டுக்கால், ஜோய், ஜாஸ், கல்யாண் என்று கலந்து கட்டிக் கொண்டு நகைக் கடைகள் திருவனந்தபுரம் தெருக்களிலெல்லாம் ஜொலித்தன. பஸ்ஸ்டாண்டுகளில் கூட கறுப்பாக இருந்தாலும் நிறைய நகையணிந்திருந்த பெண்ணை சிவப்பான பெண்கள் பொறாமையோடு உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ் என்று நகை அடகுக் கடைகள் வேறு க்யூ கட்டி நின்றன. எங்களை சுற்றிப் பார்க்க அழைத்திருந்த கேரள நண்பர் சொன்னார். இங்கே ஷாப்பிங்க் மால்களில் நகைக் கடை, நகை அடகுக் கடை மற்றும் அதன் பக்கத்தில் ஒரு அராக் ஷாப் கட்டாயம் இருக்குமாம்.

தமிழகத்தில் மட்டுமென்ன.. பெண்கள் நகை வாங்கவும் அதைக் குடிகாரக் கணவர்கள் அடகு வைத்து சாராயக் கடையில் கொண்டு குடிக்கவும்தானே செய்கின்றார்கள். அமயம் சமயத்துக்கு அடகு வைக்கவும் அவசர செலவைச் சமாளிக்கவும் பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றார்கள். எது ஒன்று என்றாலும் சினிமாவில் அம்மாக்கள் தோடைக் கழற்றியபடியே அடகுக் கடையை நோக்கித்தான் போவார்கள். இது தங்காமல் செல்லும் தங்கத்தின் சுழற்சியில் ஒன்று.

வங்கிகளில் அடகு வைக்கச் சென்றால் ஏகப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்று பலர் அடகுக் கடைகளுக்கே செல்கிறார்கள். வங்கிகளில் நகைக் கடன் பெறுவது என்பது முன்பு கடினம். இப்போது சுலபம். மேலும் கடனில் நகை முழுகினால் கடிதம் எல்லாம் போடுவார்கள். ஏலமிடப்பட்டாலும் போடுவார்கள். ஆனால் தனியார் அடகுக்கடைகளில் அவை அப்படியே முழுகிப் போய்விடும். இந்தத் தனியார் அடகுக்கடைக்காரர்களும் வங்கியில் கொண்டுபோய்த்தான் அந்த நகைகளை மறு அடகு வைத்து  அந்தப் பணத்தை திரும்பவும் நகை அடகு பிடிக்கின்றார்கள்.

பாத்திரச் சீட்டு, பலகாரச் சீட்டுப் போல நகைக்கடைகள் நகைச்சீட்டுப் பிடிக்கின்றன. மாதம் 1000, 5000, 10,000 என்று. இதில் போட ஆரம்பிக்கும் போது தங்கத்தின் விலை ஒன்றாக இருக்கும். போட்டு முடிக்கும்போது வேறெங்கோ போய் இருக்கும். ஆனால் நாம் போட்ட தொகைக்கு அன்றைய தேதியில் உள்ள விலைக்குத் தங்கத்தை வாங்க வேண்டி வரும். பொதுவாக தங்கத்தில் முதலீடு என்பதை விட அதை அணியவே வாங்குவதால் இந்த வித்யாசங்களைப் பெண்கள் பொருட்படுத்தாமல் வாங்கிக் குவிக்கிறார்கள். இதில் கூலி , சேதாரம், என்று கொள்ளை வேறு.

ஒரு முறை ஒரு வெளிநாட்டுப் பெண் சேதாரத்துக்குப் பணம் எடுத்துக் கொண்டால் சேதாரமான தங்கத்தைக் கொடுக்க வேண்டும். என்று பிரபல கடைக்காரர்களிடம் சண்டையிட பயந்த கடைக்காரர்கள் அந்தப் பெண்மணிக்கு மட்டும் சேதாரத்தைக் கட் செய்து நகைக்கு விலை போட்டுக் கொடுத்தார்களாம்.

இதில் செய்கூலி சேதாரம் இலவசம் என்று கூவிக் கூவி பர்மா பஜார் பொருட்கள் ரேஞ்சுக்கு கடைகள் தங்கத்தை விற்பதால் புத்தாண்டு, ஆடி மாசம், அட்சய திரிதியை, தீபாவளி சமயங்களில் புடவைக் கடைக் கூட்டம் போல் நகைக் கடை வாசல்கள் நிரம்பி வழியும். சென்னையின் தி நகர் தெருக்களைப் பார்த்தால் எங்கேயிருந்துதான் பணத்தைக் கொண்டுவந்து வாங்குவார்களோ எனத் தோன்றும். பை நிறையப் பணம் கொண்டு போய் விரல் நுனியில் தங்கம் வாங்கினேன் என்று என் உறவினர் ஒருவர் சொல்வார்.

காரைக்குடியில் ஒரு தங்க நகைக் கடைத் திறப்பு விழாவன்று இப்படி அறிவித்திருந்தார்கள்.’” கடைத் திறப்பு விழாவன்று எந்த ஊரில் இருந்து வந்து கடைக்கு வந்து தங்கம் வாங்கினாலும் பஸ்/ ட்ரெயின் டிக்கெட்டுக்கான டூ அண்ட் ஃப்ரோ தொகை திருப்பி வழங்கப்படும்” என்று. அன்று அந்தக் கடைத் திறப்புவிழாவில் அலை மோதிய கூட்டத்தை பார்க்க வேண்டுமே  அப்பா சென்னை மெரினா பீச்சின் அலைகள் தோற்றுவிடும். ஒரே ஆள் மயம். கடைக்குள் செல்லவே முடியவில்லை.

இது போல முக்கியமான தினங்களில் தங்கம் வாங்காமல் விட்டால் வீட்டில் செல்வம் தங்காது என்ற ரீதியில் வரும் விளம்பரங்களைப் பார்த்தே பாதிக் கூட்டம் தங்கம் வாங்கச் செல்கிறது. மீதி சிலர் என்ன விலையானாலும், திருமணம், காது குத்தல், வளைகாப்பு, பிள்ளைப் பேறு, புஷ்பவதியாதல் போன்ற நிகழ்ச்சிக்குக் கொடுத்தே ஆக வேண்டுமே என்ற முணுமுணுப்போடு தங்கக் காசுகளை வாங்கிச் செல்கிறது. இவ்வாறு ஒவ்வொரு திருமணத்திலும் கர்ச்சீஃபில் ஒரு மூட்டை மோதிரம் அல்லது காசு அள்ளலாம்.

தமிழகத் திருமணங்களில் தங்கம் பரிசத்தின்போதும் அளிக்கப்படுகிறது . பரிசாகவும் அளிக்கப்படுகின்றது. தமிழகம் முழுதும் நிரம்பிக் கிடக்கும் ஜோய், ஜோஸ், கல்யாண் போன்ற நகைக்கடைகள் விதம் விதமான சேவைகளை அறிவித்தும் கடைகளில் புடவை, வளையல், மருதாணி வைத்தல் , பூ ஆகியன வழங்கியும் மக்களைக் கவர்கிறது.

செட்டிநாட்டுப் பகுதியில் முன்பு குழந்தை பிறந்தவுடன் தங்கத்தை உரைத்து நாவில் இட்டுப் பெயர் சொல்லி அழைப்பார்களாம். தங்கபஸ்பத்தை வைன் அல்லது சாராயத்தில் உரைத்துச் சாப்பிட்டுத்தான் பழம் பெரும் நடிகர் ஒருவர் தங்கம்போல பளபளப்பாக இருந்ததாகச் சொல்வார்கள். தங்கப் பல் கட்டிக் கொண்டேன் என்று முன்பு சிங்கப் பல்லையும் தங்கத்தால் அடைப்பார்கள்.

தங்கக் கோயில்கள், தங்கக் கவசங்கள் சாமிகள் ஜொலிக்கின்றன. ஆசாமிகள் பலன் பெறுகின்றார்கள். அரசர்கள் அன்று வழங்கிய தங்கம் இன்று பத்மநாப சாமி கோயிலில் கின்னஸில் இடம் பெறும் அளவு இருக்கிறது. ட்ரெஷர் ஹண்டைப் போல. இன்றும் மக்கள் கோயில் உண்டியலில் தங்கத் தாலி, தங்க உருக்கள், தங்க உறுப்புக்கள், வைரம், வெள்ளி ஆகியவற்றைச் சேர்ப்பிக்கின்றார்கள்.

என் திருமண சமயத்தில்  250 ரூபாய் இருந்த தங்கம் இன்று 25000 ரூபாய் சொச்சம், வெள்ளி 2000 இல் இருந்து 70, 000 வரை சென்றது. இதன் மூலம் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகளும் ஏறின, இறங்கின. தங்கத்தை நகையாக, பாராக வாங்குவதைக் காட்டிலும் பேப்பர் கோல்டாக வாங்கி வைத்தால் கூலி சேதாரம் இருக்காது என சிலர் அதிலும் முதலீடு செய்கின்றார்கள். எஸ் ஐ பி மூலம் மாதா மாதம் தங்கம் வாங்கும் திட்டமும் உண்டு. அந்த மாதம் அன்று என்ன விலையோ அதே விலைக்கு வாங்கலாம்.

24  காரட் தங்கம் சுத்தமானது. 22 காரட் நகை செய்யப் பயன்படுகின்றது இந்தியாவில். மற்ற வெளிநாடுகளி 18, 14, 9 காரட்டுத் தங்கங்கள் நகை செய்யப் பயன்படுகின்றன. இதில் கல்ஃப் நாடுகளில் மற்றும் சிங்கப்பூரில் வாங்கும் தங்கத்தைக் கடைகள் அப்படியே லட்டுப் போல சிறந்த தொகைக்கு வாங்கிக் கொள்கின்றன.

சில காலம் முன்பு வரை நகைக் கடைகளுக்கீடாக வங்கிகளும் தங்கக் காசுகள், பார்களை விற்று வந்தன. வங்கி மேனேஜர்கள் எல்லாம் பணக்காரக் கஸ்டமர்களைப் பார்த்தாலே சார் ஒரு காயின் வாங்கிக்கலாமே என்று நகைக் கடைக்காரர்கள் மாதிரி கான்வாஸ் செய்து கொண்டிருப்பார்கள்.

வங்கி டெப்பாசிட், இடம், மனை, வீடு, இன்சூரன்ஸ் போக மனிதர்கள் எளிதாக முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருப்பதும் ஒரு காரணம். ஆனால் அதன் விலைதான் 10 மடங்கு உயர்ந்து விட்டது. எவ்வளவு உயர்ந்தாலும் அதன் ரீசேல் வால்யூ கருதியும் சமூகப் பெருமைக்காகவும் மக்கள் வாங்கி அணிந்த வண்ணம் இருக்கின்றார்கள். எத்தனையோ ஃபாஷன் ஜுவல்லரிகள், டெம்பிள் ஜுவல்லரிகள், ( கல்யாணி ) கவரிங்குகள் என வந்தாலும் தங்கம் அதன் இடத்தில் கம்பீரமாக இருக்கின்றது.

பொதுவாக தோடு, ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், சங்கிலி, ப்ரேஸ்லெட், நெக்லஸ், ஆரங்கள் என அணிந்தாலும் சில சீமாட்டிகள் தங்க ப்ரூச், தங்க தலைச் சிட்டி , தங்கக் கொலுசு எனவும் அணிகின்றார்கள்.

பத்தரை மாற்றுத் தங்கம் என்று குணத்தில் உயர்ந்தவரைச் சொல்வார்கள். தங்கத்துக்கு மாற்று உரைத்தவர் என இறைவன் ஐநூற்றீசுவரரைச் சொல்வார்கள்.

எல்லா வயதிலும் மக்கள் அதிலும் பெண்கள் தங்கத்தைத் தேடி அலைகிறார்கள். தங்கத்தால் ஈர்க்கப்படுகின்றார்கள். எங்கு சென்றாலும் தங்க நகைகளைக் கவனிக்கின்றார்கள். தங்கத்தை தகுதிக்கேற்பவும், கையிருப்புக்கேற்பவும் காசாகவும், நாணயமாகவும், பாராகவும், ஆபரணமாகவும் வாங்கி குவிக்கின்றார்கள். முதலீடு என்று சொல்லிக் கொள்வதெல்லாம் தங்கள் கணவனின் குடும்பத்தின் பெருமையைப் பறை சாற்றிக் கொள்ளவே.

இப்படி எல்லாம் வாங்கும் தங்கம் பொதுமக்களுக்குள்ளேயே பெரும்பாலும் புழங்குவதால் இதன் தேசிய மதிப்பு தெரிவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அந்நியச் செலாவணியை நிர்ணயிப்பதில் தங்க இருப்பு பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்க நாணய மதிப்பு ஏன் அதிகம் என்றால் அங்கு மத்திய தங்க இருப்பு அதிகம். இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் இருப்பில் இருக்கும் தங்க மதிப்பைப் பொறுத்தே நம் நாட்டின் நாணய  மதிப்பு கணக்கிடப்படுகின்றது.

பொதுமக்கள் வங்கி லாக்கர்களில் வைத்திருக்கும் நகைகள் இதில் சேர்வதில்லை. மேலும் இந்தியர்கள் அணிந்திருக்கும் நகைகளும் சேர்வதில்லை. வங்கிகள் அல்லது அரசாங்கம் தனிமனிதர்களிடம் இருக்கும் தங்கத்தையும் இருப்பில் வைத்து அதன் மதிப்புக்கு ஈடாக எப்போதும் மாற்றிக் கொள்ளக் கூடிய பாண்டுகளை வழங்கினால் நாட்டின் தங்க இருப்பும் நாணய மதிப்பும் உயரும்.


5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த மோகம் குறைய வாய்ப்பே இல்லை... தங்கமான அலசலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி...

sury Siva சொன்னது…

தங்கத்தின் மேல் மக்களுக்கு குறிப்பாக பென்களுக்கு இருக்கும் மோகத்தை விரிவாக விளக்கமாக எழுதியிருந்தபோதிலும்

இந்த நகைக் கடைகளில் சேதாரம் என்று சொல்லி 20 விழுக்காடு அதிகம் பெறுவதைப் பற்றியும் அவர்கள் சொல்லும் சேதாரம் எனும் விற்பனை விலையை அதிகப்படுத்தும் கான்செப்ட் , இந்த கால கட்டத்தில், எல்லா தங்க நகைகளுமே , மெஷின்களினால், கம்ப்யுடர் உதவியுடன் செய்யப்படும்பொழுது, எந்த அளவுக்கு தார்மீக ரீதியானது என்று எடுத்து சொல்லி இருக்கலாம்.

நேற்று நடந்த விஜய் தி.வி. நீயா நானா நிகழ்ச்சியிலே கூட பெண்ணீயத்தைப் பற்றி பேசியவர்கள் அனைவரிலுமே ஒருவர் கூட இந்த தங்க மோகம் பெண்களை அடிமைப்படுத்துவதில் ஒரு சாதனமாக இருக்கிறது, என்று பேசவில்லை. ஒரு பெண்ணின் சுய கௌரவம் அவள் அணியும் தங்க நகைகளில் அல்ல, என்பதை எடுத்து சொல்லி இருக்கலாம் .

திருமணங்கள் தங்க நகை நிர்ப்பந்தங்களில் இருந்து வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தக் காலத்தில், பெண்ணைப் பெற்றவர் தன் மகளுக்கு நகைகளை அணிவித்ததின் நோக்கமே , ஏதேனும் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் , அவர்கள் பெண் சமுதாயத்தில் நிர்க்கதியாக போய்விடக்கூடாதே என்று அஞ்சியது தான். அந்தக்கால கட்டத்தில், அதாவது எனது தாய் திருமணம் செய்து கொண்ட காலத்தில், பெண்களில் ஒரு 95 சதவீதம் மூன்றாம் வகுப்பு தாண்டியதில்லை. ஆனால் இன்று அந்த நிலை இல்லை.
தன் அறிவால் பெண்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் நிகழ்கையில், தங்க நகைகள் போடுவதின் மூலம் அவர்கள் எதிர்காலத்தை பத்திரப்படுத்தவேண்டும் என்ற நிலை இல்லை.

படித்த பெண்கள் இந்த தங்க மோகத்தை ஒழிந்து விடின் இந்த சமூகம் அடுத்த ஒரு ஐம்பது ஆண்டுகளில் திருந்த வாய்ப்பு இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
www.subbuthatha72.blogspot.com

சே. குமார் சொன்னது…

தங்கமான அலசல்... அருமையான கட்டுரை....
வாழ்த்துக்கள் அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

நன்றி சுப்பு சார் நிச்சயமா..

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...