உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா! மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது எதிரே ஒரு பர்ணசாலை தென்பட்டது. வைக்கோலும் தென்னந்தோகைகளும் வேய்ந்த அந்தக் குடிலின் அருகே செல்லச் செல்ல அவன் மனம் அமைதி அடைந்தது. அங்கே சென்று பார்த்தபோது சுமேதாஸ் என்ற முனி புங்கவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு அவன் வணங்கினான்.
தன்னுடைய நாடு பகைவர்களால் சூறையாடப்பட்டது பற்றி வருந்திக் கூறினான். இதைக் கேட்ட அந்த முனிவர் அவனுக்கு ஆறுதல் அளித்தார். "மன்னா! நீ இங்கேயே தங்கி விடு. எதற்கும் அஞ்சாதே. கானக விலங்குகள் மனிதர்களை விடக் கொடுமையானவை அல்ல. இனி உனக்கு எவ்விதத் துன்பமும் இல்லை. ஆகையால் நீயும் என்னைப் போலவே இங்கே கிடைக்கும் காய்கனி இலைகளை உண்டு வாழ். மன அமைதியுடன் இரு" என்று பணித்தார். சுரந்தனும் அவர் சொற்படி அவ்வாறே அவ்விடத்தில் தங்கி அவரைப் போலவே தவம் செய்து நிம்மதியாகக் காலம் கழித்து வரலானான்.
இப்படியே நாட்கள் கழிந்தன ஒரு நாள் அவன் பர்ணசாலையைச் சுற்றி மாலை நேரத்தில் காலாற நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் முன்னே ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் மிகுந்த வெறுப்புணர்ச்சியுடன் கோபமாகக் காணப்பட்டான். அவனைப் பார்த்து சுரதன்," உன் பெயர் என்ன? நீ ஏன் கலக்கமூடன் இருக்கிறாய். என்னவாக இருந்தாலும் சரி. மனம் வருந்தாமல் என்ன விஷயமென என்னிடம் கூறு" என்று சொன்னான்.
அதற்கு அந்த மனிதன், "நான் ஒரு வைசியன். என் பெயர் சமாதி. எனக்குப் பொன், பொருள், நிதியம், மனைகள் என அளக்க முடியாத அளவு ஏராளமான செல்வம் உண்டு. அதேபோல் எனக்கு புதல்வர்கள் பலரும் உண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் என் மேல் பாசம் வைக்கவில்லை. என் சொத்தின் மேல் கொண்ட பேராசையால் என்னை அடித்துத் துரத்தி விட்டார்கள். அதனால் நான் மனம் கலங்கி அமைதி இழந்து வீட்டை விட்டு வெளியேறிக் காட்டுக்குள் வந்து விட்டேன்" என்றான்.
சுரதன் அவ்வணிகனை அழைத்துக் கொண்டு முனிவரிடம் வந்தான். அவனுடைய முழு வரலாற்றையும் சுமேத முனிவரிடம் கூறினான். சுரதன் கூறியவற்றைக் கேட்ட முனிவர் மனம் இறங்கினார். அவ்விருவரையும் பார்த்து, "மனம் வருந்த வேண்டாம். இவ்வுலகம் என்பதே மாயையால் மூடப்பட்டது. மாயை என்னும் இருள் மேகமாக மூடியதால் மக்கள் மதி என்னும் வெளிச்சம் இன்மையால் கவலையால் துன்புறுகிறார்கள். ஒருவனுக்குப் போதிய அளவு பணம் இருக்கும் ஆனால் தனக்கு நல்ல குடும்பம் அமையவில்லையே என வருந்துவான். மற்றொருவன் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றப் போதிய பணம் இல்லையே என வருந்துவான். இத்தகைய பந்த பாசங்கள் இவ்வுலக வாழ்வில் பற்றுக்கள் இருக்கும் வரை தொடர்ந்து வந்து கவலை ஏற்படுத்தத்தான் செய்யும். இத்தகைய பந்த பாசங்களும் மனக்கவலையும் நீங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி ஸ்ரீதேவியைப் பூஜிப்பதுதான்" என்று கூறினார்.
உடனே இருவரும் ஆவலாக, "அந்தப் பூஜையைப் பற்றி கூறுங்கள் முனிவரே" என்று கேட்டார்கள். உடன் முனிவரும், "அந்தப் பூஜையினால் நிறைவேறாதது என்று ஒன்றுமே இல்லை. அதிலும் தேவியின் பல வடிவங்களில் ஸ்ரீ புவனசுந்தரி என்னும் திருப்பெயர் கொண்ட அன்னையைப் பூஜை செய்வது சாலச் சிறந்தது. பூஜை செய்யும் போது அர்ச்சனை, அதற்கு ஏற்ப ஹோமம், ஹோமத்திற்கேற்ற தான தருமம் எல்லாம் முறையாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும் பூஜையின் சிறப்பு எல்லையில்லாத நன்மையை தரும். நீங்கள் இருவரும் வேறு சிந்தனை எதுவும் இல்லாமல் புவனேஸ்வரியின் மந்திரத்தை ஜெபித்தால் மன நிறைவு உண்டாகும்" என்று அவர்களுக்கு புவனேஸ்வரி மந்திரத்தை உபதேசித்து அருளினார்.
"புவனேஸ்வரி மந்திரம் என்பதன் உட்பொருளே உலகத்தில் உள்ள பெண் வடிவங்களை எல்லாம் நம் தாயின் வடிவங்களாகக் கருதுதல் என்பதுதான்" இவ்வாறு முனிவர் கூறியதும் அரசன் அந்த மந்திரத்தை இடைவிடாமல் சொல்லி தேவியை குறித்துக் கடுந்தவம் செய்தான். தேவி ப்ரத்யட்சமாகவில்லை. பல நாட்கள் கடந்தன. ஆனால் அரசன் மனம் தளராமல்," தேவி நீ எனக்குக் காட்சி கொடுக்காவிட்டால் என் உயிரை நான் போக்கிக் கொள்வேன்" என்று சொல்லி மீண்டும் மீண்டும் மந்திரங்களை உச்சாடனம் செய்து தவம் செய்யலானான்.
அகில உலகத்துக்கே தாயான புவனேஸ்வரி தன் சேயான சுரதன் கவலைப்படுவதைப் பொறுப்பாளா? அவனுடைய கடுந்தவத்துக்கு மெச்சி தேவி அவனுக்குக் காட்சி கொடுத்துத் திருவருள் செய்தாள். அவன் இழந்த நாடும் அவனுக்குத் திரும்பக் கிடைத்தது.
அதேபோல சக்திமிக்க புவனேஸ்வரி மந்திரத்தைச் சொல்லி வந்த வணிகனும் தான் இழந்த பொன் பொருட்களை எல்லாம் மீண்டும் பெற்றான். இவ்விதமாக இருவரும் தேவியின் பக்தர்கள் ஆனார்கள். பின்பு அவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்து அதன் பின் இவ்வுலகப் பற்றுக்கள் நீங்கி தீர்த்தியாத்திரை செய்து முக்தி அடைந்தனர்.
ஆகையால் புவனேஸ்வரியின் மந்திரம் தாயின் வடிவமாக நாம் கருத வேண்டிய மந்திரம் மட்டுமல்ல, இவ்வுலகப் பந்த பாசங்களும் கவலையும் நீங்கக் கூற வேண்டிய மந்திரமும் ஆகும் என்பதை இவர்களின் கதைகள் விளக்குகின்றனதானே.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)