எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2026

மக்கள் திலகம் எம்ஜிஆர்

 மக்கள் திலகம் எம்ஜிஆர்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.

கொடுத்துச் சிவந்த கரம்,  கலியுகக் கடவுள்,  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்,  இதய தெய்வம்,  வாத்தியார்,  இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.

இவர் இலங்கை நவிழி பெட்டி என்ற ஊரில் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தார். இவருடைய  தந்தை கோபாலன் மேனன். தாய் சத்யபாமா. நான்கு பேர் உடன் பிறந்தவர்கள். சக்கரபாணி, காமாட்சி, சுமதி, பாலகிருஷ்ணன் ஆகியோர். இலங்கையிலிருந்து தந்தை மறைவிற்குப் பிறகு வெளியேறிக் கேரளாவிற்கு வந்து வசித்தார்கள். கும்பகோணத்தில் தனது தம்பி வீட்டில் அவரது தாய் குடிபுக அங்கே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். அதன் பின்னர் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராஜா ராணி என்ற பெயரில் சிங்கங்களை வளர்த்தார்.மூன்று திருமணங்கள். தங்கமணி, சித்தானந்தவதி பின்னர் வி.என்.ஜானகியை மணந்தார்

1936 இல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்தார் அடுத்த 25 ஆண்டுகளில் மெல்ல மெல்ல முன்னேறியவர் பெரும் புகழை அடைந்தார் எம் ஆர் ராதாவினால் சுடப்பட்ட பின் வெளிவந்த காவல்காரன் திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தியது. 71 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ரிக்ஷாக்காரன் படத்திற்காகப் பெற்றார். இவருடைய பல படங்கள் 100 நாட்கள் வரை ஓடியவை. இவர் கடைசியாக நடித்த படம் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்.

ராஜகுமாரி, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, சக்கரவர்த்தித் திருமகள், மகாதேவி, கலையரசி, குடியிருந்த கோவில், ஆனந்த ஜோதி, பெரிய இடத்துப் பெண் ,ராணி சம்யுக்தா, அந்தமான் கைதி, அபிமன்யு, அரச கட்டளை, அரசிளங்குமரி, குலேபகாவலி, சபாஷ் மாப்பிள்ளை, நேற்று இன்று நாளை, ஹரிச்சந்திரா ஆகியவை இவர் நடித்த படங்கள். அவரது படப்பாடல்களைப் பட்டியலிட்டால் நாம் நூல்கள் பல எழுத வேண்டி வரும். கிளர்ச்சியூட்டும் பாடல் காட்சிகளும் கிளாமர் மிகுந்த கதாநாயகிகளை அவர் கையாளும் விதமும் அவரை ரசிகர்களின் காதலர் ஆக்கின. சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற கதையில் எம்ஜியார் படம் போட்ட பனியன் அணிந்த ரிக்‌ஷாக்காரனை அக்கதை நாயகி அதற்காகவே விரும்புவதாக எழுதியிருப்பார். ஜெயகாந்தன்.

அலிபாபாவும் 40 திருடர்களும், அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், இதயக்கனி, என் தங்கை, கண்ணன் என் காதலன், சங்கே முழங்கு, நவரத்தினம், நினைத்ததை முடிப்பவன், பணத்தோட்டம், பறக்கும் பாவை ஆகிய படங்கள் இவரது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின.  நாடோடி மன்னன், அடிமைப்பெண் ,உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய அவரே இயக்கி நடித்த படங்களாகும். போலிப் பகுத்தறிவு வாதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிரானவராக விளங்கினார். இருந்தும் மக்களின் இறை நம்பிக்கையை மதித்தார். மேரா நாம் அப்துல் ரகுமான் என்று அவரால் பாடவும் முடியும், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ளத்திலும் அவரால் குடியிருக்கவும் முடியும்


எம்ஜிஆர்  முதலில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின் திமுகவில் சேர்ந்தார். அங்கு ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தினால் 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து அதன் பின் 1977 இல் தமிழ்நாட்டில் முதலமைச்சரானார். 84 நோய் வாய்ப்பட்டும் பிரச்சாரத்திற்கே வராமல் படுத்துக்கொண்டே ஜெயித்த ஒரே முதல்வர் இவர்தான். தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 24 டிசம்பர் 1987 இல் தனது 70 வது வயதில் மறைந்தார். 1990 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இந்திய அஞ்சல் துறையால் இவருக்காக நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறார் என்று கேட்ட மக்களுக்குப் பதிலடியாக, எளிய மக்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியூட்டினார். நினைத்ததை முடிப்பவனாக  இவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், விதவைப்பெண்கள் திருமண உதவி, தாய் சேய் நல இல்லங்கள், இலவசச் சீருடை, காலணி, பற்பொடி, பாடநூல் ஆகியன வழங்கும் திட்டங்கள் பொதுமக்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டாலும் எளிய மக்களுக்கு அவை மிகவும் உதவின என்பதை மறுக்க இயலாது.

திமுகவில் சேர்ந்ததிலிருந்து அவருடைய பாடல்கள் ஒரு 15 வருடங்களில் அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு செலுத்தும் அளவுக்குச் செழுமைப்படுத்தின. மக்கள் நலம் நாடும் தலைவனாகவே அவரை முன்னிறுத்தின. எடுத்துக்காட்டாக உரிமைக்குரல், ஆயிரத்தில் ஒருவன், ஊருக்கு உழைப்பவன், நேற்று இன்று நாளை ஆகிய திரைப்படங்களைச்  சொல்லலாம்.ஒரே நேரத்தில் தொழில் அதிபராகவும் தொழிலாளியாகவும் மக்கள்  அவரை எப்படிப் பார்த்தாலும் தங்களில் ஒருவராகவே பார்த்தனர்.

பட்டத்து ராஜாவும் பட்டாளச் சிப்பாயும் ஒன்றான காலம் இது என்ற மீனவ நண்பன் பாடலும், உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே என்ற பாடலும், நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற இங்கு  நல்லவர்கள் என்பவர்கள் உங்கள் பின்னாலே நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் உங்கள் கண்ணு முன்னாலே என்றெல்லாம் அவரை புகழ்ந்தும் தொழுதும்  இயற்றப்பட்ட பாடல்கள் அதிகம். அதற்கேற்ற கரிஸ்மாவும் கம்பீரமும்அவருக்கு இருந்தன. ஆளுயர ரோஜா மாலையை தாங்கும்  வல்லமையும் உயர்ந்த தகுதியும் அவரது தோள்களுக்கு இருந்தது.

தன்னுடைய படங்கள் அனைத்திலும் ஏழை பங்காளனாகவும், படகோட்டியாகவும், மீனவ நண்பனாகவும், விவசாயியாகவும், வேட்டைக்காரனாகவும், ரிக்ஷாக்காரனாகவும், காவல்காரனாகவும், ஊருக்கு உழைப்பவனாகவும், நினைத்ததை முடிப்பவனாகவும், மாட்டுக்கார வேலனாகவும், தொழிலாளியாகவும் இருந்ததோடு மட்டுமல்ல.. பாக்தாத் திருடனாகவும், மலைக்கள்ளனாகவும், நாடோடி மன்னனாகவும் அதே சமயம் மதுரை வீரனாகவும், மன்னாதி மன்னனாகவும், நாட்டுக்குழைப்பவனாகவும், தலைவனாகவும் விளங்கினார்.

மேலும் காஞ்சித் தலைவன், ஒளி விளக்கு, என் கடமை, நாளை நமதே, நம் நாடு, நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இன்று போல் என்றும் வாழ்க, நான் ஆணையிட்டால், நீதிக்கு தலைவணங்கு என நல் வார்த்தைகளோடு அரசியலில் அடி எடுத்து வைக்கும் திறன் அவருக்கு இருந்தது. தர்மம் தலைகாக்கும், சிரித்து வாழ வேண்டும், திருடாதே, தாயைக் காத்த தனயன், தாய்க்கு தலைமகன், தாய்க்குப்பின் தாரம், தாய் சொல்லை தட்டாதே, பல்லாண்டு வாழ்க என நல்வாழ்த்துக்களோடும், குடும்ப அமைப்பின் இறையாண்மையைக் காக்கும் விதத்திலும் அமைந்தன அவர் படங்கள்.

”நாடோடி மன்னன்” என்ற தன் திரைப்படத்தைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். அதுபோக  “நான் ஏன் பிறந்தேன்” என்று விகடனில் ஒரு சுயசரிதை தொடரும் இவரைப் பற்றி வெளியானது. “எனது வாழ்க்கைப் பாதையிலே” என்ற தொடரும் முற்றுப்பெறவில்லை. ஈழத் தமிழர்களின்பால் மிகுந்த மனிதாபிமானமும் அவர்களுக்கு நிறைய உதவிகளும் செய்தவர். 1981இல் இவரது முயற்சியால் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உருவானது. இதற்காக அவர் ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொடுத்தார்.

நான் ஏன் பிறந்தேன் என்று கேட்ட அவரைத்  தங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் தத்து எடுத்துக் கொண்டார்கள்.  நாடோடி மன்னன் ஆன அவர் தமிழ்நாட்டின் மன்னனானார். குடித்தல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் இவர் படங்களில் இடம்பெற்றிருக்காது. மக்களுக்கு நீதியையும் நேர்மையையும் சொல்லும் கருத்துக்களையும், எளியவனும் வாழ்வான், தன்னிறைவோடு  வாழ முடியும் என்ற அழகியல் உண்மைகளையும் சொன்ன கதைகள் அவை. எதிர்மறை முடிவுகளே இருக்காது மதுரை வீரன் படத்தைத் தவிர. மறைந்து நாற்பதாண்டுகளானாலும் இன்னும் மக்கள் மனதில் குடிகொண்டுள்ள மக்கள் தலைவர் இவர் ஒருவரே. திரையிலும் நிஜத்திலும் நாட்டுக்கு, வீட்டுக்கு உழைக்கும் நல்லவன் என்றும் வெற்றி பெறுவான்.  இது அவரது வெற்றி பார்முலா.  இதுவே அவர் நமக்கு தந்து சென்ற  நற்செய்தியும் கூட.

டிஸ்கி:- வாணிஸ்ரீ கட்டுரையைப் பாராட்டிய ராங்கியம் வாசகர் திரு. அழ.லெட்சுமணன் அவர்களுக்கு நன்றி. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...