எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

கிபி 1206 – 1290 வரை இந்தியா துருக்கியிலிருந்து வந்த அடிமை வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அடிமை வம்சத்தின் முதல் அரசர் குத்புதீன் ஐபக். இவர் டெல்லியில் சுல்தானகத்தை நிறுவினார். அவருக்குப் பின் அவரது மருமகன் இல்துமிஷ் பதவி ஏற்றார். அடுத்துப் பதவி ஏற்ற ரசியா இல்துமிஷின் மகளாவார்.

பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ஆளும் தகுதிபெற்ற சகோதரர்கள் இருக்கும்போது அடிமை வம்ச சக்கரவர்த்தியான தனது தந்தை சம்சுதீன் இல்துமிஷிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றாள். 1236 முதல் 1240 வரை நான்கே ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் என்ற வரலாற்றைப் படைத்துச் சென்றார்.

இன்னும் கூடப் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு பதிமூன்றாம் நூற்றாண்டில் டெல்லியின் சிம்மாசனத்தில் அமர்ந்து இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண் ஆட்சியாளர், பேரரசி ரஸியா சுல்தானா. துருக்கிய அடிமையாக வாழ்க்கையைத் தொடங்கி டெல்லியின் சுல்தானாக ஆனவர். மம்லுக் வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர், திறமையான போராளி, வில்லாளி, மற்றும் குதிரையேற்றம் தெரிந்தவர். 

12 ஆம் நூற்றாண்டில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் மேல் போர் தொடுத்தவர் துருக்கிய ஆட்சியாளர் முகம்மது கோரி. பல்வேறு போர்களில் அவர் பல மாநிலங்களைக் கைப்பற்றினார். இது இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கத்திற்கும் ஆட்சிக்கும் வழி வகுத்தது. அதனால் கிபி 1206 மற்றும் 1290 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் துருக்கியின் அடிமை வம்சத்தின் ஆட்சி நடைபெற்றது. 

 

குத்புதீன் ஐபக், முகம்மது கோரியின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர். அவர் கோரியுடன் இந்தியாவின் மீது படையெடுத்தபோது டெல்லியை வென்றார். கோரியின் மரணத்துக்குப் பிறகு 1206 இல் குத்புதீன் அடிமை வம்சத்தை நிறுவினார். அதன் முதல் சுல்தான் அவர். தனது படையின் சிறந்த வீரனான சம்ஸுதீன் இல்துமிஷுக்குத் தனது மகள் குதாப் பேகத்தை மணமுடித்து இரண்டாவது சுல்தானாக ஆக்கி ஆட்சியையும் கொடுத்தார். இவர்களின் மகள்தான் ரஸியா பேகம். 1205 இல் புடானில் பிறந்தார், இவரது தாய்வழிப் பாட்டி ஷம்ஷாத் பேகம். ரஸியாவின் தாத்தா சுல்தான் குத்புதீன் ஐபக் அவளுக்கு ஐந்து வயதாக இருந்தபோது இறந்தார்.

குத்புதீன் ஐபக் இறந்தபிறகு இரண்டாம் சுல்தானாக ஆரம் ஷா ஆட்சிக்கு வந்தார். ஷாவுக்கு எதிராக டெல்லி சுல்தானகத்தின் சிம்மாசனத்தை எடுக்க "சிஹல்கனி" என்று அழைக்கப்படும் 40 துருக்கிய பிரபுக்களின் குழுவால் இல்துமிஷ் அழைக்கப்பட்டார். 1211 இல் துருக்கியப் பிரபுக்களின் ஆதரவோடு ஆரம்ஷாவைத் தோற்கடித்து இல்துமிஷ் டெல்லி சுல்தானகத்தின் மூன்றாவது சுல்தானாக 1211 இலிருந்து 1236 வரை ஆட்சி செய்தார்.

இல்துமிஷின் மகளான ரஸியா சிறுவயதிலேயே ஆயுதப் பயிற்சியும் இராஜ்ஜியத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாகப் பயிற்சியும் பெற்றவர். இல்துமிஷ் தனது மூத்த மகன் நஸுருதீன் மகமூதுக்குத்தான் ஆட்சிப் பொறுப்பை வழங்க விரும்பினார். ஆனால் 1229 இல் நஸுருதீன் எதிர்பாராதவிதமாக இறந்தபின் எஞ்சிய இரு மகன்களும் கேளிக்கைகளில் மட்டும் நாட்டமுடையவர்களாய்த் திறமையற்றவர்களாய் இருந்த காரணத்தால் தனது வாரிசாக ரஸியாவை நியமித்தார்.

1230 இல் இல்துமிஷ் குவாலியருக்குப் படையெடுத்துச் சென்ற சமயத்தில் ரஸியா முதல்மந்திரி துணையுடன் நிர்வாகத்தைத் திறம்படக்கவனித்து வந்ததால் முழு ராஜ்யத்தின் பொறுப்பையும் தனக்குப் பின் அவரிடம் ஒப்படைத்தார். இல்துமிஷ் தனது அதிகாரியன முஷ்ரிஃப்-இ-மம்லகத் தாஜுல் முல்க் மஹ்மூத் தாஃபிருக்கு ரசியாவைத் தன் வாரிசாக அறிவிக்கும் ஆணையைத் தயாரிக்க உத்தரவிட்டார்.

30, ஏப்ரல், 1236 இல் இல்துமிஷ் இறப்பதற்கு முன் தன் மனைவியான அடிமை வம்சத்தைச் சேர்ந்த ஷா துர்க்கானின் சூழ்ச்சியினால் தனது முடிவைத் திருத்தி அவளது மகனான ருக்னுதீனைத் தனது வாரிசாக நியமித்தார். நான்காவது சுல்தானாக ஆறே மாதங்கள்தான் ஆட்சி செய்தார் ருக்னுதீன். ஆனால் அவர் பெயரால் உண்மையில் அக்கிரமமாக ஆட்சி செய்தவர் அவரது தாய் ஷா துர்க்கான்தான்.

ருக்னுதீனின் ஆட்சியில் ருக்னுதீனுக்கு நெருக்கமான துருக்கிய வம்சாவளி அடிமை அதிகாரிகள் துருக்கியர் அல்லாத அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிட்டனர். இதை முறியடிக்க துருக்கியர் அல்லாத முதல்மந்திரி நிஜாமுல் முல்க் ஜுனைடி கூட கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தார். இதனால் ஜுனைடியின் மகன் ஜியாவுல் முல்க் மற்றும் தாஜுல் முல்க் மஹ்மூத் உட்பட பலர் துருக்கிய அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். இதனால் அவர்கள் ரஸியாவை வாரிசாக அறிவிக்கும் ஆணையை வரைந்தார்கள். ருக்னுதீர் குஹ்ராம் நோக்கிக் கிளர்ச்சியை அடக்க இராணுவத்துடன் கிளம்ப ரஸியாவைத் தூக்கிலிட ஷா துர்க்கன் முயன்றார். ஆனால் பொதுமக்கள் ஆதரவோடு ரஸியா அதை முடியடித்தார். கடைசியில் தனது தாயுடன் ருக்னுதீன் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின் பொதுமக்கள் மற்றும் சில சுல்தானகத் தலைவர்களின் ஆதரவுடன் நவம்பர் 10,  1236 இல் மம்லுக் சுல்தானகத்தின் ஐந்தாவது சுல்தானாக முடிசூட்டிக் கொண்ட ரஸியாவுக்கு ஜலாலத்–உத்–தீன் ரஸியா சுல்தான் என்ற பட்டம் வழங்கப்பட்டது. ரஸியா சுல்தான் 1236 மற்றும் 1240 க்கு இடையில் சுமார் நான்கு ஆண்டுகள் தனித்துவத்துடன் ஆட்சி செய்தார். முறையான சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டினார், அரசாங்க சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தார் இந்திய வரலாற்றில் இந்த குறுகிய கால ஆட்சியிலும் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் சென்றுள்ளார்.

முன்பு ருக்னுதீனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நான்கு துருக்கிய பிரபுக்கள், படவுனின் மாலிக் இசுதின் முஹமது சலாரி, முல்தானின் மாலிக் இசுதீன் கபீர்கான் அயாஸ், ஹன்ஸியின் மாலிக் சைபுதீன் குச்சி மற்றும் லாகூரின் மாலிக் அலாவுதீன் ஜானி ஆகியோர் இணைந்து ரசியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இவர்கள் நால்வரும் வேறு திசைகளில் அணிவகுத்துச் சென்று ரசியா தன்னுடைய கவர்னரான மாலிக் நுஸ்ரதுதீன் தைசியிடம் உதவி கோரினார். ஆனால் தைசி குச்சியின் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர் ரசியாவின் தலைமையில் இராணுவம் செயல்பட கிளர்ச்சியாளர்களில் இருவர் இசுதீன் முஹமது சலாரியும் இசுதீன் கபீர்கான் அயாஸும் ரசியாவுடன் சேர்ந்தனர். சைபுதீர் குச்சி கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார், மேலும் அலாவுதீன் ஜானி கொல்லப்பட்டார்.

இப்படியாகக் கிளர்ச்சியாளர்களுடன் போராடுவதிலேயே அடிமை வம்சம் தனது பாதி ஆட்சிக் காலத்தைச் செலவிட்டது. தன்னுடன் இணைந்த விசுவாசிகளுக்கு பல்வேறு இக்தாக்களை வழங்கினார். மாலிக்-இ-கபீர் இக்தியாருதீன் ஐதிகினுக்கு அமீர்-ஐ-ஹாஜிப் மற்றும் மாலிக் ஜமாலுதீன் யாகுத்துக்கு அமீர்-ஐ-ஆகுர் என்ற பட்டங்கள் வழங்கினார்.

துருக்கியர் அல்லாத பிரபுக்களுக்கு அவள் உயர் பதவியைக் கொடுத்தாள். அது துருக்கியப் பிரபுக்களின் வெறுப்புக்கு வழி வகுத்தது. துருக்கியபிரபுக்கள் மற்றும் அதிகாரிகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தாலும் ரஸியாவினால் ரந்தம்போர் படையெடுப்பின் மூலம் சாஹமானாக்களை அடிமைப்படுத்த முடியவில்லை. அவர்கள் டெல்லியைச் சுற்றிக் கொரில்லாப் போர் நடத்தினர்.

மங்கோலியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் கடைப்பிடிக்காததால் அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். 1238 – 39 களில் லாகூரின் கவர்னரான மாலிக் இசுதீன் கபீர்கான் அயாஸ் ரசியாவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ரசியா அவருக்கு எதிராக அணிவகுத்து சோத்ராவிற்கு ஓடும்படிச் செய்தார். சோத்ராவிற்கு அப்பால் உள்ள மங்கோலியப் பிரதேசத்தில் அவருக்கு ஆதரவு கிடைக்காததால் அவர் திரும்ப ரஸியாவையே சரணடைந்தார்.  இப்படியாக 3 ஆண்டுகள், 6 மாதங்கள், மற்றும் 6 நாட்கள் ரஸியா ஆட்சி செய்தார்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு பெண் அரசாள்வது என்பது அதுதான் முதல் முறை. ஆனால் தங்களை ஒரு பெண் அரசாள்வதை அவமானமாகக் கருதிய சில ஆளுநர்கள் அவரைப் பதவி நீக்கம் செய்ய முயன்றனர். ரஸியா முக்காடு அணிவது போன்ற பாரம்பரியப் பழக்கங்களைக் கைக்கொள்ளாததும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ரஸியாவோ அந்த 40 தலைவர்கள் கொண்ட குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார். அதுதான் அவர் செய்த தவறு. 

ஆப்ரிக்கக் கறுப்பினத்தவரும் அபிசீனிய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜமாலுத்தீன்  யாகுத்தை ரஸியா மூத்த அதிகாரியாக நியமித்ததால் அதிருப்தி அடைந்திருந்த 40 தலைவர்கள் கொண்ட குழுவினர் மாலிக் அல்துனியாவை ரஸியாவுக்கு எதிராகத் திசைதிருப்பினர். ஆளுநர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் ரஸியா அல்துனியாவுக்கு எதிராக யாகுத்துடன் தனது இராணுவத்துடன் அணிவகுத்துச் சென்றார். 

ஒரு சதித்திட்டத்தின் மூலம் அல்துனியா, யாகுத்தைத் தபர்ஹிந்த் சிறையில் அடைத்தார். அச்சிறையில் துருக்கியர்களால் யாகுத் கொல்லப்பட்டார். அங்கு கிலா-மு-பார்க் என்று அழைக்கப்படும் கோட்டையில் ரஸியா சிறை வைக்கப்பட்டார். இதற்கிடையில் ரசியாவின் சகோதரர் பஹ்ராமை ஆட்சியில் அமர்த்தி மகிழ்ந்தார்கள் அந்தத் தலைவர்கள் குழு. சிறிது நாளில் ரசியாவின் தலைவிதி அவளுக்கு எதிராக மாறிவிட்டது.

சிறையிலிருந்து விடுதலை அடைந்து தனது சகோதரர் சுல்தான் பஹ்ராம் ஷாவிடம் இருந்து தனது இராஜ்ஜியத்தைப் பெறுவதற்காக 1240 இல் ரஸியா அல்துனியாவை மணந்து கொண்டார். ஆனால் அல்துனியாவுக்கு 40 தலைவர்கள் கொண்ட குழுவினர் எந்தப் பதவியும் கொடுக்காததால் அவர்கள் தாங்கள் முக்கியத்துவம் இழந்ததை உணர்ந்தார்கள். ரஸியாவும் அல்துனியாவும் தபர்ஹிந்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார்கள். ஆனால் ஹரியானாவின் கைதல் அருகே அக்டோபர் 14, 1240  அன்று அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

ரஸியா உடைகளிலும் புரட்சி செய்தவர். அவர் புர்க்காவோ முக்காடோ அணியாமல் ஆண்கள் அணியும் இராணுவ உடை அணிந்து யானையின் மீது சவாரி செய்து மக்களுக்கு நேரடியாகக் காட்சி தருவார். கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கச் சாலைகள் அமைத்தார். பொதுமக்கள் நலனுக்காகக் கிணறுகள் தோண்டியவர். இந்துக்கள் மேல் விதிக்கப்பட்ட ஜாசியா என்ற வரியை நீக்கினார். பள்ளிகள், கல்விக்கூடங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பொது நூலகங்களை நிறுவினார். குர் ஆனுடன் இந்து படைப்புக்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்துப் பள்ளிகளில் போதிக்கச் செய்தார். தனது தந்தை பெயரிலும் தன் பெயரிலும் (நஸ்ரத் & நஸீர் ) நாணயங்கள் வெளியிட்டுள்ளார் ரஸியா. இவை வெள்ளி, தங்கத்தால் செய்யப்பட்டவை.

ரஸியா சுல்தான் கருணையுள்ளம் கொண்டவர். கண்ணியத்துடன் வாழ்ந்தவர். திறமையான ஆட்சியாளர். மக்களின் ராணி எனப் புகழப்பட்டவர். சுதந்திரமாகத் தனக்குப் பிடித்தபடி நடந்தவர். தைரியம் , புத்திசாலித்தனம், சமயோசிதம், வீரத்துக்கு எடுத்துக்காட்டு.  பதிமூன்றாம் நூற்றாண்டின் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சமூகத்தை எதிர்த்துப் போராடி வென்றவர், முடிவில் சூழ்ச்சியால் இறந்தது சோகம். ரஸியா சுல்தான் பெண்ணிய சக்தியின் அடையாளம், பெண்களுக்கான உத்வேகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...