எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 ஜூன், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 4.

 7.

எறையாமப் பேசு - சத்தம் போடாமல் பேசு

வறளி - கொடுக்க மனமில்லாதவர், வரட்சியான காய்ந்த மனநிலை. கஞ்சம்

குலதெய்வக் கோவிலில் கொண்டு சேர்த்தல் - சமைந்த காலத்தில் ஒரு பெண்ணை முனி அடித்திருந்தால் இறந்தபின் வீட்டில் அவர்க்குப் படைக்க முடியாது. எனவே குல தெய்வக் கோவிலில் வேளாரிடம் அவரின் பேர் சொல்லிக் கருவறையில் ஆணியடித்துச் சாமியுடன் சேர்த்துவிடுவார்கள்.

ஒய்யக் கொண்டா வீடு - செட்டி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் பேர் உண்டு. இதுவும் ஒரு வீட்டின் பெயர். 

கெம்புக்கல்லு செட்டு - சிவப்புக் கல் பதித்த நகைகள்.

ஜோடித் தோடு, ஜோடிக்காப்பு - இரண்டு தோடு , இரண்டு வளையல்.

அட்டிய - அட்டியல் - நெக்லஸ்.

வைரத்துல ரெட்டை வரிசைக் காப்பு - இரட்டை வரிசைக் காப்பு என்பது ஒரு காப்பே இரண்டு காப்புகளுக்குச் சமம். இரண்டு வரிசை நிறைய வைரம் பதித்தது. காப்பு என்றால் வளையல்.

வேவுக்கடகான் - வேவு இறக்கும் கடகம் , வெள்ளியில் செய்த கூடை, கொட்டான் போன்று டிசைன் செய்யப்பட்ட பாத்திரம்.

காசாணி அண்டா - மழைக்காலத்தில் தண்ணீர் பிடித்து வைக்கப் பயன்படும் மிகப் பெரிய அண்டா., இதில் நெல்லும் அவிப்பார்கள். செம்பில் இருக்கும்.

சருவச் சட்டி - சாதாரணச் சட்டிகளையும் உயரச் சட்டிகளையும் சருவச் சட்டி என்பார்கள். தண்ணீர் வைப்பதையும் சருவச் சட்டி என்பார்கள்.

சாமான் பரப்புதல் - திருமணம், குழந்தை பிறந்தால், பெண் சமைந்தால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, ஆயா வீட்டார், இங்கே சாமான் பரப்புதல் மரபு.

கெண்டாங்கிச் சேலை - பட்டுச் சேலை. கெட்டிச் சரிகைக் கரை போட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலை..

மகாப் பூடம் - ரொம்பப் பொல்லாதது.

சமைஞ்சிருச்சு - பெரியபெண் ஆதல், புஷ்பவதியாதல். பருவத்தை எட்டுதல்.

ஆத்தாத்தோய் - பெண்ணை/மகளை/பேத்தியைப் பார்த்து வியப்பாய் விளித்தல்.

சித்ராங்கி - ஒரு வேலையைச் சித்திரம்போலச் செம்மையாகச் செய்யும் பெண், சித்திரம் போல அழகான பெண்.

சீமைச் சமத்தி - கெட்டிக்காரி.

கிட்டங்கிக்காரர்கள் - வட்டிக்கடைக் கிட்டங்கியில் பணிபுரிபவர்கள், அதன் உரிமையாளர்கள்

மலயா - மலேஷியா

கடிதாசி - கடிதம்

வட்டகை - வட்டாரம், குறிப்பிட்ட பகுதி ( மேல வட்டகை, தெற்கு வட்டகை எனக் குறிப்பிடுவார்கள் )

பெரும்போட்டு ஆளுக - பணம் படைத்தவர்கள். உடல் வலு கொண்டவர்களையும் பருத்தவர்களையும் கூடக் குறிப்பிடுவதுண்டு.

அம்மான் மகன் - மாமாவின் மகன். அம்மாவின் அண்ணன் அல்லது தம்பியின் மகன்.

அக்கினியாத்தா - அக்கினியாத்தா, அடைக்கியாத்தா, மெய்யாத்தா, காளியாயா ஆகியோர் குறிப்பிட்ட கோவில் சார்ந்தவர்கள் கும்பிடும் தெய்வம்.

பெட்டியடிப் பயலுக - கிட்டங்கியில் பெட்டியடியில் வேலை செய்பவர்கள். இவர்கள்தான் வட்டி வசூல் செய்யப் போவார்கள். 

சுருக்கிக்கினு - கணக்கை முடித்துப் பணத்தை வாங்கிக் கொள்ளுதல். வியாபாரத்தைச் சுருக்கிக் கொள்ளுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...