எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 ஜூன், 2024

விழிப்புணர்வைப் போதித்த அஷ்டவக்கிரர்

 விழிப்புணர்வைப் போதித்த அஷ்டவக்கிரர்


ஒரு மனிதரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து நாம் அவரை எடைபோடுகிறோம். அவருடைய ஞானம், தகுதிகள் ஆகியவற்றை அறியாமல் இத்தவறைப் பெரும்பாலோர் செய்கிறார்கள். மெய்மையைப் போதித்ததால் தந்தையின் சாபம் பெற்று எட்டுக் கோணல்களுடன் பிறந்து ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்துத் தந்தையையும் காப்பாற்றி சாபவிமோசனம் பெற்ற ஒரு முனிவர் பற்றி அறிந்து கொள்வோம்.

உத்தாலக ஆருணி என்ற வேத முனிவருக்கு சுவேதகேது என்ற மகனும் சுஜாதா என்ற மகளும் இருந்தார்கள். வேதம் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வந்தார் உத்தாலகர். இப்பள்ளியில் பயின்று வந்தார் கஹோடர். இவருக்குத் தன் மகள் சுஜாதாவை மணம் முடித்துக் கொடுத்தார் உத்தாலகர்.

திருமணமானது கர்ப்பமுற்றாள் சுஜாதா. அவளும் வேதப் பயிற்சியில் சிறந்தவள் என்பதால் கருவில் இருக்கும் குழந்தை அவள் வேதம் ஓதுவதைக் கேட்டுச் சரியான உச்சரிப்பைப் பாராயணம் செய்து கொண்டது. ஒருமுறை கஹோடர் வேதம் ஓதும்போது ஒரிரு இடங்களில் தப்பும் தவறுமாக ஓதுவதைக் கேட்ட அக்குழந்தை கர்ப்பத்திலிருந்தே அவரது தவறான உச்சரிப்பைத் திருத்தியது. கோபமுற்ற கஹோடர் அக்குழந்தை எட்டுக் கோணல்களுடன் பிறக்கும்படிச் சாபமிட்டார்.

குழந்தை அஷ்டவக்கிரன் பிறந்த சில காலத்துக்குப் பின் வாழ்வாதாரத்துக்குப் பொருள் வேண்டி கஹோடர் விதேகதேசம் சென்றார். அங்கே ஜனகரின் அவையில் வந்தின் என்ற முனிவரின் விவாதங்களுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல் தோற்கடிக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டார். இது நிகழ்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டவக்கிரர் விதேக தேசம் சென்றார். அங்கே யாகமும் ஹோமமும் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.


அச்சமயம் ஜனகர் தொடர் துர்க்கனவுகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கனவில் அவர் பிச்சைக்காரராகக் கடுமையாகத் துன்புறுவது போல் தோன்றும். விழித்தபின் தான் மன்னர் என்பதை உணர்வார். இதில் எது உண்மை என்பதை உரைக்கவேண்டும் என அவர் தன் சபை முன் கேள்வியாக வைத்தபோது யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.

தன் தந்தை தனக்களித்த சாபம் பற்றியும் ஜனகரின் அவையில் தன் தந்தை வாதப் போரில் தோற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டது குறித்தும் தாய் மூலம் அறிந்த அஷ்டவக்கிரர் ஜனகரின் அவையை அடைந்தார்.

எட்டுக் கோணல்களுடன் கூடிய உடலமைப்புடன் சென்ற முனிவரைப் பார்த்து ஜனகனின் அவையே சிரித்துக் கூத்தாடியது. கோபமுற்ற முனிவர்,”மன்னா உம் கேள்விக்குப் பதில் நான் தருகிறேன். ஆனால் இந்தத் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைக்காரர்களையும் வெளியேற்றுங்கள்” என்று கூறினார். கொந்தளித்த சபை ஆட்சேபம் தெரிவித்தது. மன்னர் ”அஷ்டவக்கிரரே, ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள். இது பண்டிதர்கள் நிறைந்த சபை” என்று பதிலளித்தார்.

”ஒருவரின் உடலின் வெளிப்புறத் தோற்றத்தையும் தோலையும் பார்த்து எடைபோடும் இவர்கள் தோல் வியாபாரிகள் மற்றும் கசாப்பு கடைக்காரர்கள்தானே “ என்று சாடினார் அஷ்டவக்கிரர். அவமானம் அடைந்த அப்பண்டிதர்கள் அவையை விட்டு வெளியேறினார்கள். பின்னர் அஷ்டவக்கிரர் மன்னரிடம்,” கனவில் பிச்சைக்காரனாக இருப்பதற்கு வருந்துவது, விழித்தவுடன் ராஜாவாக இருப்பதற்கு மகிழ்வது என இருக்காதே. இரண்டையுமே சமமாகக் கருதக் கற்றுக் கொள். உன் இதயத்தை எப்போதும் உயர்ந்த விழிப்புணர்வோடு வைத்திரு” என்று போதித்தார். இது அஷ்டவக்கிர கீதை எனப்படுகிறது. இதைக் கேட்டு ஜனகர் தெளிவடைந்தார்.

மேலும் அஷ்டவக்கிரர் ஜனக மகாராஜாவிடம்,”ஏகாதிபதிகளில் மிகச் சிறந்த மன்னரே, இச்சபையில் வந்தின் என்பவனுடன் நான் வாதப்போர் புரிய வந்துள்ளேன். அவன் எங்கிருக்கிறான் ? அவனை என் முன்னிலையில் கொண்டு வரும்படிச் செய்யுங்கள்” என்று கூறினார். இதைக் கேட்டதும் அஷ்டவக்கிரர் முன்பு வந்த வந்தின் “நெருப்பு, சூரியன், இந்திரன், யமன் ஆகியோர் ஒருவரே” என்று அவர்களின் பராக்கிரமத்தைப் பற்றிக் கூறினான்.


அதற்கு மறுமொழியாக அஷ்டவக்கிரர் இரண்டின் சிறப்பைப் புலப்படுத்தும் வண்ணம் “ இந்திரன் – அக்னி, நாரதர் – பர்வதர், அசுவினி குமாரர்கள், கணவன் மனைவி ஆகியவர்கள் தெய்வீக இணைகள்” என இருவர் சிறப்பைக் கூறினார். இதைக்கேட்டு வந்தின் மூன்றின் சிறப்பாக சொர்க்கம் நரகம் பூமி மற்றும் சூரியன் சந்திரன் நெருப்பைப் பற்றிக் கூற அஷ்டவக்கிரரோ நான்கின் சிறப்பாக நான்கு திசைகள், வர்ணாசிரமம் பற்றிக் கூறுகிறார்.

தொடர்ந்து வந்தின் வேள்விகள், நதிகள் ஐந்து என்று கூற, அஷ்டவக்கிரரோ வேள்விக்கொடையாக ஆறு பசுக்கள், பருவங்கள் ஆறு, புலன்கள் ஆறு என அடுக்குகிறார். வீணையின் தந்திகள் ஏழு, சப்தரிஷிகள் ஏழு என வந்தின் கூற  அஷ்ட வசுக்கள், சரபத்தின் கால்கள் எட்டு எனக் கூறுகிறார் அஷ்டவக்கிரர். கணக்கில் ஒன்பது என்ற எண்களே உள்ளன என்று வந்தின் கூற ஞானாசிரியர்கள் பத்து, பெண்கள் கருச்சுமக்கும் காலம் பத்து என அஷ்டவக்கிரர் பதில் அளிக்கிறார்.

விடாமல் வந்தின் ருத்திரர்கள் பதினோரு பேர் என்று கூற அஷ்டவக்கிரரோ ஆதிதியர்கள் பன்னிருவர் எனப் புகல்கிறார். திரியோதசி எனப்படும் பதிமூன்றாவது நாள் சிறப்பு பதிமூன்று தீவுகள் உள்ளன என்று கூறிய வந்தின் பாதியில் நிறுத்திவிட, அஷ்டவக்கிரர் தொடர்ந்து கேசியால் பதிமூன்று வேள்விகள் செய்யப்பட்டன. வேதத்தின் அதிச்சந்தங்களால் பதிமூன்றும் விழுங்கப்பட்டன என்று மீதி சுலோகத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதைக் கேட்டு வந்தின் தோல்வியால் தலை குனிய அஷ்டவக்கிரரோ தன் தந்தையை முன்பு வாதப்போரில் ஜெயித்து வந்தின் நீரில் மூழ்கடித்ததைப் போல வந்தினையும் நீரில் மூழ்கடிக்க வேண்டும் என்று மன்னரிடம் கேட்கிறார். அப்போது நீரில் மூழ்கிய அஷ்டவக்கிரரது தந்தை கஹோடர் இன்னும் பதினோரு முனிவர்களுடன் அங்கே தோன்றுகிறார். வந்தினோ தன் தந்தை வருணன் செய்து வந்த யாகத்துக்கு வேதம் ஓத அவர்களை நீரில் மூழ்கடித்து அனுப்பியதாகவும் இப்போது யாகம் முடிந்து திரும்பப் பெற்றதாகவும் கூறுகிறான். அஷ்டவக்கிரர் கேட்டுக்கொண்டதுபோல் வந்தின் நீரில் மூழ்கித் தன் தந்தை வருணனை அடைகிறான்.

அஷ்டவக்கிரருடன் ஆசிரமம் திரும்பிச் சென்ற கஹோடர் தன் மனைவி சுஜாதாவின் முன்னிலையில் சமங்கா நதியில் இறங்குமாறு பணிக்கிறார். தந்தையின் ஆணைக்கு ஏற்ப அஷ்டவக்கிரர் சமங்கா நதியில் மூழ்கி எழ அவரின் அஷ்டகோணலான உடல் உறுப்புகள் அனைத்தும் சீராகின. அவர் தன் தந்தை தனக்களித்த சாபவிமோசனம் விலகி முழுமையாக மனிதராக மேலெழுந்து வந்து தன் பெற்றோரை வணங்கினார். ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்தது மட்டுமல்ல தன் தந்தையையும் நீரிலிருந்து மீட்டெடுத்த அஷ்டவக்கிரர் தன் மனத்தின்மைக்காகவும், ஞானத்தெளிவுக்காகவும் போற்றப்பட வேண்டியவர் என்பது உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...