எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஜூன், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 3

5.

ஆஸ்டின் கார் - அந்தக்காலக் கார் வகைகளில் ஒன்று.

வக்கூடை - மூடி போட்ட பிரம்புக் கூடை

வெளையாட்டுப் பொட்டி வேவு - குழந்தை பிறந்தவுடன் ஆயா வீட்டார் இறக்குவது. இதில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்கம் வெள்ளியிலிருந்து உடை வரை ஆயாவீட்டார் சீராகக் கொடுப்பார்கள். இதற்கு ஆயா வீட்டுப் பங்காளிகளுக்கும் உறவினர்களுக்கும் அப்பத்தா வீட்டில் வடிப்பார்கள். ( விருந்து வைப்பார்கள்)

சிட்டிக - குழந்தைக்கான விளையாட்டுச் சாமான்கள்.

நடவண்டி - குழந்தைகளை நடக்க வைக்க இப்போது வாக்கர் போல அந்தக் காலத்தில் பயன்பட்ட மரத்தால் ஆன நடை வண்டி.

வெள்ளித் தொட்டி - குழந்தைகளைப் படுக்க வைக்கப் பயன்படுத்திய உயரத் தொட்டில். வெள்ளியால் கைப்பிடி, கம்பிகள் பலகைகள் பிடித்திருப்பார்கள்.

பூச்சரம் - வைர நெக்லஸ். பூச்சரம், கண்டசரம், மங்கலச்சரம் என்று பலவகை உண்டு. பூச்சரம் என்றால் குறைந்த அளவு வைரங்கள் பதித்த நெக்லஸ். குழந்தைகளுக்கும் செய்து போடுவார்கள்.

 

6.

சாமி வீடு - சாமி படங்கள் வைக்கப்பட்ட பூஜை அறை.

மூன்று கட்டு - முதல் கட்டு, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு என மூன்று கட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும் நகரத்தார் இல்லங்கள்.

மக பொறந்திருக்காளே - குழந்தை பிறந்ததும் வீட்டிற்கு வருபவர்கள் விசாரிப்பார்கள்.

பெட்டகம் - இரும்புப் பெட்டகம். வீட்டின் முக்கிய தஸ்தாவேஜுகள், பாண்டுகள், பங்குப் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை வைக்கப் பயன்பட்ட அந்தக்கால லாக்கர். இதை நான்கு பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாத அளவு கனமாக இருக்கும்.

முட்டாய் ரொட்டி - சாக்லெட், பிஸ்கட்.

பொட்டியைப் பிரித்தல் - அந்தக்காலங்களில் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு விக்கப் போனவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன் கொண்டு வரும் பெட்டிகளை உறவினர்கள் முன்னிலையில் திறந்து அனைவருக்கும் அதில் உள்ள பொருட்களைப் பகிர்ந்தளிப்பார்கள்.

அமக்கு - நமக்கு.

பிள்ளைக் காப்பு - குழந்தைக்குப் போடும் வளையல்

ஜிலேபிக் காப்பு - ஜிலேபி போன்ற முறுக்கு டிசைனில் இருபக்கமும் இணையாமல் இருக்கும். கங்கணம் போல குழந்தை கைக்கு ஏற்றாற்போல அட்ஜஸ்ட் செய்து போடும் வளையல்.

மிட்டாய் ஸ்டாண்டு - குழந்தை பிறந்தவுடன் வீட்டிற்கு வருபவர்களுக்கு மிட்டாய் வைக்கும் கப் போன்ற 4 அல்லது 6 வெள்ளித் தொன்னைகள் அடங்கிய வெள்ளி ஸ்டாண்டு.

பொட்டு ஸ்டாண்டு - குழந்தை பிறந்தது கேட்க வருபவர்கள் முதலில் இந்த பொட்டு ஸ்டாண்டில் இருக்கும் கண்ணாடியில் பார்த்து அதில் இருக்கும் சந்தனம் கலர் குங்குமங்களை இட்டுக் கொள்வார்கள்.

கம்போஸா தாம்பாளம் - அர்ச்சனைத் தட்டாகவும் பயன்படும் வெள்ளித் தாம்பாளம். இதில் நகைகளைப் பரப்பிக் காண்பிப்பார்கள்.

செட்டு சமையக்காரவுக - ஒரு மேஸ்திரி/சமையல் கலைஞரின் தலைமையில் இயங்கும் சமையற்காரர்களுக்குச் செட்டு சமையக்காரர்கள் என்று பெயர்.

சோறுண்ணதும் - மதிய உணவு உட்கொண்டதும்.

வேவுப் பலகாரம் - விளையாட்டுப் பொட்டி வேவுக்குச் செய்யப்பட்ட பலகாரங்கள்.

அடியாத்தி - அளவுக்கதிமான வருத்தத்தில் கூறப்படும் வார்த்தை.

தாக்கல் - நல்ல அல்லது கெட்ட செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...