எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 மே, 2021

மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.

 மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.


பொறாமை வந்துவிட்டால் முப்பெரும் தேவியரும் மானுடர் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பொறாமையால் மும்மூர்த்திகளும் குழந்தையாக நேர்ந்தது. அதுவும் ஒரு முனிவரின் மனைவியான அனுசூயா அம்மூவரையும் குழந்தையாக்கி விட்டாள். நம்பமுடியவில்லைதானே. அது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மேலோகத்தில் ஒருநாள் நாரதர் சஞ்சரித்து வரும்போது சரஸ்வதியைக் கண்டு வணங்கினார். அப்போது லெக்ஷ்மியும் பார்வதியும் கூட வந்து அவர்கள் உரையாடலில் சேர்ந்து கொண்டார்கள். நாரதர்தான் கலகக்காரர் ஆயிற்றே. சும்மா இராமல் பூலோகத்தில் இருக்கும் அனுசூயா என்ற ரிஷிபத்தினி பற்றி சிலாகித்துக் கூறினார்.
“பிரம்மாவின் மானச புத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. அம்மகரிஷிக்கேற்ற பத்தினி அனுசூயாதேவி. அவள் யார்மேலும் அசூயை, கோபம் கொள்ள மாட்டாள். அதனால்தான் அவள் பெயர் அனுசூயா. நற்குணங்கள் நிரம்பியவள். இவள் எவ்வளவு திறமையானவள் என்றால் இரும்புக் கடலையைக் கூட வறுத்துக் கொடுத்துவிடுவாள் “ என்று பாராட்டிக் கொண்டே சென்றார்.


அதைக்கேட்டதும் முப்பெரும் தேவியருக்கும் பொறாமை உண்டாயிற்று. தம்மைவிட உயர்ந்தவளா அவள். ”அப்படியானால் அவளிடம் அந்த இரும்புக் கடலையைக் கொடுத்து வறுத்து வாங்கி வாருங்கள் நாரதரே”. என சரஸ்வதி அவரை இக்கட்டில் மாட்டி விட்டாள்.
சொன்ன சொல்லைக் காக்க அவர் புறப்பட்டு அத்திரி மகரிஷியின் பர்ணசாலைக்கு வந்தார். அப்போது அங்கே அத்திரி மகரிஷி இல்லை. அங்கே அனுசூயையை வணங்கி அந்த இரும்புக் கடலைகளைக் கொடுத்து வறுத்துத் தரச் சொன்னார் நாரதர். இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை உணர்ந்த அவள் அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று தன் கணவரை மனதால் தியானித்து அக்கடலைகளை வறுத்து எடுத்து வந்து கொடுத்தாள். என்ன ஆச்சர்யம் அவள் மனம் போலவே உண்மையாகவே அந்த இரும்புக் கடலைகளும் பொரிந்திருந்தன.
இதை எடுத்து வந்து நாரதர் பெருமையாக “ பார்த்தீர்களா, நான் சொன்னேனே, உங்களால் முடியாததையும் அனுசூயை செய்துவிடுவாள் என்று. பாருங்கள் இரும்புக் கடலைகள் எப்படி மென்மையாய் உண்ணத் தகுந்த மாதிரி ஆகிவிட்டன என்று. இது அனுசூயையாலேயே முடியும் “ என்று அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த முப்பெரும் தேவியருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வரட்டும் வரட்டும் எனத் தம் கணவர்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் வந்ததும் “யாரோ அனுசூயையாம். பூலோகத்தில் இருக்கிறாளாம். அவளைப் பற்றி நாரதர் ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுகிறார். நீங்கள் பூலோகம் போய் நாங்கள் சொல்லும் முறைப்படி அவளிடம் பிச்சை வாங்கி வாருங்கள். அதை அவள் செய்ய முடியாது . அப்போது நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என நிரூபித்து இந்த நாரதர் மூக்கை உடைக்கலாம் “ எனக் கருவுகிறார்கள்.
நிலைமை கைமீறிப் போய்விட்டது என்பதை உணர்ந்துகொண்ட மும்மூர்த்திகளும் தம் மனைவிமார் சொற்படி மூன்று சந்நியாசிகளாக உருவெடுக்கின்றனர். அவர்கள் அத்திரி மகரிஷியின் பர்ணசாலையை அடைகின்றனர். அப்போதும் அத்திரி மகரிஷி தன் நியமநிஷ்டைகளுக்காக பூக்கொய்யச் சென்றிருக்கிறர். குடிலின் வெளியே நின்று “ அம்மா. மிகப் பசியாக இருக்கிறது. அன்னமிடுங்கள் “ என்று கேட்கிறார்கள்.

சாது சந்நியாசிகளின் குரலைக் கேட்ட அனுசூயை உடனே கலயம் நிறைய உணவை எடுத்துப் போட வருகிறாள். அதற்குள் அவர்கள் “ அம்மா நில். நாங்கள் கேட்கும் முறைப்படிப் போட்டால்தான் உணவை ஏற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால் வேண்டாம். “
’இதென்ன வில்லங்கமாய் இருக்கிறதே. சந்நியாசிகள் பசித்தால் உணவை ஏற்று உண்க வேண்டும். என்னவோ அவர்கள் கேட்கும் முறைப்படிப் போட வேண்டுமாமே.’ என ஒரு க்ஷணம் யோசித்தவள் , ”இருங்கள் வருகிறேன். ”என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று தன் கணவரை நினைத்துத் தியானிக்கிறாள். ‘ ஏதோ சூழ்ச்சி போலத் தெரிகிறது. என்னை இதிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் சுவாமி ‘ என மனதுக்குள் வேண்டிக்கொண்டு அத்திரி முனிவரின் கமண்டலத்தை எடுத்து வருகிறாள்.

மும்மூர்த்திகளின் முன் வந்ததும் அந்தக் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்துத் தெளிக்கிறாள். அஹா இதென்ன அந்த மூவரும் கைக்குழந்தைகளாக ஆகிவிட்டார்களே. அவர்களால் தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்ல முடியவில்லை. அனுசூயைக்கோ இங்கா இங்கா இங்கா என்ற ஒலிதான் எங்கும் கேட்கிறது. மும்மூர்த்திகளும் குழந்தைகளாக அனுசூயை அவர்களைப் பெறாமல் பெற்ற அன்னையாகிவிட்டார்.
குழந்தைகளான மும்மூர்த்திகளுக்கும் பாலாடையில் பாலை ஊற்றிப் புகட்டித் தொட்டில் கட்டிப் படுக்க வைக்கிறாள். அவர்களால் தங்கள் அன்னையான அனுசூயையைப் பார்த்துப் புன்னகைக்க மட்டுமே முடிகிறது. கை காலை உதைத்துக் கொண்டு குட்டிக் குழந்தைகள் மூவர் தன் வீட்டில் தொட்டிலில் கிடப்பதை அத்திரி முனிவர் பார்த்து நடந்ததை உணர்ந்து கொள்கிறார்.
இதற்குள் முப்பெரும் தேவியரும் தங்கள் கணவர்களைக் காணோமே என்று தேடிக்கொண்டு வருகிறார்கள். பார்த்தால் அத்திரி மகரிஷி ஆஸ்ரமத்தில் தொட்டிலில் மூன்று குட்டிக்குழந்தைகளாக அனுசூயையின் கையில் இருக்கிறார்கள் அவர்கள். இதைக் கண்டதும் முப்பெரும் தேவியரும் அதிர்ச்சி அடைந்து அனுசூயையிடம் கெஞ்சுகிறார்கள்.
“அம்மா மன்னித்து விடு பொறாமையால் அழுக்காறு கொண்டு உன்னை இழிவுபடுத்த நினைத்தோம். ஆனால் நாங்களே மதிப்பிழந்தோம். எங்கள் கணவர்களைத் திரும்ப எங்களுக்குத் திருப்பிக் கொடு “ என்று அவர்கள் அனுசூயையிடம் கெஞ்ச அவள் தன் கணவரை திரும்ப தியானித்து அவர் கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து அக்குழந்தைகள் மேல் தெளிக்க அவர்கள் மூவரும் மீண்டும் மும்மூர்த்திகள் ஆகிறார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. பொறாமை நம் கூடவே இருந்து நம்மை இக்கட்டில் சிக்க வைக்கும் எனவே யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ளாமல் வாழ்வோம் குழந்தைகளே. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...