எனது பதிமூன்று நூல்கள்

சனி, 21 நவம்பர், 2020

அண்ணாவின் ஆறு கதைகள் – ஒரு பார்வை

 


அண்ணாவின் ஆறு கதைகள் – ஒரு பார்வை

அறிஞர் அண்ணாவின் ஆறு கதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிருஷ்ணலீலா, சிங்களச் சீமாட்டி, வள்ளி திருமணம், பாமா விஜயம், குற்றவாளி யார், சொல்வதை எழுதேண்டா என்ற ஆறு கதைகள் உள்ள 84 பக்கங்கள் கொண்ட தொகுப்பு அது.

யதார்த்தத்தைப் பற்றிய நையாண்டியும் மனித சுபாவங்களைப் பற்றிய கேலியுமாக நகைச்சுவையாகத் தொடர்கின்றன கதைகள். குற்றவாளி யார் என்ற கதை மட்டுமே இறப்பில் முடிகிறது. மற்றைய கதைகளில் எல்லாம் மனிதருக்குள் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்தாலும் அதை அவர்கள் சமாளிக்கும் விதத்தை நையாண்டியாகக் கையாண்டிருப்பது புன்னகையை வரவழைத்தது.

கிருஷ்ணலீலாவில் கிருஷ்ணன் பலியாடாக நவநீதகிருஷ்ணன் லீலாவை மணப்பது எதிர்பாராதது. மாடுகளுக்கெல்லாம் பேர் வைப்பதும் இசை கற்று அவற்றைத் தன் குழலால் மயக்குவதும் என சினிமாக் கதை போலவே இவரின் பல கதைகளும் இருக்கின்றன.

சிங்களச் சீமாட்டியும் அதுபோலவே மதியிழந்த சங்கரன் தன் மாமன் மகளான சிங்களச் சீமாட்டியை முடிவில் மணப்பது போல் முடிந்துள்ளது. இதில் ஜாதிப் பித்தில் சங்கரன் மலர்க்கொடியைக் கழட்டிவிட்டு தாசி ஜீவாவுடன் வாழ்ந்து குமுதா என்ற குழந்தைக்குக் தந்தையுமாகிறான். முடிவில் மலர்க்கொடி தன் மாமனுக்குப் பிறந்தவளே என்பதைத் தெரிந்து அவளை மணக்கிறான். இதில் கூட ஆண்கள் தாசி வீட்டுக்குச் செல்வதும் பெண்கள் அவர்களை மன்னிப்பதும் நிகழ்கிறது.

வள்ளி திருமணம் நாடகத்தில் தான் ஆசைப்பட்டவளை அடைய தன் தாயைப் போல ஸ்திரி பார்ட் போட்டுத் தான் மணக்க நினைத்தவளை மடக்கும் பழனியின் குணச்சித்திரம் வித்யாசம். பொம்பளை வேஷம் போடுறவன் வேண்டாம் என்று தன் தாயைப்போலப் பொம்பளை வேஷம் போட்டுக் கொண்டிருப்பவனிடம் வள்ளி சொல்வது கூட சரிதான். ஆனால் அவன் தன் தாயைப் போலக் குரலை மாற்றிப் பேசும்போதுகூடவா அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. விநோதம்தான்.

பாமா விஜயம் மார்டன் ஆக விளங்கும் புதுமைச் சிந்தனைகளுடன் கூடிய பாமாவின் கதை. பெண்களை அண்ணாதுரை வர்ணிக்கும் விதம் வெகு அழகு. அதிலும் இக்கதை நாயகியை எதுகை மோனையோடு சிங்காரமாய் வர்ணித்திருப்பார். தகப்பன் அற்ற குழந்தையான அவளை ஜமீனுக்கு இரண்டாந்தாரமாக்க ஒரு புரோகிதர் முயல அவளோ புத்திசாலித்தனமாய் அவரின் விதவை மகளுக்கே மறுமணம் செய்துவைத்துவிட்டுத் தன் விருப்பப்படித் தான் விரும்பியவனையே கைப்பிடிக்கிறாள்.  

குற்றவாளி யார் கதையில் நீதிபதியே முதல் குற்றவாளியாக இருப்பதும் அதை அவளே தைரியமாக நீதிமன்றத்தில் சொல்வதும் வித்யாசம். விபச்சாரம் என்ற வார்த்தையையும் விபச்சாரம் நடந்ததா என்று நீதிபதி கேட்பதும், ஆமாம் நான் விபச்சாரிதானென அவள் ஒப்புக் கொள்வது மட்டுமல்ல. கேட்பவனின் முகத்திலறைவதுபோல நிறைய வசனங்கள் இந்தக்கதை முழுவதும். ஆனால் முடிவில் கருப்பி காளி கோவில் கிணற்றில் விழுந்து இறக்கிறாள் அதுவும் எப்படி பிசாசு பிடித்தாட்ட. அதேபோல் பிசாசு அறைந்ததால் மார்க்கண்டனும் இரத்தம் கக்கி இறந்தான் என கேஸை முடிக்கின்றனர்.

சொல்றதை எழுதேண்டா அப்பட்டமான கிண்டல் நாடகம். ஒரு பக்த ஜன சபா வைத்திருப்பவர் தன் புரவலருக்கும் மகனுக்கும் எழுதும் கடிதம் மாறிவிடுகிறது. பக்த ஜன சபை என்ற பெயரில் எப்படி எல்லாம் ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்படுகிறது. தன் உறவினர்களைக்கூட இப்பணம் பறிக்கும் வித்தைக்குப் பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் எழுதி இருக்கிறார். எல்லாக் கதைகளிலும் உரையாடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லாவற்றிலும் நையாண்டியும் கிண்டலும் கேலியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அநேக கதைகளில் விலைமாதர்கள் கதை மாந்தர்களாக வருகின்றனர். அவர்களின் வாழ்வியல் துயரம், சமூகத்தில் அவர்களின் நிலை, ஆண்களின் கைப்பாவையாக இருக்க நேரும் அவலம், உண்மையான குடும்ப வாழ்க்கைக்கு ஏங்கும் அவர்களின்மனநிலை எல்லாம் கதைப்போக்கில் நமக்குத் தெளிவாகிறது. கூடா மோகம் கொண்டலையும் ஆண்களும், குணக்கேடு கொண்ட ஆண்களும் அநேகக் கதைகளில் நாயகர்களாக வருகிறார்கள். கிருஷ்ணன் போல சில ஆண்கள் மையலில் மாட்டி அசடாவதும் மார்க்கண்டன், ஜமீன், நீதிபதி போன்றவர்கள் அயோக்கியராய்ப் பெண்பித்தராய் இருப்பதும் சித்தரிக்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் இருந்த மூடப் பழக்க வழக்கங்கள், பெண்ணடிமைத்தனம், ஆண்களின் விட்டேற்றியான சுபாவங்கள், தராதரமற்ற செயல்பாடுகள், சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனம், போலி ஆச்சாரங்கள், பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தையும் விளாசித்தள்ளி இருக்கிறார்.

சுபாவமாகவே அவருக்குத் திரைக்கதை பாணியிலும் நாடக பாணியிலும் இவ்விஷயங்களை பெரும்பாலும் உரையாடல் மூலமாகவே சரளமாகச் சொல்லவருகிறது. படிக்கும்போது விஷயங்களின் வீரியமும் யதார்த்தமும் நமக்கும் நச்செனவே புரிபடுகிறது. பல்வேறு விஷயங்களும் ஓரிரு கண்ணிகளில் சுலபமாகக் கோர்க்கப்படுகின்றன. பிரச்சனைக்கான தீர்வுகளும் எளிதாகக் கையாளப்படுகின்றன.

எத்தனையோ வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் அவசியத் தேவையாய் இருக்கும் சமூகமாற்றத்துக்கான, மனமாற்றத்துக்கான அடித்தளம் பல்லாண்டுகளுக்கு முன்பே இக்கதைகளில் அமைக்கப்பட்டுள்ளது  வெகுசிறப்பு. இத்தகைய துணிச்சலான முன் எடுப்புகளினாலே இக்கதைகள் இன்றும் வாசிக்கும் சிறப்புப் பெறுகின்றன.

நூல் :- அண்ணாவின் ஆறு கதைகள்
ஆசிரியர் :- சி.என். அண்ணாதுரை, எம்.ஏ.
பதிப்பகம்:- திராவிடப் பண்ணை( ஏழாம் பதிப்பு 1981)
விலை:- ரூ. 4.

1 கருத்து:

  1. சில எழுத்துகளே காலம் கடந்து நிற்கின்றன. அவ்வாறான ஒரு நூலைப் பற்றிய மதிப்புரை சிறப்பு.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...