எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 நவம்பர், 2020

ட்ரான்சிட்

 ட்ரான்சிட்


திஹாடின் டிவியில் 2, 4, 8, 16 என்று எண்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜெர்மானியன். 2048 என்றோரு எண் விளையாட்டு. காகுரே சுடோகு போல் அகிலாவுக்குப் பிடித்த எண் விளையாட்டு. நூற்றுக்கணக்கான முறை விளையாடியிருப்பாள் அவள். முப்பத்திஐயாயிரத்துச் சொச்சம் மதிப்பெண்களோடு அவளின் செல்ஃபோனில் உறைந்திருந்துக்கிறது அந்த ஆன்லைன் விளையாட்டு. நேரே நின்று லைஃப்ஜாக்கெட்டை எப்படி அணிவது எனச் சொல்லத் தொடங்கி இருந்தாள் பணிப்பெண்.

அகிலா கணவரோடு ஜெர்மனிக்கு வந்து செட்டிலாகி இருபது வருடமிருக்கும். இன்னும் ஊர் ஸ்டைலிலேயே சமையல் வகைகள்தான். ஜெர்மானியர்களைப் போலவோ மற்ற இந்தியர்களைப் போலவோ ப்ரட் பட்டம் ஜாம் கலாச்சாரத்துக்கு அவர்கள் குடும்பம் மாறவேயில்லை. வாரம் ஒருமுறை ஹம் காமாட்சியை வணங்கக் கணவருடன் வந்துவிடுவாள். இன்னும் மார்டனாக ஆகாமல் புடவை கட்டிப் பொட்டு வைக்கும் அவளைப் பார்த்து ஜெர்மனிப் பெண்களும் இந்தியப் பெண்களுமே வியப்பார்கள்.  

பெரிய மகனுக்கு இரு இடங்களில் இருந்து வரன்கள் வந்திருந்தன. சொந்த ஊரான சிவகங்கையிலிருந்து ஒன்றும் அபுதாபியில் இருந்து ஒன்றும். இரு பெண்களும் அழகு என்றாலும் அபுதாபியில் இருப்பவள் இன்னும் கூடுதல் எழிலோடு தோன்றினாள்.  ஆன்லைனில் பார்த்துத் தேர்தெடுத்தவர்களை நேரில் காணச் சென்று கொண்டிருந்தாள் அகிலா. பிள்ளைகளுக்கும் கணவருக்கும் அவள் எடுக்கும் முடிவுதான் முக்கியமென அனுப்பி இருந்தார்கள்.

அபுதாபிப் பெண் சொந்த ஊர்க்காரிதான் என்றாலும் அப்பா அம்மாவோடு பத்து வயதில் அபுதாபி வந்தவள். பலமொழி தெரிந்தவள். தைரியமானவள். தனியே தோழிகளுடன் தங்கி சிங்கப்பூரில் எம் டி படித்து வருகிறாள். நல்ல நிறம். எழில். சிவகங்கைப் பெண் நிறம் கொஞ்சம் கம்மி என்றாலும் அவளும் ஏதோ டிகிரி படித்திருந்தாள்.வீட்டில் அனைவருக்கும் அபுதாபிப் பெண்ணே நோக்கமாக இருந்தது. அக்கா மகள் திருமணத்துக்காக சிவகங்கை செல்ல வேண்டி இருக்க அகிலாவுக்கு ஒரே வாரத்தில் அபுதாபிக்கு டெம்பரரி விசா வாங்கி அனுப்பினார்கள்.



மூன்று நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் அந்த விசாவில் அபுதாபியில் இருக்கும் பெண்ணை இருவருக்கும் பொதுவான நண்பர் வீட்டில் சந்திப்பதென ஏற்பாடாயிற்று. இன்னும் இரண்டு மணி நேரம்தான். பெண்ணைப் பார்த்துவிடலாம்.

விரல்களால் எண்களை வேகவேகமாகக் கீறிக்கொண்டிருந்தான் அந்த ஜெர்மானியன். புதிதாய் என்ன இருக்கிறது. தன் முன்னே இருந்த டிவியைத் தட்டினாள். பூமியில் இருந்து 31,000 அடிக்குமேல் பறந்து கொண்டிருந்தது எதிஹாட். சாம்பல்நிற அன்னபட்சி. நீலவானின் கீழே வெண்ணிறப் பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன.

டிவி உயிர்பெற்று டிஸ்னி என்ற பெயர் பளிச்சிட பக்கம் இருந்தவள் ஏதேதோ சினிமாக்களைப் பார்க்கத் தொடங்கினாள். அகிலாவும் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு சினிமாக்களைத் தேடினாள். அலாவுதீன் அகப்பட்டான். லைலாவுடன் பறக்கும் கம்பளத்தில் அவன் பறந்தவரை பார்த்தவள் டிவியை நிறுத்தினாள். பக்கத்தில் நீங்கள் எங்கு பறக்கின்றீர்கள் என உலகநாடுகளை மேப் வரைந்து காட்டிக் கொண்டிருந்தது டிவி. இன்னொருவன் வை ஃப்ளையில் ஆன்லைனிக் கொண்டிருந்தான்.

அகிலாவின் கண்கள் களைத்துத் தவித்தன. அவளுக்குப் பசிப்பது போலிருந்தது. புறப்பட்டு எத்தனை மணி நேரம் ஆகிவிட்டது. டைம்ஸூன் மாறும். இறங்கினால்தான் தெரியும் மணி என்னவென்று. விடியலில் இரண்டு பிரட் துண்டங்களை விழுங்கிவிட்டு ஃப்ராங்ஃபர்ட்டில் இருந்து புறப்பட்டது. எட்டரை மணிக்குப் புறப்பட்ட ஃப்ளைட்டில் தண்ணீரும் மாயிஸரைசிங் டவலும் இருபிஸ்கட் துண்டங்கள் கொண்ட பாக்கெட்டும் தந்தாள் பணிப்பெண். உப்பு பிஸ்கட் வேறு.


பறக்கும் பஸ்ஸைப் போல மிக நீண்டிருந்தது விமானத்தின் இருக்கைகளும் பாதையும். பஸ் கூட இல்லை கண்டெயினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு வரிசையிலும் இடது பக்கம் மூன்று, நடுவில் மூன்று, வலது பக்கம் மூன்று என ஒன்பது சீட்டுகள். கிட்டத்தட்ட நானூற்றுச் சொச்சம் சீட்டுகள்.

ஆங்காங்கே சீட்டுகளில் சிவப்பு வெளிச்சம் தெரிய பணிப்பெண்கள் என்ன வேண்டும் எனக் கேட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு டயபடிக் கம்ப்ளெயிண்ட் இருக்கிறது சீக்கிரம் சாப்பாட்டைத் தந்தாலென்ன என்று கேட்க நினைத்தவள் இதை ஏன் சொல்ல வேண்டும் என மௌனம் காத்தாள்.

ஒருவழியாக இருபத்தியேழுச் சொச்சம் வரிசைகளைக் கடந்து இவள் பக்கம் வந்தாள் பணிப்பெண். சிக்கன் யா போர்க் என்றாள். இவள் சிக்கன் என்றதும் மூடிய ட்ரேக்களில் பன், மசித்த உருளைக்கிழங்கு, பொரித்த சிக்கன் துண்டு ஒன்று, வேகவைத்த காய்கறிகள், வெண்ணெய், ஜாம், சாஸ் சாஷேக்களோடு ஆரஞ்ச் ஜூஸும் தண்ணீரும் கொடுத்துச் சென்றாள். எதைத் தின்றாலும் பிடிக்காமலிருக்க எல்லாவற்றையும் கொறித்து ஜூஸைக் குடித்தாள்.

ஒருவழியாக அன்னபட்சி அபுதாபியில் தரையிறங்கியது. கன்வேயர் பெல்டில் லக்கேஜ்கள் வரும்வரை காத்திருந்தவள் மஞ்சள் உல்லனால் கைப்பிடியில் கட்டிய தன் கறுப்பு சூட்கேஸை அடையாளம் கண்டு எடுத்துகொண்டு வெளியே வந்தாள்.

அபுதாபி ஏர்போர்ட்டில் அவளை அழைக்க வந்த கணவரின் அலுவலக நண்பர்  வர்க்கீஸ் நேம்போர்டுடன் நின்றார். கேரளக்காரர். நேரே எக்ஸிட்டுக்குச் சென்றவளைப் பார்த்துக் கையசைத்துக் காருக்கு அழைத்துச் சென்றார். சரியாகச் சாப்பிடாததால் அகிலாவுக்குத் தலை வலிப்பது போல் இருந்தது. டைம்ஸூன் மாற்றம் வேறு. ஊர் வேறு இருட்டத் தொடங்கி இருந்தது.

”பொண்ணு வீட்டை உங்களுக்கு எப்பிடித் தெரியும்? “ செல்லும் வழியில் விசாரித்தாள் அகிலா. ”என் சிஸ்டர் பொண்ணு அவளோட எம் டி பண்ணிட்டு இருக்கு. அப்பிடித் தெரியும். “அப்ப உங்களுக்கு அவங்களப் பத்தி இங்கே ஏதும் தெரியாதா ? “

“இல்லை இங்கே ஒந்நுரண்டு டைம் ஹ்யூமர் க்ளப் மீட்டிங், ஓணம் செலிபரேஷன்ல பார்த்திருக்கேன்.” வீடு வந்துவிட்டது. “டுமாரோ மார்னிங் அவங்க இங்கே வரும். இப்போ ரெஸ்ட் எடுங்கோ. “ என்றவர் செல்ல அவரின் மனைவி ரேய்ச்சல் ”சாயா சாப்பிடுங்கோ” என்றபடி டீயுடன் அருகில் வந்தார். “இந்தாங்க இது உங்களுக்கு என்றபடி குக்கூ கடிகாரம் ஒன்றை அவருக்குப் பரிசளித்தாள் அகிலா.

றுநாள் விடியற்காலையிலிருந்தே தூக்கம் வரவில்லை அகிலாவுக்கு. டைம்லாகிங். எட்டரை மணி போல பெண் வீட்டார் வந்தார்கள். இருபெண்கள். மூத்தவள் அப்ஸரா. அவள்தான் எம் டி படித்துக் கொண்டிருக்கும் மணப்பெண். மிக அழகாகவே இருந்தார்கள் அக்கா தங்கை இருவரும். அகிலாவும் அப்சராவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாலும் இருவர் மனதிலும் இருவேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

‘ரொம்ப அழகியா இருக்கா. வீட்டுக்கு வந்ததும் மகனைப் பிரிச்சிடுவாளோ’

’ரொம்ப ஆர்த்தடாக்ஸா தெரியுது இவங்க உனக்கு செட்டாவாங்கன்னா நினைக்கிறே. ’

அகிலா தான் கொண்டு சென்றிருந்த ஸ்விஸ் சாக்லேட்டுகளைக் கொடுத்தாள். ஹேர்கலரிங் செய்திருந்த தலைமுடியை ஸ்டைலாக ஒதுக்கியபடி அப்ஸரா புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். பைனாப்பிள் நிறக் கன்னத்தில் குழி விழுந்தது. “பையனைப் பிடிச்சிருக்கா” அகிலா கேட்டதற்கு மையமாகத் தலையசைத்தாள் அப்ஸரா. பிடிச்சிருக்குங்குறாளா இல்லையென்கிறாளா என்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள் அகிலா.

“பொட்டு கொஞ்சம் பெரிசா வைக்கலாம்.” என்று அகிலா சிரித்தபடி சொல்லவும் ‘இன்னிக்கு அம்மா சொன்னதாலதானே பொட்டே வைச்சேன் ‘ என நினைத்து ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள் அப்ஸரா.

அனைவருக்கும் நேந்திரம் சிப்ஸையும் சாயாவையும் ரேய்ச்சல் வழங்கினார். இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அப்ஸரா குடும்பத்தினர் புறப்பட்டுவிட கணவனுக்கு ஃபோன் செய்தாள் அகிலா “ வந்தாங்க. பார்த்திட்டோம். ஊருக்கு போய் அந்தப் பொண்ணையும் பார்த்துட்டுச் சொல்றேன்”.


“ஏன் இந்தப் பொண்ணு எப்பிடி இருக்கு நல்லாயிருக்காளா ஃபோட்டோவில் பார்த்தமாதிரி “ என்று கேட்டார் கணவர். ”ஃபோட்டோவைவிட சூப்பராத்தான் இருக்கா” என்று சொல்ல நினைத்து “அப்புறம் சொல்றேனே “ என்று ஃபோனை வைத்தாள் அகிலா. “ திஸ் கேர்ள் இஸ் ப்யூட்டிஃபுல் & ஜோவியல்” என்று புகழ்ந்து கொண்டிருந்தார் ரேய்ச்சல்.

மறுநாள் எமிரேட்ஸ் ஃப்ளைட். வர்க்கீஸ் குடும்பத்தாரிடம் விடைபெற்று விமானத்தில் ஏறினாள் அகிலா. சிறிய ஃப்ளைட் வேறு. ப்ரொப்பல்லர்கள் காதைக் குடைந்தன. இதிலும் தாமதமாகவே உணவைக் கொண்டு வந்தாள் விமானப்பெண்.

சொந்த ஊருக்குப் போகப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அகிலாவுக்கு எதுவுமே தோன்றவில்லை. அந்தப் பெண் எப்படி இருப்பாளோ. விமானியின் அறிவிப்பு அவளை யதார்த்தத்துக்கு இறக்கியது. லேண்டிங்குக்காக வட்டமிட்ட விமானம் முருகன் மயில்மேல் சுற்றியதுபோல் திருச்சி விமானநிலையத்தைச் சுற்றிவிட்டுத் தரையிறங்கியது.  

அக்காவின் மகன் அழைக்க வந்திருந்தான். காரில் போகும்போதே சிவகங்கைப் பெண் எப்படி என விசாரித்தாள். “ பெரிம்மா. அத நான் பார்த்ததேயில்லை. அப்பா ரொம்பக் கண்டிஷன்னு சொல்வாங்க. அம்மா அதவிட. தம்பி ஒருத்தன் ப்ளஸ்டூ படிக்கிறான்.” என்றான்.

வீட்டிற்குச் சென்றதும் அக்காவோ “ ரொம்பக் கட்டு செட்டான குடும்பம். டிகிரி படிச்சிருக்கா. வேலைக்கெல்லாம் அனுப்பல. பொண்ணு வீட்டுவேலைல கெட்டிக்காரி. ஆனா சீர் செனத்தின்னு ரொம்ப செய்யமாட்டாங்க ” என்றாள்.

“எங்களுக்கு இருக்குற வசதிக்கு அதெல்லாம் ஒண்ணும் வேணாங்கா. பொண்ணு நம்மோட நல்லா இருந்தா போதும். “.

மறுநாள் அக்காவுடன் பொண்ணு பார்க்கச் சென்றார்கள். மணப்பெண் அன்னம் லேசான சரிக்கைக்கரை போட்ட புடவை அணிந்து ஓரளவு பெரிதான பொட்டு வைத்திருந்தாள். அகிலாவை விழுந்து வணங்கினாள். மொத்தக் குடும்பமும் அகிலாவின் ஆளுமையின் முன் பேச்சற்று இருந்தது.

“ஆன்லைன்ல பார்த்தியா ஃபோட்டோவை. பையனைப் பிடிச்சிருக்கா” என்று அன்னத்திடமும் கேட்டாள் அகிலா. அன்னம் நாணத்தோடு தலைகவிழ்ந்து தலையாட்ட “ உங்க வீட்ல சம்பந்தம் பண்ண நாங்க கொடுத்து வைச்சிருக்கணும். உங்களுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கா. உங்க சம்மதம்தான் அவ சம்மதமும். ” என்று ஒரே போடாகப் போட்டார் பெண்ணின் அப்பா.

“கல்யாணம் ஆனபின்னாடி இனி உங்க மகளைப் பார்க்கணும்னா நீங்க எல்லாரும் பறந்துவந்துதான் பார்க்கணும்” எனப் பெருமையாக அகிலா கூறிய வார்த்தையில் குளிர்ந்திருந்தார்கள் அனைவரும். 

”இவள்தான் எங்க வீட்டு மருமகள். ” அகிலா கூறியதைக் கேட்ட அவள் அக்கா உறவினரிடமெல்லாம் “ என் தங்கச்சி அகிலா ரொம்பப் பெரிய மனசுக்காரி. அபுதாபில எல்லாம் போய்ப் பொண்ணைப் பார்த்தும் நம்மூருப் பொண்ணைத்தான் பிடிச்சிருக்கின்னுட்டா. அபுதாபிப் பொண்ணுக்குச் சீர் செனத்தி ரொம்ப செய்வாங்க. டாக்டர் பொண்ணு. அவங்க அந்தஸ்துக்கு ஏத்த இடம். இதெல்லாம் இல்லாம எளிமையான இடமானாலும் நம்ம மனசுக்குப் பிடிச்சமாதிரி நம்ம ஊரு மனுசங்களே வேணும்னு இங்க பொண்ணெடுக்குறா. அன்னம் கொடுத்து வைச்சவ” என்று புகழ்ந்து கொண்டிருந்தாள்.

அக்கா மகள் திருமணம் முடித்துத் தாங்கள் சிவகங்கையில் கட்டிப் பூட்டி வைத்திருக்கும் தங்கள் வீட்டுக்கு வந்ததும் கணவனுக்கு ஃபோன் செய்தாள் அகிலா. “இந்தப் பொண்ண விட அது நல்லா இருந்துச்சே அத ஏன் வேணாங்கிறே “ என்று கேட்ட கணவரிடம் “அது வர்ணக் கோமாளி மாதிரி முடியெல்லாம் கலர் போட்டு வெள்ளையடிச்ச பல்லிமாதிரி இருந்துச்சு. கொஞ்சம்கூடப் பணிவே இல்லை. பையனைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா நல்லா பிடிச்சிருக்குன்னு கூட சொல்லல ராங்கி. அவங்க அம்மா அப்பா வேற சிங்கப்பூர்லயே மவ ப்ராக்டீஸ் பண்ணனுமாம். அதுனால மாப்பிள்ளயும் சிங்கப்பூர்ல இருக்க மாதிரி இருக்கும். சாஃப்ட்வேர்ல எங்கே இருந்தாலும் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணலாமேங்கிறாங்க.  அவன் என் மகன் . முடிவெடுக்க இவங்க யாரு. இவ நிறம் கம்மிதான். குடும்பத்துக்கு ஏத்தாமாதிரி வேலையெல்லாம் செய்வாளாம். நம்மமேல மதிப்பும் மரியாதையும் வைச்சிருக்காங்க. அதுனால இவளத்தான் பெரியவனுக்குக் கட்டணும். நம்ம சொல்லுக்குக் குடும்பமே கட்டுப்பட்டுக் கிடப்பாங்க “ என்றாள் அகிலா.

’எத்தனை நாட்டுக்குப் போனால்தானென்ன . இவ தன் குறுகிய எண்ணத்தை மாத்திக்கவே மாட்டா..’ ”ஹ்ம்ம்”.. அகிலாவை அனுப்பாமல் பையனையே அனுப்பிப் பெண்ணைப் பார்க்கச் சொல்லி இருக்கலாமோ என நினைத்துப் பெருமூச்செறிந்தார் அகிலாவின் கணவர்.

-- தேனம்மைலெக்ஷ்மணன்.


4 கருத்துகள்:

  1. இப்படி எண்ணம் இருக்கும் பட்சத்தில் அபுதாபி பெண்ணை முடித்துவிட்டு என்று சொல்லியே அகிலாவை அனுப்பி இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. அகிலாவின் கணவரின் பெருமூச்சுக்குக் காரணம் சரிதான்.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் ஸ்ரீராம்.சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

    நன்றி ஜம்பு சார்

    கதையேதான் டிடி சகோ. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...