சூல்
இந்த நூலின் கதாநாயகன் கதாநாயகி எல்லாம்
கண்மாய்தான். கம்பர் சரயூ நதியைத் தெய்வமாகப் புனைந்து பாடிய பாடல்கள்போல் இந்தக்
கண்மாயும் தெய்வதத் தன்மை பெறுகிறது. அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் போல் கண்மாய்
வரண்டதும் அனைவரின் வாழ்வும் வரண்டு போய்க்கொண்டே இருக்கிறது என்பதைக் கறாராகப்
பதிய வைத்த சுற்றுச்சூழல் நாவல் இது
பழங்கதைகள், தொன்மங்கள், நம்பிக்கைகள், வரலாறு, அரச குடும்பம், கிராமத்து வாழ்வியல், வழிபாடுகள் அனைத்தும் கருக்கொண்டது. யதார்த்தமான பாணியில் சொல்லப்பட்டுள்ளது.
கொஞ்சம் கவிச்சியோடும் கொச்சையோடும்
இடம்பெற்றுள்ள சொல்லாடல்கள் கிராமத்து வாழ்வியலையும் அவர்களின் பேச்சு, உறவு
முறைகளையும் அவர்களின் நையாண்டி எள்ளல்தன்மைகளையும் எடுத்துரைக்கின்றன. முதலில்
இந்தச் சொல்லாடல்கள், பகடிகளைப் படிக்க இடர் ஏற்பட்டாலும் அவர்கள் பேசும் மொழி அது
என மனதளவில் சமாதானம் செய்து கொண்டு படித்து முடித்தேன்.
பொங்கித் ததும்பும் கொப்புளாயிபோல் கம்மாய்
பொங்கித் ததும்புவதும் கொப்புளாயி போல் உலகம் உய்யப் பயன்படுவதும் அதன் பின் அதன்
மறைவும் சித்தரிக்கப்படுகிறது. ஆய்வியல் நோக்கில் சீமைக் கருவேலம், ஜிலேபிக்கெண்டை
இவை இரண்டும் கண்மாயை எப்படிச் சீரழித்தன, ஆங்கிலேயர் எப்படி இந்தியர் மூலமே இதைச்
செய்யவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்தனர் என்று காட்டுகிறார்.
கம்மாயை யோனியாக வைத்து அது உற்பவிக்கும்
உயிர்கள், சுடுகாட்டை மையமாக வைத்துத் தத்துவ விசாரங்கள் என வித்யாசக் கோணங்கள்.
கொப்புளாயியும் கண்மாய் போலத்தான் ஆணாகிப் பெண்ணாகி அனைத்துமாகி வாழ்ந்து
செல்கிறாள்.
மெஷினரீஸ் வந்த விதத்தை அப்படி அப்படியே
உரைத்திருக்கும் நெஞ்சுரத்துக்கும் ஒரு சபாஷ். தனி மனிதர்களின் இழிதகமையையும் ,
கீழ்மையையும் பின்னர் இயற்கைக்குப் பிரியமான செயல்களைச் ( மரம் நடுதல், குளம்
வெட்டுதலையும்) செய்வதன் மூலம் பரிகாரமாய் மனநிம்மதி பெறுவதையும்
சித்தரித்திருக்கும் விதம் அழகு.
பட்டி தொட்டியெல்லாம் சித்திரம்போல் கம்மாய்,
குலதெய்வம், பனைகளோடு வரைந்து காட்டுகிறது எழுத்து. உளிக்கருப்பன், கருப்பன்,
குரவன், கள்ளாளன், இருளப்ப சாமி போன்ற குலதெய்வங்கள் வந்த விதம் பற்றிச்
சிறுகதைகள், வருடா வருடம் காணி பிரித்து உழவுசெய்வது, கரம்பை மண்ணை வெட்டிக்
கம்மாயைச் சீர்படுத்துவதோடு கழனியைச் செழிப்பாக்குவது, முறை வைத்து
நீர்ப்பாய்ச்சுவது, நிறைசூலியாய் நிற்கும் குளம், கம்மாய் கோடையில் வற்றும்போது
மீன் பிடிக்க மக்களுக்காக விடுவது எனப் பெரும்பான்மை நகரத்துச் சனம் அறியாத
நிறையத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
நீர்ப்பாய்ச்சி (மடைக்குடும்பன்), ஊர்ப்பகடை,
ஊர்க்குடும்பன், முதலியார், ரெட்டியார், நாயக்கர், கோனார், காணிக்காரர்கள்,
சம்சாரிகள் ஆகியவர்கள் பற்றிய குறிப்புகள் யதார்த்தம். ஜோசியம் ,பரிகாரம் மூலம்
அனைத்துப் பாவங்களுக்கும் எளிய மக்கள் தீர்வு காண்கிறார்கள். ஊர்ப்பொதுமடம்,
பனையடி, கம்மாக்கரை, தெலாக்கிணறு, ஆண் பனை, பெண் பனை, கண்மாய், ஊருணி, ஓடை,
தெப்பம், நீராவி,கலுங்கல், மடை எல்லாம் இன்னும் பச்சை மணம் வீசுகின்றன. ,
வேளார் தெரு, கொசக்குடி, வண்ணான் கிடங்கு,
சக்கிலியக் குடி, பண்டாரம், பறையர்கள், சக்கிலியர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களோடு
மாட்டிறைச்சி தின்னாதவர்கள் பள்ளர்கள் என்ற விவரம் கொடுத்திருப்பது வித்யாசம். ,
பறவைகளுக்குத் தானியம் போடும் மினுத்தாக்
குடும்பன், வெத்திலைக் கொடிக்கால் விவரத்தைத் தந்திரமாகக் கற்றுக் கொண்ட
மகாலிங்கம் பிள்ளை, புதையலைஒளித்துவைத்துவிட்டு அனுபவிக்காமலே மரிக்கும் எலியன்
பிச்சை ஆசாரி கதை, அனுமன் முனி குஞ்ஞான் மாந்திரீகவாதி கதை, மச்சவல்லான் கதை,
ரஸகன்னிகை கதை, மண்ணுத் தின்னியின் கதை, கீரைபுசித்தான் கதை, முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என கோவிந்தன் கதை, சொத்தியான் கதை, நங்கிரியான் கதை, சித்தாண்டி
கதை, பன்னி மாடனின் கதை, பயனா ரெட்டியார் கதை என கம்மாயிலிருந்து வாய்க்கால்கள்,
கால்வாய்கள் போலக் கிளைக்கும் கிளைக்கதைகள் அநேகம். வினைவிதைத்தவர்கள் அதையே
அறுக்கிறார்கள்.
கோல்வார் பட்டி, உருளைக்குடி, எட்டயபுரம் போன்ற
ஊர்களின் விவரிப்பு அழகு, இச்சியன் ஈசாக்காக மாறுவது, நாடகப் பாட்டுக்காரர்
பாஸ்கரதாஸ் பற்றிய விவரம், வீரபாண்டிய கட்டபொம்மனின் வள்ளல்தன்மை, குடிகாரர்களின்
உலகம், விவசாயிகளின் உலகம், ஜமீன்கள், அரண்மனைச் சேவகம், ஆங்கிலேயர் நடவடிக்கைகள்,
பண்டமாற்று முறை ஆகியவை பற்றியும் விவரித்துச் செல்கிறார்.
சித்தர்கள் சமாதிகள் – தவசித் தம்பிரான், கீரை
புசித்தான், நல்லப்ப சுவாமிகள், மதுரகவி பாஸ்கரதாஸ், வெள்ளைசாமித் தேவர், மகாகவி
சுப்ரமண்ய ஐயர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத் தேவன்,
சுந்தரலிங்கம் எனப் பின்னாளில் புகழ்பெறப் போகும் இவர்களை எல்லாம் குஞ்ஞானின் கனவு
மூலம் கொண்டாடித் தீர்க்கிறார் ஆசிரியர்.
எட்டையபுரம் மன்னர் கதையை விலாவாரியாக
விவரித்திருப்பதும், முடியாட்சி முடிந்து குடியாட்சி மலர்வதையும்
காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சீமைக் கருவேலம், ஜிலேபிக்கெண்டையோடு வொயிட்
லெக்கான் கோழிப்பண்ணை, மாட்டுக்குச் செயற்கைசினை ஆகியன இங்கே கட்டாயமாக
நடைமுறைப்படுத்தப்பட்டு நம் மக்களின் வாழ்வைக் கெடுக்கும் அவலத்தை அவசத்தோடு
பகிர்ந்திருக்கிறார்.
நிறைசூலியான கண்மாய் எனக்கு சிறிது மிரட்சியைத்
தரும் ஆனால் அது தெய்வமாய்த் துலங்குவதை சமீபப் பயணங்களில் தரிசிக்கச் செய்தது
இக்கதை. தெய்வம் நின்று கொல்லும் கண்மாயும் அப்படித்தான்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சங்கஞ்செடி
ஆவாரஞ்செடி, கள்ளி, வெத்திலைக் கொடிக்கால் ஆகிய மண்ணின் செடிகளோடு வெள்ளையர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய கால நெற்பயிர், பயிறு வகைகள், சூரிய காந்தி, மக்காச்
சோளம், நித்யகல்யாணி, மூன்று பருப்பு உள்ள மணிலாக் கடலை எல்லாம் எப்படி வந்து நம்
ஆரோக்யத்தைக் கெடுத்தன என்று விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.
சினிமாவும் ரேடியோவும் வந்ததையும் கடவுள்
மறுப்புக் கொள்கையுடன் சீர்திருத்தத் திருமணம் தொடர்ந்ததையும் ஆவணப்படுத்தி
இருக்கிறார். முடிவில் குடிக்கு அடிமையாகிப் போன ஒரு சமுதாயத்தைச் சாடுவதுடன்
முடிந்திருக்கிறது நாவல்.
அடுத்தவன் சொன்னதைக் கேட்டு அழிந்துபோன
சமுதாயத்துக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் என்ற முழு நம்பிக்கையோடு
எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றதில் ஆச்சர்யமில்லை.
நூல் :- சூல்
ஆசிரியர் :- சோ. தர்மன்
பதிப்பகம் :-அடையாளம்
பக்கங்கள் :- 500
விலை:- ரூ 380/-

அருமையான நூல்
பதிலளிநீக்குஅண்மையில்தான் படித்து முடித்தேன்
சோ.தர்மனது பிற நாவல்களையும் படிக்கும் ஆவல் எழுந்துள்ளது
நல்லதொரு அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!