எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கடனில் ஆழ்த்தும் நுகர்வு கலாச்சாரம்.

கடனில் ஆழ்த்தும் நுகர்வு கலாச்சாரம்
தொலைக்காட்சியில் பெண்கள் ஃபாஷன் டிவியில் வருவதுபோல் புடவை கட்டி வரிசையாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். “ அடி இந்தச் சேலைதான். இதுவும் நல்லா இருக்கு. அட இதுவும் நல்லா இருக்கு “ எனச் சொல்ல மகள் உடனே அந்தத் தொலைபேசி எண்ணுக்கு புடவைகள் எண்ணைக் குறிப்பிட்டு எஸ் எம் எஸ் கொடுக்கிறார். அடுத்த நாளே பார்சல் வருகிறது. பணம் கொடுத்து வாங்கிப் பார்த்தால் எல்லாம் கண்ணை உறுத்தும் நிறங்களில் உயரம் குறைவான சேலைகள்.
”என்னடி இது ஆயிரம் ரூவாயையும் முழுங்கிட்டானா.. ” ”ஆயிரம் ரூவாய்க்கு அஞ்சு சேலைன்னு நீதான வாங்கச் சொன்ன “ மகள் அம்மாவிடம் முறைக்கிறார். தான் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்று இதை அம்மா புலம்ப அந்த வீட்டுக்காரம்மாவோ ”அதையேன் கேக்குறீங்க மல்லிகாக்கா. வாட்ஸப்புல என் ஃப்ரெண்டு ஒருத்தி சேலை விக்கிறேன்னு படம் அனுப்புனா. பாங்குல அவ அக்கவுண்ட்ல பணம்போட சொன்னா. படத்துல வயலட் கலர்ல இருந்தது வந்ததும் பார்த்தா ப்ளூ கலரு. ஃபோட்டோவுல அப்பிடித்தாம் இருக்கும்னுட்டா. அதே கலர்ல என்கிட்ட பல சேலை இருக்கு. சொளையா மூவாயிரம் ரூபா போச்சு “ என்று இருவரும் அலுத்துக் கொண்டிருக்கும் வேளையில் “ அம்மா கூரியர் “ என்ற சத்தம்.

“ அமேஸான்லேர்ந்து வண்டிக்குப் போர்த்துற கவர் வந்திருக்கு . ஆயிரம் ரூபாம்மா” என்னது ஆயிரம் ரூபாயா. வாரா வாரம் இந்த மனுஷனோட இதே ரோதனையாப் போச்சு. மிக்ஸி, செல்ஃபோன், லாப்டாப், டிவி இதெல்லாம் வாங்குனது பத்தாதுன்னு கார் கவர், ஃபோன் கவர் இதெல்லாம் கூட கடைக்குப் போவாம அமேஸான்ல வாங்கிட்டு இருக்காரே.. வெளியூர்ல படிக்கிற எம்மவனும் ஸ்விக்கி, ஸோமோட்டோவுலதான் சாப்பாடு ஆர்டர் செய்றான். ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்கன்னு ஒரு தரம் பக்கெட் பிரியாணின்னு ஆர்டர் பண்ணி தேவைக்கதிகமா வாங்கி வீணாவும் போவுதுன்னான். இதையெல்லாம் என்ன செய்றதுன்னே தெரில”
தேவையோ தேவை இல்லையோ இந்தமாதிரிப் பொருட்கள் வாங்கிக் குவிக்கும் மனநிலை இப்போது அதிகரித்துள்ளது. நல்ல பிராண்ட் பார்த்து வாங்குபவர்கள், விலையை ஒப்பிட்டு வாங்குபவர்கள், அடித்துப் பேரம் பேசி வாங்குபவர்கள் எல்லாம் இப்போது ஆன்லைன் ஷாப்பிங்குக்குப் போய்விட்டார்கள். டெலி மார்க்கெட்டிங் மூலம் டைரக்ட் செல்லிங் செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் தரமற்ற பொருட்களையும் காலாவதியான பொருட்களையும் வாங்கும் அவலத்துக்கு உள்ளாகியுள்ளோம்.  
செல்ஃபோனைத் திறந்தாலே ஆன்லைன் பஜார் கடைவிரிக்கிறது. பேப்பரில் லிஸ்ட் போட்டுக் குறித்து வைத்துக்கொண்டு பொருட்கள் வாங்கியவரை, கணக்கெழுதிச் செலவழித்தவரை காசு நம் கட்டுப்பாட்டில் இருந்தது. கண்ணால் பார்த்ததை எல்லாம் வாங்கும்போது  கடன் அட்டையின் – டெபிட் கார்டின் கட்டுப்பாட்டில் போய்விட்டது.
ஆடி மாதம் என்றால் முன்பு ஒன்றும் விற்காது. இப்போது ஆடித் தள்ளுபடி என்று வந்ததும் படியில் மக்களின் தள்ளுமுள்ளுடன் நகைக்கடைகள் அல்லும்பகலும் தள்ளாடுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் பருப்பு பயறு போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவதும் தீபாவளி பொங்கல் வருடப்பிறப்பு என்றால் மட்டுமே உடையெடுத்ததும் போக இன்று விரும்பும்போதெல்லாம் விரும்பியது கிடைப்பதால் அனைத்தையும் அள்ளி வந்து வீட்டை நிறைக்கிறார்கள் மக்கள்.
அலுங்காமல் குலுங்காமல் ஆன்லைன் பேமெண்ட், டோர் டெலிவரி என்ற கவர்ச்சி அம்சம் அண்ணாச்சி கடைகளை மட்டுமல்ல டிபார்ட்மெண்ட ஸ்டோர்ஸ், ஷாப்பிங் மால்ஸையும் அடித்து நொறுக்கிவிடுகின்றன. அத்யாவசியத்துக்கு வாங்கியதுபோக அனாவசியத்துக்கு வாங்கிச் சேர்க்கிறார்கள். ஷாப்பிங் ஃபார் ப்ளெஷர் என பொழுது போகிறது. தனிமனிதர்களின் கடன் அட்டைகள் வட்டியோடு எகிறிக் கொண்டிருக்க இந்தியாவும் கடனாளியாகிறது. 
செவ்வாய் சந்தை ( நெய்வேலி- காய்கறி ) , ஞாயிறு சந்தை ( ஈரோடு – துணிமணிகள் மண்டே மார்க்கெட்( டெல்லி – வீட்டு உபயோகப்பொருட்கள் ) , ஷனிவார் மார்க்கெட் (மும்பை )  என்பனவோடு ஜெர்மனியில் டீன்ஸ்டாக், டோனர்ஸ்டாக் என்பது செவ்வாய் & வியாழன் சந்தையைக் குறிப்பிடுகிறது. எல்லாமே ஸ்டால்கள்தான். ஒரு வேன் அல்லது கண்டெயினர் சைஸ் வண்டியின் பக்கவாட்டில் அரைக் கதவு வைத்து உள்ளே மேடைகள் அமைத்துப் பொருட்களை அடுக்கி வைத்து விற்கிறார்கள். 


ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸுகுமின் ஒன்ஸ்வேர் உடைகளைப் பரப்புவான். நம்மூர்ச் சந்தைகளில் இதற்கும் கடைகள் உள்ளன. திருவிழாக்கள், சந்தைகள் மட்டுமல்ல திரைப்படங்களும் தொலைக்காட்சி விளம்பரங்களும் பொருள் வாங்கும் ஆசையைத் தூண்டுகின்றன. சோஷியல் மீடியாவாலும் ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தாலும் இந்தியா வெளிநாட்டின் மிகச் சிறந்த கன்ஸ்யூமர் மார்க்கெட்டாகி இருக்கிறது. ஜிடிபி எனப்படும் உற்பத்தியை விட வாங்கும் திறன் ( பர்சேஸிங் பவர்) அதிகரித்துள்ளதால் (கிட்டத்தட்ட 42 சதவிகிதம்) சந்தைக்குள் தம் தரமற்ற பொருளை விட்டுப் பில்லியன் ட்ரில்லியன் கணக்கில் நம் பணத்தைச் சுரண்டுகின்றன சைனா போன்ற அந்நிய நாட்டின் கம்பெனிகள்.   
அம்மா அப்பா பிள்ளைகளைத் தவிர அனைத்தும் வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் பெருகிவிட்டதால் யூரோப் போன்ற நாடுகளில் ஷாப்பிங் மால் இருந்த இடங்கள் வீவகப் பேட்டை வீடுகளாக மாறியுள்ளன. இருந்தாலும் ஷாப்பிங் மோகம் குறையவில்லை. கூகுள் ஷாப்பிங், கூகுள் பே மூலம் பல்வேறு பண/பொருள் மோசடிகள் நடப்பதாகக் கூறுகிறார்கள். வயது, பாலினம், கல்வித்தகுதி, வேலை, பொருளாதாரநிலை, குடும்ப அளவு, வருமானம் இவற்றையெல்லாம் மீறிப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆசை அனைவரையும் சமீபகாலமாக ஆட்டிப்படைக்கிறது. ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏர் கண்டிஷனர் என புதுப்பொருட்கள் அறிமுகம் ஆக ஆக எலக்ட்ரானிக் பொருட்களின் எச்சத்தால் ஈ வேஸ்ட் எனப்படும் மக்காக் குப்பைகளின் காடாகிக் கொண்டிருக்கிறது இந்தியா.
விற்பனை ஆள் இல்லாமல் கண்காணிப்புக் காமிராக்கள் மூலமே செயல்படும் ஷாப்பிங் மால்களும் வெளிநாடுகளில் உள்ளன. கார்டை ஸ்வைப் செய்தால் அவை நாம் டைப் செய்யும் பொருளை கண்ணாடி செல்ஃபில் இருந்து வெளியே போடும்.
ஆகக்கூடி செலவில்லாதது விண்டோ ஷாப்பிங்தான். அதாங்க கடையில் அடுக்கப்பட்டு இருக்கும் பொருட்களைக் கண்ணாடிக் கதவுகள் வழியாப் பார்த்துட்டுக் கையை வீசிட்டே நடந்து போறதுதான். அப்பிடிப் போனால் பர்சு இளைக்காம உடம்பு மட்டும் இளைக்கும்.

4 கருத்துகள்:

  1. இந்த ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு என்று நினைக்கிறேன்,  நான் க்ரெடிட் கார்டே வைத்துக்கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  2. தெரிந்துகொண்டே பலர் இப்பாதையில் செல்கின்றனர் என்பது வேதனை.

    பதிலளிநீக்கு
  3. இணைய வழி பொருட்கள் வாங்கும் மோகம் ரொம்பவே அதிகரித்து விட்டது. தேவையானதை சரி பார்த்து வாங்குவதே சிறந்தது.

    நல்லதொரு கட்டுரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் ஸ்ரீராம்

    ஆம் ஜம்பு சார்

    சரியா சொன்னீங்க வெங்கட் சகோ , நன்றி.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...