கசாக்கின் இதிகாசத்தை அல்லாபிச்சை மொல்லாக்கா கசாக்கின் சிற்றுயிர்களுக்குப் போதித்துத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரது தொண்டைக் கெடுக்கும் வண்ணம் அங்கே ஓராசிரியர் பள்ளி அமைக்க ரவி, சிவராமன் நாயர் என்பவரது முயற்சியால் வருகிறான். அவனது வாழ்க்கையின் மற்றும் தஸ்ராக் என்றறியப்படும் கசாக்கின் புராதன, இக்கால வாழ்வியலின் கூறுகளே இக்கதை.
ஒரு நூற்றாண்டுக்கான கதை இது. மலையாளிகளைப் படிப்பாளிகள் என்றும் கேரளா நூறு சதம் படிப்பறிவு மிக்க வளநாடு என்றும் சொல்வார்கள். அப்படிப்பறிவை வளர்க்கக் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளிகளும் ரவி போன்ற ஆசிரியர்களும் எவ்வாறு பாடுபட்டிருக்கிறார்கள் என்ற சித்திரம் இக்கதை மூலம் தெளிவாகிறது.
இஸ்லாமியர்கள் மதுவருந்தமாட்டார்கள் என்பது இக்கதை படிக்கும்வரை என் நினைப்பாயிருந்தது. இதில் வரும் காலியார், மாஸ்டர் அனைவரும் குடிக்கிறார்கள். ஊரே குடிக்கிறது. “கள்ளுண்ணா மனுஷனும் ஒரு மனுஷனா” என்று என் கேரளத் தோழி ரஜிதா சொன்னது இக்கணம் ஞாபகம் வருகிறது. பீடி, சிகரெட், குடி இல்லாமல் ஆண்கள் இல்லை. ஒரே பெண்ணிடம் ரவி, நைஜாமலி ஆகியோர் உறவுகொள்வது தெரிந்தபின் ஏற்படும் கலவரம், கைகலப்புப் கூட சிறிது நேரத்தில் கைகோர்த்து எழுந்து குடியால் அடங்கிவிடுவது அதிசயம்தான்.
ஆசிரியரை மாஷ், மாஷ்ஷே என்றழைக்கிறார்கள். ஆங்கிலம் கோண எழுத்து எனப்படுகிறது. பலம், த்ராம், அவுனீஸ் ( அவுன்ஸ் ) என்ற வார்த்தைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ஓடையிலும் தாமரைக்குளத்திலும் குப்புவச்சான், அலியார் போன்றோர் சேரமீன், ஒற்றல் மீன், பரல் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். கோவையில் இருந்தபோது அங்கே இருக்கும் மக்கள் மத்திமீன் என்றொரு மீனை விரும்பி வாங்கிச் சமைப்பதைப் பார்த்திருக்கிறேன். கம்யூனிஸ்டுகளைக் கசாக்கின் பேச்சு வழக்கில் கம்மூஷ்டு என்பதும், டாக்டரை லாக்கெட்டர் என்பதும்தான் சிறிது நகைக்கச் செய்தது.
சென்ற நூற்றாண்டின் கொடுமைகளான வைசூரி, பெரியம்மை ஆகியன தாக்கியது பற்றிய விவரணைகள் வருகின்றன. அதோடு ரவி சந்தித்த பெண்கள் அம்மாவிலிருந்து குஞ்ஞாமினா வரை வருகிறார்கள். குஞ்ஞாமினா ஒருவகையில் அவனது இறந்துபோன தங்கையின் தோற்றம் தருகிறாள்.
ரவிக்குச் சின்னம்மாவுடன் ஏற்படும் உறவு, அதன் பின் வீட்டை விட்டு வெளியேறி காசி, சாமியார் மடங்கள், பின்னர் கசாக்கின் பள்ளிக்கூடம் வரை பெண்களுடன் உறவு ஏற்படுகிறது. கல்லூரித்தோழி பத்மா, சாந்தும்மா, மைமூனா, கேசி, கோடச்சி என்று. அதேபோல் காலியாருக்கும் நீலி, மைமூனா என்று பெண்களுடன் உறவு. இக்கதையில் வரும் ஆண் பெண்களில் அநேகருக்கு இரு மணங்கள் மேலும் திருமணம் தாண்டிய பல்வேறு பெண்களுடனான தொடர்பு சித்தரிக்கப்படுகிறது.
மொல்லாக்காவுக்கு இரண்டாவது மனைவி, சுக்ருதீனின் இரண்டாவது மனைவி மைமூனா, மைமூனாவுக்கு ரவி, நைஜாமலியோடு ஏற்படும் உறவு, பாச்சி, காச்சி, காளி , நீலி ஆகியோரின் உறவுகள், நாராயணிக்கு குப்புவோடு ஏற்படும் உறவு, கேசி, கோடச்சி, சாந்தும்மா ஆகியோருக்கும் ஏற்படும் உறவுகள் அனைத்தும் சந்தர்ப்பம் அமைந்தால் யாவருமே தவறிழைப்பார்கள் என்பதை உணர்த்துகின்றன.
பணத்திற்காக மாந்திரீகத்தில் ஈடுபடும் கோபால பணிக்கர், ராமச்சான் ஆகியோர் தனிமையில் உரையாடும்போது மனம் கசிகிறது. அதேபோல் மொல்லாக்கா ஐந்து ரூபாய்க்காக மசால்ஜி வேலை பார்க்க ஒப்புக் கொள்வதும். அப்புக்கிளி, ஆபிதா ஆகியோரும் மாணவர்கள் அனைவரும் இக்கதையைக் கொண்டு செல்ல உதவுகிறார்கள். ஊரார்கள் சிலந்தி, ஓணான், பச்சோந்தி, பேன்கள் பற்றிக் கொண்டிருக்கும் புராதன நம்பிக்கைகளும் கதைகளும் கூட நம்மை விசித்திரமான உலகுக்கு அழைத்துச் செல்கின்றன.
தொன்மக் கதைகள், நாட்டார் வழக்குகள், உளவியல் நோக்குகள், கீத கோவிந்தம், குரான், திருவாதிரைப் பாட்டு, தெய்வப்புரை, செதலி மலை, செய்கு தங்ஙள் பற்றிய யுத்தக் கதைகள், கற்பக விருட்சத்தின் இளநீர்க் குடுக்கைகள், காஃபித் தோட்டம், பன்னிரெண்டு பள்ளிவாசல்கள், ராஜா பள்ளிவாசல், மொல்லாக்காவின் பெரிய பள்ளிவாசல், நீர் நிலைகள், நீர்ப் பறவைகள், விலங்குகள் பற்றிய விவரங்கள் கதைக்குள் முழுமையாக நம்மை ஆழ வைக்கின்றன.
ரப்புல் ஆலமீன், செய்யத் மியான் செய்குத் தங்ஙள், பத்ரீன்கள், முத்துநபி, அசரத்துகள், மலக்குகள், ஜின்கள், காலியார், அலியார் , முல்லாக்கா, இபிரீத்து, இஃபிலீஸு, இவர்களோடு புளியங்கொம்பேத்துபோதி , குட்டாடன் இவர்கள் பற்றிய குறிப்புகளோடு செறுமி , செறுமன், செருமன், ஈழவர், மரய்க்கார், பணிக்கர், ராவுத்தர், நாயர், கொம்பாளன் கவரப் புள்ளைங்க, தொட்டியன், பனையேறி, புள்ளுவன், குரு, உண்ணி, கொங்ஙன், ( கொங்ஙப்பாடு, நம்பூதிரிப்பாடு,) , பாணன், மான்னாடி என பலசாதிப்பிரிவினர் பற்றியும் கதை விவரிக்கிறது.
பள்ளி திறக்க நாற்றுப் புரை தந்த சிவராமன் நாயர் ( அவரே ஒரு கட்டத்தில் பள்ளியை மூடப் புகார் அளிக்கிறார் ), பனையேறிக் குப்புவச்சன், தையல்கடை மாதவன் நாயர், டீக்கடை அலியார், பொந்து ராவுத்தண்ணன், கோபால் பணிக்கர், ராமச்சன், லக்ஷ்மி, தித்திபியும்மா, அத்தரு முதலாளி, கேலன் மாஸ்டர், கல்யாணி, நாராயணி, முங்ஙாங்கோழி, என இன்னும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்கள் இக்கதை முழுவதும். மதம், மொழி, கம்யூனிசம், மருத்துவம், கல்வி, மக்கள், சுற்றுச்சூழல், நம்பிக்கைகள் இவற்றில் ஏற்படும் மாற்றம் எனப் பல்வேறு கூறுகளை இந்நூல் ஆய்கிறது.
க்ரீடமணிந்த கடற்பாம்புகள் சிறகடித்து எழுந்து வருவது, கானல் பாம்பு, ஜலப் பாம்புகள், அலைப் பாம்புகள், மண்கட்டிகளில், சருகுகளில், பொந்துகளில் உறைந்திருக்கும் பாம்புகள், ( பெருங்காய நீருக்குப் பயந்தோடுவது புது விஷயம் ) நீரில் இருக்கும் கருப்பு விஷம், கூமன்காவில் நரகப்படம், ஆசிரிய ஊழியம் செய்த ரவி திரும்பக் கூமன்காவுக்கு வந்து நீலப்பாம்பினால் கொத்துப்பட்டு இறப்பது வரை கதையின் ஊடுபாவாய் பாம்பு என்பது காமத்தின், இறப்பின், நரகத்தின் , அழிவின், இயலாமையின் , கொடூரத்தின், ஏன் பேரன்பின் குறியீடாகவும் பயன்பட்டுள்ளது.
சந்தர்ப்ப வசத்தால் தவறிழைத்த ஒருவன் அதே சந்தர்ப்பவசங்களால் மீண்டும் மீண்டும் தவறுகள் இழைக்க நேர்கிறது. தன் தந்தையிடமிருந்தல்ல பத்மா கேட்பது போல் அவன் “யாரிடமிருந்து தப்பித்து ஓடப்பார்க்கிறான் “என்ற கேள்வி நம் மனதிலும் எழுகிறது. ஆனால் அவனுக்கும் நமக்குமே அது தெரிந்த கேள்வியும் பதிலும்தான்.
உபநிஷத்துக்களும் அஸ்ட்ரோபிஸிக்ஸும் பற்றி ஆய்வு செய்ய முயன்ற ஒருவன் ஒரு கால சந்தியிலிருந்து பயணமாகி அடுத்த காலசந்திக்குத்தான் சென்றிருக்கிறான் என்ற ஆசுவாசமும் உருவாகியது. காலத்தையும் ஆகாயத்தையும் நினைவுகளையும் சுமந்து கிடக்கும் காலச்சுவடு பதிந்திருக்கும் கசாக்கின் இதிகாசத்துக்குள் ஒருமுறையாவது நுழைந்து பாருங்கள். நான் இரண்டு மூன்று முறை கசாக்கிற்குச் சென்று மீண்டேன்.
மிகச்சிறந்த கதையை அளித்த ஓ வி விஜயன் அவர்கட்கும், அதைச் சிறப்பாக மொழிபெயர்த்த யூமாவாசுகி அவர்கட்கும், இதைக் க்ளாஸிக் வரிசையில் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்துக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நூல் :- கசாக்கின் இதிகாசம்
ஆசிரியர் :- மலையாளம் :- ஓ. வி. விஜயன்
தமிழில் :- யூமா வாசுகி
பதிப்பகம் :- காலச்சுவடு
விலை :- ரூ 275.

சிறப்பான விமர்சனம்.
பதிலளிநீக்குநல்லதொரு அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!