எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஆசிரியரைத் தொழுத ஆந்த்ரபூரணர். தினமலர் சிறுவர்மலர் - 53.

ஆசிரியரைத் தொழுத ஆந்த்ரபூரணர்.
பொதுவாகவே சின்னக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் என்றால் பிடிக்கும். மிகப் பிடித்த ஆசிரியர் என்றால் அவர்களுடனே இருக்க விரும்புவார்கள். அதே போல் முற்காலத்திலும் ஒருவர் இருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் ஆசிரியருக்காகவே அர்ப்பணித்து அவரோடே வாழ்ந்து அதன் பின்னும் அவரது பாதுகைகளுக்கு சேவை செய்து மறைந்தார்.  
எல்லாரும் கடவுளைத் தொழுவார்கள், ஆனால் அவர் தன் ஆசிரியரைக் கடவுளாகத் தொழுதார். ஆசிரியரது பாதுகைகளைக் கூட அவர் தன் கடவுளாகப் பாவித்தார். அப்படிப்பட்ட அதிசய மனிதர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே வாருங்கள் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தில் திருநாராயணபுரம் அருகேயுள்ள சாலிகிராமம் என்ற இடத்தில் பிறந்தவர் ஆந்த்ரபூரணர். இவரது இன்னொரு பெயர் வடுகநம்பி. கி.பி. 1079 ஆம் ஆண்டு கிருமிக்கண்டச் சோழன் என்பவரது ஆட்சிக்காலத்தில் இராமானுஜர் தன் சீடர் குழாமோடு இத்திருநாராயணபுரம் என்ற ஊருக்கு வந்ததோடு இந்த சாலிகிராமத்துக்கும் வருகை புரிந்தார்.

இராமானுஜரின் வேண்டுகோளுக்கிணங்க அந்த ஊரின் ஏரியில் திருவடி வைத்து முதலியாண்டான் நம்பி என்பவர் அதைப் புனிதப்படுத்தினார். இராமானுஜரின் பக்தியையும் தர்ம நெறிகளையும் எளிமையையும் தொண்டுள்ளத்தையும் பார்த்த ஆந்த்ரபூரணர் அக்கணமே ராமானுஜரின் தாசனானார். உடனே அவர் தன் ஆசிரியராய் அவரை மனதுள் வரித்து அவரையும் அந்த ஏரியில் தம் திருவடியைப் பதிக்க வேண்டினார்.
அன்பிற்குக் கட்டுப்பட்ட ராமானுஜரும் ஆந்த்ரபூரணரின் ஆசையை நிறைவேற்றினார். அன்றிலிருந்து ஆந்த்ரபூரணர் தம் இல்லத்தை விட்டு இராமானுஜரைத் தம் குருவாக வரித்து அவருடனே வசிக்கலானார். ஒரு சமயம் இராமானுஜருக்காக ஆந்த்ரபூரணர் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் அரங்கனின் வீதி உலா நடைபெற்றது. அதைக் காண இராமானுஜர் ஆந்த்ரபூரணரையும் அழைத்தார். அவரோ ,” உங்கள் பெருமாள் உங்களுக்கு. நீங்கள் சென்று தரிசியுங்கள். நான் வந்தால் என் பெருமானாகிய உங்களுக்காகக் காய்ச்சும் பால் வீணாகிவிடும்” என்று கூறினார்.
இன்னொரு முறையும் இதே போல் அரங்கன் வீதியுலா நடைபெற்றது. அப்போதும் ராமானுஜர் ஆந்த்ரபூரணரை அழைத்தார். தாம் பெற்ற இறையின்பம் அவரும் பெற வேண்டும் என்ற எண்ணம் காரணம். அப்போது “ அரங்கனின் திருக்கண்கள் எவ்வளவு அழகு. காந்தம்போல் கவர்ந்திழுக்கிறது. நீங்களும் தரிசியுங்கள் ஆந்த்ரபூரணரே” என்று கூற அவரோ “ எனக்கு அரங்கன் கண்களை விட எம் ஆசாரியரான உம் கண்ணே அழகு.” என்று கூறிவிட்டுத் தம் ஆசிரியரையே வியந்து பார்த்தார். எல்லாவற்றையும்விட தன் ஆசிரியர் உண்ட மிச்சத்தையே உண்பார். அவர் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தம் போல் தன் மேல் தெளித்துக் கொள்வார். தினமும் தன் ஆசிரியரின் பாதுகைகளுக்குப் பூஜை செய்வார். அவ்வளவு அன்பு.
ஒருமுறை அவரது அன்பு அளவுக்கு மீறிப் போய்விட்டது.  ராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது பூஜை சாமான்கள், ஆராதனைப் பொருட்கள், ஆகியவற்றை ஒரு பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் ஒரு சீடர் கூவினார் “ ஐயோ என்ன இது? பாதுகை.. கோவில் ஆழ்வாருடன் பாதுகையையும் யார் கட்டி வைத்தது ? அபச்சாரம் “ என்று கூவ அனைத்துச் சீடர்களும் அங்கே குழுமி விட்டார்கள்.
இராமானுஜரும் அங்கே வந்தார். சீடர்கள் அனைவரும் ”நான் இல்லை , நீ இல்லை” என்று வாக்குவாதம் புரிந்து கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட இராமானுஜர் விவரமென்ன என வினவினார். அப்போது பூஜைப்பொருட்களுடன் அவரது பாதுகைகளும் இருப்பதை ஒரு சீடர் சுட்டிக் காட்ட கோபமான இராமானுஜர், “ யார் இதைச் செய்தது ? எனக்குத் தெரிந்தாக வேண்டும்” என்று கூற ஆந்த்ரபூரணர் முன்னே வந்து “ நான்தான் கட்டிவைத்தேன் என்றார்.
“ ஆந்த்ரபூரணா ,,ஏன் இப்படிச் செய்தாய் , பூஜைப் பொருட்களுடன் பாதுகையை வைக்கலாமா ? இது தவறு , இனி இப்படிச் செய்யாதே “ எனக் கண்டித்தார்.   அதற்கு ஆந்த்ரபூரணரோ, “ ஏன் வைக்கக்  கூடாது? உங்கள் தெய்வத்தின் பூஜைப் பொருட்களை நீங்கள் வைத்தீர்கள், என் தெய்வத்தின் பூஜைப் பொருளை நான் வைத்தேன் “ என்றார். அனைவரும் வாயடைத்துப் போயினர்.
ஆந்த்ரபூரணரை அருகே அழைத்து இராமானுஜர் ’இனி அப்படிச் செய்ய வேண்டாம்’ என அறிவுறுத்தினார் தன் ஆசிரியருக்காகவே அல்லும் பகலும் உழைத்தவர்,அவரைக் கண்ணின் மணிபோல் கடைசிவரை பாதுகாத்தவர் ஆந்த்ரபூரணர். தான் கடைசிக் காலத்தில் இராமானுஜர் தன் திருமுடியை எம்பார் என்ற சீடர் மடியில் வைத்தும் தன் திருவடியை ஆந்த்ரபூரணர் தலையில் வைத்தும் திருநாடு அடைந்தார். கடைசிவரை அதாவது தொண்ணூற்றியைந்து வயது வரை உயிர் வாழ்ந்த ஆந்த்ரபூரணர் தன் ஆசிரியரின் பாதுகையை தினமும் ஆசிரியராகவே பூஜித்து மறைந்தார். 
பாருங்கள் ஆசிரியரைத் தொழுத மாணவன் ஆசிரியரை மட்டுமல்ல. அவர் பாதுகையைக் கூடத் தெய்வமாகப் பார்த்திருக்கிறான். இது உயர்வான விஷயம்தானே குழந்தைகளே !

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 31 .1. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார். 

டிஸ்கி 2.:- நரியைப் பரியாக்கிய கதையைப் பாராட்டிய வந்தவாசி வாசகர் திரு. காசிதாசன் அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...