எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 மே, 2019

கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)

கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)
காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் குழந்தைகளைக் குதூகலிக்க வைப்பவை விடுமுறை நாட்கள். பாட்டி தாத்தா இருக்கும் கிராமத்துக்குச் சென்று இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் உடலை வலுவாக்கும் விளையாட்டுக்களும் அவர்களைப் புதுப்பிக்கும்
இன்றோ அவர்கள் சம்மர் கேம்ப்களில் அடைபடும் சிறைப்பறவையானார்கள். அல்லது வீட்டுக்குள்ளேயே வீடியோ விளையாட்டிகளில் சிக்கிய ஆங்கி பேர்ட் ஆனார்கள். முன் காலத்திய விளையாட்டுகள் கூடி வாழ்வதையும் விட்டுக்கொடுப்பதையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்தெடுத்தன. இன்றைய விளையாட்டுகள் தனிமனிதர்கள் இன்னும் தனக்குள் சுருங்கிப் போவதையும் சுயநலத்தையும் தனிமை வெறுமை விரக்தியையும் உருவாக்குகின்றன். ப்ளூவேல் போன்ற சில அபாயகரமான விளையாட்டுகள் மரணம் வரை இட்டுச் செல்கின்றன.
பெருநகரங்களில் வசிப்பவர்க்கு அக்கம் பக்கத்தினரோடு அதிகம் தொடர்பு இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளோடு செலவழிக்க நேரம் இருப்பதில்லை. எனவே சம்மர் கேம்ஸ் மற்றும் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். இதில் அகாடமிக் ஆர்ட், ஸ்போர்ட்ஸ், டெக்னாலஜி, அட்வென்சர், டூர் & ட்ராவல், ட்ரெக்கிங், ஸ்விம்மிங், ட்ரைவிங், ஹார்ஸ் ரைடிங், மிலிட்டரி, டே காம்ப்ஸ், ட்ரெடிஷனல் ஓவர்நைட் கேம்ப்ஸ் ஆகியன அடங்கும். பாரம்பர்யத்தைக் கற்றுக்கொள்ளப் பல்லாயிரம் பணம் கட்டிக் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும்.

நம் பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் ஸ்கவுட்ஸ், என் சி சி, என் எஸ் எஸ் ஆகியவையும் பிசிகல் எஜுகேஷனும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. இப்போதைய பள்ளிகளில் விளையாட்டு மைதானமே எங்கிருக்கிறது என்பது கேள்விக்குறி ! கோடை விடுமுறை என்றால் அது வெய்யில் வீணாகாமல் கிரிக்கெட் ஆடுவது என்றே இளையர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் பிள்ளைப்பருவத்தில் கண் கை கால் செயல்பாட்டுக்காக நூறு விளையாட்டுகள் உண்டு. கைக்குழந்தை முதற்கொண்டு இளையர் வரை எண்ணற்ற விளையாட்டுக்கள். சிலவற்றை வீட்டின் உள்ளிலும் சிலவற்றை வீட்டு வாசலில் அல்லது முற்றத்தில் விளையாடுவார்கள்.
பப்புக்கஞ்சி எனப்படும் பருப்புக் கடைதல். பகிர்ந்து உண்பதை சிசுவாக இருக்கும்போதே மனதில் பதிக்கும்விளையாட்டு. மனிதருக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் உணவளித்து உண்ண வேண்டும் என போதிக்கிறது. குழந்தையின் கை கால் செயல்பாட்டுக்காக தாப்பூ தாமரைப்பூ, உந்தி உந்திக் காசு, கை வீசம்மா கைவீசு, நண்டூறுது நரியூறுது, கிச்சுக் கிச்சுப் பண்ணுதல், அப்பா குத்து  அம்மா குத்து என உள்ளங்கையில் குத்தி விளையாடுதல், கண்கள் கவனம் பெற கொட்டப் ப்ராந்து ஆகியன கைக்குழந்தைகளுக்கானவை.
கொடுத்துண்ணக் கற்பிக்கும் சொப்பு சாமான் வைத்து விளையாடுவது, ஓடிப்பிடிச்சு விளையாடுவது,  ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுவது , கண்ணைக் கட்டிக்கொண்டு பிடித்தல், கண்ணைக்கட்டிக்கொண்டு ஒரு பொருளை ஓரிடத்தில் போட்டு விட்டு அதனைக் கண்டுபிடித்தல், நொண்டியடிச்சுப் பிடித்தல் , சில்லு வைத்து கட்டத்தில் ஆடும் நொண்டி, கல்லா மண்ணா, ஐஸ்பை டப்பா, கபடி/பலிஞ்சடுகுடு, சில்லு விளையாட்டு/சில்லுக்கோடு, திருடன் போலீஸ், ( ராஜா ராணி மந்திரி போலீஸ் – உளவியல் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு ) கை கால் பயிற்சிக்காக  பில்டிங்க் ப்ளாக்ஸ், செட் சேர்க்கும் விளையாட்டு, கண்ணாமூச்சி ரெண்டு வகை, நொண்டி ரெண்டுவகை ஆகியன பத்து வயதுக் குழந்தைகளுக்கானவை.
கிராமத்தில் விளையாடி இன்னும் மறக்காத விளையாட்டுக்களில் சில இவை. தாயக்கட்டம்/ஆடுபுலி ஆட்டம்/பாண்டி, அஞ்சுல் கல் எனப்படும் தட்டாங்கல், பரமபதம், பல்லாங்குழி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பூசணிக்காய் விளையாட்டு, தட்டாமாலை , சொக்கப்பனை, பூப்பறிக்க வருகிறோம், பட்டம்/காத்தாடிவிடுதல், பம்பரம், கோலிக்குண்டு, ஸ்கிப்பிங், மியூசிகல் சேர், கில்லி டண்டா எனப்படும் கிட்டிப் புள், பச்சைக்குதிரை தாண்டுதல், மீன்சட்டி விளையாட்டு, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, குலை குலையா முந்திரிக்கா, கிளியாந்தட்டு ஆகியன.
திருவிழா அல்லது காணும் பொங்கலன்று விளையாடவும் விளையாட்டுக்கள் உள்ளன. அவை கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம். திருவிழாவில் வாங்கும் பொருட்களைக் கொண்டு சோப்பு நுரையில் பபுல்ஸ் ஊதுதல், பீப்பீ, ஊதல், பலூன், பால் ஆகியன இன்று இல்லை என்றே சொல்லலாம். அந்தப் பந்தைக் கொண்டு கும்மாங்குத்து என்றொரு விளையாட்டு விளையாடுவார்கள் இளையர்கள். ”என்ன பந்து ரப்பர் பந்து என்ன ரப்பர் அழி ரப்பர் என்று தொடரும் பாட்டில் என்ன குத்துகும்மாங்குத்து” என்று சொல்லி ஒருவர் அடிக்கும் பந்திலிருந்து தப்பித்து ஓட வேண்டும்   
குழந்தைகளின் மனனத் திறமையையும் சொல் உச்சரிப்பையும் வளர்க்கும் ஒருபத்தி திருப்பத்தி , பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் ஆகியன இன்று இல்லை என்றே சொல்லலாம்.
குழந்தைகள் கூடி விளையாடும் ட்ரெயின் விளையாட்டு, கிராமத்துத் தோட்டத்தில் இலவசமாய்க் கிடைக்கும் தென்னைமட்டை கொண்டு தென்னை மட்டை சவாரி, நுங்கு வண்டி, டயர் உருட்டி ஓடும் விளையாட்டு போன்றவைக்கு ஈடாக இன்று ஏதும் விளையாட்டுக்கள் உள்ளனவா.
புளியமுத்தில் விளையாடும் ஒத்தையா ரெட்டையா, கைதட்டி கைதட்டி பாடும்விளையாட்டு, ஊஞ்சல் ஆடுதல், ஸ்கிப்பிங் கயிறு கொண்டு ஸ்கிப்பிங் ஆடுதல் ஆகியன நம்மைப் புதுப்பித்தன.
கண் மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிக்க காரம்போர்டு, செஸ், ஸ்நேக்ஸ் & லாடர்ஸ், சைனீஸ் செக்கர்ஸ், லூடோ, ட்ரேட் எனப்படும் பிஸினஸ்/ வியாபாரம் ஆகியன பதின் பருவத்தினருக்கானவை.
டம்ஷெராட்ஸ் முறையில் சினிமா பேர் கண்டுபிடித்தல், பென்சில் பேப்பர் கொண்டு விளையாடும் விளையாட்டுகள் பிங்கோ, காட்டா பீட்டி, மாஜிக் கேம்ஸ், கார்ட் கேம்ஸ், ப்ஸில்ஸ் எனப்படும் சொல் புதிர் விளையாட்டுகள் , வார்த்தை விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர், க்ராஸ்வேர்டு பஸில்ஸ், ஸ்கிராபிள்ஸ் ஆகியன மூளைச் செயல்திறனையும் சிந்திக்கும் ஆற்றலையும் பெருக்குகின்றன.
பெருநகர விளையாட்டுகளும் பல இருந்தன சில காலம் முன்பு வரை. அவை இண்டோர் பாஸ்கெட் பால், சின்ன அம்பை குறி பார்த்து தூரத்திலிருக்கும் அட்டையின் நடுவில் எய்தல், விளையாட்டு வில், அம்புகள், ஃப்ரீஸ் விளையாட்டு, பலகைகளில் விளையாடப்படும் விளையாட்டுக்கள்., ஸ்கேட்டிங், பாட்டுக்குப் பாட்டு எனப்படும் அந்தாக்ஷரி, ட்ரெஷர் ஹண்ட் எனப்படும் ஒளித்துவைக்கப்பட்ட ஒரு பொருளைத் தேடுதல், இன்ஷியல் கேம், கலர் விளையாட்டு. (ஒரு நிறத்தைச் சொல்லி அதைத் தொடச் சொல்லுதல். தொடாதவர் அவுட்.) ஆகியனவும்,
இருபது பேர் வட்டமாக அமர்ந்து ஒரு பொருளின் பேரை ஒருவருக்கொருவர் காதுக்குள் சொல்லி விளையாடும் விளையாட்டு . முதலில் சொல்லப்படும் பொருளின் பேர் அல்லது வார்த்தை கடைசி நபருக்கு வரும்போது வேறாக மாறியிருக்கும்.  மெமரி கேம், 20 பொருட்களைப் பார்த்து அவற்றை பொருட்களை ஞாபகப்படுத்திச் சொல்லும் விளையாட்டு,. பொம்மைகள் கைவேலைகள் செய்தல், பின்னல் வேலைகள் செய்தல் ஆகியனவும்,
மேஜிக் செய்துகாட்டுதல், எண் புதிர், புக் கிரிக்கெட், விடுகதை, கணக்குப் புதிர்போடுதல், குறுக்கெழுத்துப் புதிர், ஸ்பெல் பீ, ஈஸி சுடோகு, காகுரே, தமிழ் எண்கள் சொல்லும் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, நேம் ப்ளேஸ் திங்க்ஸ் அனிமல்ஸ், கார்ட்ஸ், ட்ரம்ப் கார்ட்ஸ், கிரிக்கெட், இறகுப் பந்து, கால்பந்து ஆகியனவும் ஒருகாலத்தில் பெருநகரங்களிலும் இல்லங்களில் விளையாடப்பட்டன என்பதை நாம் ஆவணப்படுத்தியாக வேண்டும்போல் இருக்கிறது.
ஏனெனில் இன்றைக்கு அதிகம் விளையாடப்படும் கணினி வீடியோ விளையாட்டுகள், கார் ரேஸ், பைக் ரேஸ், சாலிட்டர், ஸ்பைடர் சாலிட்டர் எனப்படும் கார்டு விளையாட்டுகள், மேஹ்ஜோங் டைடன்ஸ் எனப்படும் செட் சேர்க்கும் விளையாட்டுகள், மாரியோ, ஜேம்ஸ் பெயின், ஜ்வெல் டெட்ரிஸ், ப்ரிக்ஸ் தனிமையைப் பரிசாகத் தருகின்றன. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள் ஆங்க்ரி பேர்ட், பெட் அனிமல்ஸ் வளர்ப்பது, பேசும் பூனை, ஃபார்ம் வில்லி, ப்ளூ வேல் ஆகியன விரக்தியையும் வன்முறையையும் கற்றுக் கொடுக்கின்றன.
குழந்தைகளின்/இளையர்களின் வன்முறை பெருகிவருகிறது என்பது மனசாட்சியற்ற செயல்கள்செய்யும் இளைய தலைமுறையினர் பற்றிய செய்திகள் மூலம் தெளிவாகிறது. இது ஓர் எச்சரிக்கை மணிதான் . இன்னும் காலம் கடந்துவிடவில்லை. எனவே விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை நெறிப்படுத்துவோம். அதற்கு இவ்விளையாட்டுகளும் துணை செய்யும்.
உடல் ஆரோக்யம், விட்டுக் கொடுத்தல், கூடி வாழும் இயல்பு, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல், சமமாகக் கருதுதல், கூட்டு முயற்சி, உடலுக்கு வலு கொடுப்பது, கை கால்களுக்குப் பயிற்சி, வளைந்து நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, விரைந்து செயலாற்றுதல், சூக்குமமாக அறிதல், மனனத் திறன் மேம்பாடு, மனக்கூர்மை, படைப்பாற்றல் பெருகுவது, பொறுமை, கீழ்படிதல், கூட்டாக காரியங்களை வெற்றிகரமாக நிகழ்த்தக் கற்றுக் கொள்ளல் ஆகிய நற்பலன்களை அள்ளித்தரும் முந்தைய விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது அவசியமான ஒன்றாக உள்ளது. வருமுன் காப்போம் என முயற்சி எடுத்தால் அடுத்து வரும் தலைமுறைகளை நல்ல உடல் &மன ஆரோக்கியமுள்ள தலைமுறைகளாக உருவாக்கலாம்.

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை. வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...