எப்போதும் தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று கடுந்தவம் இருந்து வரம் பெற்றான் ஒருவன். அவன் இயக்கர் வம்சமாயினும் பஞ்சமாபாதகங்களைக் கண்டாலே அஞ்சுபவன். அவன் எப்படி அதர்மம் புகுந்த இடத்தில் இருப்பான். அதனால்தான் அவன் தர்மத்திடம் சரணடைந்தான். அவன் யார் ? அவன் பெற்ற வரம் என்ன ? அவன் தர்மத்திடம் சரணடந்த காரணம் என்ன எனப் பாப்போம் குழந்தைகளே.
விஸ்ரவஸ் என்ற முனிவருக்கு புஷ்போத்கை, மாலினி, ராகை ஆகிய மூன்று மனைவியர் மூலம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை, கரன் ஆகியோர் பிறந்தார்கள். இவர்களுள் மாலினிக்குப் பிறந்த விபீஷணன் அழகும் அறிவும் நிரம்பப் பெற்றவன். அத்தோடு அறச் செயல்களில் விருப்பம் கொண்டவன். சிறந்த பக்திமான்.
இவர்களில் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் வேதங்கள் கற்றுக் கல்விமானாகத் திகழ்ந்தாலும் இன்னும் பலம்பெற வேண்டி பிரம்மனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தனர். முடிவில் பிரம்மன் தோன்றி அவர்கள் தவத்தை மெச்சி வரங்கள் வழங்கினார். இராவணன் யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என வரம் கேட்டவன் மனிதனாலும் இறப்பு நேரக்கூடாது என்பதைக் கேட்க மறந்தான். கும்பகர்ணனோ நித்திய ஆயுசு வேண்டும் எனக் கேட்கவந்தவன் நித்திரை வேண்டும் என வாய்தவறிக் கேட்டு தூக்கத்தை வரமாகப் பெற்றான்.
உண்ணா நோன்பு நோற்றிருந்த விபீஷணனோ இன்னும் ஞானமும் மேன்மையும் அடைந்தான். அவன் “ எந்தச் சமயத்திலும் எத்தகைய சூழலிலும் நான் தர்மத்தில் இருந்து வழுவாமல் வாழவேண்டும். மேலும் எனக்கு ஞான ஒளி பெருகவேண்டும் ” என்பதை பிரம்மாவிடம் வரமாகக் கேட்டதால் அவர் மகிழ்ந்து ’அவன் சிரஞ்சீவியாகவும் வாழ்வான்’ என்ற வரத்தையும் சேர்த்து அருளினார்
இதன்பின் இராவணனின் அட்டகாசம் எல்லை மீறிக் கொண்டிருந்தது. தன் தந்தைக்கு இன்னொரு தாயின் மூலம் பிறந்த தன் இன்னொரு சகோதரனான குபேரனை விரட்டிவிட்டு இலங்கையின் அதிபதியாக முடிசூட்டிக் கொண்டான். மேலும் குபேரனின் புஷ்பக விமானத்தையும் கவர்ந்து கொண்டான்.
கும்பகர்ணனோ அண்ணன் அடிமாறா தம்பி. ஆறு மாதம் தூங்குவதும் அடுத்த ஆறுமாதம் உண்பதும் உறங்குவதுமாகவே கழித்த அவன் அண்ணன் சொல் தட்டாதவன். மாற்றாந்தாய்ப் பிள்ளைகளானாலும் சூர்ப்பனகையும் கரனும் கூட அவ்வாறே இராவணனின் அட்டூழியத்திற்கு எல்லாம் துணை போய்க்கொண்டிருந்தனர்.
தன் அண்ணன் செய்த தவறுகள் பலவற்றை மன்னித்து மறந்து இருந்தாலும் நியாய தர்மம் ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை கொண்ட விபீஷணனுக்குத் தன் அண்ணன் இராவணன், இராமனின் மனைவி சீதைமேல் விருப்பம் கொண்டு கவர்ந்து வந்தது துளிக்கூடப் பிடிக்கவில்லை.
அது அறச்செயல் அல்ல என்று அண்ணனிடமே வாதிடுகிறான். “ அண்ணா, பிறன்மனை நயத்தல் நன்றன்று “
“ஓஹோ எல்லாமெனக்குத் தெரியும். நீ என்ன எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயோ?”
“இல்லை அண்ணா ராமரின் பலம் தெரியாமல் மோதாதே. சாதாரண மானுடன் என்று எண்ணாதே. நீதி யார் பக்கமோ அதுதான் ஜெயிக்கும். எனவே அநீதியாக நடப்பதைக் கைவிடு.”
“எதிரிக்கு வக்காலத்து வாங்கும் நீ இங்கே ஏன் இருக்கிறாய். அங்கேயே சென்று அவனிடமே சேர்ந்துகொள். கோபத்தில் நான் உன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவேன். சென்றுவிடு ” எனத் துரத்துகிறான்.
”அண்ணா நன்னூல்கள் போதித்த நெறியை உனக்குச் சொன்னேன். ஏற்பதும் மறுப்பதும் உன் பாடு” என்று சொல்லிக் கையறு நிலையில் இலங்கையில் தன் அண்ணனின் அரண்மனை விட்டு வெளியே வந்தான். சோகம் அவன் மனதைச் சூழ்ந்தது. ஆனால் அவனைச் சுற்றி அவன் சத்தியம் அரணாகக் காத்தது.
இராவணனுடன் போர்புரியக் கடல்தாண்டி வந்து பாசறை அமைத்திருந்த இராமனை நாடிச் செல்கிறான். ராமனுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவன் நெஞ்சைச் சுடுகிறது. எனவே கரங்கள் குவித்து மன்னிப்புக் கேட்பவன் போல் ராமனின் பாசறை நோக்கிப் போகிறான்.
தூரத்தே கூப்பிய கைகளோடு வரும் அவனைப் பார்த்து சுக்ரீவனும் ஜாம்பவானும் ,”இவன் ஏதேனும் சதித்திட்டத்தோடு வருகிறானோ “ என்று ஐயப்படுகிறார்கள். ராமரிடமும் அதையே கூறுகிறார்கள்,” எதிரியின் தம்பி இங்கே வருகிறான். எச்சரிக்கையாயிருக்க வேண்டும் ராமா “
ஆனால் அனுமனின் மனமோ விபீஷணனை நம்புகிறது. ”ராமா அவன் முகத்தைப் பாருங்கள். குனிந்த தலை, கூப்பிய கைகள், கண்ணீர் வடியும் கண்கள், பணிவுடன் வளைந்த உடல், தவறு தங்கள் பக்கம் என்று உணர்ந்து அவன் சரணாகதிக்குத்தான் வருகிறான். இவன் தர்மாத்மா. எந்தத் தவறுக்கும் இவன் காரணமில்லை “ என்று பளிச்சென்று ராமனிடம் கூறுகிறார்.
இராமனின் மனமும் அதையே ஆமோதிக்கிறது. நம்புகிறது. அவரும் விபீஷணனின் முகத்தைப் பார்த்தே அகத்தை , மெய்யான உள்ளொளியை உணர்கிறார். உடல்மொழியைப் படிக்கிறார். இந்நேரம் விபீஷணன் என்ன இராவணனே வந்தாலும் அடைக்கலம் கேட்டால் கொடுக்கச் சித்தமாகிறார்.
அருகே வந்ததும் விபீஷணன் ராமரின் பாதம் பணிய அவரோ “ குகனுடன் ஐவரானோம், சுக்ரீவனுடன் அறுவரானோம், என் மேல் பிரியம் வைத்து வந்த விபீஷணா உன்னோடு நாம் எழுவரானோம். ஆம் இப்போது எனக்கு ஆறு தம்பிகள் ” என்று கட்டியணைத்துக் கொள்கிறார். அனைவர் முகத்திலும் நிம்மதி பொங்குகிறது.
அதர்மத்தை விட்டு விலகி தர்மத்திடம் சரணடைந்த விபீஷணனை இராமர் அதன் பின் இலங்காதிபதி ஆக்கும்போதும் இராமரின் கழல்களையே தன் தலைமீது வைத்துக் கொண்டானாம். தர்மத்திடம் சரணடைந்தவர்க்கு என்றுமே அழிவில்லை என்பதை இக்கதை மூலம் உணர்ந்தோம் இல்லையா குழந்தைகளே.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 21 .2. 2020 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 21 .2. 2020 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
சிறப்பு
பதிலளிநீக்குகொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html
நன்றி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!