கம்ப ராமாயணம்
முக்கியமான பாடல்களும் விளக்கமும் – ஒரு பார்வை.
தான் ரசித்த ராம
காவியத்திலிருந்து மனதிற்கினிய சில பாடல்களை எடுத்து நயவுரையோடு நயந்திருக்கிறார் திரு கம்பன் அடிசூடி அவர்கள்.
கம்பன் கவித்தேனில் படிந்த மனவண்டு சுவை கண்டு மொண்ட பாடல்களுக்கு எழுந்த இவ்வுரையில்
நயம் யாவும் குருநாதன் அருள் எனப் பணிவடக்கத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார் கம்ப காவலர்.
இனி நாமும் 116
பாடல்களையும் மாந்தி மகிழ்வோம். அவற்றுள் என்னைக் கவர்ந்த சிலவற்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.
பால காண்டத்தில் 36 பாடல்களும் அயோத்தியா காண்டத்தில் 22 பாடல்களும், ஆரணிய காண்டத்தில்
17 பாடல்களும், கிஷ்கிந்தா காண்டத்தில் 12 பாடல்களும், சுந்தர காண்டத்தில் 12 பாடல்களும்
யுத்த காண்டத்தில் 17 பாடல்களும் சுவையுரை பெற்றுள்ளன.
கடவுள் வாழ்த்துப்
பாடலை ( தைத்திரியோ உபநிஷத்) உபநிஷ ஸ்லோகத்தோடு ஒப்புமை செய்விக்கிறார் ஆசிரியர். முத்தமிழிலும்
துறைபோகிய கம்பன் நடையில் நின்றுயர் நாயகனைச் சிலாகிக்கும் விதத்தை ஆசிரியர் சுட்டுவது
அழகு.
நீறு அணிந்த கடவுள்
என மேகத்தை சிவன் விஷ்ணுவோடு இணைத்தும் இரவி குலத்துத் தூய்மை போல சரயூ நதியும் தூய்மையாய்
ஓடுவதாகவும் குறிப்பிட்டிருப்பது அவர்களின் சிறப்பைச் சொல்லியது. நீரிடை உறங்கும் சங்கம்
நாட்டின் செல்வச் செழிப்பைப் பறைகிறது.
சேவற்சண்டைக்கு
பெரியபுராணத்திலிருந்து உதாரணத்தோடு ஆசிரியர் ”கறுத்தமனம், வெறுப்பில, உறுபகை இன்றி
களிப்பின் வெம்போர் மதுகைய, வாழ்க்கை மறுப்பட ஆவி பேணா” என சுட்டியுள்ள கருத்து சிந்திக்கத்தக்கது.
தயரதன் அரசாட்சிச்
சிறப்பு, கழல் துகள் கதுவ கல் உருத் தவிர்தி என்று அகலிகையிடம் ராமன் கூறுவதோடு காந்தியடிகள்
நவகாளி கலவரத்தில் கற்பழிப்புக்கு ஆளான பெண்கள் நெஞ்சறியத் தவறு செய்யாததால் குடும்பத்தவர்
ஏற்கவேண்டும் என்று சொன்னதோடு இணைக்கிறார். மேலும் இந்த இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும்
தொடேன் என்று கூறியமையால் ராமனின் கால் கூட அல்ல கழலின் துகள் பட்டே கல்லான அகலிகை
உயிர்த்தாள் என்று நயம் பாராட்டுகிறார்.
இழைக்கின்ற விதி,
தழைக்கின்ற உள்ளம் என்ற இடங்களிலும், நதியின் பிழையன்று என்பதை இராவணன் விதியினால்
விளைந்த பிழை என்றும் காட்சிப்படுத்தி எழுதி இருப்பது மனம் நெகிழ்த்தியது.
மையோ மரகதமோ எனக்
கம்பனே இராமனிடம் மயங்கியிருப்பதைக் காணலாம். அதே போல் குகனின் அன்பில் கலப்பது ( பரிவின்
தழீஇய என்னின் பவித்திரம் ) என அன்பில் கரையும் இடங்கள் பல.
சூர்ப்பணகை இராவணனிடம்
சீதையைப் பற்றிச் சொன்னதன்மூலம் கிளிபோன்ற மனைவியர்க்கு எல்லாம் கேடு செய்துவிட்டதாகக்
கூறுமிடத்து பொய்யான புகழுரைகளால் பின்னால் அவனுக்கு ஏற்படப் போகும் இழுக்கையும் ஆணித்தரமாய்க்
கூறுகிறார்.
கவந்த வனத்தில்
”நினைப்புப் பிழையாமல்” என இலக்குவன் இராமனிடம் கூறுமிடத்து ஆசிரியர் அது மனம் வாக்கு
காயம் என்னும் மூன்றும் இணைந்த திரிகரண சுத்தி என இயம்புகிறார்.
அரசாட்சி செய்யும்
தலைவன் தாயைப்போல் இருக்க வேண்டும் என சுக்ரீவனிடம் தாங்க வேண்டியவர்களைத் தாங்கவும்,
தீமை செய்வோரைத் தண்டிக்கவும் வேண்டும் அதுவும் வரையறைக்குட்பட்டே என நுட்பமாக ராமன்
வாய்மொழியாக அரசியல் அறிவுறுத்துகிறார். அதேபோல் சீதை இராவணனிடம் இடிக்குநர் இல்லை
என்று கூறுமிடத்துக் குறளை மேற்கோள் காட்டியுள்ளதும் சிறப்பு.
இவ்வாறு இந்நூல்
முழுவதும் ஒவ்வொரு பாடலையும் சொல்லிக் கொண்டே செல்லலாம். பாக்களின் நயத்தை பல்வேறு
கோணங்களில் விளம்பும் இந்நூல் நயம் புதுமை மற்றும் வெகு சிறப்பு. திறமையான ஆசிரியர்
வகுப்பெடுப்பது போல் இராமாயணத்தின் சாராம்சத்தை எல்லாம் பி/பொழிந்து கொடுத்துள்ளார்.
நீங்களும் இவற்றை மாந்திப் பாருங்களேன், அதன்பின் கூறுவீர்கள் இந்த உரை கம்பனின் ராமாயணத்துக்கு
ஒரு அணியாரமென்று.
நூல் :- கம்ப ராமாயணம்
முக்கியமான பாடல்களும் விளக்கமும்.
ஆசிரியர் :- கம்ப காவலர் பழ. பழனியப்பன்
பிரசுரம் :- மணிமேகலைப் பிரசுரம். ( 2005 ஆம் ஆண்டு பதிப்பு )
விலை:- ரூ. 65/-
ஆசிரியர் :- கம்ப காவலர் பழ. பழனியப்பன்
பிரசுரம் :- மணிமேகலைப் பிரசுரம். ( 2005 ஆம் ஆண்டு பதிப்பு )
விலை:- ரூ. 65/-
நல்ல நூலாக இருக்கும் போலவே
பதிலளிநீக்குநல்லதொரு விமர்சனம்...
பதிலளிநீக்குநூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய மதிப்புரை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீமலையப்பன்
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!