கோவர்த்தன வில்லை
ஒடித்த விதுரர். :-
சீதையை
மணக்க ராமபிரான் வில்லை ஒடித்தது தெரியும். ஆனால் மகாபாரதத்தில் விதுரர் வில்லை ஒடித்தார்.
அது எதற்கென்று தெரியுமா.? அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் குழந்தைகளே.
அஸ்தினாபுர
அரண்மனை. அரசிளங்குமரிகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் புத்திரர்கள் திருதராஷ்டிரனும்
பாண்டுவும் ஆவார்கள். அவர்களின் தம்பி விதுரன். ஆனால் அவரது தாயார் ஒரு பணிப்பெண்.
அதனால் அவருக்கு நாடாளும் யோகம் கிட்டவில்லை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சித்தப்பாவான
அவர் தான் வகுத்த விதுரநீதியைக் கூறி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்.
விதுரர் சிறந்த வில்வித்தை வீரர். சிறந்த விஷ்ணு பக்தரான விதுரருக்கு
விஷ்ணு கோவர்த்தன் என்ற வில்லைப் பரிசாகக் கொடுத்தார். அந்த வில் அர்ஜுனனின் காண்டீபம்
என்னும் வில்லை விட வலிமை வாய்ந்தது. அதற்கு இணையான சக்தி கொண்ட வில் எதுவுமே கிடையாது.
விதுரர் நேர்மை தவறாதவர். வாக்கும் தவறமாட்டார்.
பொறுமையும் பண்பும் மிக்கவர்.
பாண்டுவின் புத்திரர்களான பாண்டவர்களுக்கு அரசாளும் உரிமையை
மறுத்தார்கள் திருதராஷ்டிரனும் கௌரவர்களும். அவர்களுக்காகப் பரிந்து பேசிவந்தார் விதுரர்.
ஒருமுறை
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையில் சூதாட்டம் நிகழ்கிறது. விதிப்பயனால் தர்மர்
தன் நாட்டையும் தன்னையும் தம்பிகளையும் கூட வைத்துத் தோற்கிறார். அதன்பின் கௌரவர்களின்
தூண்டுதலால் திரௌபதியையு பிணையாக்கித் தோற்கிறார். அப்போது கௌரவர் சபையில் திரௌபதிக்கு
மானபங்கம் நேர்கிறது . அப்போதும் கௌரவர்கள் செய்வது தவறு என்று விதுரர் மட்டுமே நீதி
உரைக்கிறார்.
கெடுமதி பிடித்த திருதராஷ்டிரனும் அவரது மூத்த மகனான துரியோதனனும்
பாண்டவர்களைக் கூண்டோடு அழிக்க ஒரு மாளிகையைக் கட்டிக் கொடுத்தார்கள். துர்மதி படைத்த
திருதராஷ்டிரனும் துரியோதனும் கொடுத்த மாளிகை அரக்கு என்னும் மெழுகினால் கட்டப்பட்டது,
எளிதில் தீப்பற்றக்கூடியது. அதைக் கண்டுபிடித்த விதுரர் குந்தியிடமும் பாண்டவர்களிடமும்
கூறி ஏதேனும் ஆபத்து வந்தால் அந்த அரக்கு மாளிகையில் இருக்கும் சுரங்கம் வழியாகத் தப்பிக்கும்படி
முன்பே எச்சரித்துவிடுகிறார்.
பாண்டவர்களும் குந்தியும் அந்த அரக்கு மாளிகைக்குக் குடிவந்த
அன்று இரவு அரக்கு மாளிகை தீப்பிடிக்கிறது. அதற்குத் தீயூட்டியவர்கள் கௌரவர்களின் வீரர்கள்தான்.
முன்பே விதுரர் எச்சரித்ததால் குந்தியும் பாண்டவர்களும் ரகசிய சுரங்கப்பாதை வழியாகத்
தப்பிச் சென்றுவிடுகிறார்கள்.
அவர்களுக்குரிய அரசுப்பட்டத்தைத் தர கௌரவர்கள் தயாராயில்லை.
அதனால் யுத்தம் செய்துதான் பெறவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
யுத்தம்
நிகழாமல் தடுத்துத் தமக்குரிய உரிமைகளைப் பெற பாண்டவர்கள் கடைசிப்பட்சமாகக் கிருஷ்ணரை
அஸ்தினாபுர அரண்மனைக்குத் தூது அனுப்புகிறார்கள். கிருஷ்ணர் வருகிறார் எனத் தெரிந்ததும்
அரண்மனையில் விருந்தும் வரவேற்பும் அமர்க்களப்படுகிறது. திருதராஷ்டிரனும் துரியோதனும்
கிருஷ்ணரின் வரவுக்காக காத்திருக்கிறார்கள்.
ஆனால் அஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணரோ தான் தூதுவனாக வந்திருப்பதால்
அரண்மனைக்கு மறுநாள் வருவதாகக் கூறி மறுத்து
விதுரர் இல்லத்தில் தங்குகிறார். மகாநீதிமானாகிய விதுரருக்கோ மனமெங்கும் சந்தோஷம்.
ஸ்ரீகிருஷ்ணரே அவரது இல்லத்தில் தங்கப்போகிறாரே. மகா பாக்கியமாகக் கருதிய அவர் கிருஷ்ணரை
உபசரித்து விருந்தோம்பி மகிழ்ந்தார்.
மறுநாள்
காலை. விதுரரும் கிருஷ்ணரும் அஸ்தினாபுர அரண்மனையை அடைந்தார்கள். அரசவையில் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் ”அரசுப்பட்டத்தைத் தராவிட்டாலும் பரவாயில்லை, ஐந்து கிராமங்களாவது கொடுங்கள்”
என்று பாண்டவர்களுக்காக நீதி கேட்கிறார். எவ்வளவு கேட்டும் கௌரவர்கள் தரத்தயாராயில்லை.
”அட பரவாயில்லை. ஐந்து வீடுகளாவது கொடுங்கள்” என்று முடிவாய்க் கேட்டும் ”ஊசி முனையளவு
கூட நிலம் தரமாட்டோம் “ என்று மறுதலிக்கிறார்கள் கௌரவர்கள்.
கோபம் கொண்ட கிருஷ்ணர் யுத்தம்தான் ஒரே தீர்வு என்று சொல்லி
அரசவையை விட்டு அகல்கிறார். அவர் சென்றதும் விதுரர் யுத்தத்தைத் தவிர்க்க வேண்டுகிறார்.
பாண்டவர்களுக்காக கௌரவர் அவையில் பரிந்து பேசுகிறார். விட்டுக்கொடுக்க வேண்டுகிறார்.
நம் அரண்மனையில் இருந்துகொண்டே பாண்டவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறாரே
என்று கோபம் கொண்ட துரியோதனன் விதுரரை வெகுவாக இகழ்ந்து பேசுகிறான். ” கிருஷ்ணரை உங்கள்
இல்லத்தில் தங்க வைத்தது தவறு. அவரும் நீங்களும் கூட்டுச் சேர்ந்து பாண்டவர் பக்கம்
சாய்கிறீர்கள். எங்கள் உப்பைத் தின்றுவிட்டு எதிராளிகளுடன் சேர்கிறீர்கள் “
முடிவாக அவன் சொன்னதுதான் விதுரரை வெகுண்டெழச் செய்கிறது. “
பணிப்பெண்ணுக்குப் பிறந்த நீங்கள் அரசநீதி பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.”
இதைக்கேட்ட விதுரருக்கு மெய் விதிர்க்கிறது. மேனி துடிக்கிறது.
கோபத்தில் நா தளும்புகிறது. அவமானத்தால் குன்றிப்போன அவர் மனம் நொந்து போகிறார். சபையோர்
செய்வதறியாது திகைக்கிறார்கள்.
ஆவேசத்தோடு தன் கையில் இருந்த கோவர்த்தன வில்லை எடுக்கிறார்.
அதில் தர்மச்சக்கரம் இருக்கிறது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்த வில்லை இரண்டாக உடைக்கிறார்
விதுரர். மடேர் என்று பெருஞ்சத்தத்துடன் உடைகிறது அந்த வில். அஸ்தினாபுர அரசவையில்
நீதியும் நியாமும் தர்மமும் உடைந்துவிட்டது என்று உணர்த்துகிறது. அதன் பின் சொல்கிறார். “ மரியாதையும் பாசமும் அன்பும்
இல்லாத உனக்காக நான் இனி எக்காலத்திலும் என்னுடைய
வில்லெடுத்துப் போரிட மாட்டேன் துரியோதனா. இது சத்தியம். அதனாலேயே எப்பேர்ப்பட்டவரையும்
கொல்லும் சக்திவாய்ந்த என் வில்லெடுத்து உடைத்தேன். “ என்று கூறிச்செல்கிறார்.
கௌரவர்கள் தங்கள் துர்நடத்தையாலும் துர்ப்போதனையாலும் துர்ப்பேச்சாலும்
விதுரர் என்ற நீதிமான் தங்களுக்காகக் குருக்ஷேத்திரப்போரில் போரிடும் பாக்கியத்தையும்
வெற்றியையும் இழந்தார்கள். ஆகையால் எப்போதும் பேசுமுன் நா காக்க வேண்டும் குழந்தைகளே.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 7. 9. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..
இந்த மாதிரிக் கதைகளை சிறார்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்கிறார்கள் சரி எது தவறு எது என்று சிந்திக்கவழியில்லைசுருங்கச் சொன்னால் சுயமாகசிந்திக்கும் சக்தியைக் குழந்தைகள் இழக்கிறார்கள் இதைத்தான்நான்ப்ரெயின் வாஷ் செய்யப்படுகிறர்கள் என்று சொல்கிறேன்
பதிலளிநீக்குஇருக்கலாம் பாலா சார்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!