எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 மார்ச், 2020

ஓடை – ஒரு பார்வை

ஓடை – ஒரு பார்வை

ஒரு நூற்றாண்டுக்கான சமுதாய மாற்றத்தின் தொகுப்பாக அமைந்துள்ளது ஓடை என்னும் இந்நூல். கன்னடத்தில் ஹள்ள பந்து ஹள்ளா என்ற பெயரில் ஸ்ரீனிவாச வைத்யா என்பவர் எழுதிய நூலைத் தமிழில் கே நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மிகச்சரளமான மொழிபெயர்ப்பு. இதில் இருக்கும் ஊர், ஆட்கள் பெயரைப் பொதுமைப்படுத்தினால் இது இந்தியா முழுமையும் இருக்கும் மக்கள், முடியரசு, ஆங்கில ஆட்சி,  கம்பெனி அரசாங்கம், புரட்சிகள், சாமியார் மடங்கள், ஆத்திகர்களின் இல்லங்கள், கூட்டுக் குடும்பமுறை, அதில் கலந்திருக்கும் பல்வேறுபட்ட மனிதர்கள் அவர்களின் நியாய தர்மங்கள், விதவைகள் வாழ்வு, விளிம்புநிலை மக்களைப் பற்றிய பார்வை ஆகியவற்றைச் சுட்டுவதாகவே அமையும்.

1852 இல் சிப்பாய்க் கலகத்தில் ஆரம்பிக்கும் கதை உப்புச் சத்யாகிரகத்தையும் வெள்ளையனே வெளியேறுவையும் தொட்டு 1947 இந்திய சுதந்திரத்தோடு முடிகிறது. காசியிலிருந்து நானாசாகிப்புக்காக உதவி கோரி நரகுந்தாவின் பாபாசாகேப்பிடம் செல்லும் இரு சகோதரர்கள் நவலகுந்தாவின் அப்பாசாகேப்பின் ஆட்களிடம் அகப்படுவதால் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களில் அண்ணனான பத்மநாப பந்தர் தப்பித்து ஒடும்போது அந்நியப்படைகளிடம் பிடிபட்டு இறக்கிறான்.

நரகுந்தாவிலேயே தங்கிவிடும் கமலநாத பந்தர் மன்னனின் அபிமான மருத்துவனாகி கமலய்யா/கமலாச்சாரியாக வெங்கணாச்சாரி மகள் சாவித்ரியை மணந்து சில குழந்தைகளுக்குத் தகப்பனானபின் இறக்கிறான். அவனுக்குப் பிறக்கும் வாசுதேவச்சாரியார், வெங்கண்ணா, அம்பக்கா, திப்பக்கா, யங்கூ ஆகியோருடன், அவனது பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரன்கள் என விரியும் குடும்பத்தின் கதை இது. போதன், அனுமன், பாண்டு, ரிந்தி, பத்தி, கேசவன், ராமு.

இதில் முதல்தலைமுறை மருமகளாக துளசம்மா, லக்ஷூம்பாயி, அடுத்த தலைமுறை மருமகள்களாக சரஸ்வதிபாயி, சம்பா, பரிமளா, சாந்தா, அடுத்த தலைமுறை மருமகள் சரயூ என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன். இதோடு அந்த வீட்டில் வாழ்ந்து வந்த அக்கவ்வா அவள் மகன் நாராயணன் (நியோகத்திற்குப் பிறந்தவன் என்று ஒதுக்கப்படுபவன்), சிறுவயதில் தஞ்சமடைந்த ருக்கம்மா, பால்ய விதவை சகோதரி அம்பக்கா, பதினோரு குழந்தை பெறும் திப்பக்கா என்று முழுவதும் பெண்களால் அவர்களின் துயரங்களால் சூழ்ந்திருக்கிறது கதை.

இதிலும் பால்ய விவாகம், பால்ய விதவைகள் படும் பாடு அதை அம்பக்கா எடுத்துரைக்கும் விதம், திப்பக்காவின் சங்கடம், துளசம்மாவின் கம்பீரம், ருக்கும்மாவின் அனுசரிப்பு, அம்பக்காவின் அதகளம் என்று நூலை எடுத்த இருமுறையும் படித்து முடித்துவிட்டுத்தான் வைத்தேன்.

வாசுதேவாச்சாரியார் படும்பாடுகளும் முடிவில் மருத்துவரான அவரே புற்றுநோய் தாக்கி இறப்பதும் வருத்தம். காலரா, ப்ளேக் போன்ற நோய்களின் கொடுமைகளும் , உப்புச் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், முதலாம் இரண்டாம் உலகப்போர் பற்றிய சித்திரங்கள், மருந்துகள், அதே சமயம் வைதீக ஜாதக பஞ்சாங்கக் குறிப்புகள் உலகநிலவரங்கள் கலவரங்கள் என அனைத்தையும் பதித்து அதிர வைத்திருக்கிறார்.

இந்நூலை கே நல்லதம்பி அவர்கள் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். தேவையான இடங்களில் கன்னட வார்த்தைகளே இடம்பெற்றாலும் அதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் முதல்முறை படிக்கும்போது இடறும் கன்னடப் பெயர்கள் ஊர்கள் அடுத்தமுறை படிக்கும்போது பரிச்சயமாகிவிட்டன.

நானும் நவலகுந்தாவின் வெய்யிலிலும் மழையிலும் குளிரிலும் திரிந்தது போல் இருந்தது. குத்தகை முறை, அரசின் இலச்சினை இல்லாமல் சொத்து விற்கப் படும் பாடு, திருமண, மற்றும் வீட்டு வைபவங்களின் நடைமுறை இதோடு ஏரி சாமியார் ( லிங்காயத் ) , ஸ்ரீமடத்து சாமியார் ( மாத்வ ) என பல்வேறு விளக்கங்களோடு சொல்லப்போனால் புள்ளி விவரங்களோடு அடுக்கி இருக்கிறார்.

அதிலும் ஸ்ரீமடத்து சாமியார் மூல ராமர் பூஜையை வாசுதேவாச்சாரியார் இல்லத்தில் நிகழ்த்தியபின் இதை எல்லாம் மக்களை ஒழுக்கத்தின் பால் நிலைநிறுத்தவும் , அப்படி அவர்களை நிர்வகிக்க வேண்டிய காரணத்தால் மடத்தையும் சீடர்களையும் உருவாக்கிப் பரிபாலிக்க வேண்டியிருப்பதையும் சொல்லுமிடம் சிறப்பு. அதனாலேயே ( மடத்தின் தினசரி செயல்பாடுகளை தடையறாமல் நிகழ்த்த வேண்டியே ) அவர்கள் இல்லறத்தார்களைச் சார்ந்திருப்பது குறித்தும் கூறியுள்ளமை வெகு துணிவான செயல்.

சோனக்காவின் மரணம் சொல்லப்பட்டவிதம் அதிர்ச்சி. அதேபோல் ப்ளேக் மரணங்கள், அக்கவ்வா, அம்பக்கா, வெங்கண்ணா, ராமுவின் மரணம் ஆகியனவும் வருத்தமெழவைத்தன. அதன்பின் வரும் தலைமுறையினராவது அச்சமற்று விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுக்கிறார்கள்

வரதாச்சாரியார் தன் ஊர் திரும்பியதும் பழைய மூச்சுக் கிடைத்ததுபோல் ஆசுவாசப் பெருமூச்சு விடுவது, கேசவன், பாண்டு போன்ற இன்றைய தலைமுறையினர் கூட்டுக்குடும்ப முறையிலிருந்து சிறிது விலகி தங்கள் குடும்பங்களை போஷிப்பது, துளசக்காவின் நகைகளை மீட்க கேசவனிடம் பணம் கேட்க எண்ணி வாசுதேவாச்சாரியார் தவிர்ப்பது என்று கதை நெடுக ஒரே உணர்ச்சிப் பிழம்புகள்தான்.

தமிழ் மொழிபெயர்ப்பிலேயே இவ்வளவு அருமையாக இருக்கிறதே. இதன் கன்னட மூலம் இன்னும் ஆவேசம் அளிப்பதாகத்தான் இருக்கும். மொழி தெரியாமலே பல கன்னடக் கதைகளைத் தமிழில் படித்து வருகிறேன். உபயம் இராஜேஸ்வரி அம்மாள் & நல்லதம்பி சகோ.

 மிக்க நன்றி இந்தக் கதைக்குள் கொண்டு சென்று தேசாயி, தேஷ்பாண்டேயிலிருந்து வெண்ணெய் ஏரி/ஓடை வரை கொண்டு சேர்த்தமைக்கு J மேலும் உப்புக் காய்ச்சுதல், ப்ளேக் கூடாரம், ரஜபில்லி மோட்டார், கரதண்டு, கன்னடப் பத்ரிக்கைகள், உணவு வகைகள் என இன்னும் பல வித்யாசத் தகவல்கள்

நதிமூலம், குப்தகாமினி, வெள்ளம் புரண்டது, திருப்பம், பாத்திரம், வேகம், கடலுக்கு நிகர், துணை என்று முடித்திருப்பது தலைப்புக்கு எழிலூட்டுகிறது.

எவ்வளவுதான் நான் இங்கே விவரித்தாலும் இந்நூலைப் படிப்பதென்பது வித்யாசமான அனுபவம். நிச்சயம் தவறவிட்டுவிடாதீர்கள். படித்து இன்புறுங்கள்.

நூல் :- ஓடை ( ஹள்ள பந்து ஹள்ளா)
ஆசிரியர்:- கன்னடத்தில்ஸ்ரீனிவாச வைத்யா
தமிழில் :- கே.நல்லதம்பி
பதிப்பகம்:- சாகித்ய அகாதமி வெளியீடு.
பக்கம்:- 320.
விலை:- ரூ. 260/-

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...