பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்றொரு பழமொழி உண்டு. இது மனிதர்களுக்குத்தான். ஆனால் ஒரு கபாலத்துக்குப் பசித்தது. அதனால் அது போட்டது அனைத்தையும் தின்று தீர்த்தது. சிவனுக்கு இட்ட உணவை எல்லாம் பகாசுரன் மாதிரி அதுவே அனைத்தையும் தின்றதால் சிவன் பசியால் துடித்தார். அதுவோ அனைத்தையும் தின்றும் பசியில் குதித்து அழிந்தது. அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அன்னை உமையவள் பரிவு கொண்ட மனத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கி வந்தாள். அதனால் காசி மாநகர மக்கள் பசிப்பிணி நீங்கி வாழ்ந்து வந்தனர். அன்னை உமையவளின் கணவர் சிவன் விளையாட்டாக அவளிடம் “உணவு என்பது மாயை” என்று கூற அன்னையோ ”உணவு இல்லாமல் உலகம் இல்லை. உங்களுக்கு உணவின் அருமை ஒருநாள் தெரியும் ” என்று கூறி கோபிக்கிறார்.
இது இப்படி இருக்கையில் சிவனுக்கு பிரம்மாவின் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. பிரம்மா விஷ்ணுவிடம் இருந்து தோன்றியவர். அவருக்குப் புத்திரர்கள் பதிமூன்று பேர். அவர்கள் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோர். ஒரு நாள் பிரம்மாவுக்குத் தான் என்ற அகந்தை ஏற்பட்டது. ஏனெனில் அவருக்கு ஐந்து தலைகள் வேறு இருந்ததால் அவர் தன்னை சிவனுக்குச் சமமாகக் கருதிப் பெருமைப்பட்டார்.
இதைக் கண்டதும் சிவனுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டது. அந்த ஐந்தாவது தலை வேறு கழுதை வடிவில் இருந்தது. அது தேவாசுரப் போரில் அரக்கர்களுக்கு உதவிக் கொண்டிருந்தது. அதனால் அதைத் தன் கைகளால் திருகிக் கிள்ளி எடுத்துவிட்டார் சிவன். ஐயகோ இதென்ன அந்தத் தலை சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டதே. கழுதை முகமாதலால் திருவோடு போல ஒட்டிக்கொண்டு கையை எவ்வளவு உதறினாலும் போகவில்லை.
தன் தலையைக் கிள்ளியதால் கர்வம் அடங்கினாலும் நான்முகனுக்கும் கோபம் வந்தது. “ உம்மை பிரம்மஹத்தி தோஷம் பீடிப்பதாக “ என்று சாபம் கொடுத்துவிட்டார். சிவனின் கையில் கபாலம். என்னதான் சுற்றி உதறினாலும் கையை விட்டுப் போகாமல் ஒட்டிக்கொண்டிருக்க சிவனுக்கோ உன்மத்தம் பிடித்தது. அவர் பிச்சாடனராக உருக்கொண்டார்.
அவரால் எதையுமே உண்ண முடியவில்லை. உணவு என்று கிடைப்பதை எல்லாம் கபாலம் ‘லபக், லபக் ‘ என விழுங்கிக் கொண்டிருந்தது. பிச்சை எடுத்தும் உண்ண முடியாமல் பசியால் தவித்த பிச்சாடனர் காசி மாநகருக்கு வந்தார். ஒரு இல்லத்தில் மக்கள் கூட்டம் நெறிபட்டது. அங்கே அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே சென்றால் உணவு கிடைக்கும். ஆனால் கபாலம் உண்ண விடுமா.?
“அம்மணி பிச்சை,அன்னபூரணி பிச்சை “ என்று அவர் கேட்க உள்ளேயிருந்த அன்னபூரணிக்கு சிலிர்க்கிறது. ’ஆ.. இதென்ன தன் கணவரின் குரல் போல் இருக்கிறதே.’ என்று நினைத்து வெளியே வந்து பார்த்தால் சாம்பல் பூசிய உடலோடு பிச்சாடன உருவத்தில் அவளது கணவர் சிவன்தான் நின்று கொண்டிருக்கிறார். அவர் கையிலோ திருவோடு. ஆனால் அதுவோ பிரம்மகபாலம் என்பதையும் பார்த்தாள் அவள். தன் கணவர் வாங்கும் பிச்சை அனைத்தையும் அதுதான் உண்கிறது என்பதையும் காண்கிறாள். என்ன செய்வது என்று திகைக்கிறாள்.
“சுவாமி, கொஞ்சம் பொறுங்கள், உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதோ கொண்டு வருவேன். அதுவரை இங்கே திண்ணையில் அமருங்கள் “ என்று கூறுகிறாள். சிவனும் அன்னபூரணியின் சொற்கேட்டுத் திண்ணையில் அமர்ந்தார். பிரம்ம கபாலமோ அவர் கையில் உணவுக்காக ஆவலோடு காத்திருக்கிறது.
உடனே உள்ளே ஓடித் தன் அண்ணன் பிந்து மாதவனிடமும் அண்ணியார் லெக்ஷ்மியிடமும் யோசனை கேட்கிறாள். அவர்கள் அட்சய பாத்திரம் தந்து ”அதில் சமைக்கும் உணவு பெருகும்” எனச் சொல்கிறார்கள். அந்த அட்சய பாத்திரத்தில் வீட்டில் இருக்கும் அனைத்து தானியங்களையும் போட்டுச் சமைக்கிறாள். வாசனை ஊரைக் கூட்டுகிறது. அனைத்தையும் ஒன்றாகப் போட்டுப் பிசைகிறாள். மூன்று பெரிய கவளங்களாக உருட்டுகிறாள்.
வெளியே ஓடிப்போய்ப் பார்த்தால் சிவனைக் காணோம். அவர் பசி மிகுதியால் சாம்பலைத் தின்று கொண்டிருக்கிறார். பதறிப்போன அன்னபூரணி “ ஐயோ சுவாமி என்ன இது” என்று அவரைத் திண்ணையில் அமரவைத்து உணவு உருண்டையைக் கையில் போடுகிறாள்.
முதற் கவளம் விழுந்ததும் அவசரமாக சிவன் உண்ணப் போக அந்த விஷமக்காரப் பிரம்ம கபாலமோ தானே லபக் என்று உண்டுவிடுகிறது. இதுவரை இல்லாத சுவையில் இருக்கும் அவ்வுணவை உண்டதும் அதற்கு மிகப்பிடித்து விடுகிறது.
அடுத்த கவளத்தையும் அன்னபூரணி சிவன் கையில் போட அந்தக் கபாலம் உருண்டு லபக்கென்று விழுங்கி விடுகிறது. அதைக்கண்டு சிவன் ஆயாசத்தோடும் பசியோடும் அமர்கிறார். அன்னபூரணிக்கும் பார்த்தால் பாவமாயிருக்கிறது.
மூன்றாம் முறை அன்னபூரணி ஒரு தந்திரம் செய்கிறாள். மூன்றாம் கவளத்தைக் கபாலத்தில் போடுவது போலக் காண்பித்துத் தரையில் போடுகிறாள். சாப்பாட்டின் ருசியில் மயங்கி இருந்த பிரம்ம கபாலம் திண்ணையில் அமர்ந்திருந்த சிவனின் கையில் இருந்து குதித்து அந்த உணவுப் பருக்கைகளை உருண்டு தின்னத் தொடங்குகிறது. தின்னவுடன் தான் உறைக்கிறது அதற்குத் தான் சிவன் கையிலிருந்து குதித்து விட்டோமே என்பது. உடனே அது சிவன் கையில் தாவப் பார்க்கிறது அங்கோ சிவன் லிங்கமாக உருமாறி இருக்கிறார்.
’எந்தக் கையில் உட்காருவது’ என்று அது அன்னபூரணியில் கையில் குதித்து அமரப் பார்க்க அன்னபூரணியோ தன் கையிலிருக்கும் கரண்டியால் “பட் பட் பட் “ என்று அந்தப் பிரம்ம கபாலத்தின் மண்டையில் போட அது சுக்குநூறாகிறது. சிவன் தன் மனைவியிடம் உணவு என்பது மனிதருக்கு உயிர்கொடுப்பது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
உணவு எவ்வளவு முக்கியம் என்பதை பிரம்மகபாலம் சிவனுக்கு உணர்த்தியது. நாமும் உணவின் பெருமை உணர்வோம் குழந்தைகளே.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 7 .2. 2020 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 7 .2. 2020 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
Good story to children.
பதிலளிநீக்குஅறியாததை அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குநன்றி மணவாளன் சார்
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!