எனது நூல்கள்.

வியாழன், 23 மே, 2019

தாய்வீடு – ஒரு பார்வை.


தாய்வீடு – ஒரு பார்வை.

தனித்திசை தேர்ந்து  பயணப்படும் கவிதைகள் ராஜசுந்தரராஜனுடையவை. இசையும் தாய்மையும் சேர்ந்தே பயணிக்கின்றன. பல்வேறு கவிதைகளில் இசையே பாடுபொருளாகவும் இயக்கமாகவும் இருக்கிறது.  வாழ்வுக்கான தேடலும் இழந்துவிட்ட உறவுகளுக்கான ஏக்கமும் தொற்றி இருக்கின்றன அநேகக் கவிதைகளில்.

அம்மா பற்றி

சாவிலும்கூட
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்.

என்ற இக்கவிதை மிகச் சிறப்பானது. காண்கின்ற அனைத்துப் பெண் உருவங்களிலும், மனைவியிலும், தான் தேடிச்சேரும் பெண்ணிலும் கூட அம்மாவைத் தேடி ஏங்கும் குழந்தைமனம் புலப்படுகிறது. தாய் வீடு என்ற கவிதையில் “ ஒளியா, உருவா, நிழல் செய்வதெது? “ என நம்மையும் தேடல் தொற்றுகிறது.


ஊழிக்கூத்தும் வெள்ளக்காடும் மீன்பாடும் அடிக்கடித் தென்படுகின்றன. சாம்பல்பூத்த அல்லது வெளிர்த்த நிறங்கள் நிறைய கவிதைகளில் உவமைகளும் உவமேயங்களும் ஆகின்றன.

//கொய்தபோது , பூவுக்கு
வாழ்வு;
கூந்தலேறி உதிர்ந்துவிட்டால்
சாவு போலும். //

//ஒரு கனி
ஒரு இலை
உதிர்ந்தன பழுத்து.
மண்ணோடு கலந்த வழியில்
ஒன்று மரம்
ஒன்று உரம்.//

என இவ்வளவு எளிமையாக தேடலையும் வாழ்வையும் சாவையும் கூறமுடியுமா.

பால் தரும் பசுக்கள் கறவை நின்றதும் கொல்லப்படும் பசித்துவம் பற்றிய கவிதை யோசிக்க வைத்தது. வயிற்றில் அடித்துக் கொள்ளவாவது உதவும் சிறகுகள் வளர்ப்பதும், வேறிடத்தில் கூடு கட்டும் தேனீக்களாய் புலம்பெயர்ந்தோரும் ,பிள்ளைகளுக்கு ஊன் ஊட்டும் தாயுமானவனும் நெகிழ்த்துகிறார்கள்.  

வானம் கொண்டு பல்வேறு விஷயங்கள் விவாதப் பொருளாகின்றன. ஏதிலி போல் காலம் தப்பி வாழும் கலைஞர்களும் நாடோடிக் குலவழக்கமும் மனமிளக வைத்தார்கள்.

நாய்ப்பிழைப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கரணம் போட்டுக் கட்டிய வீட்டில் இருந்து தின்னும் சிலந்தி பற்றிய கவிதை வித்யாசம். மனிதர்களின் உசும்புதலும் உசுப்புதலுமாகச் செல்கிறது கவிதைப் பொழுதுகள். பிராந்தியம் என்னும் கவிதையில் ஆண் பெண் என்ற இருபாலுக்குமான ஈர்ப்பு எந்தமுறை உறவிருந்தாலும் இருக்கும் என்பதான கருத்து வெளிப்பட்டது. மைந்தொரு பாகி இன்னொரு வித்யாசமான உறவைச் சொல்லியது.

மழையில் பூமி நனைவதை அம்மணக் குளியல், சிறகின் இறகு, கை விரித்து நிற்கும் சிலுவை, பறம்பும் இன்று வெறும் பாறை, வைரஒளிப்பூந்தாரகை, உதயத்தின் ஒளிக்கண், இமை அரவணைப்பு, வெளிறித் தெரியும் வானவெளி முகம், இலக்கண உடம்பு, இரவு முட்கரண்டி, வெளிச்சவாய் , குரற்பூம்பிஞ்சு, கண்ணீர் வைகை, முக்காடிட்ட நிலா, பகல் பழுத்து உதிர்ந்த வேளை, மனவுடம்பு, விதையிலைகள் உதிரா பயிர்நிலைப் பருவம், நிறங்கிளர் மிளிர்வுகள், ஆகிய சொல்லாடல்கள் சிறிது நேரம் ஸ்தம்பிக்க வைத்தன.

முகங்களைத் தேடும் யத்தனம், தழும்புகளோடு வாழும் யதார்த்தம், தாயின்மேலான முதல்காதல் முதல் கவிதை, அன்பிற்கான ஏக்கம், தண்ணியடிப்பது பற்றிய தன் அகபுற வெளிப்பாடுகள், வேதாகமங்கள், உபநிஷத்துகள், புராணங்களில் இருந்தும் மேற்கோள்களும் கவிதைகளும், மரங்கள் பூக்கும், பூத்தடங்கும் காலங்களும் ,  காதலும் காமமும் படுத்தும் பாடும், ஆத்திக நாத்திக சிந்தனைகளும் அற்புதம்.

இயற்கைப் பேரிடர்கள் பற்றியும் , வெய்யில் வெக்கை கொடுமை பற்றியும், மழை வெள்ளத்தின் சேதாரமும் கவிதையாகி இருக்கிறது. கூடுதலின் போதே பிரியும் உறவுகள், கூடி வாழும்போதே கூடமுடியாமல் இருக்கும் உறவுகள், நம்முடையதுதான் ஆனால் எந்நேரமும் எந்நாளும் அது நம்முடையதல்ல. இன்னொருவரின் இசைவில் அது நம்முடையதாகும் வாய்ப்பாகலாம், இல்லாமலும் போகலாம் என உறவுகளின் மனமொழியை எந்த விரக்தியுமில்லாமல் பகிரமுடிகிறது இவருக்கு.

முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு என்பதை நம்ப முடியாத அளவு சரளமாய் தொடர்ந்து வருகின்றன கவிதைகள். வருடங்கள் மெருகேற , வார்த்தை ப்ரயோகங்களில் சொற்சிக்கனமும் பொலிவும் கூடி வந்திருக்கிறது. மனிதர்களின் மெல்லிய வல்லிய உணர்வுகள், கிலேசங்கள், சிடுக்குகளை பொதுவில் எடுத்து வைக்கின்றன இவை. ஆன்மீகம், ஆழ்மனம், வேதாந்தம், விஞ்ஞானம் என பரந்துபட்ட பார்வையோடு இக்கவிதைகள் நம்மை வியாபிக்கின்றன. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் இவை விரிவடைந்து நம்மை வியப்பூட்டுகின்றன என்பதே உண்மை.

நூல் :- தாய்வீடு
ஆசிரியர் :- ராஜசுந்தரராஜன்
பதிப்பகம்:- டிஸ்கவரி புத்தக நிலையம்
விலை :- ரூ. 170/-

3 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு அறிமுகம். அழகிய பகிர்வு.

rajasundararajan சொன்னது…

நன்றிங்க, தேன்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.

நன்றி ராஜசுந்தரராஜன் சார் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...