எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 மே, 2019

வல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.

வெய்யிலைத் தாக்குப்பிடிக்க உணவில் கொஞ்சநாளைக்குக் கீரைகள் எடுத்துக் கொள்ளுங்களேன். பதினோரு வகையான கீரைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் கொடுத்துள்ளேன். மேலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன. 

1. அரைக்கீரை :- கடைந்தும் கூட்டாகவும் சாப்பிடலாம். செரிமானம், மூளைவளர்ச்சி, பத்தியம், குளிர்ச்சி, உடல்வலி அகற்றி உடல் வலுவுண்டாக்கும். வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல் அகற்றும். குருதித் தூய்மை உண்டாக்கும். 

#அரைக்கீரை மசியல்.



2. தூதுவளை:- ஈளை, இருமலைப் போக்கும்.



#தூதுவளை ரசம். 




3. கொத்துமல்லி :- உடல் உறுப்புகளுக்கு உரம், அழுகலகற்றுவது, பித்தம் தணிப்பது.

தாது நட்டம் :- கொத்துமல்லிச்சாறு 30 மிலி, வாழைமட்டைச் சாறு, அன்னாசி அல்லது மாதுளம்பழச்சாறு, வகைக்கு 20 மிலி சேர்த்து சீரகம் 2 கிராம் அரைத்துப் போட்டு அடிக்கடிக் குடிக்க இரத்த வாந்தி நிற்கும்.

பேறுகாலத் துன்பம் :- கொத்துமல்லி சோம்பு பனைவெல்லம் போட்டுக் காய்ச்சி குடிநீராகச் சாப்பிட பேறுகால வலி குறைந்து பேறு எளிதாகும்.

பித்த மயக்கம்:- கொத்துமல்லி, சுக்கு, கருப்பட்டி போட்டுக் கசாயம் வைத்து 200 மிலி காலை மாலை அருந்தி வர பித்த மயக்கம், தலை சுற்றல், இரத்த அழுத்தம் குணமாகும்.

பேதி :- கொத்துமல்லிய நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட அல்லது சூடான சாதத்துடன் சாப்பிட பேதி நிற்கும். இப்பொடியைக் குடிநீராகக் காய்ச்சிக் குடிக்க குடிவெறி அடங்கும்.

இதயபலவீனம் :- கொத்துமல்லி 10 கிராம், சோம்பு, 5 கிராம், சேர்த்துக் குடிநீராக சாப்பிட வயிற்றுப் பொருமல், ஏப்பம், நெஞ்செரிச்சல், குணமடையும். தொடர்ந்து சாப்பிட இதயம் வலிமை பெறும். படபடப்பு இருக்காது.

துவையல் :- கொத்துமல்லி, உளுந்தம்பருப்பு, மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், புளி சேர்த்து வதக்கி துவையல் செய்து சாப்பிட பித்தமந்தம் குணமாகும். பசி தூண்டும். வயிற்றுப் பொருமல் தீரும்.

#கொத்துமல்லி துவையல், தோசை. 



4. புதினா. பசியின்மை. இலைச்சாறும் எலுமிச்சைச் சாறும் சம அளவில் கலந்து 10 மிலி அளவு நாளும் இருவேளை சாப்பிட பசி எடுக்கும்.

தலைவலி :- புதினா இலைச்சாற்றில் கற்பூரம் கரைத்து நெற்றியில் பூச தலைவலி குணமாகும்.

மூட்டு வலி :- புதினா இலைச்சாற்றைச் சூடத்துடன் மேல் பூச்சாக மூட்டுவலிக்குப் போடலாம்.

வயிற்றுப் புண் :- உள்ளவர்கள் புதினா சேர்க்கக் கூடாது.

#புதினா துவையல்.


5.  புளிச்ச கீரை :- குடல்புண், வயிற்றுப் புண் ஆற்றும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தபித்தம் போக்கும். இரும்பு சுண்ணாம்புச் சத்து.

வெங்காயம் வெந்தயம் போட்டுக் கடைசல் செய்து 3 நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் ஆறும். குடல் பலம் பெறும். வாரம் 3 முறை சாப்பிடலாம்.

# புளிச்சகீரை ( கோங்குரா ) துவையல்


 6. பொன்னாங்கண்ணி :- பொன் + ஆம் + காண் + நீ. தங்கச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்பு, உடையது. கண்ணுக்கு ஒளி. சொறி சிரங்கு, மூலம் குணமாகும். இதயக்குக்கும் மூளைக்கும் நல்லது.

மூலம் :- கீரையின் அளவில் கால் பங்கு பூண்டு சேர்த்து சாப்பிட ( நண்பகல் 20 – 40 நாள் ) மூலம் நலமடையும்.

கடைசல் :- துவரம்பருப்புடன் வாரம் ஒரு முறை சாப்பிடலாம். உடல் குளிர்ச்சி, ஈரல் கேடுறாது, கால் உடல் எரிச்சல் இருக்காது.

பொரியல் :- செய்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். ( வெங்காயம் சீரகம் மிளகு )

முடி வளர :- இலைச்சாறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். முடி வளரும். கண் ஒளி பெறும். கண்ணில் சொட்டு மருந்தாக விடலாம். 

#கொடிப்பொன்னாங்கண்ணி


#செடிப்பொன்னாங்கண்ணி.

7. கரிசலாங்கண்ணி :- கல்லீரல் , மண்ணீரல், நுரையீரல் சிறுநீரகம் ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது.  காமாலை  குணமாகிறது. வெள்ளைப்பூ ஊதுகாமாலைக்கு, மஞ்சள் பூ மஞ்சள் காமாலைக்கும் நல்ல மருந்து.

மஞ்சள் காமாலை :- மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்னி தும்பை இலை, கீழாநெல்லி சம அளவு அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 – 10 நாளில் முற்றிலும் குணமாகும்.

காமாலை சோகை :- இதன் மஞ்சள் பூவுடைய இலை 10, வேப்பிலை 6 , கீழா நெல்லி 2 இணுக்கு, துளசி 4 இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக்கஞ்சி சாப்பிடலாம். 10 – 12 நாளில் காமாலை, சோகை நீர் சுரவை, வீக்கம் கண் முகம் வெளுத்தல் குணமாகும். ஊளைச்சதை குறையும். சிறுநீர்த்தடை, எரிச்சல், கை கால் பாதம் வீக்கம் குணமாகும்.

குழந்தை இருமல் :- இதன் சாறு 10 சொட்டு + தேன் 10 துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் சளி இருமல் குணமாகும்.

காதுவலி :- இதன் சாறு காதில் விட காது வலி தீரும்.

பாம்புக்கடி :- 200 மிலி மோரில் இதன் சாறு 50 மிலி கலந்து கொடுக்கவும். தேள்கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில் கட்டவும்.

நாள்பட்ட காமாலை :- முதல்நாள் காலை 10 மிலி எனத் தொடங்கி 20, 30, 40 முதல் 100 என 10 நாட்கள் கூட்டி பின் அதே விகிதப்படி 90 – 10 வரை குறைத்து 20 நாட்கள் சாப்பிடவும். முற்றிய காமாலையும் குணமாகும். பத்தியம் வேண்டும். புளி காரம், ஆகாது, மோரில் சாப்பிடவும்.

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்து தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

#கரிசலாங்கண்ணி, கையாந்தரை, கரப்பான்.




8. முருங்கை :- இரும்பு மிகுதி. குருதி பெருக்கும். இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண் நோய், கபம், மந்தம் தீரும். இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டு வலி,இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரும் வயிற்றுவலி நீங்கும்.

குழந்தை ஊட்டம் பெற :- இதன் இலைச்சாறு 10 மிலி தினம் 2 வேளை பாலில் கொடுக்கவும்.

அசதி உடல்வலி :- முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

குடற்புண் காய்ச்சல் :- முருங்கைப் பட்டைத்தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காய்ச்சி 3 வேளையும் 30 மிலி அளவு கொடுக்க குடற்புண் காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும்.

#முருங்கைக்கீரை வாழைப்பூ துவட்டல்.


9. மணத் தக்காளி :- இதன் சாறு வயிற்றுப் புண் ஆற்றும். கீரை காய் வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மூலநோய் நீரிழிவு வராது.

காலை வெறும் வயிற்றில் 100 – 200 மிலி 20 – 40 நாள் குடித்து வர எத்தகைய வயிற்றுப் புண்ணும் குணமாகும். ஊளைச்சதையைக் குறைக்கும். சிறுநீரக் கோளாறு குணமாகும். சிறுநீர்த்தாரை எரிச்சல் குணமாகும்.

பழம் ஆகாது. ( வயிற்றுப் புண், தோல் நோய் உண்டாக்கும். ).

#மணத்தக்காளிக் கீரை மண்டி.


10. வல்லாரை :- சரஸ்வதி :- சிறுநீர் எரிச்சல் வல்லாரை கீழாநெல்லி சம அளவில் அரைத்து சுண்டைக்காய் அளவு குளிகையாக மாத்திரையாக செய்து 1 மாத்திரை 50 கிராம் தயிரில் சாப்பிடவும். நினைவாற்றல் உண்டாக்கும்.

வல்லாரைத் தைலம் :- முடி வளர்ச்சி, கண் குளீர்ச்சி 1 லிட்டர் வல்லாரைச் சாறுக்கு 1 லிட்டர் நல்லெண்ணெய் அல்லது  1 லிட்டர் தேங்காயெண்ணெய் சேர்த்துக் காய்ச்சவும். சாறு சுண்டியதும் வடித்து வைக்கவும். வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து நீராடலாம். நாளும் தேய்க்கலாம்.

#வல்லாரை சூப்.



11. வெற்றிலை வேந்தன் :- அழுகல் அகற்றும். உமிழ்நீர் சுரக்கும். வெப்பம் தரும். பசி உண்டாக்கும். காமத்தைத் தூண்டும். வாய் நாற்றம் போக்கும்.

குழந்தைச் சளி :- அனலில் வாட்டிய வெற்றிலையில் 10 துளசி இலை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறாகக் கொடுக்க சளி குணமாகும்.

காதுவலி :- வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரு வலி குணமாகும்.

பீனிசம் :- விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச் சாறு மூக்கில் விட குணமாகும். 

#வெற்றிலை ரசம்.



இவற்றிலெல்லாம் நார்ச்சத்து இருக்கிறது. குரோமியம் உப்பு உள்ளது. பெருங்குடல் தொடர்பான நோய்கள் தீரும். புற்றுநோயைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். ஜீரணத்தை எளிதாக்கும். வாய்வுத்தொல்லை நீங்கும். தினமும் உங்கள் உணவில் ஒரு கீரையாவது இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். தைராய்டு, பிரஷர், சுகர் இருப்பவர்களும் இந்தக் கீரைகளை எந்த பயமுமில்லாமல் சாப்பிடலாம். கலோரிகள் குறைவு என்பதால் உடல் பருமன் ஏற்படாது. மேலும் உடல் எடையைக் குறைப்பதிலும் கீரைகள் முக்கிய பங்காற்றுகின்றன. உடலுக்குத் தேவையான விட்டமின்களும் மினரல்களும் கிடைக்கும்.

3 கருத்துகள்:

  1. ஹையோ எப்படி என் கண்ணுல படாம போச்சு..

    எல்லாமே யும்மி யும்மி ஐட்டம்ஸ்!! செமையா இருக்கு ஒவ்வொரு படமும் அதன் குறிப்புகளும்.
    சென்னைல இருந்த வரை கண்டிப்பா எல்லா கீரையும் உண்டு. இங்கு பங்களூரில் எல்லா வகைக் கீரையும் கிடைப்பதில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி மாதேவி

    நன்றி கீதா :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...