எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2018

மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப் பொருத்தம் பாருங்க.


மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க.

”நிறுத்துங்க .. எல்லாத்தையும் நிறுத்துங்க. “ ஒரு திருமணக்கூடத்தில் ஒலித்த குரல் இது. சினிமாவில் வர்ற மாதிரி வில்லன்கள் யாரும் வந்து அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. கரெக்டா தாலி கட்டும் சமயம் மணமேடையில் மணமகன் முன் சர்வாலங்கார பூஷிதையாக நின்றுகொண்டு இருந்த கல்யாணப் பெண்ணின் குரல்தான் அது.
அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார்கள் கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினர்கள். ”பையனைப் பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லி நிறுத்தி இருக்கலாமே. மணவறைக்கு வந்துட்டு இதென்ன அக்கிரமம் ?” என்று கொந்தளித்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்.  
அந்தப் பெண் மணமேடையை விட்டு இறங்கி வந்து “ எங்க அப்பா அம்மா கிட்ட இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்பதை சொல்லிட்டேன். ஆனால் அவங்க கட்டாயப்படுத்தியதால் ஒன்றும் செய்ய முடியாமல் இங்கே வந்து சொல்ல வேண்டியதாப் போச்சு “ என்றார்.
இரண்டு மாதங்களாக மணமகன் மணமகள் இருவருமே போனில் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். அப்போதும் ஒருவருக்கொருவர் பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிக்கொள்ளவில்லையா என்று கேட்டால் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்கிறார் மணப்பெண்.

”அப்பா சொன்னாங்கன்னு கட்டிக்கிட்டேன்” என்று ஒரு பெண் திருமணம் செய்தார். ஆனால் கணவருடன் ஒரு நாள் கூட உருப்படியாக வாழ்ந்தார் இல்லை. எல்லாவற்றுக்கும் தாய் தந்தையிடம் வாட்ஸப்பில் மெசேஜ் செய்து கேட்டுத்தான் நடப்பார். கணவர் ஒன்று கேட்டால் இவர் ஒன்று செய்வார். இதை எல்லாம் மீறி நடத்தப்படும் விருப்பமில்லாத் திருமணங்கள் கூடா நட்பாலும் கூடா உறவாலும் பிரிகின்றன. இது போல் நடத்தப்படும் திருமணங்கள் அநேகம் விவாகரத்திலும் முடிகின்றன. ஒரு மணி நேரத்தில் 5 டைவர்ஸ் கேஸ்கள் பதிவாகின்றன என்கிறார்கள்.
கட்டுப்பாடு மிக்க சமூகம் என்று சொல்லப்படும் செட்டிநாட்டில் கூட கிட்டத்தட்ட 60 சதவிகித திருமணங்கள் இன்று விவாகரத்தில் முடிவது அதிர்ச்சியூட்டும் செய்தி. மணமகன் வீட்டில் இப்போதெல்லாம் ’சீர் செனத்தி எல்லாம் ஒன்றுமே வேண்டாம். எங்களிடம் எல்லாம் இருக்கிறது. பெண்ணைக் கொடுத்தால் போதும். எங்களுடனும் எங்கள் பையனுடனும் ஒத்துமையாக இருக்கும் நல்ல பெண்கிடைத்தால் போதும்’ என்ற பேச்சுத்தான் நிலவுகிறது.
இன்னொரு திருமணத்தில் திருமணக்கூடத்திலிருந்து பெண் முதல்நாள் காணாமல் போய்விட்டார். இன்னுமொரு இடத்தில் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண் அழைத்துச் செல்லும்போது போகும் வழியில் பெண் போகமாட்டேன் என்று முரண்டு பிடித்ததால் வரிசை கட்டிச் சென்ற கார்கள் பாதி வழியிலேயே திரும்பி விட்டன. கோடிக்கணக்கான சொத்திருந்தும் தன் சொந்த மகளின் நடவடிக்கையால் சூன்யம் வைத்தது போன்ற நிலையில் பிரமை பிடித்தாற்போலிருக்கின்றனர் அவர்களது பெற்றோர்.
நான்கு நாட்கள் முன்பு போலீஸ் நிலையத்தில் பதினோரு நாட்கள் வாழ்ந்த காதல் தம்பதியினர் உறவினர் பிரித்துவிடுவார்களோ என்று புகார் கொடுக்க வந்திருந்தனர். பையனும் பெண்ணும் ஒரு கடையில் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கின்றார்கள். காதல் வந்ததும் அவர்கள் ஜாதி வித்யாசம் உறுத்த எங்கே பிரித்துவிடுவார்களோ என்று திருமணம் செய்து கொண்டுவிட்டார்கள் அன்று அந்தப் பெண்ணின் அம்மா அழுத அழுகை. “ கருவாடு வித்து சம்பாதிக்கிறேன். என் மூஞ்சியில கரியைப் பூசிட்டாளே. எத்தனை எத்தனை மாப்பிள்ளையையோ கொண்டு வந்து நிறுத்தினேன். பைசா பெறாத இவனைக் கட்டிக்கிட்டு இவ சம்பாரித்து அவனைக் காப்பாத்துறாளே “ என்று கதறிக் கொண்டிருந்தார். கூட நின்றிருந்த உறவுக்காரப் பெண்மணி அவர்கள் ஒவ்வொருவரையும் ஏசிக்கொண்டிருந்தார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?. முன் காலத்தில் பெண்கள் அப்பா அம்மா தாத்தா பாட்டி சொன்னதைக் கேட்டுத் திருமணம் செய்துகொண்டது போல் திருமணம் செய்துகொள்ளத் தயாராயில்லை. திருமணம் என்பது இருமணம் ஒப்பியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தான் வாழும் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். இதற்கு அப்பா அம்மா மற்றும் உறவினர்கள் பெற்றதையும் வளர்த்ததையும் சொல்லி ஜாதி மதம் மற்றும் அந்தஸ்து வித்யாசக் கோடு கிழிப்பதையும் கட்டுப்பாடு விதிப்பதையும் எதிர்க்கிறார்கள். உலகமயமாக்கலில் வெளிநாட்டு உணவும் உடையும் புகுந்ததுபோல் கலாச்சாரமும் புகுந்து தங்கள் திருமணத்தைத் தாங்களே முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். முதலில் இன்றைய பெண் மக்கள் பற்றி அவர்களின் அவா பற்றித் தெரிந்து கொள்வோம்.  தாங்கள் திருமணம் செய்யப் போகும் ஆண் தங்களுக்குப் பிடித்த உடல் உருவம் மற்றும் முடி ஆகியன கொண்டிருக்க வேண்டும் எனவும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். தாய் தந்தை சகோதரன் சகோதரி ஆகியோருடன் வசிக்காமல் தனியாக வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிள்ளையே வேண்டும் என்றும் கார் மற்றும் சொந்த வீடு இருக்கவேண்டும் சொல்லும் பெண்களும் கூட உண்டு.
பெண்களுக்கு ஏற்படும் உடல் மனச் சிக்கல்கள், நெருக்கடிகள் என்னென்ன. எதிர்பார்ப்புகள் என்னென்ன. கணவனும் சமைக்க வேண்டும், பாத்திரம் துலக்குதல் போன்ற வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தன்னை சமைக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்கள். ஆணைப் போலவே பெண்ணும் கல்வியறிவு பெற்று வேலைக்குச் சென்று சம்பாதிப்பதாலும் மேலும் சில இடங்களில் பெண் ஆணை விட அதிகமாகவே சம்பாதிப்பதாலும் பெண்ணின் விருப்பம் இன்றியமையாததாகிறது. அவர்களுடன் ஒத்துப் போகும் அல்லது விட்டுக் கொடுத்துப் போகும் ஆண்தான் இவர்களை சமாளித்துக் குடும்பம் நடத்த முடியும்.
பெற்றோர் சாதி மதம் பார்க்காமல் தன் பிள்ளைகளுக்குப் பிடித்த நபரை அவரது வாழ்க்கைத் துணையாக்க ஒப்புக் கொள்ளுதல் முக்கியம். தன் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி அவர்கள் மன விருப்பத்தோடும் முழுமையான ஒப்புதலோடும் திருமண ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். திருமணத்தைப் புனிதம் பாரம்பரியம் போன்ற கோட்டுக்குள் அடக்காமல் அது தங்கள் பிள்ளையின் வாழ்க்கை என்பதை உணர்ந்து அவசியம் ஏற்பட்டால் தனது கொள்கைகளை விட்டுக் கொடுப்பது நல்லது.  ஜாதகம்ஜோசியம்ராசிக்கட்டம் என்றெல்லாம் பார்க்கும் பெற்றோர் மணமக்கள் உள்ளத்தில் என்னஇருக்கிறது என்று பார்க்கத் தவறுவதுதான் இன்றைய விவாகரத்துக்குக் காரணம்
செவ்வாய் பகை, ராகு கேது தடை என்றெல்லாம் பார்ப்பவர்கள் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பிடித்திருக்கிறதா என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்பதில்லை. மேலும் ஜாதிக்கட்டுமானம் விட்டுப் போய்விடக்கூடாது என்றோ, குடும்பத்தின் பாரம்பர்யச் சொத்துக் கைவிட்டுப் போகக்கூடாது என்றோ இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாகக் கூடத் தன் பெண்ணைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
திருமண வயது 21 என்று அரசாங்கம் அறிவித்தாலும் பள்ளியில் படிக்கும் பெண்ணைக் கூடத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். பூப்படைந்த உடன் திருமணம் செய்வதால் குழந்தை சுமக்கும் பக்குவத்தை அவர்கள் உடல் பெறுவதில்லை. 2017 இல் கூட கிட்டத்தட்ட 1, 600 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கு, அதுவும் தமிழ்நாட்டுலதான். 2016 இல் நடந்த 62, 500 தமிழ்நாட்டில் நடந்த குழந்தைத் திருமணங்களில்  சென்னையில்தான் மிக அதிகம் என்பது அதிர்ச்சித் தகவல்.  
உறவில் திருமணம், நட்பில் திருமணம், சொத்துக்காகத் திருமணம், ஜாதிக்கட்டுப்பாட்டைக் காக்கத் திருமணம் செய்வதை நிறுத்திவிட்டு பிள்ளைகளின் மனநலன் உடல் நலன் எதிர்கால வளமான சந்ததிக்காகவும் அவர்களின் இன்பமான இல்வாழ்வுக்காகவும் திருமணம் என்று முடிவெடுங்கள். மேலும் கலப்புத் திருமணங்கள் மூலம் மரபு சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
பெண்ணையும் மாப்பிள்ளையையும் திருமணத்துக்கு முன்பே பேச அனுமதிப்பதன் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். அநேக திருமணங்கள் இப்படி திருமணத்துக்கு முன் மனம் விட்டுப் பேசுவதால் முறிந்துவிடுகின்றன என்று பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் பெருவாரியாகச் செலவு செய்து திருமணம் முடிந்ததும் இருவருக்கும் ஒற்றுமையும் அனுசரிப்பும் இல்லாமல் விவாகரத்தில் முடிவதற்கு திருமணத்துக்கு முன்பே விலகுதல் நல்லது.
ஆணிடம் இருக்கக்கூடிய குடி, சிகரெட், போதை, கூடா பெண் நட்பு போன்ற பழக்கங்களும், பெண்களுக்கு இருக்கக்கூடிய ஆண் நட்பைக் கொச்சைப்படுத்துவதும் கூட இத்திருமணங்களைக் கேள்விக்குறியாக்குகின்றன. பொருளாதாரத் தற்சார்போ நிலையான வேலையோ இல்லாத ஆணும் பிரச்சனைக்குக் காரணமாகிறார். வேலைக்குச் செல்லும் இன்றைய பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளார்கள். தங்கள் நட்பு , தங்கள் பாலியல் விழைவு, விருப்பம் ஆகியவற்றில் தீர்மானமான கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் ஏற்படும் தான் என்ற ஈகோ பிரிவினைக்குக் காரணமாகிறது.
பண்டிகை நாட்களில் சிறுவயதில் கடைக்குக் கூட்டிச் சென்று எந்த உடை பிடிக்கும், எந்த உணவு பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துப் பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்டு வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தில் மட்டும் தாங்கள் எடுக்கும் முடிவே உத்தமமானது என்று பிடிவாதம் பிடிப்பது தவறு. சில பெற்றோர் பிள்ளைகள் தங்களுக்கான எந்தத் தேர்வையும் சிறுவயது முதலே செய்ய விடாமல் அடக்குமுறையுடன் வளர்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் ஆளுமைக் குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.
ஓரிரு பிள்ளைகள் மட்டுமே இருக்கும் குடும்பங்களில் பெற்றோரின் ஆதிக்கம் குழந்தைகளின் மேல் அதிகமாகச் செலுத்துதலும் பிரச்சனையைக் கொண்டு வரும். பிள்ளைகளும் சிறுவயது முதல் பெற்றோரை அண்டியே முடிவெடுப்பதால் மனரீதியாக அவர்களைப் பிரிவதில் சிக்கலும், உளவியல் ரீதியாக தன்னம்பிக்கை குறைதல் அல்லது அவர்கள் தூண்டுதலின் பேரில் அதீதமாக நடந்து கொள்ளுதலும் பிரச்சனையாகும்.
எதிலும் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாமல் வளர்ப்பதும் அதீத செல்லம் கொடுப்பதும் அதே போல் அதீதமாகக் கண்டிப்பதும் திருமணமானதும் இல்வாழ்க்கையில் கிடைக்கும் திடீர் சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கும். எனவே குழந்தைகளை வளர்க்கும் முறையில் மாற்றத்தைக் கைக்கொள்வது மட்டுமல்ல. சமூகத்தையும் சமுதாயத்தையும் எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் தைரியமுள்ள மக்களாக வளர்க்க வேண்டும். கல்வி, வேலை, திருமணம் போன்றவற்றில் அவர்களுக்கு ஏற்படும் தகுதியான விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.  
குழந்தைகள் உங்கள் வழியாக வந்தார்கள். ஆனாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகத்தை நினைவில் கொண்டு அவர்கள் தனித்துவம் வாய்ந்த இண்டிவிஜுவல்ஸ் ( தனிமனிதர்கள் ) என்று கருதி அவர்கள் விருப்பு வெறுப்புக்குச் செவிசாய்க்க வேண்டும். உங்கள் அன்பைக் கொடுங்கள். எண்ணங்களை அவர்களுடையதாக இருக்கட்டும். நீங்களும் முதலில் மகிழ்ச்சியும் நிறைவும் உடைய பெற்றோராய் வாழ்ந்து காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழுங்கள்.
நீடித்த மணவாழ்வுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுபவை இந்தியத் திருமணங்களே. அவை இன்று கேள்விக்குறியாகி வருவது வருத்தத்துக்குரியது. சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுத்தலும் மட்டுப்பட்டு வருகிறது. கூடி வாழும் இருவரின் விருப்பத்தேர்வாகவும் இரு மனம் ஒப்பிய திருமணம் இருப்பது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது . எனவே மணப் பொருத்தம் சேர்க்குமுன்னே பிள்ளைகளின் மனப் பொருத்தும் பார்த்துத் திருமணம் செய்தால் அது நிச்சயம் ஆயிரங்காலத்துப் பயிர்தான் என்பதில் சந்தேகமில்லை. 

6 கருத்துகள்:

  1. எந்த வழி போனாலும் நிற்காத திருமணங்கள்... ஒட்டாத மனங்கள்.. ஆனால் இப்போதெல்லாம் மணவாழ்க்கை அமைவதே கடினமாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் 22 வயதில் 20 வயதில் திருமணம் செய்துவைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது 32 வயது 42 வயதானாலும் திருமணமாகாதவர்களும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை
    அருமை
    வாழ்த்துகள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்துகள். சரியான கருத்த்குஅளும். மனப் பொருத்தம் மிக மிக அவசியம். இப்போது பெண்களும் வேலைக்குப் போகிறார்கல்..மட்டுமல்ல திருமணம் பெரும்பாலும் 28...30 வயதாகிவிடுகிறது 22 , 23 வயதில் இருக்கும் மனப்பக்குவ்ம் வேறு 28 வயது ஆகும் போது வேறு வித மனப்பக்குவம் எனவே திருமண வாழ்க்கையில் இப்போதெல்லாம் சிக்கல்கள் நிறைஅய்வே இருக்கின்றன. பொறுமையும் குறைந்து தான் வருகிறது. வயதாகியும் திருமணம் ஆகாத பெண்களும் இருக்கிறார்கள் ஆண்களும் இருக்கிறார்கள். பெண்கள் 30 வயது வரை தனி வாழ்க்கை வாழ்ந்துவிடுவதால் மனம் அதற்கேற்ப மாறி ஒரு குடும்பத்தில் சேரும் போது ஒத்துப் போவதும் கடினமாகும் நிலையும் உருவாகி வருகிறது. இதில் பெற்றோரின் வளர்ப்பும் பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன்...

    நல்ல கட்டுரை தேனு..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நிதர்சனத்தை அழகாக சொல்லி, என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாக கூரியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. இவற்றுக்கு முடிவு காண்பது சிரமம் நீங்கள் குறிப்பிட்ட எல்லா மாதிரி கேஸ்களும் பார்த்திருக்கிறேன் இப்போதெல்லாம் திருமணமே ஒரு லாட்டரி யாக இருக்கிறதுமண வாழ்வில் விட்டுக் கொடுத்துப்போகும்குணம் அவசியம்

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் ஸ்ரீராம் :(

    ஆம் ஜெயக்குமார் சகோ

    சரியா சொன்னீங்க துளசி & கீத்ஸ்

    நன்றி பானுமதி :)

    உண்மைதான் பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!


    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...