காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒரு அங்கமாக என்னுடைய ஏழாவது நூலான ( சிறார்களுக்கானது ) ”விடுதலை வேந்தர்கள்” வெளியிடப்பட்டது. திரு பாகை கண்ணதாசன் அவர்கள் வெளியிட ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்களும் ரோட்டரி கவர்னர் திரு. முத்துக்குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தினரும், தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு சகாய அமலன் அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள். பொற்கிழிக் கவிஞர் திரு நாகப்பன் அவர்களும், சுசேந்திரன் என்னும் மாணவன் ஒருவனும் கவிதையில் வாழ்த்துரை நல்கினார்கள்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான திரு பாகை கண்ணதாசன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிறப்புரை நல்கினார்கள். திரு பாகை கண்ணதாசன் அவர்களின் பேச்சும் கவிஞர் திரு நாகப்பன் அவர்களின் கவிதையும் வெகு சிறப்பு. நினைவில் இருத்தியவற்றைப் பகிர்ந்துள்ளேன்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதலை வேந்தர்கள் நூலின் 25 பிரதிகளை பேர்ல் ரோட்டரி சங்கத்தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் வாங்கி அங்கேயே மாணவர்க்குப் பரிசளித்தார்கள். !
இவை அனைத்தும் கீழேயும் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மரியாதை. மாணவக் கண்மணிகள் பூத்தூவி வணங்குகிறார்கள்.
வரவேற்புரை கூறி இந்நிகழ்வை ஆசிரியை திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மிக அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடைபெற்றது. பேச்சாளர்களின் உரையைக் கவனித்து சரியான தருணத்தில் கைதட்டினார்கள். ஊன்றிக் கேட்டதுமல்லாமல் கேட்டவற்றுக்குத் தக்க பதில் சொல்லி அசரடித்தார்கள்.