எனது பதிமூன்று நூல்கள்

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மமதையை அடக்கிய மகேசன். தினமலர். சிறுவர்மலர் - 27.


மமதையை அடக்கிய மகேசன்.

னிதர்களுக்குத் தற்பெருமையும் தான் என்ற மமதையும் இருக்கக் கூடாது. மனிதர்களுக்கே இருக்கக்கூடாது என்றால் தெய்வீக அவதாரங்களுக்கு இருக்கலாமா. அதை மகேசன் எப்படி அடக்கினார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.

வாட்ட சாட்டமான வயிறு பெருத்த குண்டோதரர்கள் இருவர் பந்தியில் சம்மணமிட்டு அமர்ந்து ’கல்யாண சமையல் சாதம் காய்கறிகள் ப்ரமாதம்’ என்று பாடாமலே வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள். 


மலை மலையாகக் குவித்திருந்த சோற்றில் அண்டா அண்டாவாக சாம்பார், ரசம், மோர் என ஊற்றி உருட்டி விழுங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். காய்கறிகள், கூட்டு, பொரியல், மசியல், வறுவல், பச்சடி என்று எதுவுமே மிச்சமில்லை.  தாம்பாளம் தாம்பாளமாக அடுக்கப்பட்டிருந்த அல்வா, ஜிலேபி, லட்டு , பூந்தி, போன்ற இனிப்புப் பட்சண வகைகள்,  விதம் விதமான பாயாசம் நிறைத்த பாத்திரங்கள் அனைத்தும் காலியாகி உருண்டன.

கண்கள் விரிய அவர்கள் உண்பதை மலைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் மலையத்துவஜன் மகள் மீனாட்சி. தெரியாமல் அவள் கூறிய ஒரு தற்பெருமையான வார்த்தை அவளை அக்குண்டோதரர்கள் மூலம் இம்சித்துக் கொண்டிருந்தது.

“ஐயோ பசிக்கிறது. என் பசி இன்னும் அடங்கவில்லை.  இன்னும் உணவுகளைக் கொண்டுவாருங்கள் கொண்டுவாருங்கள்.” என்று இருவரும் போட்டி போட்டுக் கத்திக் கூச்சல் எழுப்பிக் கலவரப் படுத்திக் கொண்டிருந்தார்கள். சமையற்காரர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரம் பேர் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் இருவருக்கே போதவில்லையா.. என்ன இது அதிசயம் என்று ஊரே மிரண்டது.

என்னதான் தெய்வீகப் பெண்ணாக இருந்தாலும் மீனாட்சியால் அவர்களுக்கு போதுமான உணவு வழங்க இயலவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலை குனிந்தாள். மன்னித்துவிடும்படி மீனாட்சி மன்றாடலுடன் மகேசனைப் பார்த்தாள். ஆமாம் இந்த மீனாட்சியும் மகேசனும் யார். ? அவர்கள் இக்குண்டோதரர்களின் பசி போக்க எவ்விதம் தீர்வு கண்டார்கள். வாருங்கள் மதுரையம்பதிக்குள் நுழைவோம்.  

துரையை குலசேகரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவரது மகன் மலையத்துவஜன். அவரின் மனைவி காஞ்சனமாலா. இருவருக்கும் திருமணமாகிப் பல்லாண்டு காலமாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. ஈசனிடம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். அதனால் அவர்களுக்கு அம்மனின் அம்சமாக தடாதகைப்  பிராட்டி என்னும் மீனாட்சியம்மை தோன்றினாள்.

உரிய பருவம் வந்ததும் பெண்ணரசியான அவள் மதுரையம்பதிக்கு அரசியாக முடி சூட்டப்பட்டாள். திக்விஜயம் மேற்கொண்டு கயிலை வரை சென்று வெற்றிக் கொடி நாட்டினாள். அங்கே ஈசனைக் கண்டாள். கண்டதும் பெண்மைக்கே உரிய நாணம் ஏற்பட்டது. அவளது மீன் போன்ற கண்ணழகில் சொக்கிய சொக்கநாதர் அவளை சுந்தரேசனாக வந்து மணமுடிக்க வாக்குக் கொடுத்தார்.

தேவர்களும் மூவர்களும் ( பிரம்மா விஷ்ணு சிவன் ) மதுரையம்பதிக்கு எழுந்தருளினர். மிகப் பிரம்மாண்டமான கோலாகலமான திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மகேசன் மீனாட்சியின் கைப்பிடித்தார். திருக்கல்யாணம் முடிந்ததும் விருந்து சமயம் ஆரம்பித்தது.

இறைவியே தங்கள் மகவாகப் பிறந்ததால் மகிழ்ந்துபோயிருந்த மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் ஈசனே தங்கள் மாப்பிள்ளையாக வந்ததால் இன்னும் அதிகப் பெருமையால் மகிழ்ந்து போயிருந்தனர்.

ஈசனின் சார்பாக திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் அங்கே மலை மலையாக உணவு வகைகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வளவு உணவும் வீணாகிவிடுமோ என்ற கவலையோடு தாங்கள் தயாரித்திருந்த விருந்தின் பெருமையைக் கூற மீனாட்சி ஈசனிடம் இவ்வாறு கூறினாள்.

” இங்கோ மலை மலையாக,  ருசி ருசியாக, விதம் விதமாகக் கல்யாண விருந்து தயாரித்திருக்கிறோம். உண்பதற்கு உங்கள் பக்கம் ஆட்களே இல்லையே. உணவெல்லாம் வீணாகிவிடும்போலிருக்கிறதே” என்று அங்கலாய்த்தாள். தற்பெருமை அதில் தன்னையறியாமல் வெளிப்பட்டது. 


மகேசன் புன்னகைத்துக்  கொண்டார். விருந்தினர்களில் இரு குண்டோதரர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு முதலில் விருந்து பரிமாறுமாறும் அதன் பின் மற்றைய விருந்தினர் உணவருந்துவார்கள் என்றும் கூறினார்.

அவர்கள் உணவு உண்டதைப் பார்த்துத்தான் மீனாட்சி மிரண்டு போய்விட்டாள். கைகளைப் பிசைந்தாள். மகேசன் மன்னிக்க எண்ணம் கொண்டார்.

“ஐயோ பசி தாகம் , பசி தாகம் இன்னும் உணவும் பானமும் நீரும் தாருங்கள் “ என்று கத்திக் கொண்டிருந்த குண்டோதரர்களை அழைத்தார். மதுரையில் ஓரிடத்தில் அவர்கள் கையை வைக்கும்படி ”வைகை” என்று  கூறினார். அவர்கள் கைவைத்ததும் வைகைநதி பெருகிவர அதைக்குடித்து பசியும் தாகமும் நீங்கினர்.  

மமதை அடங்கியதும் வணங்கிய மீனாட்சியை அரவணைத்து அவளே மதுரையை அரசாளும்படி அருள்பாலித்து உறுதுணை கொடுத்தார் மகேசன்.  

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 13. 7. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி :- கும்பகர்ணன் கதையை அரும்புகள் கடிதத்தில் பாராட்டிய நாகை வாசகர் எஸ். மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள். 

4 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

எதையும் விட்டு வைக்கும் எண்ணம் இல்லை போல் இருக்கிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வழக்கம் போல நல்ல பாடமாக அமைந்தது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி பாலா சார் !

நன்றி ஜம்பு சார்

நன்றி ஜெயக்குமார் சகோ :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...