எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஜூலை, 2018

பாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.

பாசம் பெரிதெனப் போராடிய மேருமலை.


தொம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ஒலி காற்றில் அதிர்கிறது. அவன் விடும் குறட்டையிலும் மூச்சுக் காற்றிலும் அவனது கரிய மீசைகள் அசைகின்றன கருத்த உதடுகள் விரிய வாய்பிளந்து உறங்குகிறான். கடுமையான உறக்கம். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல. ஆறு மாதங்களாகப் போகின்றன அவன் தூங்க ஆரம்பித்து.

எந்த அசைவுமில்லாமல் நித்திரை கொண்டிருக்கிறான் அவன். அவனை எழுப்ப யானைகள் சூழ்ந்து நிற்கின்றன. பாகன்கள் அங்குசத்தால் குத்தி யானைகளை இயக்குகிறார்கள். அவை  படுத்திருப்பவனைத் தம் தும்பிக்கை கொண்டு புரட்டுகின்றன. வீரர்கள் கதம், தண்டம், சூலம் கொண்டு அவனை பல்வேறு திசைகளில் இருந்தும் குத்தி எழுப்புகிறார்கள். கழுதைகளைக் கத்தவிட்டுச் சத்தம் எழுப்புகிறார்கள். டம் டம் என்ற சத்தம் கேட்கிறது அவன் படுத்திருக்கும் மாளிகையின் விதான மாடமெங்கும்.


விறலியர் பூபாளம் பாடி இன்னிசைக்கிறார்கள் இவர்கள் ஏன் அவனை எழுப்புகிறார்கள். ஏனெனில் இலங்காதிபதி இராவணனின் கட்டளை ஆயிற்றே..  எழுப்ப எழுப்ப அசையாமல் உறங்கும் அவன் யார்.? அவன்தான் இராவணனின் தம்பிகளில் ஒருவனான கும்பகர்ணன். நீண்டகாலம் தவம் செய்து பிரம்மனிடம் வரம் கேட்கும் போது நித்யத்துவம் வேண்டும் என்பதற்குப் பதிலாக நித்ரத்துவம் வேண்டும் என்று வாய்தவறிக் கேட்டுவிட்டான். அதற்காக இப்படியா..வருடம் முழுதும் தொடர்ந்து தூங்கினால் என்னாவது என்று அவன் அவரை வேண்ட அவர் ஆறுமாதத் தூக்கத்தைக் கொடுக்கிறார். அடுத்த ஆறுமாதம் உண்பதிலேயே போய்விடும். 
  
இப்படிப் பேய்த்தூக்கம் தூங்கி விழித்ததும் அவனுக்கு மிகக் கடுமையாக யானைப் பசி பசிக்கும்.. அதை எண்ணிப் பயந்தபடி ஒவ்வொருவரும் அவனைத் தொட்டும் தொடாமலும் இம்சித்து எழுப்ப முயல்கிறார்கள் அவன் பக்கத்தில் குடம் குடமாக சோமபானமும் சுராபானமும் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. குலை குலையாய்ப் பழங்களும் மலைமலையாய் ஆடுமாடுகளும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு மாதம் உறங்கியவன் ஆறு மாதம் உண்பானாமே. அவனுக்காகத்தான் எல்லாம்.

ட ஒரு வழியாகப் புரண்டு படுக்கும் அவன் முகத்தில் சூரியனின் கிரணம் படிகிறது. கண்களைச் சுருக்கி விரித்துப் பார்க்கிறான். ஆறுமாதத் தூக்கம் முடியவில்லையே .இதென்ன கதம் தண்டம் சூலம் கொண்டு ஏன் எழுப்புகிறார்கள். என்ன அவசம் ? நாட்டில் ஏதும் அழிவா ,குழப்பமா. யுத்தமா, ? சட்டென்று புறங்கையால் அனைவரையும் வீசித் தள்ளிவிட்டு எழுந்தமர்கிறான் கும்பகர்ணன். ஓரம்போய் வீழ்கிறார்கள் அனைவரும்.

எழுந்து அமர்ந்து உண்ணவும் குடிக்கவும் வைத்தவைகளை உண்டு அருந்தி சிரமபரிகாரம் செய்துகொள்கிறான். எதற்காக எழுப்பினார்கள் என்று அதன் பின் அவர்களிடம் விசாரிக்கிறான் கும்பகர்ணன். இலங்காதிபதியான அவர்கள் அண்ணன் இராவணன் அழைத்ததாகச் சொல்கிறார்கள் அவனை எழுப்பிய வீரர்கள்.

லமலைகள் ஒன்றிணைந்த உடலமைப்பு கொண்டவன் கும்பகர்ணன். தன் உடல் அதிர எழுந்து நின்று வெகு வேகமாகத் தமையனைக் காணச் செல்கிறான். தமையனைக் கண்டதும் குன்று வீழ்ந்ததுபோல் வீழ்ந்து வணங்குகிறான். குன்றைக் குன்று தழுவுவது போல அண்ணன் தம்பி தழுவிக் கொண்டார்கள். அரக்கர்குலம் என்றாலும் கும்பகர்ணன் இரக்க இதயம் படைத்தவன். பாசம் பொங்குகிறது அவன் உள்ளத்தில்.

“தமையனாரே தாங்களே வீரபராக்கிரமம் மிக்கவர் . ஆனாலும் ஏதோ ஒரு அவசரத் தேவை காரணமாகத்தான் தாங்கள் என்னை எழுப்பி இருக்க வேண்டும். அண்ணனே ஆணையிடுங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் “ என்று சொல்லி மீண்டும் பணிகிறான்.

”தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது உண்மைதான். என்னைக் காக்கவும் எனக்காகவும் நீயிருக்க இனி எனக்கு வேறு யார் தயவும் வேண்டாம். அறிவுரையும் வேண்டாம் “

“ என்ன அண்ணா நிகழ்ந்தது. என்னிடம் சொல்லுங்கள்” என்றான் கும்பகர்ணன்.

பிறன்மனையான சீதையைக் கவர்ந்து அசோகவனத்தில் சிறை வைத்திருப்பதையும் சீதையை மீட்க ராம லெக்ஷ்மணர்கள் வானரசேனையுடன் படையெடுத்திருப்பதையும் சொல்கிறான் அண்ணன். அத்தருணத்தில் தான் செய்தது தவறு என்று இடித்துரைத்து விலகிச் சென்ற விபீஷணனை பற்றிப் பேசும்போது அவன் முகம் கோரமாகிறது.

அண்ணனின் முகம் கண்டும் நிகழ்ந்த விஷயங்களைக் கேள்விப்பட்டும் அற நெஞ்சம் உடைய கும்பகர்ணன் அண்ணனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறான்.

“அண்ணா சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அவர் இங்கிருப்பது தர்மமல்ல “

”என்ன சொன்னாய் தம்பி. எனக்கே அறிவுரை சொல்கிறாயா. ”

‘இல்லை அண்ணா. நான் உங்களைவிட மிகச் சிறியவன். அறிவுரை கூறும் தகுதி எனக்கில்லை என்றாலும் அறவுரை கூற நினைத்தேன். கற்புடை மகளிரை விடுவிக்காவிட்டால் இலங்கைக்குக் கனகேடு விளையும், உங்கள் வான்புகழ் அழியும் “

மனிதநேயப் பண்புகளை அவன் உரைத்தும் கைக்கொள்ளாத இராவணனைப் பார்த்து இது இலங்கையின் விதி என நோகிறான் கும்பகர்ணன். ஆயினும் இடர்ப்பட்டிருப்பது அவனின் அண்ணன் அல்லவா. பாச நெஞ்சம் துடிக்கிறது. செஞ்சோற்றுக்கடன் இழுக்கிறது. தர்மமா தமையனா என்ற கேள்வி மனதில் எழுகிறது. தராசுத்தட்டின் முள் போல மனம் தமையன் பக்கமே சாய்கிறது. இருந்தும் சொல்கிறான் தன் தமையனிடம்

“ அண்ணா இது நியாயமற்ற போர் . இருந்தாலும் உனக்காகப் பொருதச் செல்கிறேன். ஆயினும் நான் இறந்துபட்டால் நீ சீதையை அனுப்பிவிட்டு இலங்கையைக் காப்பாற்று ஏனெனில் என்னை வென்றுவிட்டால் அவர்கள் உன்னையும் வென்று விடுவார்கள்” பாசம் தோயும் மனத்தோடு அண்ணனை அணைத்துப் பிரியா விடை பெறுகிறான் தம்பி .

போர்க்களத்தில் முரசு அதிர்கிறது. எக்காளம் ஒலிக்கிறது. அன்று பொருத வருபவன் கருமையான எமன் போலிருக்கிறான். யாராலும் வீழ்த்த முடியவில்லை அவனை. தன் சூலப்படை கொண்டு மேலும் மேலும் முன்னேறி வருகிறான். அவன் இராவணின் தம்பி கும்பகர்ணன் என்றறிந்த ராமன் கூட அவனுடைய போர்க்கோல உருவைப் பார்த்துத் திகைக்கிறார்..

‘பூமியில் முளைத்த மேருமலை போலிருக்கிறானே’

போர்க்களத்தில் கும்பகர்ணனைப் பார்த்த விபீஷணன் ராமன் பக்கமே நியாயமிருப்பதால் வந்துவிடச் சொல்லிக் கேட்கிறான். ஆனால் அண்ணனை விட்டுப் பிரிய விரும்பாத கும்பகர்ணன் அதை மறுக்கிறான்.

கும்பகர்ணன் வாங்கிய இன்னொரு வரம் பதினான்கு ஆண்டுகள் அல்லும் பகலும் தூங்காமல் இருப்பவர்களால்தான் அவனைக் கொல்ல முடியும் என்பது. இராமர் வனவாசம் வந்ததில் இருந்து அல்லும் பகலும் அவரைக் காத்து வந்ததால் லெக்ஷ்மணன் பதினான்கு ஆண்டுகள் தூங்கவே இல்லை. எனவே அவன் எய்யும் அம்புகள் கும்பகர்ணனைக் குறிவைத்துத் தாக்கின. அறமில்லாவிட்டாலும் அண்ணனுக்காகப் போராடிய அந்த மேருமலை வீழ்ந்தது.   

உடலால் வீழ்ந்தாலும் சகோதர பாசத்தில் லெக்ஷ்மணனையும் மிஞ்சி மேருமலைபோல் உயர்ந்து நிற்கிறான் கும்பகர்ணன்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 29. 6. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. :- அரும்புகள் கடிதத்தில் சிரவணன் கதையை சிலாகித்த பந்தநல்லூர் வாசகர் திரு. வீர. செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. இப்பாசத்திற்கு நிகராக எதனைக் கூறுவது? அடடா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...