எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 ஜூலை, 2018

மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள்.


மாமல்லபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை இருக்கிறது. அங்கே பல்வேறு வகையான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் அன்று அங்கு செல்ல அனுமதி இல்லை. கிடைத்தவற்றை சுட்டிருக்கிறேன். அதோடு முன்பே எடுத்தவையும் வருகின்றன. 

சுவரில் செதுக்கப்பட்ட எல்லா சிற்பங்களின் மேலும் சித்திரக்குள்ளர்கள் காட்சி அளிப்பது அழகு. பல்லவப் பேரரசன் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்க மற்றவை எல்லாம் சுண்ணாம்பு/வண்ணம் அடிக்கப்பட்ட மாதிரி இருக்கின்றன. சிம்ம யாளிகளும் தூண் நாகங்களும் ( காரைக்குடித் தூண்கள் போல ) காட்சி அளிப்பது சிறப்பு. 

இனி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் குறிப்புகள் தொடர்கின்றன. 

மாமல்லபுரம்.

வைணவ ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பண்டைய நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தத்தில் மகாபலிபுரம் மல்லை, கடல்மல்லை, மாமல்லை என்று பலவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் என்னும் பெயர் முதலாம் நரசிம்மவர்மனின் பட்டப்பெயரைக் கொண்டு ஏற்பட்டதாகும். ஏனெனில் அவன் காலத்தில் மாமல்லபுரம் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டு முக்கிய துறைமுகமகப் பட்டணமாகவும் விளங்கியது.

கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த டாலமி என்னும் கிரேக்கப் புவியியல் வல்லுனரால் இவ்வூர் துறைமுகப்பட்டணமாக விளங்கியமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகள் 1990 – 1999 வரை நடத்திய அகழாய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கற்கோயில்கள் அனைத்தும் ( ஊர் நடுவேயுள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவிலைத் தவிர ) புகழ்பெற்ற பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட, காலத்தால் அழியாத, தலைசிறந்த படைப்புகளாகும்.

இவற்றுள் பெரும்பாலானவை மாமல்லன் என்னும் பட்டம் கொண்ட முதலாம் நரசிம்மவர்மனால் ( கி. பி. 630 – 668 )  உருவாக்கப்பட்டவை. அவன் வழி வந்த முதலாம் பரமேஸ்வரவர்மன் ( கி. பி. 662 – 700 ) மற்றும் இராஜசிம்மன் என்று புகழ்பெற்ற இரண்டாம் நரசிம்மவர்மன் ( கி. பி.700- 728 ) ஆகியோரால் எஞ்சிய குடைவரைக் கோயில்களும் கற்கோயில்களும் உருவாக்கப்பட்டன.

இப்படைப்புக்களில் மூன்றுவித கட்டிடபாணியை நாம் காணலாம். அவை பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள். மிகப்பெரும் தனிப்பாறையைச் செதுக்கி அமைக்கப்பட்ட ரதங்கள் என்னும் கற்றளிகள், மற்றும் மூன்றாவது வகையான செதுக்கிய கற்களைக்கொண்டு கட்டப்பட்ட கட்டுமானக் கோயில்கள் ஆகும்.

முதற்பாணியை வராக மண்டபம், திரிமூர்த்தி குடைவரைக் கோயில், மகிசாசுரமர்த்தினி மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம், இராமானுஜர் மண்டபம், போன்றவற்றில் காணலாம். இவற்றின் தூண்கள் கட்டுப்பாடான வேலையமைப்புடன் மிளிரும் தாரங்க போதிகை, பட்டை தீட்டிய நடுப்பகுதி, அமர்ந்த சிங்கத்துடன் கூடிய கீழ்ப்பகுதி ஆகியவை கொண்டவை.

தனிக்குன்றுகளில் இருந்து வடிவமைக்கப்பட்ட ரதங்கள் என்னும் ஒற்றைக்கல் கோயில் பாணி  தனிச்சிறப்புக் கொண்டது. பஞ்சபாண்டவ இரதங்கள் என்று மக்கள் வாயிலாகப் பெயர் பெற்று திரௌபதி உட்பட பாண்டவர்களின் பெயர்களைத் தாங்கி நான்கு வகையான விமான அமைப்புக்களைக் கொண்டு விளங்கும் ஐந்து இரதங்கள் ஒற்றைக்கல் பாணிக்கு உன்னத எடுத்துக்காட்டாகும்.

திரௌபதி இரதம், வளையன்குட்டை இரதம், பிடாரி இரதம் ஆகியன சதுரமான சிகர அமைப்புடன் கூடிய ”நாகா விமான வகையைச் சேர்ந்தவை. பீம கணேச இரதங்கள் சாலா என்னும் சிகரத்துடன் முறையே ஒன்றும் இரண்டுமான அடுக்குகளைக் கொண்டுள்ளன. சகாதேவ இரதம் ‘கஜபிருஷ்டர்’ என்னும் யானையின் முதுகு வடிவம். கொண்ட ’வேஸர்’ பாணியில் அமைந்துள்ளது.

இரு அடுக்குகளைக் கொண்ட விமானத்துடன் கூடிய அர்ஜுன இரதம் திராவிட பாணிக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் தர்மராஜ இரதம் மூன்று அடுக்குகளிலும் கருவறைகளைத் தாங்கி நிற்கும் தனிப்பெருமை கொண்டது.

இவையெல்லாம் பண்டைய கட்டிடக் கலை நூல்களான ‘மானஸாரா’ மற்றும் ‘மயமதம்’ போன்ற வாஸ்து நூல்களில் கையாளப்பட்டு வந்த கோயில் வடிவங்களுக்கு சான்றுகளாகவும் என்றும் நிலைத்து நிற்கும் மாதிரிகளாகவும் திகழ்கின்றன.

ஐந்து இரதங்கள் கலையழகைப் பறைசாற்ற செதுக்கப்பட்டவையே அன்றி வழிபாட்டுக்கு அல்ல என்பதை அதன் ஸ்தூபிகள் முழுமையாக செதுக்கப்பட்டிருப்பினும் வெட்டி எடுக்கப்பட்டு விமானத்தின் உச்சியில் பொருத்தப்படாததைக் கொண்டு அறியலாம்.

கருங்கற்களாலான கட்டுமானப் பணிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது முகுந்தநாயனார் கோயிலாகும். இதற்குப்பின் கட்டப்பட்டவை முறையே கலங்கரை விளக்கு, குன்றின் மேல்தட்டில் எழுப்பப்பட்ட உழக்கனேஸ்வரர், மற்றும் கடற்கரையில் கட்டப்பட்ட இராஜசிம்மேஸ்வரம், க்ஷத்ரிய சிம்மேஸ்வரம் ஆகியனவாகும்.

திராவிடக் கட்டிடப்பாணி கோயில்களின் முழுமையான நிலப்பட அமைப்புக்கு அரிய பழைய எடுத்துக்காட்டாக கருவறை, விமானம், சுற்றுப் ப்ரகாரகம், நுழைவாயில் மற்றும் சிறு கோபுரத்துடன் கடற்கரைக் கோயில் விளங்குகிறது.

மாமல்லபுரத்துப் பல்லவர் கோயில்களில் முதலாம் பரமேஸ்வரன் காலம்வரை கருவறையில் உருவச்சிற்பங்களோ, இலிங்கமோ இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை. இரண்டாம் நரசிம்மவர்மன் காலந்தொட்டு கருவறையில் சோமாஸ்கந்தர் உருவத்தை கல்லில் செதுக்கி சுதையினால் மெருகூட்டப்பட்டு வைக்கும் பாணி மிகப் பரவலாகப் பிந்திய பல்லவர் காலம் வரை வழக்கில் இருந்தது.

அண்மையில் அகழாய்வின் வாயிலாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுகோயிலின் கருவறையில் ‘விருஷபாந்திகசிவ’ சிவன் நந்தியில் சாய்ந்தவண்ணம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

மாமல்லபுரத்தில் எல்லாவிதமான பண்டைய கோயில் கட்டிடக்கலையின் நுணுக்கங்களையும், சிற்பக்கலையின் சிறப்பையும், ஒருங்கே காண்கிறோம். உலகிலேயே புடைப்புச் சிற்பங்களில் மஹாவிஸ்தாரமானதாகக் கருதப்படும் அர்ஜுன தவம் அல்லது பகீரதன் என்னும் சிற்பக்கருவூலமும், கிருஷ்ணா மண்டபத்தின் கோவர்த்தனதாரி சிற்பமும் அகழ்ந்தெடுத்த மஹா வராகமும் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தியதாகும். 

அவனது காலத்திய கல்வெட்டுத் தலைப்புக்களுடன் கூடிய உருவச்சிலை படைப்புகளை ஆதிவராகர் குடைவரைக்கோயிலில் காணலாம். இவை சிம்மவிஷ்ணுவையும் மகேந்திரவர்மனையும் குறிக்கும்.  

3 கருத்துகள்:

  1. துளசி: ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் குடும்பத்தோடு. நிறைய தகவல்க அறிய முடிகிறது உங்கள் பதிவிலிருந்து. படங்களும் அருமை...

    கீதா: நானும் 4, 5 தடவை சென்றிருக்கிறேன். அழகான இடம். ஒரு நாள் முழுவதும் வேண்டியிருக்கும் அவசரமில்லாமல் நிதானமாக அங்கு முழுவதும் சுற்றிப் பார்க்க...
    படங்கள் நன்றாக இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  2. அழகான சிற்பங்கள்..
    அழகிய படங்களாக - பதிவுக்கு சிறப்பூட்டுகின்றன...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ

    நன்றி கீத்ஸ். ஆமாம் ஒரு நாள் முழுக்க வேணும் சுத்திப்பார்க்க.

    நன்றி துரை செல்வராஜு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...