எனது புது நாவல்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

தங்கமாய் ஜொலிக்க. ( நமது மண்வாசத்துக்காக )


செம்பிலிருந்து தங்கமாகுங்கள்.

செம்பு சேர்த்துத் தங்கம் செய்யலாம்னு தெரியும் ஆனா என்ன செம்பிலிருந்து தங்கமான்னு ஆச்சர்யமாயிருக்கா. அது என்னன்னு சொல்றேன் கேளுங்க.

நம்ம தமிழ்நாட்டுல நாம உபயோகப்படுத்துற அளவுக்கு விதம்விதமான வகைவகையான உலோகப் பாத்திரங்களை வேறு யாரும் உபயோகித்திருப்பாங்களான்னு தெரியல.  பூஜைப்பாத்திரங்களாக சிலர் வீட்டுல தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள், கல்யாண சமையலுக்கு வெண்கல, பித்தளைச் சாமான்கள், பொது உபயோகத்துக்கு எவர் சில்வர், அலுமினியம், இயற்கை சமையலுக்கு மட்பாண்டம், அகப்பை, மரத்தட்டங்கள், மரவைகள்,  ஊறுகாய் வத்தல் வரளி வைக்க மோர்மான் ஜாடிகள்,  தயிர், மாவு போன்றவை வைக்க  மங்குச் சாமான்கள், சாப்பாட்டுப் பொருட்களைக் கொட்டி வைக்க கலியம்பெட்டிகள், பிஸ்கட் டின்கள், துத்தநாக டின்கள், அலுமினிய, சில்வர் சம்புடங்கள், பாத்திரங்களை ஊர்விட்டு ஊர் எடுத்துச் செல்ல அலுமினிய, இரும்புப் பெட்டிகள், நீர் ஊற்றிவைத்துக் குடிக்க செம்பு எனப்படும் தாமிரத் தவலைகள் இவை போக தற்காலத்தில் ப்ளாஸ்டிக், டஃபர்வேர், மெல்மோவேர் சாமான்கள் என எத்தனை எத்தனை சாமான்களை வீடெங்கும் வைத்திருக்கிறோம்.

இவை எல்லாவற்றின் உபயோகத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். இதில் பொது உபயோகத்தில் அதிகம் புழக்கமாகும் அலுமினியம் சிலர் ரத்தவகைக்கு ஏற்றதல்லன்னு ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க. மண்பானை சமையல் அனைவருக்கும் ஏற்றதே. அதில் எந்தக் குழப்பமும் இல்லை.

இந்த செம்பு என்றொரு வகை இருக்கே அது புராண இதிகாச காலத்தில் இருந்தே இருக்கு. சொல்லப்போனா கல் தோன்றி மண் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கு.. பழங்கால ரோமாபுரியில் வீனஸ் என்னும் பெண் கடவுள் செம்பு உலோகத்தோடு சம்பந்தப்பட்டதா சுட்டப்பட்டிருக்கு. எனவே பார்த்தீங்கன்னா பெண்ணுக்கும் செம்புக்கும் அது சேர்ந்த தங்கத்தோடு சேர்த்து ஆதிகாலத்தில் இருந்தே சம்பந்தம் இருக்கு.

கோயில்களில் உற்சவ மூர்த்திகள் செம்பாலும் ஐம்பொன்னாலும் வெண்கலத்தாலும் அமைக்கப்பட்டிருக்கும். பஞ்சலோகச் சிலைகள் என்று சொல்வார்கள். கோயில்களில் மட்டுமல்ல இல்லங்களிலும் பஞ்சபாத்திரம், தூபக்கால்,ஊதுபத்தி ஸ்டாண்டு போன்ற பூஜைப் பொருட்களையும் பெரும்பாலும் செம்பால்தான் செய்திருப்பார்கள்.

கும்பம் என்று பூஜைகளில் வைக்கப்படும் கலசங்கள் செம்பால் செய்யப்பட்ட செப்புத்தவலைகளே. கோயில் கோபுரங்களிலும் இடி தாக்காமல் இருக்க இந்த செம்புக் கலயங்களில் தினை சாமை வரகு போன்ற தான்யங்களால் நிரப்பி மூடி இருப்பார்கள். முக்கிய புள்ளி ஒருவரை கோயிலுக்கு அழைத்து வரும்போது மாவிலை தேங்காய் வைத்த நீர் நிரம்பிய செம்புக் குடத்தைக் கையில் அளித்துப்  பரிவட்டம் கட்டி பூரணகும்ப மரியாதை அளிப்பார்கள்.

சொப்புச்சாமான்கள் என்று குழந்தைகள் விளையாடும் பொருட்களைச் செம்பிலும் செய்து வைத்திருப்பார்கள். உடம்பில் செம்பு படவேண்டும் என்று தாயத்து, இடுப்பில் அணியும் அரசிலை போன்றவற்றையும் செம்பில் செய்வதுண்டு. குத்து விளக்கு, குடம், தண்ணீர் கிடாரம், அண்டா, பாத்திரம், சாமி டாலர், சாமி மோதிரம் ஆகியவை செம்பில் செய்யப்படும் பொருட்கள்.  இந்த டாலர், மோதிரம் போன்றவை உடம்பில் பட்டால் காப்பர் சத்துக் குறைபாடு நீங்கும்.

இந்தக் குறைபாடு பெரும்பாலும் பரம்பரையாகவோ உணவில் செம்புச்சத்துப் போதாமையாலோ வரக்கூடும். அதை ஈடு செய்ய இம்மாதிரி செம்பு டாலர், மோதிரம், தடை, ஐம்பொன் தண்டை என்று செம்புடன் தங்கம், வெள்ளி, இரும்பு, பித்தளை ஆகியன சேர்த்துச் செய்யப்படும் தண்டை , கை கங்கணம், காப்பு ஆகியன அணிவார்கள். இவை அணிவதால் உடலில் உள்ள உறுப்புகள் நன்கு ரத்த ஓட்டம் பெற்று சுறுசுறுப்பாகின்றன. சிவப்பு ரத்த அணுக்கள் பெருகுகின்றன. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. ரத்த சோகையை நீக்குகிறது.

கர்ப்பம் தரித்த தாய்மார்கள், கைக்குழந்தைகள், முதியவர்கள் மட்டுமல்ல. தற்காலத்தில் ஹார்மோன் கோளாறுகளுடன் அவதிப்படும் எல்லா வயதினருக்குமே செம்புச் சத்து என்பது அவசியமாகிறது. செம்புப் பாத்திரங்களில் நீர் வைத்துக் குடிப்பதனால் அது தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கிறது. செம்புச் சத்துக் குடலில் உறிஞ்சப்படுவதால் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குகிறது. 

அசைவ உணவுப் பிரியர்கள் கடல் உணவிலும், ஆட்டுக்கறியிலும், கோழி ஆடு போன்றவற்றின் கல்லீரலை சமைத்து உண்பதாலும் செம்புச் சத்தைப் பெறலாம். சைவ உணவுக்காரர்கள் முளையுடன் கூடிய முழு தானியங்கள், பயறுவகைகள், சாக்லேட், வேர்க்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு, பட்டாணி, எலுமிச்சை, கிஸ்மிஸ், காளான், சில கீரை வகைகள், தேங்காய், பப்பாளி, ஆப்பிள், தேயிலை, அரிசி போன்றவற்றில் செம்புச் சத்து மிகுந்துள்ளது. 

காசாணி அண்டா என்று சொல்லப்படக்கூடிய மிகப் பெரும் செம்புத் தண்ணீர்க் கிடாரத்தில் ராமநாதபுரம் பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீரை வேடுகட்டிப் பிடித்து சேமித்துவைத்து ஆறுமாதகாலம்வரை சமைக்கவும் குடிக்கவும் உபயோகிப்பார்கள். அவர்களுக்கு இந்தச் செம்புச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதேயில்லை. 

விளையாட்டுப் போட்டிகளில் பரிசாக அளிக்கப்படும் வெண்கலப்பதக்கங்கள் செம்பு கலந்து செய்யப்படுகின்றன. கல்யாணமாகப்போகும் பெண்களுக்கு அளிக்கப்படும் தங்க நகைகள் செம்பு சேர்த்தே செய்யப்படுகின்றன. மின்சாரத்தை எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கை காப்பர் ஒயர்கள் பெறுகின்றன. நாணயத் தயாரிப்பிலும் செம்பு முக்கியப் பங்கு வகிக்குது.

பழங்காலத்தில் ஆயுதங்கள் செம்பில் செய்யப்பட்டிருக்கின்றன. சைனீஸ் குறுங்கத்திகள், சுருள்கத்திகள், அம்பின் முனைகள், சுத்தியல்கள், அலங்காரக் கைப்பிடிக்கத்திகள், கைத்துப்பாக்கிகள், குழல் துப்பாக்கிகள், பிஸ்டல்கள், ரிவால்வர்கள், ஆங்கிலப் படங்களில் வில்லன்கள் ஐந்துவிரல்களிலும் மோதிரம்போல் அணியும் நக்கிள்ஸ் எனப்படும் ஆயுதம் மட்டுமல்ல ஏர் உழும் கலப்பைகள், கோடாலிகள், பேனா நிப்புகள் ஆகியனவும் செம்பில் செய்யப்பட்டு வருகின்றன.

புழங்காமல் நாள்பட வைத்திருந்தால் செம்புப்பாத்திரங்கள் காற்றுடன் வேதிவினை புரிந்து களிம்பு பிடிக்கும். இதைத் தினமும் களிம்பு பிடிக்காமல் சுத்தம் செய்து வைக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம். அப்படி சுத்தம் செய்து வைக்கப்பட்ட பாத்திரத்தில் தினமும் நீர் பருகி வந்தாலே உங்க உடம்புல இருக்க இரத்தமெல்லாம் சுத்தமாகி நீங்களே தங்கம்போல ஜொலிக்க ஆரம்பிச்சிருவீங்க என்பது வழிவழியாய் வந்த நம்பிக்கை.

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

என் மனைவி பெரும்பாலான பூஜைப் பொருட்களுக்கு தங்கமுலாம் பூசி தங்கப் பொருட்களாகவே பாவிக்கிறாள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

அட வித்யாசமான தகவல் பாலா சார். இதுபோல் சிலர் வைத்திருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...