சனி, 10 பிப்ரவரி, 2018

வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மன்.


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஜனவரி 3.


பாஞ்சாலங்குறிச்சி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது விடுதலைப் போரும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரும்தான். 1760இல் இருந்து 1799 வரை - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் கப்பம் கட்ட மறுத்து அந்நியருக்குத் தலைவணங்காத வீரத்தால் நம் மனங்களில் முத்திரை பதித்துச் சென்றவர் அவர். 1857இல் சிப்பாய்க்கலகம் ஏற்படுவதற்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னே ஆங்கில அரசை எதிர்த்த பாளையக்காரர்களுள் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 


வீரபாண்டிய கட்டபொம்மன் ஜெகவீர கட்டபொம்மனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் மகனாக ஜனவரி 4, 1760இல் பிறந்தார். இவருக்கு குமாரசாமி, துரைசிங்கம் ( ஊமைத்துரை ) என்று இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு ஆகிய சகோதரிகளும் உண்டு. நிறத்தை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கருத்தையா என்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை சிவத்தையா என்றும் அழைத்து மகிழ்ந்தனர் குடும்பத்தார்.

பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் சரிந்தபின் மதுரையை அப்போது ஆண்ட நாயக்க மன்னர்கள் 72 பாளையங்களாகப் பிரித்தனர். மதுரை அரசர்களுக்குப் பணி செய்தவர்களே பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டார்கள். தங்கள் எல்லையைப் பாதுகாத்தல், வரிவசூல் செய்தல், நீதிபரிபாலனம் செய்தல், நாயக்க மன்னர்களுக்காகத் பட்டாலியன் துருப்புக்களைப் பராமரித்து அவர்கள் தேவைக்கு அனுப்புதல் இவர்களின் பணி. 

அழகிய வீரபாண்டியபுரம் என்னும் ஒட்டப்பிடாரம் ஜெகவீரபாண்டியன் என்னும் மன்னனால் ஆளப்பட்டது. அவருக்கு வீரதீரத்தில் சிறந்த கெட்டி பொம்முலு என்ற அமைச்சர் இருந்தார். கெட்டிபொம்முலு என்ற தெலுங்குப் பேரைத் தமிழில் கட்டபொம்மன் என்று அழைத்தார்கள். 

மன்னர் ஜெகவீரபாண்டியருக்குப் பின் ஆட்சி செய்ய வாரிசு இல்லாததால் அரச பதவி கட்டபொம்மனுக்கு வந்தது. இவரே கட்டபொம்மன் பரம்பரையில் முதல் அரசர் என்பதால் ஆதி கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். அவர்களின் பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையாக ஆண்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.   


அழகிய பாண்டியபுரத்தை அடுத்திருந்த சாலிகுளம் கானகங்களுக்கு வேட்டையாடச் சென்ற பொம்முக்களில் ஒருவர் ஒரு முயல் ஏழு வேட்டை நாய்களைத் துரத்திச் செல்லும் அதிசயக் காட்சியைக் கண்டார். அவ்வீரம் விளைந்த மண்ணையே தமது தலைநகராகக் கொள்ள எண்ணி அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டிவைத்து அந்த ஊருக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டார். 

மதுரை ஆற்காடு நவாபின் வசம் போனதும் அவரது ஊதாரிச் செலவுகளால் திவாலாகும் நிலைக்கு வந்தது. அதைத்தடுக்க ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய அவர் வரி வசூலிக்கும் உரிமையைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்தார். 

1750களில் நாட்டையே குத்தகைக்கு எடுத்ததுபோல் மக்களின் செல்வவளத்தை வரித்தீர்வைகளால் சுரண்டியது ஆங்கில அரசு. பிப். 2, 1790இல் தமது முப்பதாவது வயதில் அரியணை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரிகொட மறுத்தார். 

பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியில் வரிவசூலிக்க நியமிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தளபதி மேக்ஸ்வெல்லால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூல் செய்யமுடியவில்லை. இதனால் 1797 இல் தளபதி ஆலன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். ஒரு வருடம் முயன்றும் கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார்.


மார்ச் 16 1799இல் புது கலெக்டர் ஜாக்சன் கட்டபொம்மனைச் சந்திக்க விரும்பினார். கடுமையான வறட்சியால் தனது பகுதி பாதிக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. எனவே அவரது பக்கத்துப் பாளையக்காரர்களான எட்டப்பன் குடும்பத்தாரிடம் கட்டபொம்மனோடு எல்லைத்தகறாரில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார் கலெக்டர்.  


பலமுறை சந்திப்பை ஒத்தி வைத்து இழுத்தடித்து இறுதியில் செப்டம்பர் 10, 1798இல் ஜாக்சன் கட்டபொம்மனை ராமநாதபுரம் சேதுபதியின் ராமலிங்க விலாசம் அரண்மனையில் சந்தித்தார். ஆனால் அந்தச் சந்திப்பில் வன்முறை தலையெடுக்க கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி க்ளார்க் கொல்லப்பட கட்டபொம்மனின் ஆலோசகர் தணபதி பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டார். 


அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். மீண்டும் செப்.5,1799இல் தளபதி பேனர்மேன் தலைமையில் கோட்டையின் நான்கு வாயில்களும் முற்றுகையிடப்பட்டன. கடுமையான போருக்குப் பின் கோட்டை விழுந்துவிடும் நிலையில் கட்டபொம்மன் தெற்கு வாயிலைத் தாக்கிக் கொண்டிருந்த லெஃப்டினெண்ட் கோலின்ஸைத் தாக்கிவிட்டுப் படையுடன் தப்பினார். 


செப். 9, 1799இல் கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கிருந்த சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்துக் கோட்டையைத் தரைமட்டமாக்கினார்கள். 

கட்டபொம்மன் தலைக்குப் பரிசு அறிவித்தது அரசு. திருமயம் கோட்டை, விராச்சிலை ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தார் கட்டபொம்மன். கோலார்பட்டி ராஜகோபால் நாயக்கரின் இல்லத்தில் இருந்தபோது படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார். அங்கிருந்து தப்பி புதுக்கோட்டையை அடுத்த திருக்காளம்பூர்க் காடுகளில் தஞ்சம்புகுந்தார். 

ஆங்கில அரசு ஆணைப்படி அக்டோபர் 1, 1799இல் புதுக்கோட்டை அரசர் கட்டபொம்மனைக் கைது செய்து கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் ஒப்படைத்தார். அக்டோபர் 16, 1799 இல் கயத்தாறில் ஒரு புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். 


கட்டபொம்மனின் வீரத்தைப் புகழ்ந்துபாடும் நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் வழக்கில் உள்ளன.  அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. பாஞ்சாலஞ்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. கட்டபொம்மன் நினைவாக சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அஞ்சல் தலையும் வெளியிட்டு கௌரவித்துள்ளது அரசு. வீரம் செறிந்த அவருக்கு நமது வீரவணக்கத்தையும் சமர்ப்பிப்போம்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2018 ஜனவரி கோகுலம் இதழில் வெளியானது. 

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...