எனது நூல்கள்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கடவுள் நாமம் காப்பாற்றும். தினமலர் சிறுவர்மலர் - 3.

கடவுள் நாமம் காப்பாற்றும்.

ன்னது மகேந்திர பல்லவர் சிவபக்தராகிவிட்டாரா. சைவத்தைத் தழுவிவிட்டாரா. சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறாரா.சமணரான அவர் எப்படி சைவரானார், இது எங்ஙனம் நிகழ்ந்தது. இதன் சூத்திரதாரி யார் ?  இதுதான் பல்லவ தேசம் முழுவதும் பேச்சாயிருந்தது.

”அவர் சிவன்கோயிலில் ஒரு சாதாரண உழவாரத் தொண்டராம். அப்பர் என்று பெயராம். இறைவனின் திருத்தாண்டகத்தை விருத்தமாகப் பாடியமையால்  திருத்தாண்டகவேந்தர் என்று புகழப்பட்டவராம். “

”சமணனான நம் அரசனை மாற்ற அவர் அப்படி என்ன செய்தார்..?”

“இறைவன் பெயரை உச்சரித்தார் அவ்வளவே. அரசன் உண்டாக்கிய எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்தார். அதைக் கண்டு அதிவியப்புக் கொண்ட பல்லவன் அவர் கூறிய சிவநாமத்தின் மகிமையால் சைவனானான் “ 

“நஞ்சுண்ட ஈசனை வணங்கியதால் அரசன் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா. “

”அப்படி என்ன இன்னல்கள் கொடுத்தான் அரசன். ?”


”நம சிவாய, நம சிவாய” என்று இடையறாது சொல்லிக் கொண்டிருந்தது திலகவதியின் வாய். கெடில நதிக்கரையில் உறைந்திருக்கும் திருவதிகை திருவீரட்டானேசுவரர் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தது அவளது கரம். உடல் முழுவதும் சிவச்சின்னம், பட்டை பட்டையாக விபூதி தரித்திருந்தாள். மனமும் உடலும் சிவனில் தோய்ந்து அவள் ஒரு சிவகணமாகவே மாறிவிட்டிருந்தாள்.

சுடலை ஈசனிடம் அவள் வேண்டுதல் இவ்வாறாகவே இருந்தது. “என் தம்பியை மருணீக்கியைத் திரும்ப ஆட்கொள் தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவா, சமணனான அவனை நீயின்றி வேறொரு தெய்வமில்லை என்று உணரச் செய் “ சிவனுக்கு அவளின் வேண்டுதல் கேட்டுவிட்டது போலும். புன்னகைத்துக் கொண்டார். அவன் தன்னை அழைக்கட்டும் அப்போது  ஆட்கொள்வோம் எனவும் சித்தமாயிருந்தார். தகுந்த தருணம் ஒன்று வாய்த்தது.

லியால் துடித்துக் கொண்டிருந்தான் தருமசேனன். வெப்பு நோய், நஞ்சை விழுங்கியது போல அவன் வயிற்றில் சூலுற்றிருந்தது. எத்தனையோ வைத்தியர் பார்த்தாயிற்று. எத்தனையோ ஔஷதங்கள். ஒன்றுக்கும் கட்டுப்படவில்லை அவனது வயிற்று வலி. பெரும் சூலைக் கொண்டு வயிற்றில் குத்தியது போல் வலி. அவனுக்குத் தன் தமக்கையைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.

எப்போது உடல் நலமில்லை என்றாலும் அக்கா தரும் அன்புச் சொற்களும் அவள் தரும் கை மருந்துகளும் அவனுக்கு இதமாயிருக்கும். பெரும் வலி.. துடித்துக் கொண்டே அக்காவைப் பார்க்க ஆளனுப்பினான். ஓடி வந்தாள் தமக்கை. தம்பியின் துயர் கண்டு அவள் உள்ளம் வெம்பி வெதும்பியது.

’ஈசா இதுவா உன் திருவிளையாடல்’ என வருந்தியவாறு வயிற்றில் திருநீற்றைத் தடவித் தம்பியிடம் ”சூலாயுதம் கொண்டவனை வணங்கி முறையிடு உன் சூலை நோய் தீரும். கடவுள் நாமம் காப்பாற்றும் ” எனக்கூற தருமசேனனாக மாறிய மருணீக்கி பாடத்துவங்கினார்.

”கூற்றாயினவாறு விலக்ககலீர்….. அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே. “ எனப் பாடிய அக்கணமே அவரின் வெப்பு நோய் நீங்கியது. என்னே இன்பம் ஈசனின் நாமம் ஈந்த இன்பம் என்று மகிழ்ந்து திரும்ப சைவத்துக்கு மாறினார். எந்நேரமும் சிவன் புகழ், சிவ நாமத்தைத் தவிர வேறெதையும் உச்சரிப்பதில்லை அவர் வாய்.

”சிவனைத் துதிக்கிறானாம். சிவனைத் தவிர வேறொரு தெய்வமில்லை என்கிறானாம், எந்நேரமும் சிவனைப் பற்றிய பாடல்களாம், சிவ ஆலயங்களில் உழவாரப்பணி வேறு செய்கிறானாம். சிவன் நாமமே உயிர்மூச்சாய் இருக்கிறானாம்.” என்று கொதித்துக் கொண்டிருந்தனர் மகேந்திர பல்லவன் அவையில் சமணர்கள். கேட்கக் கேட்க மன்னனுக்கே கொதிப்பேறிக் கொண்டிருந்தது.

’என்ன செய்யலாம் என்ன தண்டனை கொடுக்கலாம்’ எனக் கொந்தளித்த சமணர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்லிக் கொடுத்தார்கள். அது அனைத்தும் வியர்த்தமாகப் போவதை அறியாத அரசனும் அவர்களும் விதம் விதமான கொடிய தண்டனைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

அது அறியாமல் தருமசேனனாக இருந்து சிவனைப் பாடிப் பரவி திருநாவுக்குக்கு அரசன் என்று புகழப்பட்ட  நாவுக்கரசனோ சிந்தை முழுதும் சிவனை நிறைத்து இன்புற்றிருந்தான்.

சுண்ணாம்புக் காளவாய் கொதித்துக் கொண்டிருந்தது. பல்லவ மன்னனின் கட்டளை என்று சிலர் திருநாவுக்கரசனைப் பிடித்துச் சென்று அதில் தள்ளினார்கள். ஒரு நாள் இரு நாள் அல்ல. ஏழு நாட்கள் அதில் அடைத்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.

’சிவனே நான் செய்த தவறென்ன. உன் நாமத்தைக் கூறியதுதானே. என் தமக்கை சொல்லியிருக்கிறாள்., கடவுள் நாமம் காப்பாற்றும் என்று. உன் அடியவனான என்னைக் காக்க வா’ என்று சொல்லிப் பாடுகிறார் “ மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே “

ழு நாட்கள் ஆயிற்று நாவரசன் நீரோடு நீராக வெந்து சுண்ணாம்பாயிருப்பான் என்று குரூரமாக மகிழ்ந்தபடி சமணர்கள் வந்து அந்த சுண்ணாம்புக் காளவாயினைத் திறக்க அதில் ஈசனின் இணையடியைப் பாடிப்பரவியபடி பொய்கையில் அமர்ந்த அன்றலர்ந்த தாமரை போல வெளி வந்தார் திருநாவுக்கரசர். திகைத்துப் போயினர் சமணர்கள். மிரண்ட சமணர்கள் அழுக்காறுற்றார்கள். அவர்களின் மனத்தில் இன்னும் குரூரமான தண்டனைகள் தோன்றின.

ஞ்சு கலந்த பாலன்னம் கொடுத்தார்கள் கொல்லவில்லை, அது நஞ்சுண்ட கண்டனின் பக்தனை. மதயானையை விடுத்து மிதிக்கச் செய்தார்கள். அது வலம் வந்து வணங்கிச் சென்றது. பெரும் பாறைக் கல்லில் கட்டிக் கடலில் பாய்ச்சினார்கள். ”சொற்றுணை வேதியன் சோதிவடிவானவன், பொற்றுணை திருந்தடி பொருதக் கைதொழக், கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே. என்று உரைக்க அக்கல்லே தோணியானது. 

அவர்களால் பல்லவ அரசன் மூலம் தண்டனை கொடுக்க முடிந்ததே தவிர இறைவன் நாமத்தைக் கூறிய நாவரசனை ஒன்றும் செய்யவே முடியவில்லை. சிவ நாமம் அவரைக் கவசம் போலக் காத்துக் கொண்டிருந்தது.

“நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினள், தென்கடம்பைத் திருக்கரக் கோயிலாள், தன் கடன் அடியேனைத் தாங்குதல், என் கடன் பணி செய்துகிடப்பதே “ என்று சிவனோடு உரையாடியபடி திருநாவுக்கரசர் கெடில நதிக்கரையின் திருவதிகை திருவீரட்டானேசுவரர் திருக்கோயிலில் சிவப்பணி செய்துவந்தார்.

எவ்வளவு கொடிய தண்டனைகள் கொடுத்தும் சிவ நாமத்தால் அன்றலர்ந்த மலர் போல விளங்கி சிவத் தொண்டு ஆற்றி வரும் நாவுக்கரசரைப் பார்க்கிறான் பல்லவ மன்னன். மனம் நெகிழ்கிறது அவனுக்கும். கடவுள் நாமம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கச்சியெங்கும் நிறைய சிவன் கோயில்கள் தோன்றுகின்றன. அவனும் சைவனாகி சொல்லத் துவங்குகிறான் ”ஓம் நம சிவாய.. சிவாய நமஹ “பல்லவ சாம்ராஜ்யமே அவன் பின் சொல்லத்துவங்குகிறது “ ஓம் நமச்சிவாய. “. 

டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 26. 1. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...