எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பாதகமில்லை. உடலுக்கும் உபத்திரவமில்லை.

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம்.

வெந்தும் வேகாம அள்ளிப்போட்டுக்கிட்டு வேலைக்கு ஓடுறவங்களே கொஞ்சம் நின்னு நிதானிச்சுக் கவனிங்க. உங்க உணவுல இருக்குற ஊட்டச்சத்துதான் உங்க உடம்புக்கு சக்தி கொடுக்குது. கொழுப்பு, ப்ரோட்டீன், விட்டமின் மினரல்ஸ் நார்ச்சத்து ஆகியவை அடங்கிய சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரம் இருக்கா. தினப்படி அட்டவணை போட்டு அத காலரீஸ் மூலம் கணக்கிட்டு உண்ண முடியுமா.

எதுக்கு நேரம் இருக்கோ இல்லையோ தினப்படி நம் தமிழரின் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம்ம ஆரோக்கியத்தைக் கட்டாயம் நலமுடன் பேணலாம் தெரியுமா. அது என்னங்க பாரம்பரிய முறை. ?

உணவுப் பொருட்களை ஆவியில் வேகவைத்து உண்பதுதான். இதுக்கு நமது தமிழர் புராண இதிகாசங்களிலேயே எடுத்துக்காட்டு இருக்கு. அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் ஒன்றான ’பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதை” படிச்சிருப்பீங்க. அப்பிடி உழைத்த ஈசனுக்கு வந்தி என்னும் மூதாட்டி கொடுத்த புட்டுத்தான் மிகவும் சத்துள்ள உணவு.

பெரும்பாலான சமுதாயங்களில் பார்த்தீர்கள் என்றால் விருந்து விசேஷம் தவிர அன்றாட உணவு முறை தென் தமிழ் மாவட்டங்களில் ஆவியில் வேகவைத்த உணவுகளாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. இடியாப்பம் மாப்பிள்ளை சொதி போன்றவை கன்யாகுமரி நாகர்கோவில் மாவட்டங்களிலும், சம்பல் இடியாப்பம் என்ற இலங்கை உணவும் சரி, மக்களின் பொருளாதார ஆரோக்கிய நிலையினைச் சொல்வனவாகவே அமைகின்றன. பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினரின் உணவு ஆவியில் வேகவைத்த உணவுகள் மற்றும் நீரில் கொதிக்க வைத்த கஞ்சி, சுடுசோறு, கூழ், களி போன்றவையே.


மருத நிலத்தில் வாழ்ந்த விவசாய மக்களின் உணவு பெரும்பகுதியும் நீரிலிட்டு அவித்தலும் ஆவியில் வேகவைத்தலுமாகவே இருக்கிறது. வட்டார வேறுபாடுகள் கொண்டதாயினும் கஞ்சி , சோறு, மரவள்ளிக்கிழங்கு, மீன் ஆகியவை முக்கிய உணவாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகை உணவுகள் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மட்டுமின்றி முதியோர் குழந்தைகள், நோயாளிகள் ஆகியோருக்கும் உகந்தது.  உணவின் இயற்கைத் தன்மையும் நிறமும் அவித்தலால் கெடுவதில்லை. அவற்றின் விட்டமின் மினரல் சத்துக்களும் அழிவதில்லை. ரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரை வியாதி கொண்டவர்களும் தைரியமாக உண்ணலாம்.

பர்கர் பிஸா நூடுல்ஸ் பாஸ்தா பான்கேக் போன்ற இன்றைய அவசர உணவுலகில் இந்த ஆவியில் வேகவைத்த உணவுகள் பர்ஸையும் கெடுப்பதில்லை. வயிற்றையும் கெடுப்பதில்லை. இட்லி, புட்டு, குழாய்ப் புட்டு, நூல் புட்டு என்னும் இடியாப்பம், ஆப்பம் , கொழுக்கட்டை, இலை அடை, புட்டுக்கொழுக்கட்டை,சீராளன் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கோதுமைப் புட்டு, சோளப்புட்டு, இலையப்பம், உண்ணியப்பம், சுண்டல் வகைகள் போன்றவை மட்டுமல்ல, பொங்கல் காலங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு போன்றவை வேகவைத்து உண்டால் உடலுக்கு உரம் கிடைக்கும். இதைக் காயவைத்தும் ஒடியல் மாவு என்று கூழ் காய்ச்சி உண்பார்கள்.

மூங்கில் குழாயில் வேகவைத்துச் செய்யப்படும் புட்டும் சிரட்டைப் புட்டு என்று கொட்டாங்கச்சியில் வைத்து ஆவியில் வேகவைக்கப்படும் புட்டும் மிகவும் ருசியானவை. திருநெல்வேலி மாவட்டத்தில் செய்யப்படும் பனைஓலைக் கொழுக்கட்டை மிகவும் வித்யாசமானது. புட்டிங்க் போன்று இருக்கும் வட்டிலப்பம், கிண்ணத்தப்பம் போன்றவையும் இஸ்லாம் மக்கள் பண்டிகைகளின்போது செய்வார்கள்.  
  
மாசமான பெண்ணுக்குப் பேறுக்கு முன்னால் சினை இட்லி என்று சொல்லி இட்லியின் நடுவில் கடலைப்பருப்பு வெல்லப் பூரணம் வைத்த இட்லிகளை ஊற்றி உறவினர்களுக்கும் அளித்துச் சாப்பிடும் பழக்கம் சிவகங்கை மாவட்டத்தில் உண்டு. விருந்து விசேஷங்களிலும் காஞ்சிபுரம் இட்லி, காரட் இட்லி, காய்கறி இட்லி, புதினா இட்லி, கொத்துமல்லி இட்லி, மினி இட்லி, தஹி இட்லி, சாம்பார் இட்லி, பொடி இட்லி, சில்லி இட்லி , இட்லி மஞ்சூரியன், இட்லி உப்புமா என வெரைட்டியாக செய்வதும் உண்டு.

எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் முதிய பெண்கள் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் காய்கறித் தட்டைப் போட்டு அதில் ஈர்க்குச்சியை வைத்துக் காடாத்துண்டைப் பிழிந்து அதன்மேல் போட்டு இட்லி ஊற்றி உண்பார்கள். அதற்கு வாழைக்காய் இட்லி என்று பெயர். ஏனெனில் ஒருவராக இருப்பதால் இட்லிப் பாத்திரம் எல்லாம் வைத்து ஊற்றினால் வேலை அதிகம் என்றும் இப்படி ஆவியில் இரண்டு இட்லிகளுக்கானதை மட்டும் ஊற்றிச் செய்வார்கள். அது வாழைக்காய் வடிவத்தில் வெந்து வரும் என்பதாலும் இதற்கு வாழைக்காய் இட்லி என்று பெயர்.

ஔவையைக் கும்பிடுதல் என்று செவ்வாய்ச் சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் சிவப்பரிசியை இடித்து அதில் கொழுக்கட்டை செய்து படைத்துக் கும்பிடுவார்கள். சத்துக்குச் சத்து மற்றும் பக்தியும் கூட. கவுனி அரிசி எனப்படும் ப்ரவுன் அரிசியை ஊறவைத்து இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து சீனி ஏலக்காய் நெய் தேங்காய் கலந்து விருந்துகளில் வைப்பார்கள். இது இரத்த விருத்தியும் கொடுக்கும்.

பேலியோ டயட் என்னும் முறையில் வேகவைத்த காய்கறிகள், மாமிசம் ஆகியன  உடல் எடைக் குறைப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன. உப்பிட்டு வேகவைத்த சங்கு சிப்பி போன்றவையும் சில நாடுகளில் உணவாகக் கொள்ளப்படுகின்றன. ஆம்லெட் செய்யப்படும் முட்டையை விட ஆவியில் வேகவைத்த முட்டையில் கால்ஷியம் சத்து அதிகம் கிடைக்கிறது. 

வேகவைத்தலில் இரு முறைகள் உண்டு. இட்லிப் பாத்திரத்தில் வைத்து துணி போட்டு ஆவியில் வேகவைப்பது . இன்னொன்று குக்கர் போன்றவற்றில் பாத்திரத்தில் வைத்து மூடி ஆவியில் வேகவைப்பது. இதனால் அதில் உள்ள பொட்டாஷியம் கால்ஷியம் பாஸ்பரஸ், துத்தநாகம், விட்டமின் பி & சி ஆகியவற்றோடு அவற்றில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட்சையும் பாதுகாக்கிறது. இதனால் கான்சர் போன்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. உடல் எடைக்குறைப்புக்கும் ஆவியில் வேகவைத்த உணவுகளே பரிந்துரைக்கப்படுகின்றன.

மேலும் அன்றைய பிள்ளைகளுக்குப் பள்ளி விட்டு வந்ததும் மாலை உணவாக வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, துருவி வேகவைத்து வெல்லம், தேங்காய் சேர்த்த மரவள்ளிக்கிழங்குப் புட்டு, அவித்த பனங்கிழங்கு, அவித்த சோளக்கருது, அவித்த வேர்க்கடலை இவையே கொடுப்பார்கள். இவற்றை உண்ட பிள்ளைகளுக்கு இருக்கும் உடல் உரம் இன்றைய நவநாகரீக டப்பா உணவுகளிலும் பாக்கெட் உணவுகளிலும் கிட்டாதது. சோளம், பனங்கிழங்கு போன்றவை பல்லுக்கு உறுதியையும் அளிப்பவை.

சூழ்நிலைக்கேற்பவும் பருவகால நிலைக்கேற்பவும் நம் நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் பயக்கும் உணவோடும் சம்பந்தப்பட்டுள்ளன. காரடையான் நோன்பில் ஆவியில் வேகவைத்த காராமணிக் கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தியில் பூரணம் வைத்த கொழுக்கட்டைகளும், பால் கொழுக்கட்டைகளும், கடவுள் உபாசனையோடு உடல் நலம் காக்கவும் செய்யப்படும் எளிய பிரசாதங்கள் ஆகும். சித்திரா பௌர்ணமி அன்றும் கருப்பட்டிக் கொழுக்கட்டை,வெல்லக் கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை செய்து படைப்பார்கள். 

அதே போல் நவராத்திரியில் பத்துநாளும் செய்யும் பத்துவகை சுண்டல்கள் ஆவியில் பிரஷர் குக்கரில் வேகவைக்கப்பட்டவையே. கறுப்பு கொண்டைக்கடலை, காபூலி சன்னா, தட்டைப்பயறு என்னும் காராமணி, பாசிப்பயறு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, சோளம், சோயா, மொச்சை, அவரை, துவரை, பட்டாணி, வேர்க்கடலை ஆகியவற்றில் சுண்டல் செய்தால் அவற்றின் சத்துக்கள் அழியாமல் கிடைக்கின்றன.

நம் ஊரில் மட்டுமல்ல வட இந்திய மாநிலங்களிலும் சேம்பு இலைகளைக் கட்டி வேகவைத்து உசிலி போன்ற பொரியல் செய்து உண்பார்கள். அதே போல் சோளமாவில் செய்யப்படும் டாமலீஸ் எனப்படும் மெக்ஸிகன் உணவும் மிகச் சத்து அடங்கியது. காண்டினெண்டல் சமையல்களில் வேகவைத்த உணவுக்கே முதலிடம் அளிப்பார்கள். அப்படி வேகவைத்து அளிக்கப்படும் உணவுகளில் எல்லா அசைவ உணவுகளோடும் சாஸ்களோடு அளிக்கப்படும் சிறந்த உணவு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு ஆகும்.
 
சமச்சீர் உணவு என்று சொல்வதில் இந்த ஆவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிட்டாலே அனைத்துச் சக்திகளும் கிடைத்துவிடும். சைவ உணவு என்றில்லை. அசைவ உணவையும் ஆவியில் வேகவைத்துச் செய்யலாம். மீனை மசாலா சேர்த்துக் கலக்கி வாழையிலையில் சுருட்டி ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவில் மீனிலிருந்து கிடைக்கும் ஒமேகா 3 என்ற ஃபேட்டி ஆசிட் சத்து பொரித்து வறுத்த எண்ணெய்க் கலப்பில்லாமலே கிடைக்கும். 

காய்ச்சல் அடித்தால் உடல் நலக் குறைவென்றாலும் நாம் செய்யும் இட்லியையே வழங்கும் படி மருத்துவர் பரிந்துரைப்பார். எந்தக் கேடும் இல்லாதது அது. அரிசி உளுந்து போட்டுச் செய்யப்படுவதால் ப்ரோட்டீனும் கார்போஹைட்ரேட்டும் கிடைக்கும். மாவு எட்டுமணிநேரம் புளிப்பதால் அதில் நல்ல பாக்டீரியா உருவாகி அது குடலுக்கும் நன்மை பயக்கிறது.


முளைவிட்ட தானியங்களையும் பயறு வகைகளையும் ஆவியில் வேகவைத்து உண்பதால் உடல் இழந்த விட்டமின்களையும் மினரல்களையும் ஈடு செய்யலாம். நோய் நொடியின்றி வாழலாம். இந்தப் புத்தாண்டிலிருந்து ஒரு உறுதி எடுத்துக்குங்க. முடிந்தவரை ஆயில் இல்லாமல் ஆவியில் வேகவைத்த உணவுகளையே உண்போம் என. உங்க சுறுசுறுப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அவையே அடித்தளமாய் இருக்கும்.  

-- ஜனவரி 2018,  நமது மண்வாசத்துக்காக தேனம்மைலெக்ஷ்மணன். 

5 கருத்துகள்:

  1. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். பயனுள்ள, அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியனவற்றைக் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கமான பதிவு. மண்வாசனையுடன் கூடிய பதிவும்!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி பாலா சார்

    நன்றி கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள செய்திகள். ஆவியில் வேகவைத்த உணவு வயிற்றுக்குக் கெடுதல் செய்வதில்லை. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...