வெள்ளி, 5 மே, 2017

வெள்ளையர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜான்சி ராணி லெக்ஷ்மி பாய் :-

1857  ஆம் ஆண்டு மே மாதம் மீரட் கிளர்ச்சி. ( சிப்பாய்க் கலகம் )

வெள்ளையர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜான்சி ராணி லெக்ஷ்மி பாய் :-

1854 ஆம் ஆண்டு வருடத்துக்கு 60,000 ரூபாய் பென்ஷன் ஆங்கில அரசு கொடுத்த போது ’என்ன ஆனாலும் சரி . என்னுடைய ஜான்சியை விட்டுத்தரமாட்டேன் என முழங்கியவர் இவர். 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் நாலாம் தேதி நள்ளிரவு நேரத்தில் தனது தத்துக் குழந்தை தாமோதர் ராவை நெஞ்சோடு கட்டியபடி தனது குதிரை பாதலில் ஏறி கோட்டை மதிலில் பாய்ந்து தப்பித்த வீரத்தாய் இவர். ”ஹல்திகுங்கும்” திருவிழாதான் கொண்டாடினார் என்ற போதும் போராட்டத்துக்குத் தயாராகிறாரோ என்று ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய வீரப் பெண்மணி இவர்தான் ஜான்சியின் ராணி மணிகர்ணிகா. யார் இந்த மணிகர்ணிகா ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஜான்சிராணி லெக்ஷ்மிபாய்தான் அவர்.


வாரணாசியில் மராத்திய பிராமண குடும்பத்தில் பிறந்து பிதூரின் பேஷ்வாவால் வளர்க்கப்பட்டார். இவரது தாய் தந்தை பெயர் மோரோபாந்த் தாம்பே, தாயார் பாகீரதிபாய். நான்கு வயதாயிருக்கும்போது தாயை இழந்தார் மணிகர்ணிகா. இவர் குதிரை ஏற்றம் வாள் வீச்சு ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.


மிகச் சிறு வயதிலேயே ஜான்சியை ஆண்ட ராஜா ராஜ கங்காதர் ராவ் நெவல்கர் என்பவருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். ராஜாவுக்கு மணமுடிக்கப்பட்டபின் மணிகர்ணிகா லெக்ஷ்மிபாய் என அழைக்கப்பட்டார். அவர்களுக்கு தாமோதர் ராவ் என்ற குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் மரணமுற்றது. அதனால் ஆனந்தராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து தாமோதர் ராவ் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.


குழந்தையின் மறைவால் துயருற்ற ராஜா நெவல்கர் 1853 , நவம்பர் 21 இல் மரணமடைந்தார். ராஜாவுக்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனியின் டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த சட்டப்படி ராஜாவோ அவரது வாரிசுகளோதான் ஆளவேண்டும். தத்துப் பிள்ளைகள் அரசாள முடியாது. எனவே நாடு ஆங்கில அரசுடன் இணைக்கப்படும். இதற்காக ராணிக்கு ஓய்வூதியமாக வருடத்துக்கு ரூபாய் அறுபதினாயிரம் கொடுக்க முன்வந்தபோது ஜான்சி ராணி தன்னுடைய ராஜ்ஜியத்தை விட்டுத்தரமுடியாது என வெகுண்டெழுந்தார்.


அந்த சமயத்தில் 1857 மே மாதத்தில் மீரட்டில் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டபடியால் அதில் கவனம் செலுத்தியது ஆங்கிலேய அரசு.  ஆங்கிலேயரின் அக்கிரமமான ஆக்கிரமிப்பு ஏதுமின்றி அமைதியாக ஆண்டு வந்த ஜான்சி ராணி தனது நாட்டில் ஹல்திகுங்கும் திருவிழாவைக் கொண்டாடினார். அதைப் பார்த்துக் கூட போருக்குத் தயாராகிறாரோ என அஞ்சி நடுங்கினர் ஆங்கிலேயர்.


1858 இல் ராணியை சூழ்ச்சியால் வெல்ல அவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் பங்கு இருந்ததாகக் கூறி கேப்டன் ஹ்யூ ரோஸ் தலைமையில் படை ஒன்று ஜான்சியை ஆக்கிரமித்தது. இந்த சமயத்தில் ஜான்சி ராணிக்கு உதவ தாந்தியாதோபே 20,000 படை வீரர்களுடன் வந்தார். பான்பூர் ராஜாவும் தாந்தியா தோபேயும் ராணிக்கு உதவ 1500 வீரர்களுடன் அனுப்பி வைத்த ஆயுத வண்டிகளையும் ரோஸ் தலைமையிலான படை என்பீல்ட் ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுற்றி வளைத்து வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கொள்ளை அடித்தது.


ராணியைக் காப்பாற்ற வந்த ஆயுதங்கள் ராணியின் படைகளையே அழித்தன. ஆணாக உடையணிந்து குதிரை மீதிலேறி தீரத்துடன் போர் புரிந்தார் ஜான்சிராணி. மூன்று நாட்கள் கடும் போருக்குப் பின் ஜான்சி வீழ்ந்தது. ஜான்சி ராணியின் நம்பிக்கைக்கு உரிய ஜல்காரி பாய் ஜான்சி ராணிபோல் வேடமிட்டு படைக்குத்தலைமை தாங்கி அங்கே ராணிக்குப் பதிலாக  போரிட்டு ஆங்கிலேயர் கண்ணில் படாமல் ராணி கோட்டையிலிருந்து தப்பிக்க உதவினார். இன்றும் இவரது வீரம் பற்றி புந்தேல்கண்டின் மக்கள் நாட்டுப்புறப் பாடலாகப் பாடி வருகிறார்கள்.


ராணியின் மெய்க்காப்பாளர் குதாபக்ஷ் பஸரத் அலி, குலாம் கௌஸ் கான், தோஸ்த் கான், லாலா பாவ்பக்‌ஷி, மோதிபாய், சுந்தர்-மந்தர், காஷி பாய், தீவான் ரகுநாத் சிங் ஆகியோர் பாதுகாக்க ராணி தாமோதர் ராவை தனது முதுகில் கட்டியபடி குதிரையில் ஏறி பாதல் கோட்டையில் மதிலிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். இவர்களில் குதாபக்ஷ், கௌசல்கான் ஆகியோரைக் கொன்று வெறியுடன் ஆக்கிரமித்த ஆங்கில அரசு நாட்டைச் சூறையாடியது. 


பெண்படை உதவியுடன் குவாலியர் சென்ற ராணி குவாலியர் கோட்டை ஒன்றைக் கைப்பற்றினார். ஆனால் அங்கேயும் ஆங்கில அரசு ஆக்கிரமித்தது. 1858 இல் கோட்டாகி சேராய் என்ற இடத்தில் நடந்த போரில் வீரராணி லெக்ஷ்மி பாய் மரணமடைந்தார். ராணியின் படையைச் சேர்ந்த ராமசந்திரராவ் என்பவரால் பூல்பாக் என்ற இடத்தில் குடிசையோடு ராணியின் திருவுடல் தகனம் செய்யப்பட்டது. ஆனாலும் மூன்று நாட்கள் வரை ராணியின் இறப்பு தெரியாமல் போரிட்டு அதன்பின் குவாலியரைக் கைப்பற்றினர்.


முதல் விடுதலைப் போரில் பங்கு பெற்ற முக்கிய வீராங்கனையான ஜான்சி ராணிக்கு மஹாராஷ்ட்ராவின் சோலாப்பூரிலும் ஆக்ராவிலும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவரது சேவை பற்றி தேசபக்திப் பாடல்கள், எழுதப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. இவரது சரிதம் காவியமாகப் புனையப்பட்டுள்ளது. மஹாஸ்வேத தேவி அவர்கள் ஜான்சி ராணி லெக்ஷ்மிபாயின் வாழ்க்கை பற்றி ஆவணப்படுத்தி இருக்கிறார். திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல தற்போது வீடியோ விளையாட்டாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. 


2 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு.

Thenammai Lakshmanan சொன்னது…

Thanks Venkat sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...