திங்கள், 22 மே, 2017

மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.   

உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும் திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல் பெரும் பங்கு வகிக்கிறது.

பெரும்பாலும் கோடைகாலத்திலேயே – மே மாதத்தில் - முளைப்பாரி எடுப்பது நிகழ்கிறது. கோடைத்திருவிழாக்களில் அம்மன் கோயில்களுக்கு நேர்ச்சை செய்துகொண்டு முளைப்பாரி, பாளை, மதுக்குடம் எடுத்துவந்து கோயிலில் சேர்ப்பித்து சாமி கும்பிடுவார்கள். சிலர் நவராத்திரி போன்ற வைபவங்களிலும் கொலுவுக்கு முன் பாத்திரத்தில் முளைவிட்ட பயறுவகைகளை வைத்து பூஜை செய்வார்கள்.

இதற்கென்று சில நியமங்கள் உண்டு. ஒன்பதுவகை தானியங்கள் & பயறுவகைகள் ( துவரை, உளுந்து, அவரை, நெல் , பச்சைப் பயறு, கொள்ளு, கோதுமை, உளுந்து, கம்பு ) கொண்டு மண் அல்லது செம்புப் பாத்திரத்தில் நன்கு உயரமாக விளைந்த முளைப்பாரியை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் சுமந்து வருவார்கள். பாலிகா என்றால் பெண்கள் என்று அர்த்தம். பெண்கள் மங்களத்தின் குறியீடு என்பதால் பெண்கள்தான் வீட்டில் வைத்து வணங்கி அதன்பின் முளைப்பாரியை கோயிலுக்கு எடுத்து வருகிறார்கள். சில ஊர்களில் அதன் பின் இருபத்தோரு காய்கறிகளுடனோ அல்லது அசைவ விருந்தோ நடைபெறுகிறது.


ஆடிமாதம் பதினெட்டாம் பெருக்குக்கு சில நாட்கள் முன்னதாக ஒரு நல்ல மேல்நோக்கு நாளில் வீட்டில் சுத்தபத்தமாகக் குளித்து மண், சாணம், எரு நிரம்பிய ப்ளாஸ்டிக் தட்டுகளில் நல்ல நேரத்தில் பயறு தானியங்களைப் போட்டு நீருற்றி வைக்கோல் போட்டு மூடி வைப்பார்கள். அதை தினமும் வெய்யிலில் சிறிது நேரம் வைத்து எடுப்பார்கள்.

ஆடிப்பெருக்கு அன்று நீராடச் செல்லும்போதே நதிகளில் நன்கு நீண்டு வளர்ந்திருக்கும் முளைப்பாரிகளை புதுப்புனலில் இட்டு நதிக்கு சமர்ப்பணம் செய்வார்கள். இதற்கு முளைப்பாரி கொட்டல் என்று பெயர். முளைப்பாரி நன்கு நீண்டு வளர்ந்திருந்தால் அந்த வருடம் வயலில் விளைச்சல் அதிகம் கிடைக்கும் என்று பொருள் கொள்வார்கள். அதன் பின் வளையல், காதோலை, கருகமணி, பூக்கள், வைத்து இலையில் சித்திரான்னம் படைப்பார்கள். உறவினர் குதூகலத்தோடு கூடி உண்பார்கள்.

சில இல்லங்களில் திருமணத்தில் பூமணம் இடுதலின்போது ஐந்து முளைப்பாலிகைக் கிண்ணங்களில் முளைத்த தானியங்களைப் போட்டு வாழ்க்கை இப்படிச் செழித்துவரவேண்டும் என வாழ்த்துவார்கள். இதற்காக இரண்டு நாட்கள் முன்பே  நல்ல நேரம் பார்த்து ஒரு செம்புத் தவலையில் தானியங்களைப் போட்டு வெதுவெதுப்பான நீர் ஊற்றி வேடு கட்டி சாமி அறையில் வைத்திருப்பார்கள். தினமும் நீர் மாற்றி வைத்து திருமணத்துக்கு முந்தையநாள் தண்ணீரை வடிகட்டித் துணியில் முடிந்து வைப்பார்கள். அந்த தானியங்கள் நன்கு முளைவிட்டிருக்கும். இந்தச் சடங்குக்கு உபயோகப்படுத்தி முடிந்ததும் மற்றும் திருவிழாக்கள் முடிந்ததும் இது ஊரில் உள்ள குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் கொட்டப்படும்.  

வேத தர்மத்தில் வைகானஸ ஆகமத்தில் முளைப்பாரி அங்குரார்ப்பணம் அல்லது பீஜாவபனம் என்று அழைக்கப்படுகிறது. முளைப்பாரி என்றால் ஒரு மண்/செம்புப் பாத்திரத்தில் அல்லது குடத்தில் பயறு தானிய வகைகளைப் போட்டு முளைவிடச் செய்தல். அங்குரார்ப்பணம் என்றால் விதைகளை ஊன்றுதல்/தூவுதல்.

திருப்பதி திருமலை போன்ற கோயில்களில் பிரம்மோத்சவத்தின்போது ஒன்பது நாட்கள் முன்னதாக நல்ல லக்னம் அல்லது முகூர்த்த நேரத்தில் மாலை அல்லது இரவு சமயத்தில் சந்திரன் உதித்ததும் அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. சில சமயம் 7, 5, 3 நாட்கள் முன்பு கூட நடைபெறும், இது திருவிழா நன்கு நடைபெற இறைவனின் ஆசியைப் பெற சங்கல்பம் எடுத்துக் கொள்ள செய்யப்படுகிறது.

மிகப் பெரும் நியமத்துடன் 16/12/8 என்ற எண்ணிக்கையில் தங்கம்/வெள்ளி/செம்பு ஆகியவற்றில் செய்த குறிப்பிட்ட அளவுள்ள பாலிகைக் கிண்ணங்கள் கோயிலின் வடக்குப் புறத்தில் அரிசிமாவால் கோலமிடப்பட்ட பிரம்மபீடம் என்ற இடத்தில் வைக்கப்படுகின்றன.  

மண் , எரு, சாணம் ஆகியவற்றால் பாலிகைக் கிண்ணங்களை நிரப்பி ஹோமத்தின் முன் வைத்து பிரம்மா, கருடா, சேஷா, சுதர்சனா, வக்ரதுண்டா, சோமா, சாந்தா, இந்திரா, ஈசானா, ஜெயா என்ற தெய்வங்களை ஆவாகனம் செய்து பூமி பூஜைசெய்து மேளதாளம் முழங்க இந்த விதைகளையும் சந்திரனை வணங்கி பூஜை நீரையும் தெளிக்கிறார்கள். இவற்றை சுத்தமான துணி கொண்டு மூடி புண்யாகம் செய்கிறார்கள். இந்த விதைகளை கோயிலின் ஆச்சாரியர்தான் தூவுவார். 

சோமம் ராஜா, விஷ்ணு சூக்தம் விதை தூவும் போதும் வருண மந்திரம் நீர் தெளிக்கும்போதும் படிக்கப்படுகின்றன. தினமும் இவற்றின் முன் விளக்கேற்றி வணங்கப்படுகிறது.

இந்தப் பயிர்கள் கறுப்பாக வளர்ந்தால் பண நஷ்டத்தையும், சிவப்பாக வளர்ந்தால் எதிரிகள் கைஓங்குவதையும், கீழ் நோக்கி வளர்ந்தால் வியாதியையும் அழுகினால் மரணத்தையும் குறிப்பதாகச் சொல்கிறார்கள். நன்கு செழித்து மேல்நோக்கி உயரமாக வெள்ளையாக , மஞ்சளாக பச்சையாக வளர்ந்தாலே நினைத்த காரியம் பலித்து வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

இதன் பின் உள்ள அறிவியல். :- மகரந்தச் சேர்க்கை மூலம் பலவகைப் பூச்சிகள் பலவகை மலர்களில் அமர்ந்து தாவர இனத்தைப் பெருக்குகின்றன. அதே போல பல பறவைகளும் அணில்களும் மரங்களில் அமர்ந்து பழங்களைத் தின்று கொட்டைகளை வீசி இனப்பெருக்கத்துக்குக் காரணமாகின்றன.

சில பெரிய சைஸ் விதைகளை முளைவிடச் செய்து ஊன்றினால் மட்டுமே வளரக் கூடியவை. ஆகவே அவற்றை முளைவிடச் செய்து நீர் நிலைகளில் புதுப்புனலில் சேர்க்கிறோம். அவை அங்கே வளரும் பல்வேறு பிராணிகளுக்கு உணவாவதோடு அலையின் ஓட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கரை தட்டி அங்கே எளிதாக முளைத்துப் பெருகி இயற்கையின் சுழற்சியைக் காக்கின்றன.

மேல்நோக்கி நீண்டு வளரும் வெண்மையான அல்லது மஞ்சளான அல்லது பசுமையான தண்டுகள் ஜூபிடர் அல்லது வீனஸின் தாக்கத்தை, ( வியாழன்,சுக்கிரன் ஆகிய கோள்களின் தாக்கத்தை ) செழிப்பத்தை அறிவிக்கின்றன.

அதே போல் கருகிய முளைகள் சனியின் காரகத்துவத்தை பூமியின் செழிப்பமின்மையை வரப்போகும் வறுமையை அறிவிக்கிறது. சிவப்பு முளைகள் செவ்வாயின் ( மார்ஸ் ) ஆதிக்கத்தையும் அதன் மூலம் வரப்போகும் சண்டைகளையும் யுத்த பயங்கரங்களையும் அழிவையும் எச்சரிக்கிறது.

பயிர் நன்கு செழித்து வளர நமது முழு கவனத்தையும் செலுத்தி கவனிக்கும்போது நாம் உடல்தூய்மை மற்றும் மனத்தூய்மை அடைகிறோம். மனம் நிதானமும் மூளை கூர்மையான கவனமும் ஒருமைப்பாடும் ஒழுங்கமைதியும் கொண்டதாகிறது. இளம் தலைமுறைக்கு இயற்கையின் எக்காலஜிகல் சைக்கிளை சொல்லித்தரவும் பயன்படுகிறது. இயற்கையைப் பாதுகாக்கவும் உறவுகளைப் பேணிக்காக்கவும் இயற்கையின் சக்தியை உணரவும் உதவுகிறது.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

100% உண்மை... விளக்கம் ஒவ்வொன்றும் மிகவும் அருமை...

G.M Balasubramaniam சொன்னது…

சில விளக்கங்கள் தெரியாதவை பகிர்வுக்கு நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முளைப்பாரி இதுதான் முதலாகக் கேள்விப்படுகிறோம். அதற்கான விளக்கமும் அருமை...

கீதா: நீங்கள் சொல்லியிருப்பது போல கல்யாணங்கள் சில விசேஷங்களில் தானியங்களை முளைகட்ட வைத்து தண்ணீரில் கரைப்பது உண்டு எங்கள் வீட்டுக் கல்யாணங்களிலும் சில வீட்டு விசேஷங்கலில், பாலிகை கரைப்பது என்று இதைச் சொல்லுவார்கள். சிறு பெண் குழந்தைகளைக் கொண்டுதான் கரியக்க வைப்பார்கள். அறியாத பல தகவல்கள் அறிந்தோம் தேனு....பகிர்வுக்கு மிக்க நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

Thanks DD sago

Thanks Bala sir

Thanks Tulsi sago & Geeths.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...