எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஜூன், 2016

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

சென்ற நவம்பரில் ஒரு நாள் எனது முகநூல் படத்தில் ( அது ஒரு பத்ரிக்கையில் தீபாவளி ரெசிப்பீஸுக்காக கௌரவத் தோற்றம் கொடுத்த  படம் )  குழந்தைகளுக்கான ரெசிப்பீஸ் அனுப்ப முடியுமா. முடியும் என்றால் இந்த ஈ மெயில் ஐடிக்கு அனுப்புங்க என்று ஒரு கமெண்ட். யார் என்று பார்த்தால் அவர் கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள்.

குமுதம், அவள் விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், குங்குமம் தோழி, புதிய தரிசனம், சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், தேவதை ஆகியவற்றில் எழுதி இருந்தாலும் என்னவோ சமையல் ரெசிப்பிஸ் எழுதுவதில் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. கவிதை கதை கட்டுரை போல சமையல் குறிப்பு எழுதுபவர்களை யாரும் ஒரு எழுத்தாளராக ஒப்புக் கொள்வதில்லை என்ற தயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தது மனதில் . இருந்தும் எனது வலைத்தளத்தில் அவ்வப்போது உணவுக் குறிப்புகள் வெளியிட்டே வந்திருக்கிறேன்.


குழந்தைகளுக்கான குறிப்புகள் என்றதும் அதுவும் கோகுலம் என்றதும் மனம் குதூகலமானது உண்மை. அதில் தேனாஞ்சி என்ற பெயரிலும் குழந்தைப் பாடல்கள் எழுதி வருகிறேன். அதன் பின் மங்கையர் மலரிலும் தொடர்ந்து செட்டிநாட்டு ரெசிப்பீஸ் வெளியாகி அண்டை நாடுகளில் இருக்கும் உறவினர்களிடமும் நல்ல பெயர் (!) வாங்கிக் கொடுத்தது. :) நிற்க.

75 ஆண்டுகள் பத்ரிக்கைப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கல்கி குழுமத்தில் இருந்து பவளவிழா நிகழ்வுகளுக்காக அவர்களின் ஊழியர்களின் குழந்தைகளுக்குப் போட்டிகள் வைத்துப் பரிசளிக்க முடிவானதும்  பொறுப்பாசிரியர் பெருமதிப்பிற்குரிய திரு லதானந்த் அவர்கள் கோகுலத்தில் என்னைப் போலப் பங்களிப்புச் செய்து வந்த மாயவரத்தான் கி ரமேஷ்குமார், ஜவர்லால், ஃபேரிலாஸ் மனோஜ் ஆகியோரை அதன் நிகழ்வுகளில் நடுவர்களாக நியமித்து அழைத்து இருந்தார்கள். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய கடிதம் அழைப்பாக வந்திருந்தது. திரும்ப சென்னைக்குச் செல்லும் ஆவல் ஜில்லென உந்தியது.

சென்னை புத்தகத் திருவிழாவில் எனது ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுப்பும் - சிவப்புப் பட்டுக்  கயிறு -  வெளியிடத் தயாராக இருந்ததால் மிக சந்தோஷமாக சென்னைக்குக் கிளம்பினேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பரபரப்பாக பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு கலக்கிய ஊர். இப்போது குழந்தைகள் முன் சிற்றுரை ஆற்ற வேண்டியிருக்கும் என பொறுப்பாசிரியர் திரு லதானந்த் குறிப்பிட்டு இருந்ததால் மேடைக் கூச்சம் வேறு டென்ஷனாக்கியது. ஒரே பரபரப்பு & படபடப்பு.

சென்னையில் வெய்யிலும் வேர்வையும் போட்டி போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தன. சனிக்கிழமை காலை ஒரு பொன்னான வேளையில் ( ராகுகாலத்துக்கு முந்தியெல்லாம் இல்ல ) ஒன்பதுக்கு மேலதான் புறப்பட்டு ஒரு ஆட்டோவில் ஈக்காடு தாங்கலில் இருக்கும் கல்கி அலுவலகத்துக்கு நானும் என் கணவரும் சென்று சேர்ந்தோம். நடுவிலேயே அங்கே பணி புரியும் செல்வி அவர்களிடம் இருந்து ஃபோன். நாங்க டயத்துக்கு வந்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு ஜெயா டிவியின் அலுவலகத்துக்கு அருகிலிருக்கும் பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி - மங்கையர்மலர் - கோகுலம் - தீபம் அலுவலகத்துக்குள் நுழைந்தோம்.

வாயில் படியிலேயே வினிஷா நாயரும், செல்வி அவர்களும் வந்து வரவேற்று மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.  அங்கே ஆங்கில கோகுலத்தின் ஆசிரியை மங்கா அவர்களும், மற்ற பத்ரிக்கைகளின் ஊழியர்களும் அவர்களின் குழந்தைகளும் இல்லத்தரசிகளும் இருந்தார்கள். இவர்களே சிறப்பு விருந்தினர்கள் போல ஜொலித்துக் கொண்டிருக்க மங்கையர் மலர் எடிட்டர் மீனாக்ஷி மேடம் அவர்களும் , கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன் மேடமும், அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கோகுலம் பொறுப்பாசிரியரும் இன்னும் வியக்க வைத்தார்கள்.

ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டு நம்மை சகஜ ஸ்திதிக்குக்  கொண்டுவந்தார்கள். நிர்வாக இயக்குநரின் அறைக்குள் சென்றதும் அங்கே பத்ரிக்கை முன்னோடிகளின் புகைப்படங்கள் சூழ இருந்ததும் ( அவர்களைப் புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன் . ஹ்ம்ம் )  பிரம்மிப்பில் ஆழ்ந்து பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு லெக்ஷ்மி மேடமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஒரே நெகிழ்வு மயம். அதன் பின்  அங்கே நடுவர் நாற்காலியில் அமரவைத்தார்கள். மாயவரத்தானும் உடன் வந்துவிட நிர்வாக இயக்குநரும் வந்து அமர நிகழ்வு ஆரம்பமானது.

கீழே மற்ற தளங்களில் பணி நடந்து கொண்டிருக்க மேலே மூன்றாம் தளத்தில் ஷாமியானா போட்டு சுற்றிலும் அழகான அலங்காரங்கள் செய்யப்பட்டு மின் விசிறி வசதியுடன் நிகழ்வுக்கான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

திருக்குறள் போட்டிகள் முதலிலும் அதன் பின்  ஒரு நிமிடம் வார்த்தை விளையாட்டு - என்ற நிகழ்ச்சியும்,

பாட்டுப் போட்டியும் நடந்தது. ( இவற்றைத் தனியாகப் பகிர்வேன் ) அதன் பின் எங்களது சிற்றுரை. ( இதையும் தனி இடுகையாகப் பகிர்வேன் )  நடுநடுவே பிஸ்கட்டுகளும் குளிர்பானங்களும் வந்தன. மதியம் அமர்க்களமான விருந்து ஏற்பாடாகி இருந்தது. பிஸ்லெரி வாட்டரில் கை கழுவி விருந்துண்டோம். ஃபேரிலாஸ் மனோஜ் , ஐவர்லால் சார், கிஷோர், பெருங்களத்தூர் ஜோசியர் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்தது.

நாம் வாசித்து மகிழ்ந்த ஒரு பத்ரிக்கை அலுவலகத்துக்குள் சிறப்பு அழைப்பாளராகச் சென்று அங்கே உலவிக்கிடந்த சரித்திரக் காற்றை சுவாசித்து அவர்கள் அளித்த அன்புப் பரிசுகளைக் கைக்கொள்ளாமல் அள்ளி வந்து ( ட்ரை ஃப்ரூட்ஸ் பாக், மில்கா ப்ரெட் பாக்கெட்ஸ், கல்கி குழும பத்ரிக்கைளின் பெயர் ப்ரிண்ட் செய்த ஒரு ட்ராவல் பேக் , பொன் முடிப்பு கவர்  ) கணவரிடம் அளித்து அளவளாவி மகிழ்ந்தது பெறும் பேறு.

சொல்ல மறந்துட்டேனே. அங்கே கோகுலத்தின் ஓவியர் பிள்ளை அவர்களும் அவரின் மைந்தர்களும் வந்திருந்தார்கள். ( அவர் மாலையில் நடக்கும் ஒரு போட்டிக்காக சில நொடிகளில் யானையை வரைந்தது அற்புதம்.! ) வினிஷா நாயர் ஒவ்வொரு நிகழ்வையும் மிக அழகாகத் தொகுத்து வழங்கினார். எப்போதும் புத்துணர்வு ஊட்டும் புன்னகை இவருக்கே சொந்தம்.

மலேஷியா சங்கர் மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடத்தி நம்மையும் குழந்தைகளாக்கினார்.

மங்கா மேடம் தன்னுடைய இன்சிரிப்பாலும் பொறுப்பாசிரியர் தன்னுடைய புன்சிரிப்பாலும், குறுக்கு & குறும்புக் கேள்விகளாலும் நிகழ்வைக் கலகலப்பாக்கினார்கள். செல்வியின் அபார உழைப்பும் பிரமிக்கத்தக்கது. மாலையிலேயே எல்லா முடிவையும் அறிவித்து பரிசு வழங்கினார்களாம். மற்ற ஊழியர்களின் பணியும் பாராட்டத்தக்கது.  ஆகஸ்ட் 5, 6 இல் நடக்கும் பவள விழா நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும், உங்களை அழைக்கிறோம் வாருங்கள் என நிர்வாக இயக்குநர் , எங்களை அழைக்கும்படி கோகுலம் பொறுப்பாசிரியரிடம் கூற அவரும் ஆமோதித்தார்.

கோகுலம் பொறுப்பாசிரியர் திரு லதானந்த் அவர்கள்  கோர்வையாக நிகழ்வுகளை நடத்திச் சென்ற விதமும் , பணி புரியும் அனைவரையும் பங்கேற்கச் செய்த விதமும் அருமை.  நிகழ்வுக்கான அவரின் உரையாடலும் குட்டிக் கதைகளும் அற்புதம். ஊழியர்களின் ஒத்துழைப்பும், கல்கி குழுமத்தின் விருந்தோம்பலும் மறக்கவியலாதது. மதிய உணவு நேரத்திலும் ஒரே குடும்பத்தினர் போல அமர்ந்து சிரித்துக் களித்து உணவருந்தி மகிழ்ந்தோம். ரமேஷும் ஃபேரிலாஸ் மனோஜும் மதியத்தைக்  கலகலப்பாக்கினார்கள்.

 அதன் பின் பிரிய மனமில்லாமல் ஒவ்வொருவரிடமும் பிரியாவிடை கூறி நடுத்தளத்துக்குச் சென்று கல்கி அவர்களைத்  தரிசித்து நன்றி கூறி வந்தோம். கோகுலம் அளித்த சீருக்கும் சிறப்புக்கும் நன்றி திரு. லதானந்த் சார். !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.



4 கருத்துகள்:

  1. அருமை ... தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி ... http://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  2. அருமையான விழாவில் நீங்களும் கலந்து கொண்ட விவரங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீமலையப்பன்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...