எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 மார்ச், 2014

சொர்க்கத்தின் எல்லை நரகம்.சொர்க்கத்தின் எல்லை நரகம் :-
=================================

மீனாட்சிக் குட்டிக்குச் சந்தோஷமாயிருந்தது. அவளின் சரோசாச்சி ஆபீஸுக்குப் போயிட்டாக. அய்ய்ய்ய். இன்னைக்கு என்ன இந்தக் குளிக்குற சோப்பையும், சீப்புப் பெட்டியையும், பவுடர் டப்பாவையும் வெளிய வச்சுட்டுப் போயிட்டாக.

அடுப்படிக்குப் போய்ச் சமயல் பண்ணின சாமான்களை எல்லாம் வெளக்க எடுத்து வச்சுப்பிட்டு, எல்லாச் சாமான்களையும் உள்ளே வெச்சுப் பூட்டிப்புட்டுத் தொவைக்குற துணி, வெளக்குற சாமான், மத்தியானம் குட்டிக்குத் திங்கக் கொளகொளத்துப் போன நேத்தைச் சோறும், சுண்டக்குழம்பும், மத்யானம் இட்டலிக்கு ஆட்ட அரிசியும், உளுந்தும் ஊற வைத்துவிட்டுப் போயிருந்தாள் சரோசாச்சி.

ஆச்சி வாசல் நடையைத் தாண்டித் தெருமுக்குக்குப் போறவரைக்கும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சிக்குட்டி வாசல் நடையில் இருந்த கட்டங்களில் ஒற்றைக்காலை மடக்கி நொண்டி விளையாட ஆரம்பித்தது. ஒரு ஆளாக எத்தனை நேரம் விளையாடுவது. துவைக்கப் போட்டிருந்த துணிகளில் விழுந்து புரண்டது. பத்துத் தடவை புரண்டதுக்கப்பறம் பார்த்தா ஏதோ மணத்துக் கிடந்தது.

துணி ஒண்ணொண்ணா எடுத்து உதறியது. ஒரு சினிமா டிக்கெட்டு விழுந்தது. பொறுக்கி வைத்துக் கொண்டது குட்டி. ஒரு ஊக்கு விழுந்தது. அதை எடுத்து ப்ளாஸ்டிக் வளைவியில் மாட்டிக் கொண்டது. படார் என்று மூடி பிரிந்து விழுந்தது ஒரு சோப்பு டப்பா. !. அதைப் பார்த்ததும் குட்டிக்கு ஆசை வந்தது குளிக்க வேண்டும் போல்.

சரோசாச்சி, அவள் மகன்கள் பாலு, சங்கர், அவுக வீட்டண்ணன் ( அவுக பேரு வேதாசலம்) எல்லோரும் போட்டுத் தேய்ந்து போன சோப்பு ஒன்றைக் குட்டிக்குக் குளிக்கக் கொடுப்பாள். முழு சோப்பைப் பார்த்ததும் குட்டிக்குக் குஷி பிய்த்துக் கொண்டது. சட்டை, பாவாடையைச் கழட்டிப் போட்டுப்புட்டு மூணு மணிக்கு எழுந்து ட்ரம்மில் பிடிச்சு வச்சிருந்த ( துவைக்க, விளக்க, வேண்டும் என்று ) தண்ணீரை மொண்டு ஊத்திக் கொண்டது.

சோப்புக் கட்டியை டப்பாவிலேர்ந்து எடுத்து ரெண்டு கையாலயும் பிடித்துக் கொண்டது. பெரீய்ய்ய்..ய சோப்பு.. பிடித்து வயிற்றில் தேய்த்தது. தலையில் பிடித்துத் தேய்த்துத் தண்ணீரை ஊற்றியது. அவுக வீட்டண்ணன் தேய்த்தால், ’புஸ், புஸ்’ என்று வருமே, அதை நினைத்துக் கையில் , ‘ சொய்ங், சொய்ங்’ என்று தேய்த்துக் கொண்டிருக்கும்போது தலையிலேர்ந்து சோப்பு வழிந்து கண்ணில் புகுந்தது. குதி குதியென்று குதித்துப் போகணியை எடுத்து அண்டாவைத் துழாவி, டிரம்மைப் பிடித்துத் தண்ணி அத்தனையும் தலையிலும் மேலிலும் கொட்டிக் கொண்டது. கீழே இருந்த சோப்பு, தண்ணி படப்படக் கரைந்து கொண்டு இருந்தது.

வெய்யில் உச்சிக்கு வந்து விட்டது. தண்ணி கொஞ்சம் போல டிரம்மில் இருந்தது. குட்டி துண்டை எடுத்துத் தலையில் துவட்டிக் கொண்டது. பாவாடை சட்டை போட்டுக் கொண்டதும் குதித்த குதியில் பசி வந்து விட்டது. எரிந்த கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டது. அடுப்படியில் வந்து ஒண்ணொண்ணையாத் தொறந்து பார்த்தது. ‘ஆச்சி இன்னைக்குக் கசாப்புப் பொறியலை டிப்பன் பாக்சில வச்சுக்க மறந்துட்டாக போலேருக்கே’.

ஒரு கணம் அதன் மணத்தை நுகர்ந்து பார்த்துச்சு. சபலம் தாங்காமல் ஒவ்வொன்றாய்த் தின்றுவிட்டுத் தண்ணி குடித்தது.’ நாந்தானே இன்னைக்கு மசாலை அரச்சேன். எனக்கு ஒரு துண்டு கூடத் தரல்லை..!’.

அப்படியே வந்து படுத்துப் புரண்டதும் தூக்கம் வந்து விட்டது. மூணு மணிக்கு முழிப்பு வந்து விட்டது. வெய்யில் முதுகைச் சுட்டுக் கொண்டிருந்தது. எழுந்து அரிசியைக் களைகிறேன் பேர்வழி என்று தண்ணீரை அரிசியில் ஊற்றில் களையாமல் இறுத்துக் கொண்டிருந்தது. ட்ரம் தண்ணி தீர்ந்துவிட்டது. களையும்போதே பாதி அரிசி வாய்க்கும் வயித்துக்கும் போய் விட்டது.

வெளியே வைத்திருந்த கண்ணாடியில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. குட்டிக்கு இது வேடிக்கையாயிருந்தது. அரிசியை வச்சுப்புட்டு, எழுந்து போய்க் கண்ணாடியில் முகம் பார்த்தது. பக்கத்தில் சீப்புப் பெட்டியில் ஆச்சி மூஞ்சியில் அப்பும் பசை இருந்தது. அப்பிப் பார்த்தா என்ன என்று தோன்றியது குட்டிக்கு. ‘லேட்டெ காலமி’ பாட்டிலைக் கையிலெடுத்துக் கவிழ்த்து முஞ்சியில், புருவத்தில், முடியில் அப்பிக் கொண்டது. ரோஸ் பவுடர் டப்பாவை எடுத்து மூஞ்சியில் பூசியது. திட்டுத் திட்டாக இரவு நேர வானின் வெள்ளை மேகமாய்ப் பவுடர் அப்பியது.

அடுத்துக் குட்டியின் கண்ணில் பட்டது கண்மைடப்பா. டப்பாவைத் திறந்து மையைக் கையில் வழித்தெடுத்துக் கன்னம் தாவாங்கட்டை, மூக்கு எல்லாம் தீற்றியபின் கண்ணில் போட்டுக் கொண்டது.

‘ஆகா.. தலையைச் சீவுணுமே..மறந்து போச்சு.’ எண்ணை அபிஷேகம் செய்து முடியை நுனிவரை பின்னியது. ஆச்சி தலையில் வைத்துக் கொள்ளும் சலங்கை வைத்த எலாஸ்டிக் கயிறு இருந்தது. அதை எடுத்து எலிவால் நுனியில் பின்னி விட்டது.

கண்ணாடியை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் அழகு பார்த்தது. நாக்கை நீட்டிப் பார்த்தது. கண் எரிந்தது, குளிக்கும்போது சோப்புப் பட்டதால், கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டது. கண்ணைச் சுற்றிலும் கருவச்சம் போட்டது போல மை. கண்ணாடியை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடியது. கண்ணாடி கீழே விழுந்து சில்லுச் சில்லாக உடைந்தது. குட்டி பயந்துபோய்விட்டது. 

வாசக் கதவைத் தட்டுற சத்தம் கேட்டுச்சு. வெய்யில் தாழ்ந்துவிட்டது. குட்டி போய்க் கதவைத் தொறந்தா.. சரோசாச்சி.. பாலு.. சங்கர்.. ? ஆச்சி பார்த்தா. ஒடைஞ்ச கண்ணாடித் துண்டு, துவைக்காத உருப்படிகள், விளக்காத சாமான்கள், அரிசியும் , உளுந்தும் அப்பிடி அப்பிடியே. தண்ணி இல்லாத டிரம், முடி பிசிறு பிசிறாய் அப்பி இருக்கும் சோப்பு, தோண்டப்பட்ட பவுடர் டப்பா, மை அப்பிக் கிடக்கும் ஸ்பான்ச், வெத்துக் கசாப்புச் சட்டி, குட்டி சடை நுனியின் குஞ்சலம், குட்டியின் அலங்காரம்..

பாய்ந்தாள்…. குட்டியின் தலையில் நறுக்கென்று நல்லா ஒழக்கு ரத்தம் வர்றாப்பலக் கொட்டினாள். குஞ்சலம் போய் மூலையில் விழுந்தது. தொடையைத் திருகி முதுகில் சாத்துப்படி வைத்தாள். மடேர், மடேரென்று, சும்மா ஒண்ணா, ரெண்டா, வரிசையா அடி. குட்டி ஸ்பிரிங்க் மாதிரி மூலையில் போய் விழுந்தது. பயத்துல பாவாடைல ஒண்ணுக்குப் போய்விட்டது. மூக்கில் சளி. பாவாடைய எடுத்துத் தொடைச்சுக்கிட்டுது. குட்டி கத்தலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை. ஒரு நாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது. சோப்பும், மையும் பட்டுக் கண் எரிஞ்சது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.

டிஸ்கி:- இந்தச்சிறுகதை 1985 ஃபாத்திமா கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்தது.

டிஸ்கி 2. :- இந்தச் சிறுகதை மார்ச் 1 - 15, 2014 அதீதத்திலும் வெளியானது.


2 கருத்துகள்:

  1. நல்ல கதை. வீட்டு வேலை செய்யும் பல சிறு பெண்கள் நிலை இப்போதெல்லாம் இன்னும் மோசம்...
    பதிலளிநீக்கு
  2. ஆம் வெங்கட். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...