எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

பயணங்களில் தொலைதல்..

கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”

தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.

எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..


சின்னப் பிள்ளைகளில் சாயங்காலம் ஆனாலே மனம்  அம்மாவைத் தேடும்.  ஒரு மாதிரி தனிமை பற்றி, இருள் பற்றி பயம். பாத்ரூமுக்குக் கூட துணைக்கு ஆள் வேண்டும். நிழல்கள் எல்லாம் பூதம் போல விஸ்வரூபமெடுத்து நடுங்க வைக்கும்.

அம்மாவின் முந்தானை மாதிரி , வீட்டினுள் அவள் இருப்பின் வாசம் மாதிரி நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயம் உலகத்தில் இல்லவே இல்லை..

ஒரு முறை பாலகுமாரன் கர்நாடகாவில் ஒரு ஜோல்னாபையும் ஜிப்பாவும் அணிந்து மேற்கொண்ட பயணத்தில் அங்கு அருந்திய ஒரு டீயைப் பற்றி எழுதி இருப்பார்., “ பாலும் சக்கரையும் கம்மி, சூடும்  சுவையும் அதிகம்” என்று. வீட்டிலேலே இருக்கும் நமக்கும் ஒரு காஃபி , டீ அருந்துவதிலேயே நாக்குக்கு இவ்வளவு பக்குவம் தேவையிருக்கிறதே என்று நம் எண்ணங்களை அவர் எழுதியது போல இருந்தது.

பரணீதரனின் சில பயணக் கட்டுரைகள் படித்திருக்கிறேன். மணியனின் பயணங்கள் பற்றியதும் படித்திருக்கலாம்  என நினைக்கிறேன்.   ஆண்கள் சட்டென்று வீட்டை விட்டுப் பயணம் கிளம்புவது என்பது எளிதாக இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன் ஒரு முறை அவர் புத்தகம் சம்பந்தமாக  ஒரு பௌர்ணமி இரவு முழுதும் நண்பர்களுடன் அளவளாவியது பற்றிக் கூறி இருப்பார். அவரது பயணங்கள் பற்றிய கட்டுரைகள் சுவாரசியமானவை.

ஆறு மனமே ஆறு இந்தப் பாடலைப்பார்க்கும் போதெல்லாம் ரங்கமணிக்குத் தானும் சிவாஜி போல வேர்க்கடலையைக் கொறித்துக் கொண்டு விட்டேற்றியாய் ஊர் சுற்ற மாட்டோமா என்ற ஏக்கம் வரும்.

பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் பயணம் பற்றிய ஏக்கம் இருக்கிறது. இருப்பதை எல்லாம் தூக்கிக் கிடாசிவிட்டு கிளம்பிவிட மாட்டோமா என்று.. குடும்பம் , குழந்தைகள், கல்வி, எதிர்காலம், முதுமைக்கான சேமிப்பு என வாழ்க்கையின் பெரும்பகுதி அலுவலகங்களிலேயே  அடகு வைக்கப்பட்டு விடுகிறது. பயணங்களைத் தொடங்கும் போது முதுமை வந்து விடுகிறது.

ஒரு கடம்பாவிலோ, ஆகாரத்திலோ ( AHAARAM -- BHOJANALAYA ) ( பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ஹோட்டல்கள். ) எது வாங்கினாலும் கால் பங்கு கூடத் தின்ன முடியாமல் தூரப் போட வேண்டியதாக இருக்கு தமிழ்நாட்டு நாக்குக்கு. இதில் எதை விட்டு விட்டு எதைத் தேடி எங்கே போகப்போகிறேன். உண்பதிலிருந்து, உடுத்துவதிலிருந்து, ( லக்கேஜ் எங்கே, குழந்தைகள் எங்கே.எல்லாம்  வந்து சேர்ந்தாச்சா .)  தங்குமிடத்திலிருந்து சுற்றிப்பார்க்கச் செல்லும் ஊர்திகள் வரை பக்காவாக முடிவு செய்தபின்னேதான் சாதாரணப் பயணமே துவங்குகிறது.

இதில் எதை விட்டு எங்கு பயணிக்க.. ஹ்ம்ம். எதையுமே செய்யாமல் செய்யத் துணியாமல் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது.. ஒரு அறையில் அமர்ந்தோ, படுத்தோ  விட்டம் நோக்கிய சிந்தனையில் தொலைவது கூட சாத்யப்படுவதில்லை.. ஏதோ ஒரு இருப்பின்மை தொற்றிக் கொண்டே இருக்கிறது.

எதிலிருந்தாவது விடுபடும் எண்ணம் வரும்போதெல்லாம் படிப்பது என்பதும், எழுதுவது என்பதும் கூட ஒரு பயணமாகத்தான் இருக்கிறது.

தான் தொலைவதும் தன்னைத் தொலைப்பதும் பற்றிய எண்ணங்கள் வரும்போதெல்லாம், மனம் சோர்வுறும் போதெல்லாம் முகநூலில் சந்தோஷத்தை, அதன் அழகை, ஒரு சம்பவத்தை, ஒரு தன்னம்பிக்கையை, ஒரு தூண்டுதலை  எளிமையாகப் பகிர்ந்து கொள்ளும் தோழமைகளோடு மானசீகமாகப் பயணிப்பதுதான் தற்போதைய ஒரே ஆறுதல்.

5 கருத்துகள்:

  1. எதிளிருந்தாவது விடப்படும் எண்ணம வரும் போதெல்லாம் படிப்பது என்பதும்,எழதுவது என்பதும் கூட ஒரு பயனமாகத்தான் / இருக்கிறது ....
    நிஜமான வரிகள் தோழி... எங்களை போன்றோருக்கு முன்னது மட்டுமே சாத்தியமாகிறது .

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஆசைகள் இலவுகாத கிளியாய் இருக்கும் போது ஆறுதலாய்
    //எதிலிருந்தாவது விடுபடும் எண்ணம் வரும்போதெல்லாம் படிப்பது என்பதும், எழுதுவது என்பதும் கூட ஒரு பயணமாகத்தான் இருக்கிறது.//

    பதிலளிநீக்கு
  3. எழுதுவது, படிப்பது - மனமாற்றத்திற்கு கண்டிப்பாக ஒரு வடிகால் தான்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி இயற்கை அனு

    நன்றி பூவிழி

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...