திரையிலும் கோலோச்சும் நகரத்தார் நட்சத்திரங்கள்
பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள்,
பத்திரிக்கைகள், பங்குவர்த்தகம், வங்கிகள், தனவணிகம் மட்டுமல்ல திரைப்படத்
துறையில் தயாரிப்பிலும் இயக்கத்திலும் ஏன் நடிப்பிலுமே கூட ஜொலிப்பவர்கள்தான் நம்
நகரத்தார் நட்சத்திரங்கள். சிலர் ஹீரோ ஹீரோயின் ரோலிலும் மற்றும் அநேகர்
குணச்சித்திர, துணைக் கதாபாத்திர மற்றும் எதிர்நாயகன் பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
கானாடுகாத்தான் ஆணழகன் சிதம்பரம் அவர்களின் மகன்
திரு அருண் சிதம்பரம் கனவு வாரியம் என்ற படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாக ஒரு
மாதிரி கிராமத்தைப் படைத்துள்ளார். படிக்காதவனாக இருந்தாலும் சாதனை படைக்க
முடியும் என்பதுதான் கரு. இரண்டு ரெமி விருதுகள், ஏழு உலகப்பட விருதுகள் பெற்ற
படம் அது.
காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் திரு சிதம்பரம் அவர்களுக்கு 80 வயது. ரஜனியின் எஜமானில் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஏதோ ஒரு பாத்திரத்தில் தோன்றி இருக்கிறார். வாங்க எஜமான் என்று ரஜனியை அழைக்கும் விவசாயிகள் சீனிலும் நாடகக் கொட்டாய் சீனிலும் எஜமானில் நடித்துள்ளார். சிவகாசியில் விஜய் வீட்டை வாங்க வரும் அப்பச்சியாகத் தோற்றம் தருவதும் இவரே. அவ்வை ஷண்முகியில் ஒரு இண்டர்வியூ காட்சியிலும் விஜய்காந்துடன் ஆறேழு படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் பூஜை படத்திலும் விக்ரமுடன் சாமி படத்திலும் ஓரிரு சீன்களில் தோன்றியுள்ளார்.
பள்ளத்தூரைச் சேர்ந்த திரு எஸ் எம் இராமநாதன்
கண் திறந்தது, கறுப்புப் பணம், கருந்தேள் கண்ணாயிரம், நினைவில் நின்றவள், தேடிவந்த
லட்சுமி ஆகிய படங்களிலும் அதன் முன்பு நாடகங்களிலும் நடித்தவர்.
நடிகர் திரு காசி ஓரிரு படங்களில்
தோன்றியுள்ளார். தோற்றத்தில் தம்பி ராமையா போலவே இருப்பார். இவர் எங்கள் ஊனையூர்
முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவிலுக்கு நிறையத் திருப்பணிகள் செய்துள்ளார்.
தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பரிணமித்துள்ளார்
திரு பி.எல்.தேனப்பன். முத்துவில் ஆரம்பித்து நெல்லை சந்திப்பு, குரங்கு பொம்மை,
வேழம், தக்ஸ், காசேதான் கடவுளடா ஆகியவற்றில் நடித்துள்ளார். போர்த்தொழிலில் மகளை
இழந்த இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவாகக் கலங்க வைத்து விடுவார். மகாராஜாவில் ராம்கி சலூன் உரிமையாளராக சில
காட்சிகளில் வருவார்.
திரு. சுப்பு பஞ்சு அருணாசலம் தூங்காநகரம்,
மங்காத்தா, தலைவா,அரண்மனை 2, சித்திரம் பேசுதடி 2, சொப்ன சுந்தரி, கோட், என
கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நம்மவீட்டுப் பிள்ளை, பொன்
மகள்வந்தாள் என எம்ஜிஆர், சிவாஜி படப் பாடல்களின் தலைப்புகளிலும் நடித்துள்ளார்!.
சேட்டையில் கமிஷனர் விஜயகுமார். செல்ஃபோனோடு கடத்தப்பட்ட தனது வைரத்தைத் தேடி
வந்து கலகலப்பில் வைரப்பல்லோடு கலக்கி இருப்பார். முடிவில் மாடியிலிருந்து
பொத்தென்று விழுந்து போய்விட்டாரோ என நினைக்கும்போது ஸ்ட்ரெச்சரில் தனது தலையைத்
தூக்கி வைரப் பல்லைக் காண்பித்துக் கலகலப்பூட்டி இருப்பார்.
திரு.ஏ எல் அழகப்பன் ஈசனில் சிறந்த எதிர் நாயகன்
விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர். துணிவு படத்தில் முதலமைச்சர். திரி, மழை
பிடிக்காத மனிதன், பரமபதம் விளையாட்டு ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் சில
படங்களைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விஜய் இவரது மகன்.
பார்த்திபன் கனவுக்காக இயக்கத்துக்கும், சதுரங்கம் படத்துக்காக திரைக்கதை வசனத்துக்கும் தமிழக அரசின் விருது பெற்றவர் திரு. கரு பழனியப்பன். ஷூட்டிங்க் ஆரம்பித்து சில பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த சதுரங்கத்தை வலைப்பதிவர்களான நாங்கள் 2011 இல் பிரசாத் லேபில் எங்களுக்காகவும் பத்திரிக்கையாளர்களுக்காகவும் ஸ்பெஷலாகத் திரையிடப்பட்ட பிரிவியூ ஷோவில் கண்டு களித்தோம். பிரிவோம் சந்திப்போம் இவர் இயக்கிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட செட்டிநாட்டுப் பெண்ணான சிநேகாவின் கதை. இவர் நடித்த மந்திரப் புன்னகை சிஸோஃபிர்னியா பாதித்த மனிதனின் மனநிலையைச் சொன்ன கதை.
மந்திரப் புன்னகை.. நல்ல மர்மம் கொண்ட புன்னகைதான்... புதிதாக ஹீரோவாயிருக்கும் கரு. பழனியப்பன் நல்ல திராவிட நிறம் கொண்ட வெகு இயல்பான ஹீரோ.. நிச்சயம் இந்தக் கதையில் இவரால்தான் சிறப்பாக செய்ய முடியும்.. என்ன., இவர் வசனம் போல பேச்சுத்தான் பலமும்... சொற்ப இடங்களில் பலகீனமும். கரு. பழனியப்பனின் எழுத்தின் வசியம் அருமை.. பெரிய நிறுவனங்களே விளம்பரங்களை நம்பி இருக்கும் நிலையில் தியேட்டரில் பெரும் பகுதிஅவரின் வசனங்களுக்காகவே ரசித்தார்கள்.. அவரிடம் படைப்பாக்க நெருப்பு இருக்கிறது . கொஞ்சம் கவனமாக உபயோகப்படுத்தினால் உச்சம் தொடுவார்.
மகாநதியில் ஸ்மைல் ஸ்மைல் அண்ட் பீ எ வில்லன்
என்பது போல் புன்னகை புரிந்து கொண்டே நல்லவன் போன்ற அல்லவன் வேஷத்தில்
நடித்திருப்பார் திரு. மோகன் நடராஜன். இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. பூக்களைப்
பறிக்காதீர்கள் உட்பட எட்டு படங்கள் தயாரித்திருப்பதோடு பட்டியல், புதல்வன்,
சாம்ராட், பாட்டுப் பாடவா என மகாநதி உட்பட ஐந்து படங்களிலும் நடித்திருக்கிறார்.
திரு. பழ கருப்பையா திருவண்ணாமலை, சர்க்கார், தாரை தப்பட்டை, ஹரா,
அங்காடித் தெரு ஆகியவற்றில் நடித்துள்ளார். அங்காடித் தெருவில் அண்ணாச்சி பாத்திரம்.
தாரை தப்பட்டையில் தனது அபரிமிதமான பணத்தின் பலத்தில் வாடகைத் தாய் மூலம் வாரிசு
வேண்டும் பணக்காரர் பாத்திரம். ஹரா உட்பட மூன்று படங்களில் முதலமைச்சர் பாத்திரம்.
ஹராவில் மருத்துவத் துறையில் ஊழல் புரியும் அமைச்சர் வனிதா விஜயகுமார் முடிவில்
தனது துறையைக் காப்பாற்றிக் கொள்ள பல்டி அடிப்பார்.
பராசக்தியில் நீதிபதி, கவலை இல்லாத மனிதனில்
சிறப்பு விருந்தினர், அபூர்வ ராகங்களில் சிறப்புத் தோற்றம், வேலும் மயிலும்
துணையில் கண்ணதாசனாகவே கவியரசு திரு. கண்ணதாசன் தோன்றி இருக்கிறார்.
சூர்யகாந்தியில் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்று
மேடைப் பாடகராகத் தோன்றியிருப்பார். உமர் கய்யாமின் ரூபாயத்தின் இன்ஸ்பிரேஷனில்
”ஒருகோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று பாடும்
கண்ணதாசனும் ஒரு அமரகவிதான்.
திரு. அண்ணாத்துரை கண்ணதாசன் சின்னப் பூவே
மெல்லப் பேசு, தங்கப் பாப்பா, சிந்தனை செய் ஆகிய படங்களில் நடித்தவர். ஜாம்பவான்
படத்தில் விவேக் டாக்டராக இருப்பார். அவரிடம் வைத்தியத்துக்கு வரும்
படிப்பறிவில்லாத பஞ்சாயத்துத் தலைவர். அனா வைப் பார்த்து இதுதான் அனாவா. என்று
கேட்பதெல்லாம் கவியரசர் மகன் செய்யும் உச்சக் கட்டக் காமெடி. இன்னொரு படத்தின்
காமெடியில் இவரே மருத்துவராகி விவேக்குக்குத் தவறான ஆபரேஷன் செய்துவிடுவார்.
அதுபற்றி விவேக் இவரிடம் கேட்க வரும்போது ஆஸ்பதிரி வார்டு பாய் வந்து டாக்டர்
நீங்க ப்ளஸ்டூவுல பாஸாயிட்டீங்க என்று பேப்பரைக் காட்டுவார். ஒரு கண்ணை வைத்து
நான் அட்ஜஸ்ட் செய்து கொள்வது மாதிரி நீங்களும் ஒரு காலை வைத்து அட்ஜஸ்ட்
பண்ணிக்குங்க என்று விவேக் சுட்டுவிடுவார். சிரித்து மாளாது.
எனக்குத் தெரிந்து ”கம்மங்காடே கம்மங்காடே” என்று பாடி அழகாக ஆடிய விசாலி கண்ணதாசன்தான் நான் அறிந்த நகரத்தார் பெண். கண்ணதாசன் போன்ற முகவெட்டு, ஜாடை ஏன் கண் கூட அப்படித்தான். கே பாலசந்தர் கேட்டுக் கொண்டதால் வானமே எல்லை படத்தில் அப்படி ஒரு பாடலுக்கு நடித்ததாகக் கூறியுள்ளார். இதில் வருத்தப்பட ஏதுமில்லை ஏனெனில் பருவப் பெண்ணாக அதுவும் ஒரு கேரக்டர் என்ற அளவில் மிகவும் வலுவானதுதான். ஏனெனில் அதன் பின் காதலனின் தந்தை தாயை மணந்ததும் அவரது ஆக்ரோஷம், கோபம், ருத்ரம் வித்யாசமானது. சிறந்த நடிப்புக்குப் பாராட்டுகள் விசாலி.
தனவணிகராக திரு வி என் சிடி அவர்கள் ராசி
படத்தில் மனிதநேயமுள்ள தர்ம வட்டி வாங்கும் நகரத்தாராகவே நடித்து முத்திரை
பதித்துள்ளார்கள். தூங்கா நகரம் படத்தில் வில்லன் ரோல். அதில் முடிவில் விமலிடம்
அவர் பேசும் வசனம் என்னதான் எதிர்நாயகன் என்றாலும் கலங்க வைத்தது.
திரு வி என் சிடி வள்ளியப்பன் அவர்கள் எக்கோவில்
சைக்கலாஜிக்கலாகப் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாந்தை ட்ரீட்மெண்ட் செய்யும் டாக்டர்
பாத்திரம் ஏற்றுள்ளார். பர்ஃபெக்ட் டாக்டராக இவருடைய ஆங்கில உச்சரிப்பு அதில்
சிறப்பு. எம்பிரானிலும் ராதிகா ப்ரீத்திக்கு மருத்துவம் செய்யும் டாக்டர்
கதாபாத்திரம். இவர் நடித்த இன்னொரு படம் சிகரம் தொடு.
புகழ் படத்தில் கல்வி அமைச்சர் பாத்திரம்.
வெள்ளை வேஷ்டி சட்டையில் தோளில் துண்டுடன் கம்பீரமாகக் காட்சி தருவார். ஜெய்
எவ்வளவு மோதியும் அசராமல் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நாளைக்கு நமக்கு ஒரு
தேவைன்னா அமைச்சரைத்தான் பார்க்கணும் என்று மாரிமுத்துவிடம் பேசும் வசனமும்,
கட்சிப் பொதுக்கூட்ட மேடையில் தனது கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டால் எத்தனை
கூட்டம் போட்டாலும் கூடப் பத்தாது என்று அஸால்டாக அடுக்கும் பாங்கும் யதார்த்தம்.
இவர்கள் குடும்பத்தின் இன்னொரு இளைய நடிகரையும்
குறிப்பிடாவிட்டால் இக்கட்டுரை முழுமையாகாது. தன் சகோதரர்களின் மேல் அபார
பாசத்துடன் என்றென்றும் தன் புன்னகையாலும் நலம்தரும் இனிய சொற்களாலும் அனைவரையும்
நட்பாக்கும் என் முகநூல் நண்பரும் தயாரிப்பாளரும், கமலா திரையரங்க அதிபர்களில்
ஒருவருமான திரு. கணேஷ்தான் அவர்.
நகுலுடன் வல்லினம், அருண் விஜயுடன் குற்றம் 23,
அஜ்மலுடன் நுங்கம்பாக்கம், கிருஷ்ணாவுடன் பண்டிகை, ஷக்தியுடன் தற்காப்பு,
புதியதோர் உலகம் செய்வோம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதிலும் நுங்கம்பாக்கத்தில்
ஒரு கைதி சட்டத்தின் ஓட்டைகளில் தப்பித்துவிடக் கூடும் என்பதால் என்கவுண்டர்
ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆஃபீசர் போல ”அவனைப் போட்டுத் தள்ளிரலாம் சார்” என அதிரடியாகப்
பேசுவது அட்டகாசம். கனத்த குரல் இவரது ப்ளஸ் பாயிண்ட். ஸ்டைலான நடை உடை பாவனை
கொண்ட இவர் இன்னும் பல படங்கள் தனித்தே செய்யலாம்.
சிறு வேடங்களானாலும் அவை கதையின் போக்கை மாற்றக் கூடியவை. சப்போர்ட்டிங் கேரக்டராகவோ, எதிர் நாயகனாகவோ, குணச்சித்திரப் பாத்திரமோ அனைவருமே தமக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத துறையிலும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். நகரத்தாரில் நடிகர்கள் ஓரிருவர்தான் இருக்கக்கூடும் என்ற எண்ணியபடி அவர்களைத் தொகுத்தபோது பிரமிப்பாய் இருந்தது. கிட்டத்தட்டப் பதினாறு பேர். இத்துறையிலும் முத்திரை பதித்துள்ள நகரத்தார் நட்சத்திரங்களுக்கு நிறைய நிறைய அன்பும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)