எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்


பரம வைணவக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரனே பரமென்று சொல்ல முடியுமா. அப்படிச் சொல்ல மட்டுமல்ல அது உண்மை என்றும் நிரூபித்தார் ஒருவர். அவர்தான் சுதர்சனர் என்னும் அரதத்தர். சிவனே அவருக்கு அரதத்தர் என்னும் இப்பெயரைச் சூட்டினார் என்பதெல்லாம் இறைச் செயல்தானே.

கஞ்சனூர் என்னும் ஊரில் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமாலே முழு முதல் தெய்வம். எனவே மாற்று சமயமான சைவத்தை நிந்தித்து வந்தார்கள். அவர்களுள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்த வாசுதேவர் என்ற பஞ்சாத்திர வைணவரும் இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சுதர்சனர்.

முன்பொரு சமயம் நடந்த தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவின் சக்ராயுதம் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மனைவி சுகீர்த்தியையும் வீழ்த்தியது. அப்போது அங்கு வந்த சுக்ராச்சாரியார் அமிர்தசஞ்சீவினி மந்திரத்தை ஜெபித்து மனைவியை உயிர்ப்பித்ததோடு தன் மனைவியைக் கொன்ற விஷ்ணு பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும் படி சபித்தார். அதனால்தான் விஷ்ணுவின் அம்சமான சுதர்சனர் வாசுதேவரின் மகனாகப் பிறந்தார்.

குழந்தை சுதர்சனரின் மனதில் சிவபெருமானின் மேல் பக்தி மேலோங்கியதால் பேசும் பருவம் வந்ததுமே,”சிவ சிவா”” என்றார். இதைக் கேட்டு வெகுண்ட வாசுதேவர் சுதர்சனரைக் கண்டித்தார். அவர் கண்டிப்பு அதிகமாக ஆக சுதர்சனரோ அக்னீஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வந்து தந்தையின் கோபத்தை அதிகப்படுத்தினார். உடனடியாகக் குழந்தை சுதர்சனருக்கு உபநயனம் செய்துவித்து, ”இனி நீ நாராயண நாமத்தைத்தான் உச்சரிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் வாசுதேவர்.


ஆனால் சுதர்சனரோ அக்னீஸ்வரர் ஆலயத்துக்கு அன்றைய மதியமே சென்று மாத்யானிகம் செய்து பஞ்சாட்சரத்தை ஓதினார். கோபம் இன்னும் அதிகமாக சுதர்சனரை அவர் தந்தை வீட்டை விட்டுத் துரத்தினார். கோயிலுக்குச் சென்று தங்கிய சுதர்சனர் அங்கேயே இரவு சிவபாராயணம் செய்தபடி உறங்கினார். என்னே ஆச்சர்யம். அவர் கனவில் சிவன் தட்சிணாமூர்த்தி ரூபமாய்க் காட்சி தந்து வேதாகம புராணத்தையும் தர்ம சாஸ்திரத்தையும் உபதேசித்து அரனால் தத்து எடுக்கப்பட்டவர் என்ற பொருளில் “அரதத்தர்” என்ற நாமத்தைச் சூட்டினார்.

மறுநாள் விடிந்ததும் வீட்டிற்கு வந்த அரதத்தர் தந்தையிடம் ”சிவனே பரம்” என்று வேதப் பொருள் உரைத்தார். பல்வேறு விதமாக வாதம் புரிந்து சுதர்சனர் தாம் கண்ட உண்மைப் பொருள் பற்றிக் கூறியும் அவரது தந்தை வாசுதேவர் அதை எல்லாம் மறுத்தார். மேலும் “ சுதர்சனா, நீ கூறிய அனைத்தும் உண்மை என்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மேல் ஏறி நின்று அது சத்தியம் என்று கூற வேண்டும்” என்று கூறினார்.


அரதத்தரும் சம்மதிக்கவே இருவரும் ஆன்றோர் சான்றோர், சைவ வைணவ அடியார்கள் புடை சூழ வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் சென்றார்கள். அங்கோ கருடாழ்வார் சன்னதியின் முன்பு நெருப்பில் இடப்பட்டுச் செம்பவளத் தட்டாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது ஒரு இரும்புப் பீடம். சுற்றியிருப்போரெல்லாம் பதைக்கப் பதைக்க குழந்தை சுதர்சனர் அதன் மேல் ஏறி நின்று சிவபெருமான் தனக்கு உரைத்த வேத சாஸ்திரங்களைக் கூறி சிவனே பரம் என்று உறுதிபடக் கூறினார்.

இதைக் கேட்டு விண்ணவர்கள் பூமாரிப் பொழிய அரதத்தரின் தந்தையும் மகன் சுதர்சனரை அரதத்தராக ஏற்றுக் கொண்டார். அவருக்கு உரிய பருவம் வந்ததும் சுப்ரதீபர் என்பவரின் மகள் பங்கஜவள்ளி என்பவளுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகாதேவன், நீலகண்டர், சங்கரர், சந்திரசேகரர், சாம்பசிவன், மகாலிங்கம், கோமுதீசன் என்று ஏழு மகன்களும் கற்பகம், மீனாக்ஷி என்று இரண்டு மகள்களும் பிறந்தார்கள். தினமும் காவிரியில் நீராடிப் பஞ்சாட்சரம் ஓதுவதும், சிவபூஜை செய்வதுமாய் வாழ்ந்து வந்தார் அரதத்தர்.


அவ்வூரில் தேவசம்பு என்ற அந்தணர் ஒருமுறை புல்கட்டு ஒன்றைக் கொண்டு வந்து கட்டுத்துறையில் போடும் போது அது இளங்கன்றின் மேல் பட்டு, புல்கட்டின் சுமையால் அந்தக் கன்று இறந்தது. அதைக் கண்டு பதறி அவர் சிவ சிவ எனக் கூறினார். இதைக் கேட்ட அவ்வூர் வேதியரோ காசிக்குச் சென்றால்தான் அப்பாவம் நீங்கும் எனக் கூற அவரோ அரதத்தரிடம் தான் அறியாமல் செய்த செயலுக்காகக் காசிக்குப் போவதென்பது ஏழையான தன்னால் இயலாதென்பதைக் கூறி முறையிட்டார். அரதத்தரோ அறியாமல் செய்த பாவம் அவரைச் சேராது எனக் கூறி சிவன் நாமத்தைக் கூறியதால் அப்பாவமும் நீங்கியது என்று சொன்னார்.

ஊரார் ஏற்காமல் போகவே சிவபெருமான் ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு ஒரு பிடி அருகம்புல்லைக் கொடுக்கும்படிக் கூறினார் அரதத்தர். பயபக்தியோடு அந்த அந்த அந்தணர் ஒரு பிடி அருகம்புல்லைக் கொடுக்க அந்தக் கல் நந்தியோ அருகம்புல்லை உண்டது. இதைக் கண்டு வியந்த ஊரார் சிவநாமத்தின் சிறப்பையும் அரதத்தரையும் போற்றினர்.

அரதத்தரின் தமக்கைக்கு கங்காதரன் என்று ஒரு மகன் இருந்தான். பிறவியிலேயே கால் ஊனமாகப் பிறந்தவன் அவன். அவனுக்குக் காசி சென்று விசுவநாதரைத் தரிசிக்க ஆசை. அரதத்தரிடம் அவன் தன் வேண்டுகோளைக் கூற அவரோ சிவ நாமத்தைக் கூறிக் காவிரியில் மூழ்குமாறு கூறினார். அவனும் நம்பிக்கையுடன் சிவநாமத்தைக் கூறியபடி காவிரியில் மூழ்கி எழும்போது அது கங்கையாகி இருந்தது. அதன் கரையிலோ காசி விஸ்வநாதர் ஆலயம் தென்பட்டது. மனமகிழ்வுடன் அவன் காசி விசுவநாதரைத் தரிசித்துத் திரும்பக் கங்கையில் மூழ்கி காவிரியில் எழுந்து கஞ்சனூர் வந்தடைந்தான்.

இவ்வாறு சிவனே பரமென்று உலகோருக்கு உணர்த்திய அரதத்தர் தைமாதம் வளர்பிறை பஞ்சமி நாளில் சிவனருளால் கைலாயம் சென்றடைந்தார். விஷ்ணுவே சுதர்சனராகப் பிறந்ததும் அரிதத்தராக சிவனால் நாமம் சூட்டப்பட்ட அவர் சதுர்வேத சங்கிரகம் அல்லது சுருதி சூக்தி மாலை, பஞ்ச ரத்ன மாலை, ஹரிஹர தாரதம்ய ஷட்கம் ஆகியன இயற்றி  சிவனின் மகிமையை உலகோர் அறியும்படிச் செய்ததும் வியத்தகு இறைச் செயல்கள்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...