ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

அத்திப்பூ

தொழில் நுணுக்கத்தோடு
ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..
அது உன் இதமான பேச்சாய்
என் மூச்சிலும் இரண்டறக் கலந்து..
நான் நினைக்கும் போதெல்லாம்
என் சுவாசத்தைப் போல் உன்னையும்
என்னுள் நிரப்பிக் கொள்கிறேன்
உன் நறுமணத்தோடு...
நீ வந்து சென்ற பின்னும் உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்..
நினைவடுக்குகளில் சாம்பிராணியும் .,
ஊதுபத்தியும்., குங்கிலியமுமாய்...
மலைக்காடுகளில் ஒரு நதியைப்போல்
ஒளிந்தோடிக் கொண்டிருந்தேன்..
நீர் வீழ்ச்சியின் பின்
ஒரு பாறைச்சுழியாய்
நீ எனக்காய்க் காத்திருந்தாய்...
ஓடிவந்து வீழ்ந்தேன் ..
எழவே முடியவில்லை..
உன்னுள்ளே சுற்றிக்கொண்டு......

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
நலமா .? எப்படி இருக்கிறீர்கள் .?.உங்கள் அன்பு
தோய்ந்து நானும் நலம் அம்மா...

உங்கள் எழுத்துப்பயணத்தில் எங்கேனும் இளைப்
பாற வேண்டுமெனில் எங்கள் இதயம் இருக்கிறது
அம்மா.. அருவி போல அணைத்து ஓடி கூழாங்
கற்களாய்க்கிடந்த எங்களை ( நான்., உமாமகேஸ்.,
சிகப்பி., இன்னும் பலர்) சாளக்கிராமமாய்
மாற்றினீர்கள்...கனவுச் சிறகு பொருத்தி திசை
யற்றுத்திரிந்த பறவைகளான எங்களை புலம்
பெயர் பறவைகளாக்கி பெயர் பெறும் பறவை
களாக்கினீர்கள்..நிமிர்ந்த நன்னடை., நேர்கொண்ட
பார்வை.,கம்பீரக்குரலால் எங்களை ஆட்சி செய்த
பேரரசி ...!!!குறைவொன்றுமில்லை அம்மா.
உங்களின் நிறைவான அன்பில் நான் ...!!!
.
என் அத்தைக்கு உங்கள் அம்மா தலைமை
ஆசிரியையாக வந்ததும் சிவகங்கைப்பூங்காவில்
பலவருடம் கழித்தும் அவர்கள் கண்டு கொண்டு
அணைத்துக்கொண்டதும் அதேபோல் உங்களையும்
நானும் காணும் ஆவலில்.....எங்கே .,எப்போது.,
என்பதாய் ...இந்தியத் தலைநகரில் நீங்களும்.,
தமிழகத்தலை நகரில் நானும் உங்களின் வருகை
யை எதிர் நோக்கி.. வாழ்க்கை வட்டத்தில் சுற்றி
வந்து உங்கள் எழுத்து மூலமே உங்களைக்
கண்டடைந்து....., எனக்கும் ஒரு வலைத்தளம்
அமைத்து இதெல்லாம் நம்பவே முடியவில்லை ..

என்றும் நீங்கள் எங்கள் சரஸ்வதி... வீணை மீட்டும்
ஒலி எப்போதும் கேட்கிறதே.. வலை வழியாய்.,
நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்
கிறது அம்மா... சொட்டுச் சொட்டாய் அருந்தக்
கிடைக்கும் அமிர்தம் போல் உங்கள் எழுத்து. ..
சாகாவரம் பெறும் ஆசையில் நான் பருகிப்பருகி..
இறப்பே இல்லை உயிர்த்தே கிடப்பேன்...தடை
ஓட்டங்களிலும் தாண்டிச் செல்லப் பயிற்றுவித்த
தோழி., வழிகாட்டி.,ஆசிரியை. தொடுவானம்
போல் நீங்கள் ..உங்களைத்தொட்டு விடும்
ஆசையில் நான்..

உங்களுக்கு அகவை அறுபதா.. ? பிரபஞ்சச் சுருளில்
எங்கெங்கோ உழன்றாலும் என் நினைவு உங்களைச்
சுற்றும் கோளாய் ,,,உங்களிடமிருந்தே அனைத்தை
யும் பெற்றேன்.. அதைக்கொண்டே என்னைத் திருத்தி
உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.. என்னைப்போல..
இன்னும் பலரைச் செதுக்க அம்மா உங்கள் செல்லப்
பெண் மனம் நெகிழ., மகிழ்வு பொங்க வாழ்த்து
கிறேன் நூறாண்டு வாழ்க....!!!!

டிஸ்கி:- பாத்திமாக் கல்லூரியில் எனக்குத்தமிழ்
பயிற்றுவித்த என் தமிழன்னை எம்.ஏ.சுசீலாம்மா
அவர்களுக்கு நாளை அறுபது வயது பூர்த்தி
ஆகிறது.. அவர்களைப் பற்றி முழுமையாக
எழுத இந்த இடுகை போதாது.. அவர்கள் வலைத்
தளம் சென்று இந்த வயதிலும் பேரன்போடும்
பெருமுயற்சியோடும் நம்மை வழிப்படுத்த
எழுதும் அவர்களுக்கு வலைப்பதிவர் அனைவர்
சார்பிலும் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டு
கிறேன் அவர்கள் வலைத்தளம்...
http://masusila.blogspot.com/

புதன், 24 பிப்ரவரி, 2010

நாராயணன் O M S

சில பேரை நாம் சந்திக்கும் போது தெரியாது .,
இவர்கள் நம் வாழ்வில் சில நாட்கள் உடனிருந்து
உதவி செய்து நீங்காது நினைவிலிருப்பார்
களென்பது. .அவர்களுள் ஒருவர் திரு நாராயணன்
அவர்கள்.. நடைப்பயணமாக 36 ஆண்டுகள் சென்று
வந்த பின் தன்னுடைய அனுபவமும் வழிகாட்டு
தலும் பிறருக்கு உதவட்டுமென சேவை செய்பவர்
களுள் இவரும் ஒருவர். "ஓம் சேவகா சர்வீஸ்"
என்பது இவரது சேவை அமைப்பு..
இவர் ஏற்பாடு செய்த வேனில் எங்கள் பொருட்
களை எல்லாம் எடுத்து ஒரு ட்ரைவர் .,ஒரு
உதவியாளர் உடன் வந்தார். கிளம்பும்போது
நம்முடைய படுக்கை .,உடைகள்., பை போன்ற
சாமான்களை ஏற்றிவிட வேண்டும்.. கையில்
ஒரு ஜோல்னா பை போதும்..

படுக்கையை எங்கள் அம்மா நாங்கள் செல்லும்
முன்பே தயார் செய்து வைத்து இருந்தார். பழனி
அண்ணனிடம் கொடுத்து அலசி காயவைத்து
கட்டி தயாராய் இருந்தது ..ஒரு டார்பாலின் ஷீட் .,
அதனுள்ளே ஒரு சென்டெக்ஸ் சமுக்காளம்.,
குட்டித்தலையணை., ஷால்., ஸ்வெட்டர்., மப்ளர்.,
டர்க்கி டவல் எல்லாம் ..மூவருக்கும் மூன்று
ஜோல்னாபைகள். அதில் விபூதிப்பை., சீப்பு.,
சின்ன துவாலை., தண்ணீர் பாட்டில் .,
பிஸ்கட்டுகள் சீனி கலந்த பொரிஅரிசி மாவு .,
நல்லெண்ணை குட்டி பாட்டில்., பிரஷ்., பேஸ்ட்,
காதுக்கவசம்(ஏர் காப்)., டார்ச் லைட்., சில
பாலிதீன் பைகள் .,ரப்பர் பாண்டுகள்., ஒரு சின்ன
மக் ..நாங்கள் மூவரும் எங்கள் செல் போன்.,
சார்ஜர் .,மணிபர்ஸ் போன்றவை வைத்துக்
கொண்டோம்.. தம்பிகளிருவரும் நல்ல பட்டை
பெல்ட்டில் பணம் வைத்துக் கொண்டார்கள்.
பயணத்தின் போது தாய் செய்வதை யாரும்
செய்ய முடியாது என முத்தி அக்கா சொல்வது
ஞாபகம் வந்தது ..
ஒவ்வொரு4 அல்லது5 கிலோ மீட்டர்களுக்கும்
கிளம்பும் முன் திரு நாராயணன் சேரவேண்டிய
இடத்தின் தூரமும் அடையாளமும் சொல்லி
விடுவார்கள்.. பெட்ரோல் பங்க்., ஸ்கூல் அல்லது
பாங்க் என்று.. அதற்கு பக்கத்திலேயே இறைவன்
திருவுருவமும் பேனரும் தாங்கிய வேன் நிற்கும்..
போன் இருந்ததால் அவரை அவ்வப்போது தொடர்பு
கொள்ள வசதியாக இருந்தது ..தங்கிய எல்லா
இடத்திலும் பாட்டரி ரீசார்ஜ் செய்து கொள்ள
முடிந்தது.. வேனில் கூட.. கிளம்பும் முன்பே ஒரு
தங்குமிட அட்டவணை கொடுத்து விட்டார்கள்.
மணிப்படி கூட இருந்தது அது .. எல்லா ஊர்களும்
எல்லா தரப்பு மக்களும் அவருக்கு பழக்கமென்பதால்
சென்ற இடத்திலெல்லாம் எங்களுக்கு மிக
அருமையான ஓய்விடங்கள் கிடைத்தன..
தென்னத்தோப்பு., பள்ளிக்கூடம்., காட்டன் மில்.,
பெரிய தொழில் அதிபர்களின் வீடுகள்., நல்ல
சேவை மனம் படைத்த நடுத்தர வர்க்க மக்களின்
வீடுகள் கூட ..ஒரு நாளைக்கு நாலு வேளையும்
ஐவகை .,அறுசுவை உணவு .,குளிக்க பம்ப்செட் .,
தண்ணீர் எல்லாம் இலவசமாக.. இளநீர்., காபி .,டீ
சுக்கு காபி., வடை., கூட சிலசமயம் ..வந்த அனை
வருமே ஏதோ ஒன்றை கொடுத்துக்கொண்டே
இருக்க விரும்பினோம்..அது ரெண்டு மூணு
நாளில் எல்லோர் உள்ளக் கிடக்கையும் என்னுடன்
பகிர வைத்து நிறைய நட்புகளையும் உருவாக்கியது.

முதல் நாள் மட்டும் நானும் என் தம்பியும்
வள்ளியம்மை என்ற ஆச்சியும் சிறிது வேகமாக
முன்னே சென்று விட்டோம் .. பின்னே செல்லக்
கூடாது.. அன்றைக்கு எங்களுக்கு தங்கள் வீட்டில்
நல்ல ரஜாய்கள் ., சமுக்காளங்கள், போர்வைகள்
எல்லாம் கொடுத்து தங்கள் வீட்டின் சிட் அவுட்டில்
இடம் கொடுத்தது ஒரு முஸ்லீம் அன்பரும் அவர்
மனைவியும் ..அவர் மகனுக்கு திருமணமாகி விட்ட
தால் உள்ளே படுக்க இடமில்லை.. அவர் நல்ல
மனத்தையும் எல்லாமுமான கடவுளின் கருணை
யையும் வியந்து கொண்டே உறங்கினோம் ..

காவடிகள் சென்ற வழியில் செல்வது ஐதீக
மென்பதால் கரும்புக்காடு., நெல் வயல்., வரப்பு.,
கம்மாய்க்கரை., மடு எல்லாம் நடந்தோம்..
நாட்டார் காவடி வில் போல சென்றது ..ரொம்ப
கட்டுக்கோப்பு.. நகரத்தார் காவடி மயில் போல்
முன்னும் பின்னும் சென்றது.. உடல் உறுதியை
விட மன உறுதிதான் நடத்தியது.,
பெரும்பாலானோரை ...நாம் சொங்கி மாதிரி
நடக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
வியக்க வைத்தார்கள்..

பெண்கள் செல்வதற்கு முன் யோசிக்க வேண்டும்.
பம்ப் செட் போன்ற பொது இடங்களில் குளிப்பது .,
உடை மாற்றுவது ., இயற்கை உபாதையை
செல்லும் இடம் வரை பொறுக்க வேண்டும்..
என் அம்மா சோப்பு போடக்கூடாது., உடையோடு
குளித்து நடக்கவேண்டும் என்று சொன்ன
ரூல்ஸை எல்லாம் மீற வேண்டியதாகிவிட்டது..
ஏனெனில் நம்மை நமக்கே பிடிக்காமல் போகக்
கூடிய அபாயம் இருக்கிறது ..கண்ணாடி மட்டும்
பார்க்கவில்லை ஆண்டியாக வாழ்வதும் சுலபமில்லை.

சிலருக்கு நன்றி பாக்கி இருக்கிறது :-
1. கல்லும் முள்ளூம் காலுக்கு மெத்தை என்றும்
கல்லும் முள்ளும் கண்ணுக்கு வெளிச்சம் என்றும்
பாடிச் செல்லும் பக்தர்களை ஏமாற்றக்கூடாது
என்று வேகாத சோற்றில் புளிக்குழம்பைப்
கொட்டியது போல் வருடாவருடம் ரோடு
போடும் பொதுப்பணித்துறை..
2.சாலையின் வெள்ளைக்கோட்டில் நடக்காதீர்கள்
என்று அவ்வப்போது பாரா வந்த போலீஸ்
வண்டிகள் (ரோடே லங்கோடு.. அதில் ஓரம் ,,
கரம்பை ., ஜல்லி., கருங்கல் மற்றும் சரளைக்கல்.
இதில் எங்கு நடக்க )..
3.ரோடு முழுக்க அன்ன தாதாக்கள்... தண்ணீர்
பாக்கட்டுக்கள் ..சாப்பாடு .,பிஸ்கட்., இனிப்புகள்.,
காபி., டீ .,பால் என்று உண்ணத்தகுந்த அனைத்
தையும் கொடுத்த பொதுமக்கள்(நம்மால் லக்கேஜ்
தூக்க முடியாத காரணத்தால் உணவு வகையறா
வைக்கண்டாலே ஓடினோம்.. ஜோல்னாப்பையை
கூட வேனில் போட்டு.. ஒரு செல் போன்., பணம்.,
தண்ணீர் பாக்கெட் இதுதான் .. நம் உடம்பைத்தூக்கி
நடப்பதே சிரமம் ..இது வேறா என்று..
4. கொடுத்த சாப்பாட்டை எல்லாம் உண்டும்.,
சிதறியும்., இயற்கை உபாதைசெய்தும் தடுமாறச்
செய்த பக்த மகா ஜனங்கள்..
5.இவற்றையெல்லாம் லஞ்சமோ.,மேல்வரும்
படியோ இல்லாமல் துப்புரவு செய்த துப்புரவுப்
பணியாளர்கள். இவர்களுக்கு உண்மையிலேயே
நெஞ்சார்ந்த நன்றிகள்..

அம்மாவைப் போன்ற அன்போடு அழைத்துச்சென்று
கடைசிவரை இருந்து சரி பார்த்து அனைவரும்
வந்தபின் கிளம்பி வீடுவரை பொருட்களை பத்திர
மாகக்கொண்டு சேர்த்த திரு நாராயணன் அவர்கள்.
எந்தபிரதிபலனும் இல்லாமல் எங்களுக்கு உதவிய
மருதிப்பட்டி வாழ் முஸ்லீம் சகோதரன், இவர்களை
எல்லாம் சேர்த்து நல்ல மனிதர்களையும் அனு
பவங்களையும்.,சில சம்பவங்களில் , 'எவ்வளவு
நல்ல வாழ்வு கொடுத்து இருக்கிறேன் பார் உனக்கு'
என உணர்த்திய எல்லாம் வல்ல இறைவன்....
அனைவருக்கும் வார்த்தைகளால் நன்றி மட்டும்
போதுமா ..?சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

என்னவளே

என்நேரமும் உன் பார்வைத்தோணியில்..
பத்திரமாய் விழிபிடித்து மிதந்துகொண்டு..

அவ்வப்போது நான் என்ற முகமூடி மாட்டி..
அன்பின் கழுத்தை இறுக்கக் கட்டி..

உன் புன்னகையையும் பார்வையையும்
தரையில் வீசி மிதித்து
காணாதது போல் புறந்திரும்பி..

கஜனி முகமதாய்க் கவர்ந்து செல்ல
முயல்கிறாய் பலமுறை..
ராபர்ட் புரூஸ் போல் தளராத மனத்துடன்..

ஹாலோவின்ஸ் டேயில் போட்ட முகமூடியை
நான் ஜிம்கேரியைப்போல் கழற்றாமல்..
வீர்யத்துடன் வெவ்வேறு விஸ்வரூபம் எடுத்து
உன்னை பயப்படுத்திக்கொண்டே..

என் கோபம்.,காமம்.,வன்முறையில்லா வன்முறை.,
அழுக்காறு கண்டு நீ நடுங்குவதை ரசித்து..
என் கம்பீரமாக நினைத்து..
வென்டேட்டாவின் வர்ணக்கோமாளியாய்..

ஒரு மென்மையான தருணத்தில்
என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
குழம்புதய்யா என் மனசு..
சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...
வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?
வெளி வேலை., வங்கி வேலை .,
பள்ளிவேலை., பாட வேலை
எந்த வேலை செய்தாலும்
எந்துணையே நீ இல்லை........
கை கொடுத்த தெய்வமே...
என்னை கையோட அழைச்சுப்போ...
கஷ்டப்பட்டு நீ உழைக்க
உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...
சொந்த வீடு., காரினிலே
என்னை சுகமாக இருக்க வச்சே..
உலகத்து வசதியெல்லாம்
பிள்ளைகளுக்கு செஞ்சு வச்சே...
அம்மா., அப்பா .,அண்ணன் .,தம்பி .,
மாமா., மாமி எல்லோரும் என்னோட...
என்னைக் கைப்பிடித்த கருணையே
என் கைபிடிக்குள் எப்ப வருவ........???

டிஸ்கி :- இந்தக் கவிதை என் சகோதரர்
எழுத்தாளர் கவிமதியின் மனைவி என்
அன்புத்தோழி அக்கலிமாவுக்கு சமர்ப்பணம்...!!!

சனி, 20 பிப்ரவரி, 2010

ஒற்றைப்பூ

கூடி வாழ்கிறோம் ..
கூடத்தான் வாழ்கிறோமா ..?
கேட்டுகொண்டிருக்கிறாய் என் பேச்சை..
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாயா..?
கையைப்பிடித்துக் கொண்டே திரிகிறேன் கனவில்,
நிஜத்தில் கோர்த்து இருக்கிறோமா..?
கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?
அந்தியும் நிலவும் இருளும் குளிரும் சூழ
காத்துக் கொண்டே இருக்கிறேன் உனக்காய்..?
தலையில் சூடிய மல்லிகை போல
காய்ந்து கிடக்கிறது மனசு....
எல் மகினோட்ரோமோவில்
நான் மட்டும் எங்கேயெனத்
தெரியாமல் தனிமையில் ..................................

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ..ஒரு அழகுத் தொகுப்பு

பரிசல் கிருஷ்ணா பாராட்டுக்கள்...!! நெகிழ வைத்து
விட்டீர்கள்.. ஆச்சர்யம்..! அருமை..!! அற்புதம்..!!!

இது நாகரத்னா புத்தக வெளியீடு.. கவிஞர் சுரேகா
முன்னுரை எழுதி இருக்கிறார் ..மனித நேயம் .,
நட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான
இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!!

தன்னைவிட என்னை நேசிப்பதால் என்னை விட
என்னை நேசிக்கும் உமா கௌரிக்கு என அர்ப்பணித்
திருக்கிறார்.. ( மனைவியா கிருஷ்ணா...). இதுவே
இக்கதைகளின் அடிப்படை.. ..
மொத்தம் பதினேழு கதைகள்..
தனிமை- கொலை- தற்கொலை -நட்பின் வலி ..
காதலை விட உயர்வானது நட்பு என்பது இதில்
தெளிவு ..இமை தொட்ட மணி விழி
இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை .
இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை
உண்மைகாதல் அழிவதில்லை --திருமணத்துக்குப்
பின்பும்..
காதலிக்கும் ஆசையில்லை --அழகாக இருந்
தாலும் சிலரிடம் வருவதில்லை...
BUTTERFLY EFFECT -- கடமை சார்ந்த நம் உலகின்
நெருக்கடிகளில் இருந்து குழந்தைகளின்
உலகத்தின் பட்டாம் பூச்சி கூட கிருஷ்ணாவின்
பார்வையில் அருமை ...இக்கதை..
இருளின் நிறம் --வானவில்லில் இல்லாதது.. தன்
பேரக் குழந்தைகளுடன் இருக்க விரும்பும்
முதியவர்களின் ஆசை நிறம் இது..
நான் அவன் இல்லை-- சுஜாதா பாணி க்ரைம் கதை.
மாற்றம் -- உழைப்பால் உயர்ந்தவர் பற்றி.
மனிதாபிமானம் -- யதார்த்தம் .. ஆனாலும் ரொம்பப்
பொறுமை கிருஷ்ணா உங்களுக்கு..
நட்பில் ஏனிந்த பொய்கள் -- மிக அருமையான
கதை.. நண்பனின் பொய்களை விடுத்து
நண்பனை நண்பனாகவே ஏற்றுக்கொள்வது..
கைதி--ட்விஸ்டட் க்ரைம்..
ஜெனிஃபர்--மிக ரசித்த கதை..ப்ரகாஷ் ராஜும்
லலித குமாரியும் ஒரே வீட்டில் நண்பர்களாக
வாழ முடிவெடுத்தது இந்தக் கதையைப் படித்த
போது ஞாபகம் வந்தது.. அவர்வர் வாழ்கையைப்
பற்றிய முடிவு அவரவர் தான் எடுக்க வேண்டும்
அடுத்தவர் தலையீடோ விருப்பமோ அனாவசியம்.
கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன் -கதையின்
தலைப்பே கதை..
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் --முன் பின்
சொல்லும் உத்தியால் சொல்லப்பட்டு இருக்கும்
இக்கதையும் நேர்த்தி..
மனசுக்குள் மரணம்--ஈ.எஸ்.பி..கதை..
ஸ்டார் நம்பர் ஒன் --கோடம் பாக்கக் கதைதான்
மற்றொரு மனித நேயக் கோணம்...
நட்சத்திரம் -- சுஜாதாவின் பூக்குட்டியை ஞாபகப்
படுத்தியது.. அருந்ததி ராயின்," காட் ஆஃப் ஸ்மால்
திங்க்ஸ் ",கூட (முழுக்க அல்ல ஒரு பகுதி )
சமூகக் கடமை-- அடுத்தவருக்கு அறிவுறுத்தும்
சிலரின் அராஜகப் போக்கு தெளிவாய் இதில்..

இவரின் கதைகள் எளிமை., மனித நேயம்., அன்பு
இவற்றால் கட்டப்பட்ட சுகந்தமான பூமாலை..
சுஜாதாவின் பாணி மற்றும் சில பல நாம் அறிந்த
எழுத்தாளர்களின் தாக்கமிருந்தாலும் எல்லாப்
பாணியிலும் சுவாரசியமாய் சிறந்த வாசிப்பு
அனுபவத்தைத் தருகிறது.. மனித நேயத்தோடு
உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் நட்புக்கும்
முதல் மரியாதை கொடுத்து எழுதப்பட்ட
கதைகள்... நம் அனைத்து வலைப்பதிவர்கள்
மட்டுமல்ல ..அவரது குடும்பதில் உள்ள அனைத்து
பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய
சிறந்த கதைகள் என பரிந்துரைக்கிறேன்....!!!

வியாழன், 18 பிப்ரவரி, 2010

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் ... ஒரு வாசகியின் பார்வை

வலையுலகில் நன்கு பரிச்சயமான கேபிள் ஷங்கர்
ஜியின் புத்தகம் என்பதால் மிக ஆவலுடன் படிக்கத்
துவங்கினேன். அவருடைய திரைப்பட விமர்சனங்கள்
மிகுந்த தரமுள்ளவையாக இருக்கும்.. சினிமா சம்பந்
தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதலோ என்னவோ
இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பில் அனைத்துக்
கதைகளும் சிறந்த திரைக்கதையுள்ள குறும்படம்
போலவே இருக்கிறது.. சுகாசினி., பாலு மகேந்திரா
போல இவற்றைத்தொடராகவும் இயக்கலாம் இவர்.
கதைகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கின்றன

முத்தம் முதல் கதையை நான் விகடனிலேயே
படித்து இருக்கிறேன்.. மிக நுண்ணிய உணர்வுக
ளுடனான கதை அது.. கொண்டு சென்று முடித்த
விதம் அருமை..
லெமன்ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் இது
வாழ்க்கை வாழ்வதற்கே என்பவர்களுக்கானது.
கல்யாணம் ஒரு உறவுக்கு உடல் மட்டுமல்ல
மனமும் தேவை என்பதான கதை ..
ஆண்டாள் இந்தத்தொகுப்பில் மிக அருமையான
கதை இதுதான்.. பதின்மவயது கதை..
ஒருகாதல் இரண்டு க்ளைமாக்ஸ் நிஜ சினிமா
போல க்ளைமாக்ஸ்..
தரிசனம் என்னை மிக ஆச்சர்யப்பட வைத்த
கதை இதுதான்.. ஏனெனில் இந்தத்தொகுப்பில்
நிஜத்தை பதிவு செய்த கதை இது ..சாமியார்களை
நம்பி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து
ஆசிரமம் செல்பவர்களை எனக்குத்தெரியும்..
போஸ்டர் இதுவும் எதிர்பாரா க்ளைமாக்ஸ் உள்ள
கதை.. இதை கொண்டு சென்ற விதம் அருமை..
துரை நான் ரமேஷ் சார் மிக இரக்கத்தையும்
சமூகக் கோபத்தையும் தூண்டிய கதை..
கோடம்பாக்கக் கதை..
என்னைப்பிடிக்கலையா இது திருமணமாகி
வரும் செவன்த் இயர் இட்ச் எனப்படும்
ஒரு சலிப்பான .,தவறு செய்யத்தூண்டும்.,
ஒரு மன நிலைக்கான கதை.. எனக்கு இதில்
உடன்பாடில்லை...
காமம்கொல் அடுத்த சாமியார் கதை.. துறவிக
ளெல்லாம் உண்மையில் துறவிகளல்ல..
ராமி சம்பத் துப்பாக்கி சினிமா சார்ந்து யோசிப்
பதாலோ என்னவோ முடிவு சினிமாட்டிக்காக
இருக்கு ..இந்தக்கதையில் ஒரு அவசரம்
இருக்கு., முடிவைப்போல...
மாம்பழவாசனை எல்லாத்தோல்விகளையும்
மீறி வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாக்க
வேண்டும் .. காதல் தோல்வியில் தற்கொலை
தேவையில்லாதது.. ஆனால் ஏனோ ஹேமாவும்
அவர் மறைவுக்குப் பின் ஸ்டெல்லா புரூஸும்
இந்தக்கதைக்கு சம்பந்தமில்லாவிட்டலும்
ஞாபகம் வந்தார்கள்..
நண்டு இந்தத் தொகுப்பிலேயே மிகச்சிறந்த
யதார்த்தமான வலி நிறைந்த கதை இதுதான் ..
ஒரு பரிதவிப்பு .,கழிவிரக்கம் கூட உண்டாகி
விட்டது.. உண்மையான ஷங்கர் இந்தக்கதை
யிலும் ஆண்டாள் கதையிலும் தான் மிளிர்கிறார்.

சுஜாதாவின் பாணியில் இருப்பதால் சிலசமயம்
சுஜாதா கதைகளை வாசிக்கிறோமோ என்ற
எண்ணம் ஏற்பட்டாலும் பாலா சார் விமர்சனப்படி
பெண் உடல் சார்ந்த வர்ணனைகள் இல்லாமலே
கூட இந்தக்கதைகள் அருமையாய் இருக்கும்..
சினிமா சார்ந்து யோசிப்பதால் அவை தவிர்க்க
முடியாமல் இருந்தாலும் மிகச்சிறந்த சரளமான
நடையில் அவை வாசகனை திகைக்கச்செய்கின்றன.
இனிப்பில் ஏலக்காய் முந்திரி திராக்ஷை மணக்க
லாம்., கிடக்கலாம் ஆனால் இனிப்பை உண்ண
திகட்டும் அளவு அல்ல..

கேபிள்ஜியின் முதல் தொகுப்பு இது ஆண்வாசகர்கள்
அனைவருக்கும் பிடிக்கும்.. பெண்வாசகியருக்காக
அடுத்த தொகுப்பை எழுதுங்கள் கேபிள் ஜி.. உங்கள்
எழுத்துக்கள் வலிமையாகவும் நீங்கள் கொண்டு
செல்ல நினைக்கும் தளத்துக்கு வாசகனை
எடுத்துச் செல்வதாகவும் இருக்கிறது ..ஒரு சில
தவிர்த்து இந்த புத்தகம் மிக அருமையான
யதார்த்த கால பதிவு ..!!!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சங்கீதக்கடை

சகோதரிகள் வருகிறார்கள்
மாதமொருமுறை அருகிலிருந்தால்
வருடமொருமுறை தொலைவிலிருந்தால்..
சங்கீதக்கடையாகிவிடுகிறது வீடு...
சந்தோஷத்தாலும் சத்தத்தாலும்..
நிலாவில் பிசைந்த சோற்று உருண்டைகள்
கிடைக்கிறது குழந்தைகளுக்கு கதைகளுடன்...
ஆகும் ஆகாது என்ற
கணக்கில்லாமல் எல்லாம் உண்டு...
புது விளையாட்டுத்தோழியராய்..
எங்கும் இரைச்சலும் பழங்கதைகளும்..
புது சமையலோ .,சந்தோஷமான பேச்சோ
அள்ளி வீசுகிறார்கள் சகோதரன் மேல் சந்தனமாய்..
ஒருவருக்கொருவர் போட்டியில்
சகடைச்சத்தமும் கீச் கீச்சென்று ...
மனைவி கூட போட்டியாய்
அன்பு செலுத்துகிறாள் ..!!!
சீர் பெற்றுச்செல்வது போல்
சீரோடும் செய்கிறார்கள் ..
உவப்பாய் பார்த்துப் பார்த்து
வகை தொகையாய்...
பேருந்து நிறுத்தமோ புகைவண்டித்தடமோ
கொண்டு செல்லவிடும்போது
கணவனை குழந்தைகளைப்பற்றிய
ஆதங்கம் கோபத்தைப் பகிர்ந்து..
சிறுவயது பள்ளிக் கதைகள் பேசி..
வரவும் செலவுமான வாழ்வில்
பற்று வரவு இது ...
வாழ்நாள் முழுமைக்குமான
அன்புத்துலாபாரம் ...!!!
கையசைத்து பேருந்திலோ புகைவண்டியிலோ
அவர்கள் ஏற ஓடும்போது
வண்ணத்துபூச்சிகளின் இறகசைப்பாய்
நிரம்பித்ததும்புகிறது மனது
அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

லைம் ட்ரீயும் டைரிக்குறிப்பும்

இன்றும் அதே டிஸ்கவரி புக் ஹவுஸ் ..அதே
புத்துணர்ச்சியோடு சகவலைப்பதிவர்களும்.,
நண்பர்களும் .,சகோதரர்களும்....!!!

கேபிள் சங்கர் ஜி மற்றும் பரிசல்காரனின் மலர்ந்த
புன்னகையோடு ஆரம்பித்தது விழா.. சகோதரர்
அப்துல்லாவைத்தான் முதன்முதல் பார்த்தேன்..
அடையாளம் கண்டு கொண்டேன்.. என் சின்ன
மகனுடன் சென்று இறங்கியபோதுதான் சீப் கெஸ்ட்
பிரமிட் நடரஜன் அவர்கள் வந்தார்கள்.. நேரமாகி
விட்டதோ என்று நினைத்து போக நிம்மதி
ஆகிவிட்டது ..போனமுறை நடந்த வெளீயீட்டு
விழா ஹாலின் மேல் மாடியில்.. இன்றைய
வெளீயீடு நடந்தது.. நல்ல கூட்டம்.. ஒரே
காமிரா வெளிச்சம்..

கேபிள் ஜி மற்றும் பரிசல்காரன் குடும்பத்தார்
போக சென்னையின் அனைத்து வலைப்
பதிவர்களும் அங்கே..!!

நாகரத்னா புத்தக நிலைய உரிமையாளர் குகன்.,
தமிழ்ப்பட இயக்குனர் சி.எஸ் .அமுதன்., சாய்மீரா
ப்ரொடக்ஷன்ஸ் பிரமிட் நடராஜன்., நண்பர் அஜயன்
பாலா., அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோர்
முக்கிய விருந்தினர்கள்...

நடராஜன் அவர்களுக்கு சகோதரர் அப்துல்லா
பொன்னாடை போர்த்த அமுதன் அவர்களுக்கு
வடகரை வேலன் அண்ணாச்சியும் அஜயன் பாலா
அவர்களுக்கு தண்டோராவும் பொன்னாடை
போர்த்தினார்கள்...திரு நடராஜன் அவர்கள் கேபிள்ஜி
யின் புத்தகத்தை வெளியிட அனைவரும் பெற்றுக்
கொண்டார்கள் ..பரிசல்காரனின் புத்தகத்தை அஜயன்
பாலா வெளியிட அனைவரும் பெற்றுக்
கொண்டார்கள்.. திரு நடராஜன் கேபிள் ஜியின்
சித்தப்பாவும் கூட.. மிக்க அருமையாக தொகுத்து
வழங்கினார் கவிஞர் சுரேகா ..நல்ல மொழி வளம் ..

திரு நடராஜன் சங்கர் அவர்கள் புத்தகம் பற்றிப்
பேசும் போது மிக அருமையாக எழுதப்பட்டிருப்ப
தாகக் கூறினார்.. தான் ஒரு சினிமா தயாரிப்பாளர்
என்பதை விடவும் எழுத்தாளர் சங்கரின் சித்தப்பா
என்பதில் பெருமை கொள்வதாக கூறினார் ..
திரு அமுதன் தமிழ்ப்பட வெற்றிக்கு வலைப்
பதிவர்களின் பதிவுகளும் ஒரு நல்ல காரணம்
என்று கூறினார்.. பதிவர் உலகத்துக்கு நன்றி
தெரிவித்தார் .. திரு அஜயன் பேசும் போது மிக
நீளமாகவும் ஆழமாகவும் பேசினார் .. அவருடைய
முதல் கதையை விருட்ஷத்தில் பார்த்தபோது
ஏற்பட்ட பரவசம் பற்றியும் அதற்கு தன்னுடைய
அயராத உழைப்பு பற்றியும் கூறினர்.. கேபிள்ஜியின்
கதைகளின் உள்ளீடு அற்ற தன்மை பற்றியும்
ஒன்றைத்தொட்டு ஒன்று சென்று ஒன்றைக்
குறிப்பிட்டு முடிவில் சுவாரசியமாய் அமைந்தது
பற்றியும் குறிப்பிட்டார்...

ஒரு குறிப்பட்ட புத்தகம் வெளிடப்படும் போது
அதைப்பற்றி வலையில் ஒரே சமயத்தில்
விமர்சனம் எழுதி அந்தப்புத்தகத்தின்
விற்பனையைக் கூட்ட முடியும் என்றும்
வலைப்பதிவர்கள் மனம் வைத்தால் மிகப்
பெரும் பத்திரிக்கைகளுக்கு கூட சவாலாக
வரமுடியும்... என கூறினார் ..

நேரம் ஆக ஆக சலசலப்பில் சரிவர கேட்க
முடியவில்லை.. வழக்கம் போல எனக்கும்--
கல்லூரி விடுதி செல்லும் மகனுக்கு ட்ரெயினுக்கு--
நேரமாகிவிட்டதால் உடன் கிளம்ப வேண்டியதாகி
விட்டது ...அங்கு நர்சிம் .,மணிகண்டன் மற்றும்
உலக சினிமா வலைப்பதிவர் நண்பர் சூர்யா(எல்லா
புத்தக வெளியீட்டுக்கும் சென்று அனைவரையும்
ஊக்குவிப்பவர்)மற்றும் செல்வா ஸ்பீக்கிங்க் என்றும்
மேலும் ஏழு எட்டு பதிவுகள் நடத்திவரும்
இயக்குனர்., நண்பர் செல்வகுமாரையும் (அவர் என்று
ஒரு படத்தயாரிப்பில் இருக்கிறார் மறைந்த நடிகர்
திரு ஐ. எஸ். ஆர். அவர்களின் புதல்வர் ) பார்த்தேன்..

எலுமிச்சை மரம் வளர நாளாகும்.. ஆனால்
வளர்ந்த பின் வருடா வருடம் .,ஏன் வருடம்
முழுக்க பலன் கொடுக்கும் .. அதுபோல
கேபிள்ஜியின் எல்லா முயற்சிகளும்
வெற்றிஅடையட்டும்...!!!
டைரிக்குறிப்பு என்பது எப்போதும் எழுதிக்கொண்டே
இருப்பது ..அதுபோல் பரிசல்காரன் இன்னும் நிறைய
படைப்புகள் வெளியிடட்டும் என வாழ்த்துகிறேன் !!!

சனி, 13 பிப்ரவரி, 2010

ஒரு மரம் ஒரு நதி

ஒரு நந்தவனத்தில் பெயர்த்து நட்ட மரமாய்
கரையோரம் அவள்...
என் அழுக்குகளையும் குப்பைகளையும்
சுழற்றிக்கொண்டு அவள்
வேர்க்காலைத்தழுவியபடி நான்...
சிலசமயம் அவளும் என் மேல்
குப்பை போடுவாள்., இலையாய்.,
கிளையாய்., பூவாய்., காயாய் .,

வெய்யில் நேரம் தலை காய
வைக்கும் ராட்சசியாய்...
சாயங்காலம் பறவைச்சத்தத்துடன்
சலசலப்பாய்ப் பேசுவாள்...
நானும் சலசலப்போடு
பதில் சொல்லுவேன்...

அதிக ஆசை வரும் நாட்களில்
அவள் இடுப்புத்தண்டு வரை
நனைத்து ஓடுவேன்..
அவளும் கிளைக்கரங்களால்
ஆசையோடு அணைப்பாள்..

கூழாங்கற்களை அவளுக்கு
கொலுசாய் அணிவிப்பேன்..
எனக்கு அவள்
பூக்களால் மாலையிடுவாள்...

பறவைகளுக்கு கூடாயும்
மிருகங்களுக்கு வீடாயும்.,
உணவாயும் அவள்..
மனிதர்களும்., மாடுகளும்.,
லாரிகளும் என்னில் குளிப்பது
அவளுக்கு கோபம் விளைவிக்கும் ..
கிளைக்கையை அசைத்துக்
கோபிப்பாள் ஊடலாய்...
இலைவிரல் முறிப்பாள்...

என் குளுமையை தண்ணென்ற நிலவில்
அவளும் கண்மூடி அனுபவிப்பாள்..
ஆண்மை முரசடிக்கும்
என் அலையில் மயங்கி...
அதிகாலை ஆரத்தழுவி சேர்ந்து
என் முரட்டுக்கை பிணைப்பாள்...

வெய்யில் விரிய விரிய
அவள் சுறுசுறுப்பாய் ..
நான் விறுவிறுப்பாய்..
எங்கள் வேலைகளில் மும்முரமாய்...

கடுங்கோடையில் நாவரள
நான் குறுகிவிடுகையில்
என்னைக்காணா ஏக்கத்தில் அவள்
விரலெல்லாம் சுள்ளீபோல் சருகாகி....

அவளுக்குக் காய்ப்பேறிய பசலை...
எனக்கு மண் படிந்த பசலை...

பின் மதகு திறந்த என்
ஓட்டத்தில் அவளும் புஷ்பித்து ...
மெல்லிய காற்றில் நானும் அவளும்
ஒருவரை ஒருவர்
ரசித்தபடியே அருகருகே...

இன்பம் என்பது வேறென்ன...???

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

பொம்மை

சாவி கொடுத்தால்
தேன்கூட்டில் கைவிட்டுத்
தேன் உண்ணும்
கரடி பொம்மை ஒன்றை
மலயாவிலிருந்து தாத்தா
வாங்கி வந்து இருந்தார்..
பறக்கும் தட்டும்..
விமானமும் கூட..
குழந்தைகள் பொம்மைகளை
விளையாடுவது போல நானும்
ஒன்றை மாற்றி ஒன்றைத்தூக்கி
மற்றதை கீழ் போட்டு
விளையாடிக் கொண்டிருந்தேன்...
ஆகத்திலேயே சின்ன பொம்மை
கோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...
யாராவது வீட்டுக்கு வந்தால்
பொம்மைகள் மிக
உயர்வானதாகிவிடும்...
நேர்த்தியானதாக...
அருமையானதாக ...
அழகானதாக...
மேற்பூச்சுக்களோடு...
சிலசமயம் அவர்களின்
பொம்மைகளும் அப்படியே...
ஆட்டமும் பாட்டமுமாக களைகட்டி ...
ஒரு காலகட்டத்தில்
பொம்மைகள் என்னை வீசி
வேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின...
நானும் முதிர்ந்து கிழிந்த
பழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி.....

புதன், 10 பிப்ரவரி, 2010

சொல்லிக்கொள்வது

ஒரு பெண்ணின் வாழ்வில் சொல்லிக் கொள்வது
என்பது திருமணத்தில் ஆரம்பமாகிறது.. எங்கள்
வழக்கில் கும்பிட்டுக் கட்டிக் கொள்வது என்பார்கள்.
அதன்பின் சொல்லிக் கொள்வது ..உற்றார் .,
உறவினர் .,நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டு செல்லும் போது புது வாழ்வும்
ஆரம்பமாகி விடும் .. பின்பு முதல்வீடு., மறுவீடு.,
பின்பு சூலுற்ற ஐந்தாம் மாதம் தீர்த்தமாடும் போது
மகப்பேறுக்கு., பிரசுபத்துக்குப்பின் என எப்பவும்
யாரிடமாவது பெண்கள் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது ...இந்தப் பாத
யாத்திரையின்போதும் அது தன்னையறியாமல்
நிகழ்ந்தது ...பழக்க தோஷமாய் இருக்கலாம்..

சொல்லிக்காமக் கூடப் போயீட்டீங்களே என
என்னைத்தேடலாம் என நினைத்தவர்களிடம்
சொல்லிக் கொண்டேன்.. எந்தப் பயணமும்
சாதக பாதகம் நிறைந்தது தானே... எது ஆரம்பம்.,
எது முடிவு எனத்தெரியாத வாழ்க்கைப் பயணத்தில்
பிரயாணியாய்...

ஆண்களுக்கும் கூட ஆன்மீகப் பயணம்., வெளி
நாட்டுப்பயணம் என்றால் சில பல சொல்லிக்
கொள்ளுதல் உண்டு .. யாத்திரை முடிவானபின்
முதலில் விக்கினமில்லாமல் நடக்க வினாயகனுக்கு
முதல் சிதர்காய்.. பின்பு சாமிவீட்டில் (அக்கினிஆத்தா
அடைக்கியாத்தா மெய்யாத்தாவீடுகளில்) சென்று
விளக்கேற்றி (சில வீடுகளில் படைப்பார்கள்)
சொல்லிக் கொள்வது .,மூன்றாவதாக குலதெய்வம்
கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து தளிகை
படைத்து வணங்கி அவர் துணைவேண்டுவது..
இதில் ஊனையூர் .,சாக்கோட்டை., நரியங்குடி.,
கருங்குளம் போன்ற ஐயனார் கோயில்கள்
அடங்கும்.. பின்பு எங்கள் நகரத்தார் சார்ந்த
இனப்பிரிவுக்கோயில்கள் ஒன்பது உண்டு..
அதில் பிள்ளையார்பட்டி., இரணியூர் .,மாத்தூர்.,
நேமம் போன்றவை அடங்கும்.. இவை
நகரச்சிவன் கோயில்கள் என்றழைக்கப்படும்..
இதில் அவரவர் சார்ந்த கோயில்களுக்கு
சென்று இறைத்துணை வேண்டுவது.. பின்பு
புறப்படும் நாளன்று வீட்டில் விளக்கேற்றி
பாட்டையா பாட்டி ஆயா முன்னோர் பேழையை
வணங்கி ஐயா அப்பத்தா., ஐயா ஆயா .,தாய் தந்தை
.,மாமனார் மாமியார் ஆகியோரை விழுந்து வணங்கி
ஆசி பெற்று சொல்லி கொள்ள வேண்டும் ..சகோதர
சகோதரிகள்., நாத்தனார் .,கொழுந்தானாரிடம்.,
நேரிலோ போன் மூலமாகவோ சொல்லிக்
கொள்ள வேண்டும்... அப்பாடா மூச்சு வாங்குதா
இதற்கே ..இதற்கு சிகரம் வைத்தாற்போல வீட்டில்
இருந்து நடைப்பயணம் கிளம்பி கொப்புடை
யம்மனை வணங்கி குமரப்பையா என்றும்
அரண்மனைப் பொங்கல் என்றும் கூறப்படும்
இல்லம் சென்று விபூதி வாங்கி ஆசி பெற்று
பயணம் ஆரம்பிக்க வேண்டும்..

இதில் என் சின்னத்தம்பி மிக ஆன்மீகத்தேட்டை
யுடையவன்.. அவன் வெளி நாட்டிலிருந்து
வருவதால் அன்று காரைக்குடியில் உள்ள
பெரியார் சிலை கணபதி ஆரம்பித்து சாணாங்காளி.,
ராஜ கணபதி., முத்தாலம்மன் ., சிவ காளி .,
பதினெட்டாம் படிக்கருப்பர்., காளியம்மன் .,
ஆஞ்சனேயர் .,நெல்லி மரத்துத்துப்பிள்ளையார்.,
நூற்றெட்டுப் பிள்ளையார் .,நகரச்சிவன் கோயில்
பின்பு கொப்புடையம்மன் என காரை மாநகரிலேயே
கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் உலவி.. பின்பு
ஆரம்பித்தது எங்கள் பயணம்..

வீட்டில் பத்தடி நடக்கவும்., படியேறவும்
சோம்பற்படும் என்னை அழைத்துச்சென்றது
அவனுடைய அன்பும் .,பராமரிப்பும்., கனிவும்.,
கண்டிப்பும்தான்.. நினைத்தாலே பிரமிப்பாய்
இருக்கிறது பிரசுப வைராக்கியம்போல அடுத்த
பாத யாத்திரைக்காய் இப்போதே தயாராகி
விட்டது மனசு ...

டிஸ்கி :- இந்த வழக்கப்படியே நானும் என் புது
உலக நண்பர்களான வலையுலகம் .,ஆர்குட்.,
முகப்புத்தகம் சார்ந்த நண்பர்களிடம் மெயில்
மூலமாகவும்., சாட் மூலமாகவும்., போன்
மூலமாகவும் .,நேரிலும் சொல்லிக் கொண்டேன் ...
திரும்பி வந்தும் விட்டேன் அனைவரின் அன்பாலும்
ஆசியாலும்... குலதெய்வம் என்பதும் முன்னோர்
என்பதும் உறவினர் என்பதுமான உறவுகள் நிறைந்த
என் புதுக் குடும்பத்துக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சில்லு... ச்சில்... ஜில்...!!!

சில்லாய்க் கிடந்தேன்
புல் முளைத்து... சிலையாய்..
ரூப்கண்வர் அல்ல...
அக்கினியின் அவிர்ப்பாகமாய்...
அரூபமாய் மாற ...
உனக்கு வேண்டாமென்றால்
எனக்கும் வேண்டாமா..?
வாழ்வும் .,உயிரும் ...விதவை ....

ச்சில்லென்று பூத்த குளிர்பார்வைகள்...
வெள்ளைப்பூக்களில் வானவில்..
வெட்கச்சிகப்பு ...
விரிந்த வாழ்வாய் கருநீலம்...
உனக்கு வேண்டுமென்றால்
எனக்கும் வேண்டியிருக்கிறது.... மறுமணம்...

ஜில்லென்ற பொழுதுகள்
வாழ்வின் உன்னதத்தில்
என்றென்றென்றும்...
எனக்கும் வேண்டும்...
உனக்கும் வேண்டும்..
நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
பேரன்பும் .,பெருவாழ்வும்...!!!

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஜில்... ச்சில்...சில்லு

எனக்கும் வேண்டும்
உனக்கும் வேண்டும்
எங்கேயும் எப்போதும்
எல்லாம் ...காதல்..

எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்
எங்கேயும் எப்போதும் எல்லாம்... குடும்பம்..

எனக்கும் வேண்டாம்
உனக்கும் வேண்டாம்
எங்கேயும் எப்போதும்
எல்லாம்.... விவாகரத்து....

டிஸ்கி:- ஹி., ஹி .,ஹி., இடுகையின்
தொடர்ச்சி நாளை வரும்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ந(டை)ட ராஜா நட

உபவாசமும் பாதயாத்திரையும் ஒருவரின் ஆன்மீகப்
பாதையில் மட்டுமல்ல.. இகலோக வாழ்வுக்கும்
உகந்தது..

முதல்முறை பாதயாத்திரை செல்பவர்களுக்கு
சில அறிவுரைகள்
*வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்தால் காரில்.,
வண்டியில் அல்லது ஆட்டோவில் தான்
கால்வைப்பேன் என்பவர்கள்...
*வீட்டுக்குள்ளே கூட ஹவாய்., பாத்ரூமுக்கு
ஒரு ஹவாய்., தோட்டத்துக்கு ஒரு செருப்பு .,
ட்ரெட்மில்லுக்கு ஷூ., பார்ட்டிக்கு கோலாப்புரி.,
கட்ஷூ .,ஸ்லிப் இன் என்று ஏழு செருப்பு
வைத்து இருப்பவர்கள்...
*பச்சைத்தண்ணீரா ....?வெந்நீரில் யுக்கலிப்டஸ்
ஆயில்., ஆர். எஸ். பதி .,அல்லது ஆக்ஸாயில்
போட்டு குளிப்பவர்கள்...
*அமுக்கின பொம்மை மாதிரி சோபாவிலோ.,
லாப்டாப் முன்போ உக்கார்ந்து இருப்பவர்கள் .,
*வெய்யில் அடித்தால் தலைவலிக்கும்., மழை
பெய்தால் காய்ச்சல் வரும் .,பனி நேரம் சளி
பிடிக்கும் என்பவர்கள்....
* பறக்குறது .,நீஞ்சுறது., ஓடுறது .,ஓடுறது
போடுறது இல்லாம சாப்பிட முடியாதவர்கள்...
*ஏசி ரூமை விட்டு வெளியே வராதவர்கள்..
நேர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்...

"இல்லை போவேன்" என்று பிடிவாதம் பிடிப்பவரா..
இதை படிங்க முதலில்...
*ஒரு மண்டலம் விரதம் என்பது முக்கியம்
அல்லது 30 நாளாவது... (டிசம்பர் ஒன்று என
நினைத்தது ஜனவரி ஒன்றுதான் எனக்கு கைகூடியது)
* தினம் காலையில் பச்சைத்தண்ணீரில் குளிங்க..
( அழுவாச்சியோடு அல்ல ..) பிரம்ம முகூர்த்தம்
விஷேசம்... எட்டு மணி கூட பரவாயில்லை..
* விளக்கேற்றி தீப தூப ஆராதனைகள் பாமாலைகள்
பாடலாம்..(என்னம்மா லீவு நாளிலே காலங்
கார்த்தால சாம்பிராணி போட்டு சாமியத் திட்டுறீங்க
என பிள்ளைச் செல்வங்கள் சாபத்துக்கு
ஆளாகாம இருக்கவும்..
*பிள்ளை பிறந்தது., புஷ்பவதியானது .,கேதம்
கேட்கப் போகக் கூடாது...
*தினம் ஒரு மணி நேரம் அல்லது 3., 4 கிலோ
மீட்டர் நடந்து பழகவும்.. (செருப்பு இல்லாமல்)
ரோட்டில்போவோரெல்லாம் ஒரு மாதிரியாகப்
பாத்துக் கொண்டே செல்வார்கள் ... சில நாளில்
பழகிவிடும் ...அவர்களுக்கு...!!!
செல்ல முடியாத நாளில் ட்ரெட் மில்லில் ஷூ
இல்லாமல் சென்று கால் கொப்புளம் ஆகிவிடும்..
(நடைப்பயணத்தில் வரும் கொப்புளங்களுக்
கெல்லாம் இது சாம்பிள் கொப்புளம் மாதிரி)..
எனவே எது செய்கிறீர்களோ இல்லையோ
கட்டாயம் சோம்பல் இல்லாமல் நடந்து
பழகுங்கள்...
*கண்ட நேரத்தில் காபி., டீ குடிப்பது., ஸ்வீட்
இருக்கேன்னு சாப்பிடுறது., பன்னீர் பட்டர்
மசாலா., நெய் .,தண்ணிவிடாத பால் .,சாக்லேட்.,
கேக் என சாப்பிட்டு உடம்பை கால் தாங்க
திணறும் அளவு வைத்து இருப்பது தவிர்த்து
கீரை., காய் .,பழம் நிறைய சாப்பிடுங்க..
உடம்பைக் குறைக்கிறேன்னு சாப்பிடாம
இருந்துடாதீங்க...
* பெரிய பயணத்துக்கு முன்னாலேயே சில
சிறிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு..
ஆன்மீகத்தலங்களுக்கு சுமார் 5 முதல் 10 கிலோ
மீட்டர் சுற்று வட்டாரத்துல இருக்குற
இடங்களுக்கு சென்று வந்த பின்பு
வேண்டிக்குங்க... பாதியில் ஒரு சில பேர் பின்
தங்கிட்டாங்க.. ஆனா அடுத்த வருஷம் பூர்த்தி
பண்ணனும் கேட்ட பின்னாடி நமக்கு ஒரு கிலி
அடிச்சுரும்.. ஏன்னா இந்த தூரம் நாம நடந்ததே
பெரிசு.. இன்னும் அடுத்த வருஷமா...திரும்ப
முதல்லேருந்தான்னு ...!!!

அலுவலில் விடுப்பு எடுக்க முடியாமல் ரங்கமணி
எனக்குத்துணையா குன்றக்குடி வரை வந்தார் ..
பின்பு உப்பாற்றுப் பாலம் வந்து பார்த்து அங்கும்
ஒரு 10 கிலோமீட்டர் கூடவே நடந்தார்.. சில
பேர் தம்பதிகளாகவே சேர்ந்து வந்து கொண்
டிருந்தார்கள்.. என் மனக் குறையை கணவரிடம்
சொன்னதும் அடுத்த வருஷம் சேர்ந்து போவோம்
என சொன்னார் ...அடுத்த வருஷமுமா என
திடுக்கிட்டு.. "இல்லை நீங்க நடங்க.. நான்
உங்களுக்காக வீட்டில் பத்திரமாக சென்று வர
சாமி கும்பிடுறேன்.. முடிந்தால் உங்களை நானும்
இது போல் வந்து பார்த்து ஊக்கமூட்டுகிறேன்"
எனக் கூறினேன்... நடக்க முடியாமல் கண்
எல்லாம் கலங்கி விட்டது... பாதம் தார் ரோடை
பார்த்தலே அலறியது ..பருமனை பார்த்து
உராய்வில் கால் கதறியது .. பந்துக்கிண்ண
மூட்டு எல்லாம் கழண்ட மாதிரி இருந்தது..
விரட்டப்பட்ட கோழி போல விரைவாக
நடந்தால்தான் மற்றவர்களின் வேகத்தோடு
போக முடிந்தது .."பரவாயில்லை வந்துவிடு"
என எங்கே அவர் என் உறுதியைக் குலைத்து
விடுவரோ என பயந்து அமைதி காத்தேன்..

கண்டவராயன் பட்டிக் கம்மாய்., திண்டுக்கல்
பாலம்., விருப்பாச்சி மேடு இது மூன்றும் பத்து
நாளாகியும் கனவில் கடக்க முடியாத இடங்களாய்
எல்லாம் முடித்து கிரிவலம் வந்து யானையடிப்
பாதையில் சென்று ஆண்டவனை தரிசித்தபோது
ஏற்பட்ட பரவசம் அப்பப்பா சொல்லில் அடங்காது...

டிஸ்கி :- மிச்ச விவரம் அடுத்த இடுகையில்...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சுயமும் சுயம் போன்ற ஒன்றும்

இறுக்கச்சாத்திய கதவிற்குள்ளும்
முழுக்க முளைத்த தூசி
அப்பிக் கிடக்க...
துடைக்கத் துடைக்க அழுக்கு..
செந்தாமரையோ., வெண்டாமரையோ.,
கதவின் மரைக்குள்ளும்
மரை கழலும் நிலையில்...
ஹிஸ்டீரியாவா .,ஃபிட்ஸா .,
செலக்டிவ் அம்னீஷியாவா .,
அல்ஸீமர் வேண்டும் வெற்றுப் பிடிவாதம்..
வார்த்தைகள் அறுத்துப் போட்ட
பல்லி வாலாய் நாக்கு..
மௌனமும் .,புறக்கணிப்பும் கூட
சாணை பிடித்த ஆயுதமாய்..
சுத்தம் செய்யாத தொட்டித்தண்ணீராய்
வீச்சமடிக்கும் வார்த்தைச் செதில்கள்...
ஜன்னல் கதவுகளும்., திரைச்சீலையும்
போதவில்லை ஒளிந்துகொள்ள..
தற்குறிகளும் .,ஏனையவும்
மனக் கருவியைக் குழப்பி...
ரோஷார்ஷ் சித்திரங்களாய்..
சைபீரியச் சிறைக்குள்
ரஸ்கோல்னிகோவாய்
தவறைத்தவறென்று உணராமல் உணர்ந்து...
ஆளை மீறிய வாலும்., கொம்புகளும் .,
கோரைப்பல்லும் அவ்வப்போது
மிரட்டலாய்க் கிளைத்து
தன்னையறியாமல் தனக்குள்ளிருந்து...
உடைகளும் .,பதவிகளும் .,
கல்வியும்., தகுதியும் மீறி
அவ்வப்போது சுயமும்
சுயம் போன்ற ஒன்றும் ...

புதன், 3 பிப்ரவரி, 2010

ராமனின் மனைவி

முகமற்றவள் ..மண்ணில் பிறந்தவள்..
மண்ணால் விழுங்கப்பட...
சிவதனுசை நீ எடுத்த நொடி..
உன் கைவசம் முடிவு.. என் வாழ்வு..
அம்புறாத்துணியோடுதான் பார்த்தேன்..
நானே எய்யப்படுவது அறியாமல்...

வனவாசத்திலும் மரவுரியுடன்
உன் பின்னே சுற்றித்திரிய விழைவில்..
உன் மனவாசத்தில் இருந்தாலும்
என்னைத் தவிர்த்துச் செல்லும் விழைவில் நீ..
நம் அன்பெனும் நேசச் சரங்கள்
இழையோடு இழையாய் என்னை
உன்னோடு இழுத்துச் செல்கிறது...
சில்வண்டுகளும் சிற்றோடைகளும்
சிறு நிலவும் பர்ணசாலை சுற்றி ...

எதுவுமே கேட்காமல்
உன் அருகாமை மட்டுமே வேண்டி நின்ற
என்னை முன்னிருத்தி ..
மாரீசனை.. பொன்மானை நான் கேட்டதாகக் கூறி
வேட்டையாடச் செல்கிறாய்..

இரக்கம் தூண்டும் போர்வை போர்த்தி
இரந்து செல்ல வந்த ஒரு பாவி
என்னைக் கவர்ந்து சென்றான்..

"நான் உனக்கு மட்டுமேயானவள் "
என்ற எண்ணத்தையும்
நீ தந்த கணையாழியையும்
என்னுடன் எடுத்துச் செல்கிறேன்...
என்னைத் தேடி வருவாயோ
என்ற எண்ணத்தில் மற்ற அணிகலன்களை
எல்லாம் ஒவ்வொன்றாய் வீசி
ஒரு தடத்தை உருவாக்குகிறேன்...

பூமியின் மகளான என்னை காப்பாற்ற
பறவைகளின் அரசன் போரிட்டு இறகு கிழிந்து
உன்னிடம் சேதி சொல்ல உயிர் துடித்தபடி...

நீ எனக்காக உன் தூதனைக் காற்றிலும்
கடல் கடந்தும் அனுப்பும் வரை..
உன் நினைவு நெருப்பு பற்றியெரிய...
சோக மரத்தின் கீழ்
உன் கணையாழியுடன் நான்...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் நண்பன்

அவன் அம்மாவின் செல்லக் கடைக்குட்டி..
அவ்வப்போது கதைப்பதும்., அவளின்ட மடியில்
படுப்பதுவும் அலுக்காத ஒன்று...
வளர்ந்தகுழந்தைகளுக்குத் தகப்பன்... வளராமல்..
பால்யத்தில்... கேட்டால்....
எப்போதும் எனக்கு 23 என்பான்...
அவன் கண்ணுக்குள்ளும்.. ஆகிருதிக்குள்ளும் ..
அவ்வப்போது பதுங்கு குழிகளும்., ஷெல்களும்.,
கண்ணிவெடிகளும்., அம்மாவுக்கான பாசமும்
படபடப்புடன்....
பலிபீடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி
வெளிநாட்டில் நட்டபின்னும்
தேடிக்கொண்டே இருக்கிறான்
தனக்கான வேரைத் தடவித்தடவி..
பொலிஸ் அதிகாரியின் மகளை
இருபதுகளில் காதலித்த புரட்சிக்காரன்..
அந்தப் பனிப்புறாவின் நினைவுக் கதகதப்பில்
நிறைவேறாத அவன் காதல்...
மனைவிக்கான நேசத்துடனும்
காலம் கடந்த காதல் கவிதைகளாய்...
கூழாங்கற்களில் இடைவெளி பெருகிப்
பல்கும் பேரன்பாய்...
வர்ணங்கள் குழைத்து தீட்டத்தெரிந்த
வித்தைக்காரன்.. தன் வாழ்க்கையை
அதன் வர்ணங்களில் தீட்டியபடி...!!!