வியாழன், 20 ஆகஸ்ட், 2009

காட்டாறு

நீர் தேங்கிக் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்.,,,
கையில் அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?

விவசாயம் காணாமல்..
மாட்டின் கூர்வாய் அறியாமல்..
மரங்கள் துப்பிய
எச்சில் இலைகளுடன்...

என்றோ கிளைக்குளமொன்றில்
மலர்ந்த அல்லியும்
ஆம்பலும் நினைத்து..
ஆகாயத்தாமரை மலர்த்தி...

வறியவனின் வயிறு
போல் தீவுகள் விழுந்து..
சப்பாதிக்கள்ளியும்
பனைமரமும் கிளைத்து..
சாலையோரத் தார்த்தூசி தின்று...

வண்டிக்காரன் கொட்டிய
பழக்கழிவு போர்த்தி...
மாதமொருமுறை
பொதிக்கழுதையும்
வண்ணானும்
வெள்ளாவியும் பார்த்து...

தினம்தினம் அஸ்தமனம்
சூர்யோதயம் அனுபவித்து
உலகத்துப் பிறப்பெல்லாம்
ஒரு சேரப் பட்டது போல்
அலமலந்து...

மழை.....
பெருகியது காட்டாறு...
மரமும்செடியும் கொடியும் தழுவி.,
அணைத்து அன்பைப் பெருக்கி.,
கசடையெல்லாம் கடலில் போக்கி.,
மலர்ந்து கிடந்தது வாய்க்கால்..,
பெருவெளியில்...!!!

புதன், 19 ஆகஸ்ட், 2009

அகம் புறம்

காய்ந்த துணிகளின் மேல்
காக்கை எச்சமாய்
பார்வைகள்...

மடித்து வைத்த
பின்னும் தட்டுப்படும்
கறைகளாய்...

சர்க்கரைப் பாகே
ஆனாலும் அதிகமானால்
பாகலை விடக் கசப்பாய்...

தோட்டத்துக் காய்களில்
கல்லடி...
காய்த்த மரமாம்...
பூத்தலும் காய்த்தலும்
அதன் இயல்பில்லையா...?

வனதேவதைகளை
வதைத்துவிட்டு
வம்ச விருத்தி எப்படி...?

உணர்தலும்
உணரப்படுதலுமான வாழ்வில்
இயற்கையையும் இளமையையும்
முறையற்று அணுகுவதா...?

உண்ணப் படும்
விலங்குகளே
மனிதனை உண்ணும்
உயிர்க்கொல்லிகளாய்...

காற்று மண்டலமே
கனல் மண்டலமாக
சுற்றுப்புறம் நம்மை
சுடும்முன் சுதாரிப்போம்...

உலகின் மேல் விழுந்த
காக்கை எச்சமாம்
சுவாசத்தைக் கூட
மாசு படுத்தும் வியாதிகள்...
மரவுரி உடுத்து வனவாசம்
செல்ல வேண்டாம்.

மனக் கட்டுப்பாடு வேண்டும்...,
இயற்கையையும் இளமையையும்
அனுபவிப்பதற்கு...

மனிதராய் சிந்திப்போம்...
மனிதம் தந்து
மனிதம் வாங்கி வாழ்வோம்...

புதன், 12 ஆகஸ்ட், 2009

ஆனந்த அலைகள்

காலையில் கைகளில்
தவழ்ந்த எதிர்த்த வீட்டுக்
குழந்தையின் வாசம்
குளித்தபின்னும் என் மேல்...

பஞ்சுப் பொதியாயும்,
ரோஜாக் கூட்டமாயும்,
தண்ணென்ற குளுமையுடன்
சுகந்தமான சுமையாய்...

பார்க்கத் திகட்டாத
பரவசக் கனவாய்...

ஞாபகம் தண்ணீருக்குள்
கிடக்கும் தாவரங்களைப்
போல் அலைந்தது....

கையில் அடித்துக்
கணக்கு சொல்லித் தந்த
என் மகன் இன்று
என் கையில் தட்டிக் கணினி
சொல்லித் தருகிறான். ..

குழந்தையாக இருந்த
அவன் ஆண்மகனாக
அவனிடம் கற்கும்
குழந்தையாக நான்.,,.

தட்டப்பட்ட கைகளிலே
குழந்தமையின் வாசம்...
தழும்புகளற்ற திகைப்பு
நெடுநேரம்....!

மகரந்தம் சூல் கொண்ட பூக்கள்
காய்களாகவும் கனிகளாகவும்
தாய்மையில் பூரிக்கும்...!

இருண்ட குகைக்குள்ளும்
ஒளி தழுவி வனப்பாக்கும்....!
சுனை பெருகி வளமை வரும்...!

வெம்மையும் குளுமையுமாய்
சூரியனும் சந்திரனும்...

பிரபஞ்சச் சுருளில்
கரை அணை என்ற
தடைகள் உடைத்து
ஆனந்த அலைகளில்
ஆன்மா. ...! அம்மாவாய்....!!

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கணவன்

அர்த்தமில்லாமல் தொணதொணக்கும்
மனைவியின் முன்
புன்னகை மன்னன்!!!!
பூவிழிக் கண்ணன்!!!!!

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

பேரின்பப் பெட்டகமே

வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்து காதலிக்க
பெற்றோர் தேர்ந்தெடுத்த
பேரின்பப்பெட்டகமே!!!
பொறுமையின் திலகமே !!!

வேலையற்றவனின்
வீண்பொழுதாய் நானிருக்க
காலச் சக்கரத்தைக்
காலில் மாட்டி
பேச நேரமில்லாப்
பெருமகனே நீ வந்தாய் .

கண் எனும் குளத்துக்குள்
கண்களாலே கல் எறிந்தாய் ....
எண்ணச் சிதறல்களாய்
எவ்வளவு இன்ப அலைகள் ....

கண் எனும் தூண்டிலில்
கண்களே மீன்களாய் ....
நெஞ்செனும் மாடத்துள்
உட்புகுந்த தீபமாய் ...

பேரின்பப்பெருவாழ்வே !!!
நீயாக நானிருக்க,
நானாக நீயிருக்க,

நமக்கெதிரெ நாம் காண
நாம் போல நம்மிருவர் ...
நமக்குள்ளே ஏது பிரிவு?

மனம் பேச நினைப்பதெல்லாம்
உடல் உணர்வால்
மலர்ந்து விழ...

எண்ணங்களால் இணைந்து
வாழ்தலே காதலாம்
எனப் புரிந்த பேரிளம்
பிராயம் இது !!!

மாலை நேரப்பறவைகள்
சலசலத்து ஆனந்திக்கும்
ஆலமரம் போல்

அன்பெனும் கிளை பரப்பி ,
ஆதுரம் எனும் வேர் பதித்து ,
வம்சத்தை வழி நடத்தி ,

வந்தோரை அரவணைத்து ,
வாழ்வெனும் ஒளி சூட்டி,
வளமுடன் வாழ்க நமது காதல்!!!!!

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆயாவின் வீடு

ஐயாவின் பட்டாலை,
கணக்கப்பிள்ளைகளின் முகப்பு,
ஆயாவின் சமையற்கட்டு,
பாட்டியின் இரண்டாம் கட்டு...
எந்தப் பொறியாளரும் வியக்கும்
செட்டி நாட்டுக்கட்டுமானம்.....!

சின்னஞ்சிறு வயதில்,
விடுமுறை நாள்களெல்லாம்
ஆயா வீட்டுப் பசுமை...!

கைப்பெட்டி, பெட்டகம்,
தொலைபேசி, தொலைக்காட்சி,
குளிரூட்டி, குளிர்ப்பெட்டி,...!
சடைப்பிரம்புப் பாயின் மேல்
திண்டுச் சிம்மாசனத்தில்
மகாராஜாவாய் ஐயா...!!
அவ்வப்போது ஆழ்ந்து சிந்திக்க ,
அரைத் துயில் கொள்ள குறிச்சி. ...

பாக்கியத்தக்கா, ராமாயி அக்கா
என்ற சேடிப்பெண்கள் புடை சூழ
மகாராணியாய் ஆயா.....!!

மரவையிலே பலகாரம்,
சீப்புச்சீடை மனகோலம்.
சிகப்பி அக்கா கைவண்ணம்.....!

மணக்க மணக்க கறிக்குழம்பும்,
கோழிக்குருமாவும், மீன் வறுவலும்
அதை விட இனிக்க இனிக்கப் பேச்சும்
இளஞ்சிரிப்புமுகமுமாய் ஆயா.....!!

சில மாலை நேரம்,
தாய் இல்லாத் தனி நேரம்,
தாய் காண மனம் ஏங்கும்...!!!

பகலில் தாமரை பூத்த மரத்
தூண்களெல்லாம் இரவானால்
தலை விரித்த பேய் போல
முகம் காட்டும்.......
கழிவறை செல்ல
கைபிடித்து துணை தேடும்...

பட்டியக்கல்லில்
தாவாங்கட்டை அடிபடாத
பல் உடையாத
பாக்கியசாலி யாருமுண்டோ?

தூண் நாகத்தின் தலை மீதேறியும்,
ஊஞ்சலில் ஆடிக் காலால்
உத்திரவளையம் தொட்டும் ,

வளவினில, முகப்பினிலே
கல்லா,மண்ணாவும்,
ஆல்வீட்டினிலே
கண்ணாமூச்சியும் ஐஸ்பாலும்,

கீழ்வாசலிலே நொண்டியும்,
ஏழுகல்லும், பல்லாங்குழியும்,
தாயமும், கிளியாந்தட்டும்,
குலைகுலையாமுந்திரிக்காவும்
ஆடாத கால்களுண்டோ...?

ஸ்நேக்ஸ் அண்டு லேடர்ஸ்,
கேரம் போர்டு, செஸ்,
சைனீஸ் செக்கர்ஸ் என
விளையாட்டுகள் வேறு பேரைச்
சூடிக்கொண்டாலும்,
பரம்பரைகள் மாறினாலும்
பால்யம் மாறுவதில்லை....!!!!

அம்மான் மக்களும்,
பெரியத்தா மக்களும்
வளர்ந்து பிரிந்தாலும்
சந்திக்கும் போதெல்லாம்
தித்தித்கிறது. ....!!!!

நாகு மாமாவின் புத்தக அலமாரியே
எங்கள் பொது அறிவுப்பெட்டகம்....!
அணிலும், அம்புலி மாமாவும்,
பாப்பா மலரும், பாலமித்ராவும்,

மாண்ரெக் லொதாரும், ரிப்கெர்பியும்,
சிஸ்கோ பாஞ்சோவும்,
இரும்புக்கை மாயாவியும்,
வேதாளரும், பிக்மி குள்ளர்களும்
எங்கள் ஆதர்ச நாயகர்கள்...!!!

ஊர் விட்டு ஊர் செல்லும்
எம் போன்ற நாடோடியர்க்கு
ஆயா வீடே பண்பாட்டுப் பயிலகம்.....!

குலப்பெருமைக் கல்வியகம்.....!!
உழைக்கவும் கற்றுத்
தந்த பல்கலைக்கழகம்.....!!!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பிருந்தாவனம் தெரு

அந்தத் தெருவிலேதான் இருந்தது,
எங்கள் வீட்டை வாங்கியவரின் வீடும்......

வாங்குவதற்கு எந்த முகாந்திரமும்
இல்லாததுபோல, விற்பதற்கும்
எந்த முகாந்திரமும் இல்லாமல் இருந்தது,
பராமரிக்க முடியவில்லை என்பது தவிர. .....

நூறாண்டுகளுக்கும் மேலாய்
முன்னோர்களெல்லாம்
ஒரே வீட்டில் வாழ்ந்திருக்க,
நூறு நாட்கள் கூட
இருக்க இயலாமல்
பணிக்கான மாறுதலில்
பிரிந்து வந்தோம்......

எடுக்க முடிந்த பொருட்களுடன்,
எடுக்க முடியா நினைவுகளுடன்......

அடிக்கடி சந்திக்க இயலா
ஏழைச் சினேகிதியின் வாழ்க்கைச் சித்திரம்
போலப் பாழ்பட்டுக் கிடந்தது......

ஒவ்வொரு முறை சென்று பார்க்கும் போதும்
வந்து குடியிருந்தவர் போலெல்லாம்
முகம் மாறிற்று வீடு. ....

நாடோடிகள் போல நாம் பயணம் செய்ய
நமது ராஜாங்கமோ இன்னொருவர் பிடியில்.....

கும்பாபிஷேகம் போல் நடந்த கிரஹப்பிரவேசம். ....
வெள்ளிக்குடங்களும் பட்டுப்புடவைகளுமாய்,
சாண்ட்லியரும் கிரானைட் பாலீஷுமாய்,
ப்ரென்ச் டோரும் காலப் வைத்த திரைகளுமாய்,
வாஸ்துப்படிக் கட்டி ஹோமம் செய்த வீடு. ...!!!

லவ குசர்களாயும், ராமலக்ஷுமணர்களாயும்,
கிருஷ்ண பலராமர்களாயும் என் பிள்ளைகள்
இணை பிரியாமல் கிடந்து அதகளம் செய்த வீடு...!!!

லா.ச. ராமாமிர்தத்தின் அருந்தாத பாயாசமாய்
இனித்துக்கிடக்கிறது எனது வீடு....!!!!

வாழ்வாதாரங்களை விட்டுப் புலங்கள் பெயரும்
எல்லா தேசத்து அகதிகளுக்கும்
என் மனதின் இரங்கற்பா இது......

சனி, 1 ஆகஸ்ட், 2009

நாம் தமிழர்

ராஜராஜன் காலத்துக்கும்
முற்பட்ட குரோதம் இது

தஞ்சையில் நாம் சிங்கள நாச்சியார்
திருக்கோயில் எழுப்பியுள்ளோம்
ஆனால் நம் சீதையைக் கூட
சிறை வைத்தவர்கள் அவர்கள்

வெலிக்கடைச் சிறையிலும்
முள்ளிவாய்க்காலிலும் மாளவும்
முள் வேலியில் பாழ் வெளியில்
வாழவுமா நாம் பிறந்தோம்?

புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லவேண்டியவர்கள்
யுத்தம் சரணம்,ரத்தம் சரணம்
என்றல்லவா சொல்கிறார்கள்

அதிகாரம் வேண்டாம்
ஆடைகள் தாருங்கள்
சுதந்திரம் வேண்டாம்
சோறாவது போடுங்கள்

அனைவருமே வந்தேறிகள் எனும்போது
தமிழர்க்கு மட்டும் ஏன் தலைக்குனிவு?
தந்தையும் தாயுமாய் மகன் மகளுடன்
வாழும் இன்பதைத் தாருங்கள்

சாதியால் இனத்தால் மட்டுமல்ல
மனித நேயத்தால் நாம் தமிழர்கள்
எண்ணங்களால் ஒன்று பட்டு
எம் தமிழர் மீண்டு வர நாம் கரம் கொடுப்போம்