எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆயாவின் வீடு

ஐயாவின் பட்டாலை,
கணக்கப்பிள்ளைகளின் முகப்பு,
ஆயாவின் சமையற்கட்டு,
பாட்டியின் இரண்டாம் கட்டு...
எந்தப் பொறியாளரும் வியக்கும்
செட்டி நாட்டுக்கட்டுமானம்.....!

சின்னஞ்சிறு வயதில்,
விடுமுறை நாள்களெல்லாம்
ஆயா வீட்டுப் பசுமை...!

கைப்பெட்டி, பெட்டகம்,
தொலைபேசி, தொலைக்காட்சி,
குளிரூட்டி, குளிர்ப்பெட்டி,...!
சடைப்பிரம்புப் பாயின் மேல்
திண்டுச் சிம்மாசனத்தில்
மகாராஜாவாய் ஐயா...!!
அவ்வப்போது ஆழ்ந்து சிந்திக்க ,
அரைத் துயில் கொள்ள குறிச்சி. ...

பாக்கியத்தக்கா, ராமாயி அக்கா
என்ற சேடிப்பெண்கள் புடை சூழ
மகாராணியாய் ஆயா.....!!

மரவையிலே பலகாரம்,
சீப்புச்சீடை மனகோலம்.
சிகப்பி அக்கா கைவண்ணம்.....!

மணக்க மணக்க கறிக்குழம்பும்,
கோழிக்குருமாவும், மீன் வறுவலும்
அதை விட இனிக்க இனிக்கப் பேச்சும்
இளஞ்சிரிப்புமுகமுமாய் ஆயா.....!!

சில மாலை நேரம்,
தாய் இல்லாத் தனி நேரம்,
தாய் காண மனம் ஏங்கும்...!!!

பகலில் தாமரை பூத்த மரத்
தூண்களெல்லாம் இரவானால்
தலை விரித்த பேய் போல
முகம் காட்டும்.......
கழிவறை செல்ல
கைபிடித்து துணை தேடும்...

பட்டியக்கல்லில்
தாவாங்கட்டை அடிபடாத
பல் உடையாத
பாக்கியசாலி யாருமுண்டோ?

தூண் நாகத்தின் தலை மீதேறியும்,
ஊஞ்சலில் ஆடிக் காலால்
உத்திரவளையம் தொட்டும் ,

வளவினிலே, முகப்பினிலே
கல்லா,மண்ணாவும்,
ஆல்வீட்டினிலே
கண்ணாமூச்சியும் ஐஸ்பையும்,

கீழ்வாசலிலே நொண்டியும்,
ஏழுகல்லும், பல்லாங்குழியும்,
தாயமும், கிளியாந்தட்டும்,
குலைகுலையாமுந்திரிக்காவும்
ஆடாத கால்களுண்டோ...?

ஸ்நேக்ஸ் அண்டு லேடர்ஸ்,
கேரம் போர்டு, செஸ்,
சைனீஸ் செக்கர்ஸ் என
விளையாட்டுகள் வேறு பேரைச்
சூடிக்கொண்டாலும்,
பரம்பரைகள் மாறினாலும்
பால்யம் மாறுவதில்லை....!!!!

அம்மான் மக்களும்,
பெரியத்தா மக்களும்
வளர்ந்து பிரிந்தாலும்
சந்திக்கும் போதெல்லாம்
தித்திக்கிறது. ....!!!!

நாகு மாமாவின் புத்தக அலமாரியே
எங்கள் பொது அறிவுப்பெட்டகம்....!
அணிலும், அம்புலி மாமாவும்,
பாப்பா மலரும், பாலமித்ராவும்,

மாண்ரெக் லொதாரும், ரிப்கெர்பியும்,
சிஸ்கோ பாஞ்சோவும்,
இரும்புக்கை மாயாவியும்,
வேதாளரும், பிக்மி குள்ளர்களும்
எங்கள் ஆதர்ச நாயகர்கள்...!!!

ஊர் விட்டு ஊர் செல்லும்
எம் போன்ற நாடோடியர்க்கு
ஆயா வீடே பண்பாட்டுப் பயிலகம்.....!

குலப்பெருமைக் கல்வியகம்.....!!
உழைக்கவும் கற்றுத்
தந்த பல்கலைக்கழகம்.....!!!

டிஸ்கி:- 

செட்டிநாட்டுச் சொல்வழக்கு:- 

29. முகப்பு -  வீட்டின் முன் பகுதி. இது  முகம் போன்ற வரவேற்கும் அழகு பொருந்திய பகுதி என்பதால் -- முன் கோப்பு அமைந்த பகுதி என்பதால் முகப்பு என அழைக்கின்றனர்

30. பாட்டி - ஐயாவின் அம்மா

31. இரண்டாம் கட்டு - செட்டிநாட்டு வீடுகள் இரண்டு கட்டு, மூன்று கட்டு உள்ளவை.

32. செட்டிநாட்டுக் கட்டுமானம் - சிறப்பான கட்டுமானத்தை இப்படி சிறப்பித்துக் கூறுவார்கள்.

33. கைப்பெட்டி - ஆண்கள் வியாபாரத்திற்காகக் கொண்டுவிக்கப் போகும்போது முதல் வைத்துச் செல்லும் பெட்டி.

-- திருமணம் , புதுமனை புகுதல் போன்ற வைபவங்களில் இதில்தான் பணம் மற்றும் கணக்கு நோட்டு, காப்புக் கட்டும் பட்டு, பவுன்/வெள்ளிக் காசு, நோட்டுப்புத்தகம், பேனா, சில்லரை, ரூபாய் நோட்டுகள் , கவர் இன்னபிற  எல்லாம் வைத்திருப்பார்கள்.  

34. பெட்டகம் :- இதில்தான் அந்தக்காலத்தில் நகை பணம் சாமிக்கான பொருட்கள், தங்கம் வெள்ளி எல்லாம் வைத்திருந்திருக்கிறார்கள். வீட்டிலேயே ஒரு சேஃப்டி லாக்கர் போல உள்ளது இது.

-- நான்கு ஆட்கள் சேர்த்து தூக்கினாலும் அசைக்க முடியாத அளவு கனம் உடையது. 

35. சடைப்பிரம்புப் பாய்  - இது பர்மாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வகையான பிரம்பு மரத்திலிருந்து பின்னப்பட்ட பாய். 

--ஒவ்வொருவர் வீட்டுப் பட்டாலையையும் இது தினமும் அலங்கரிக்கும்.  

-- விசேஷ சமயங்களில் இதில்தான் அமர்ந்து முக்கிய முடிவை எடுப்பார்கள்.

-- பத்தடிக்கு இருபது அடி அகலமும் நீளமும் கொண்டது இப்பாய்

36. திண்டு - சதுரத் தலையணை.

-- பட்டாலையில் சடப்பிரம்புப் பாயில் வைக்கப்பட்டிருக்கும் இது. 

முதுகைச் சாய்(ந்)த்து அமர்ந்து கொள்ளலாம்.  

37. குறிச்சி :-  ஓய்வு நேரத்தில் படுத்து ஓய்வெடுக்க மரத்தால் செய்யப்பட்டு ஓலையால் பின்னப்பட்ட ஈஸி சேர். 

-- இதில் கால்பக்கம் ஒரு மடிப்பு உண்டு அதை விரித்துவிட்டுக் கால்களையும் அதன் மேல் தூக்கிப்போட்டுப் படுத்துக்கொள்ளலாம். மிகவும் வசதியானது.

38. மரவை :- மரத்தால் ஆன தட்டுகள்

-- மாலை வேளைகளில் முறுக்கு வடை, அதிரசம், மாவுருண்டை, சீடை, தேன்குழல், மனகோலம் போன்ற பலகாரங்களை வைத்துச் சாப்பிட உதவுவது.

39. சீப்புச்சீடை, மனகோலம் - செட்டிநாட்டின் ஸ்பெஷல் பலகாரங்கள்.

 40. தாமரை பூத்த மரத்தூண்கள். :- ஒவ்வொரு பட்டாலையிலும் 4 முதல் 6 அல்லது 8 வரை பட்டியக்கல்லை ஒட்டித் தூண்கள் இருக்கும். அதில் தாமரையைத் தலைகீழாகக் கவிழ்த்ததுபோல கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல் மிகப்பிரம்மாண்டமான தேக்குமரத்தூண்கள் இரும்புப் பட்டிகொண்டு வைக்கப்பட்டிருக்கும்.

-- பத்தியில் 20 முதல் மேலும் அதிக அளவில் கல் நாகம் வைத்த தூண்களும் உண்டு.

41. பட்டியக்கல் - வளவு, முகப்பு, பத்தி, பட்டாலை போன்ற பகுதிகளின் விளிம்புப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு வகைக் கருங்கல். 

-- தாழ்வாரத்திலிருந்து மழைத்தண்ணீர் வடியும்  இடங்களிலும் இவை செவ்வகக் கற்களாகப் பொருத்திப் பூசப்பட்டிருக்கும்.

42. உத்தர வளையம். - இது ஒவ்வொரு உத்தரத்திலும் பொருத்தப்பட்டிருக்கும்.

-- வளவில் உள்ள ஊஞ்சலில் ஆடும்போது இதில் காலை நீட்டியோ கையை நீட்டியோ தொட்டு ஆடுவது பழக்கம்.

43.  வளவு - இது பட்டாலையையும் கீழ் வாசலையும் ( முற்றம் ) இணைக்கும் பகுதி.

-- இரண்டுக்கும் இடைப்பட்ட செவ்வக வடிவம் உடையது.

-- இது நாற்புறமும் வளைத்து--  வளைவாக அமைந்து இருப்பதால் வளவு என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.. 

44. ஆல்வீடு - இது வளவுக்கும் இரண்டாம் கட்டுக்கும் இடைப்பட்ட பகுதி

-- வெய்யில் காலங்களில் பட்டாலையில் , பத்திகளில் படுத்துக்கொள்ளலாம் என்றால் குளிர் மழை நாட்களில் ஆல்வீடை உபயோகப்படுத்துவார்கள். சும்மா கிச்சென்று இருக்கும்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.


27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14


28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


9 கருத்துகள்:

 1. you have taken us to those wonderful days of grandma's house through this wonderful poem. All have come in front of our eyes.

  பதிலளிநீக்கு
 2. Mey சொன்னது போல், எட்டு வருட கோட்டையூர் வாசத்தை கண் முன் நிறுத்தியது அழகான உங்கள் கவிதை. தொடரட்டும் உங்கள் மலரும் நினைவுகள்.
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. அடடா அடடா - நமக்கெல்லாம் ஆயா வீடு தான் சொர்க்கம் - உண்மை - அவ்வீட்டின் மகிமை மறக்க இயலாது - கவிதை - மலரும் நினைவுகளாய் சிறு வயதில் அனுபவித்ததை அசைபோட்டு ஆனந்திக்க வைக்கும் கவிதை - ஒவ்வொரு சொல்லும் எங்கோ அழைத்துச் செல்கிறது.

  திரும்பத் திரும்ப படித்தேன் - ரசித்தேன்

  நல்ல கவிதை நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. என்னை பல வருடங்களுக்கு முன் அழைத்து சென்று விட்டீர்கள்.. உங்கள் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி..

  - பழ. சு

  பதிலளிநீக்கு
 6. என்னை பல வருடங்களுக்கு முன் அழைத்து சென்று விட்டீர்கள்.. உங்கள் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி..

  - பழ. சு

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...