எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 மே, 2026

சோகி சிவா - 3

 

3

ய்த்தான் வாங்க வாங்க” என்று சம்பந்தியைப் பார்த்ததும் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டாக முருகப்பன் செட்டியார். கண்கள் கலங்கி இருந்தன. அவுக மனைவி சீதாளும் கண்கலங்க நின்றிருந்தாள்.

அர்த்தசாமம் ஆகியிருந்தது. சில்வண்டுகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சத்தில் மஞ்சளாய் இருந்தது செக்காலை சுகுமாரம்மா ஆஸ்பத்திரி. கைராசிக்கார டாக்டர் என்று பெயர் அந்தம்மாவுக்கு. அநேகமாகத் தாயும் சேயும் நலமாகி அந்தச் சேய்களும் திருமணமாகித் தாயாகி அந்தம்மாவிடமே பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறாக.

“அம்மா எப்பிடியும் காப்பாத்திருவாக . கவலைப்படாதீக. நடராசரும் தாயுமானவரும் தொணையிருப்பாக. எங்க ஆதீனமிளகி ஐயனாரும் உங்க ராங்கியம் கருப்பரும் தலைமாட்டுல காவல் இருப்பாக. “ என்று அவர்கள் இருவரையும் தேற்றினாக ஆவுடையப்பண்ணன்.

ஆப்பரேஷன் தியேட்டரிலேயே கிட்டத்தட்டப் பத்துமணி நேரமாக சுகப்பிரசவம் ஆக முயற்சித்துக் கொண்டிருந்தார் சுகுமாரம்மா. காலையில் பத்து மணிக்கு ஒமையாள் ’நீர் கொடிபோல எறங்குது. நிக்கலை’ என்று சொல்ல சோதனைக்காக அழைச்சுக்கினு வந்திருந்தாக முருகப்பனும் சீதாளும்.

”அந்தக்காலத்துல எங்களுக்கெல்லாம் அடுப்படிப் பத்தியிலேயே வலியெடுத்துப் பொக்குன்னு புள்ளை பொறந்திரும். நாங்க ஆசுபத்திரி எல்லாம் போனதில்லை. இவளுக்கும் அப்பிடித்தான் ஒமையா பொறந்துட்டா. இப்பவுல்ல ஊசி மாத்திரை ஆசுபத்திரி எல்லாம்’” என்று சொல்லிக்கொண்டிருந்தாக ஒமையாளின் ஆயா, சீதாளின் ஆத்தா லெச்சுமி ஆச்சி. 

உள்ளே ஒமையாளின் குரல் வலியோடு கேட்டுக் கொண்டிருந்தது. முக்கி முக்கி முனகிப் பதறி கால்மாற்றிக் கால் வைத்து நின்றுகொண்டிருந்தாள் . சிறிது நேரத்தில் ஒமையாளின் குரல் இன்னும் உரக்கக் கேட்டது. கேக்கும்போதெல்லாம் பதறியது அனைவருக்கும்.

”நேரங்கெட்ட நேரத்தில் இந்தாச்சி வேற என்னத்தையாவது பேசிக்கிட்டு இருப்பாக. விஷயத்தோட தீவிரம் தெரியாம. நல்லவேளை இன்னும் வீட்டுல வைச்சிராம ஆசுபத்திரில கொண்டுவந்து சேர்த்தாகளே. ” என்று நினைச்சாக ஆவுடையப்பன் செட்டியார்.

நர்சுகள் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது. ”பனிக்கொடம் ஒடைஞ்சிட்டதால சீக்கிரம் பிள்ளைய எடுத்துர்றது நல்லது. ஆனா தலை திரும்பல. லேசா வெட்டிவிட்டு ஆயுதம் போட்டுத்தான் எடுக்கணும். ஏற்கனவே ரத்தப் போக்கு இருக்கு “

சீதாளையும் லெச்சுமி ஆச்சியையும் கூப்பிட்டு டாக்டர் சொன்ன விஷயம் முருகப்பண்ணன் மூலம் ஆவுடையப்பண்ணனுக்கு வந்தது. எல்லாரும் அரை குறை மனத்தோடு சம்மதிக்க சுகுமாரம்மா ஆபரேஷன் தியேட்டருக்குப் போனார்கள்.

முக்கால்மணி நேரம் கடந்திருக்கும். ஆந்தை ஒன்று கர்ணகடூரமாகக் கூவியது. சட சடவென மரக்கிளையிலிருந்து பட்சிகளின் இறக்கைச் சத்தம் கேட்டு ஓய்ந்தது. ’அட சட்’ என்று வராந்தாவில் வந்து வானம் பார்த்து வெறிச்சாக ஆவுடையப்பன்.  முள் படுக்கையில் கிடப்பது போலிருந்தது அவுகளுக்கு. கணம் ஒவ்வொன்றும் யுகம் போவது போல் நகர்ந்தது.

“ங்கா.. ங்கா” என்ற சப்தம் உலுப்ப அனைவரும் எழுந்து ஓடினார்கள். சிறிதுநேரம் கழித்து நர்ஸம்மா வெளியே வந்து “பொம்பளப் புள்ள பொறந்திருக்கு “ என்ற நல்ல சேதியைச் சொன்னாள்.

“ஆத்தா சிவகாமி பொறந்துட்டியா” என்று வாய் நிறைய ஆசையோடு சத்தமாகச் சொன்னாக ஆவுடையப்பன். அவர்கள் மனைவியின் பெயர் சிவகாமி. இதைக்கேட்டதும் லெச்சுமி ஆச்சிக்கு என்ன தோணியதோ ”சோகியே வந்து பொறந்துட்டா.. சோகு ஆத்தா சோகு” என்றார்கள். அதைக் கேட்டதும் ஆவுடையப்பண்ணன் முகம் கோணியது.

”சோகின்னாவது சொல்லுங்க. சோகு, சோகம் எல்லாமில்லை” என்றார்கள். “சோகி சோகு எல்லாம் ஒண்ணுதானே இவுக என்ன புதுசா சொல்லுறாக “ என்று தோள்பட்டையில் முகவாயை இடித்தபடி திரும்பிக்கினாக லெச்சுமி ஆச்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...