எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2022

சிந்திக்க வைத்துச் சென்ற சின்னக் கலைவாணர் விவேக்.


"இருநூத்துச் சொச்சம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஒடப்போகுது.” எனக்கு எஸ் பியைத் தெரியும் ஆனா அவருக்கு என்னைத் தெரியாது.” ” என்னடா ஒரு அனிமல் ப்ளானெட்டே இலைக்குக் கீழ இருக்கு. நடக்குறது, பறக்குறது, நீஞ்சுறது, ஓடுறது, இது ஓடுறது போடுறது”  இவை நடிகர் விவேக்கின் பிரபலமான வசனங்களில் சில. 

நூறாண்டு காலத் திரைச் சரித்திரத்தில் எத்தனையோ முன்னவர்கள். நகைச்சுவை நாயகர்கள். விழியை உருட்டிச் சிரிக்க வைத்த இராமச்சந்திரன், உடம்பை வில்லாக வளைத்துப் பேசும் நாகேஷ், பாட்டுப் பாடியும் ஆடியும் அசத்திய சந்திரபாபு, நெளிந்து வளைந்து பேசும் சுருளி ராஜன், ஏற்ற இறக்கத்தோடு பேசும் தேங்காய் சீனிவாசன், எகிறி உதையும் கவுண்டமணி, எட்டி ஓடும் செந்தில் இவர்களுக்குப் பின் நகைச்சுவை உலகை ஆட்டிப் படைத்தவர்களில் முக்கியமானவர்கள் வடிவேலுவும் விவேக்கும். 


தன் அதிரடி நகைச்சுவைக் கருத்துக்களால் பொதுஜனத்தைக் கவர்ந்த கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்களைப் போல் ஒவ்வொரு படத்திலும் தன் பங்கை வெறும் நகைச்சுவையாக இல்லாமல் விழிப்புணர்வுக் கருத்துக்கள், பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புகுத்திப் புதுப்பித்தவர் மக்கள் கலைஞன் விவேக்.


பெண் சிசுக்கொலை, கருக்கொலை, சாதிக்கொடுமை, தீண்டாமை, லஞ்சம், மக்கள் தொகை அதிகரிப்பு, ஊழல், மூடப்பழக்க வழக்கங்கள் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தனது கிண்டலான தொனியில் சாடிச் சிந்திக்க வைத்தவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்றும் அவரது நகைச்சுவை பாணியைப் பின்பற்றக் கூடியவர்கள் யாருமே இங்கு இனி இல்லை என்பதும் சந்தானம் போன்ற சக நடிகர்களின் கருத்தாக உள்ளது. தாங்கள் இணைந்து நடித்தது குறித்தும், விவேக் மிக நல்ல மனிதன் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் கண்கலங்க நெகிழ்ந்து கூறியுள்ளார் வடிவேலு. 


விவேக் என்ற விவேகானந்தன் கோவில்பட்டியில் 1961 இல் பிறந்தார். அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் பட்டம் பெற்றபின் பி எஸ் என் எல்லில் பணி. ஹியூமர் கிளப் மூலம் மிமிக்ரி கலைஞராக கே பாலச்சந்தருக்கு அறிமுகமானார். அவரது மோதிரக் கையால் குட்டுப் பட்ட  முதல் படம் ”மனதில் உறுதி வேண்டும்.” 1987 இல் வெளியான இதில் விவேக் வெள்ளந்தியாக முழியை உருட்டிச் சிரிக்க வைப்பார். அக்காவின் மேல் பாசமான தம்பியும் கூட.


அடர்த்தியான கேசம், கதாநாயகனுக்குரிய லட்சணங்கள் இருந்தும் விவேக் ஒரு காமெடியனாகவே அறிமுகப்படுத்தப்பட்டார். அநேகப் படங்களில் கண்ணை உருட்டி முகத்தை ஒரு விதமாகத் திருப்பி அவர் செய்யும் முத்திரை அபிநயங்கள் குபீர் சிரிப்பை உண்டாக்குபவை. இவரை மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகப்படுத்திய அதேசமயம் கிருஷ்ணனை அழகனில் கேபி காமெடியனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் இவருக்குக் கிடைத்த வீச்சு அவர் பெறவில்லை. 


உழைப்பாளி, வீரா, காதல் மன்னன், வாலி, குஷி, அந்நியன், சிவாஜி, பாளையத்து அம்மன், லவ்லி, அள்ளித்தந்த வானம், யூத், காதல் சடுகுடு, விசில், காதல் கிசுகிசு, பேரழகன், சாமி, திருமலை, கேளடி கண்மணி, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, உனக்காக எல்லாம் உனக்காக,  ரன் , லூட்டி, டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம்,, விசில், பாய்ஸ், சிங்கம், மாப்பிள்ளை , முகவரி, மின்னலே, நாமிருவர் நமக்கிருவர், பட்ஜெட் பத்மநாபன், பார்த்திபன் கனவு என அடுத்தடுத்துப் படங்கள் வர ஒரு கட்டத்தில் 2000  - 2001 ஆகிய இரண்டு வருடங்களில் 50 படங்களில் கூட நடித்திருக்கிறார்.


இவரது வசனங்கள் வெகுஜனத்தை வெகுவாக கவர்ந்தவை. பட்டையக் கிளப்பும் இவரது வசனங்கள் சில. ”எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்”, ”யாரும் இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துறே”, ”ஹைவேஸ்ல அடிபட்ட தவளை மாதிரிக் கிடக்கிறேன்” இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்”.  ”கோபால்!!! கோபால்!!!.” ”டேய் சின்னத்தாடி, பெரியதாடி இன்னிக்கு உங்களுக்கு ஷேவிங்க்தாண்டி..”



பெண்களோட மனதில் என்ன இருக்கு என்பதை அறிய வேண்டும் என அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறுவது, அடுத்தவர்கள் உள்ளத்தில் நினைப்பதை எல்லாம் கேட்கக் கூடிய சக்தி உடையவரானதும் செய்யும் கலாட்டா, ஆல் தோட்ட பூபதி, அல்கேட்ஸ் என்னும் பெயர் பற்றிக் கூறுவது, சிக்ஸ்பேக் ஆறுமுகமாக போலி வெயிட்டைத் தூக்குவது, அமைச்சரின் மகனாக வேஷ்டியைத் தூக்கிக் கொண்டே அலைவது, லார்டு லபக்தாஸா என்று  மருத்துவர் மாத்ருபூதத்தைக் கிண்டலடிப்பது என அதகளப்படுத்துவார். 


நான் ரசித்துப் பார்த்த இவரது படங்கள், மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள், ரன், சாமி, அந்நியன். தூள் படத்தில் சிக்ஸ் பேக் ஆறுமுகமாக ரீமா சென்னை மயக்க முற்படுவது, அவருக்குக் கேன்சர் என்று தெரிந்ததும் மனம் பதறுவது, மின்னலே படத்தில் வண்டியில் தொங்கும் எலுமிச்சையை கேரிங்கா இருக்கு என்று வாயில் பிழிந்து கொள்வது, இரு சக்கர வாகனத்தில் அதிரடியாகச் சப்தமிட்டு ”ஏய் என்னா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா” என்று மிரட்டியபடி வரும் பெண்களைப் பார்த்து மிரள்வது, பசுபதி படத்தில் ”என் கண்கள் அதை நீ பார்க்கலையே ” எனக் கண்கலங்குவது, ஆல் தோட்ட பூபதியாக, ”ஆட்டுக் கால் பிரியாணில லெக் பீஸ் சாப்பிடுவாண்டா அவன்”  என அதிர்ச்சியடைவது, டும் டும் டும் படத்தில் எளிமையான ஜோதிகாவைப் பார்த்துக் காதல் வயப்படுவது, இன்னுமொரு படத்தில் அஞ்சுவுக்குக் கணவனாக உத்யோகம் பார்ப்பது, அவரைப் பார்த்து மிரட்சியடைந்து உளறிக் கொட்டுவது, தேவதர்ஷிணியின் கணவனாக வந்து அவரது தந்தையின் படத்தை மாதிரியாக வைத்து ஒரு பிச்சைக்காரரை வரைந்து அவரிடமே திட்டு வாங்குவது, முதல் மரியாதை ராதா போல் இருக்கும் சாந்தி வில்சனிடம் ஓடிப்பிடித்து விளையாடுவது, நாற்காலி கவரைப் பிய்த்து ஒரு குழந்தைக்குச் சட்டையாகப் போடுவது என எத்தனை பரிமாணங்கள். அவரது நடிப்பில் நீங்கள் ரசித்த இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்களையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம்.

 மனிதர்களின் குறைகளை, அறியாமையை இவரைப் போல எள்ளலுடன் சுட்டிக் காட்டியவர் அரிது. 


சமூகத்தில் நிகழ்பவைகளை ஒரு கேலியோடு நகைச்சுவையாகப் பகிர்வது அவருக்குக் கைவந்த கலை. அவை கமர்ஷியலாகவும் சக்ஸஸ் படங்கள்தான். இவருக்கெனத் தனி காமெடி ட்ராக் எழுதப் பிரசன்னா என்றொரு ஸ்க்ரிப்ட் எழுத்தாள நண்பர் உண்டு. அவர் இவருடன் சில படங்களில் தலைகாட்டியுள்ளார்.

 அழகி குட்டி ஆகிய சிறந்த படங்களில் பேருக்கு ஒரு தொகையைப் பெற்று நடித்துக் கொடுத்துள்ளார் என்பது புதுத்தகவல்.


விவேக்கும் வடிவேலும் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டாலும் படிக்காதவன் படத்தில் டானாக நெஞ்சில் கட்டாரியை வாங்கி விவேக் நடந்து வரும் பாணி வடிவேலுவைப் பிரதி எடுத்தது போல் இருக்கும். “என்னது சம்சாவுக்குள்ள ரொட்டியா” என்று அசைந்து நடந்து பின்னிப் பெடலெடுப்பார்.


கிட்டத்தட்ட 235 படங்களில் நடித்துள்ளார். அதில் ”நான்தான் பாலா, வெள்ளைப்பூக்கள்” ஆகிய இருபடங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். குணச்சித்திரப் பாத்திரம், நகைச்சுவைப் பாத்திரம், துணை நடிகர் பாத்திரம்  ஆகியவற்றில் நடித்த இவர் வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமே.


2006 இல் தமிழக அரசின் கலைவாணர் விருது, 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது, எடிசன் விருது, நகைச்சுவை நடிகருக்கான தேசிய தமிழ் திரைப்பட விருது, கொடைக்கானல் பண்பலை வானொலி விருது, ஐ டி எஃப் ஏ விருது, ஏசியாநெட் திரைப்பட விருது, இதோடு சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்ஃபேர் விருதை 4 முறையும் பெற்றுள்ளார் விவேக்.


25 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையில் தன் பங்களிப்பை வழங்கியவர். பன்முகத் திறமை வாய்ந்தவர். சினிமா மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் ஷார்ட் & ஸ்வீட்டாகக் கவிதை வாசிப்பார். பிளாஸ்டிக் இல்லா தமிழகம், கொரோனா விழிப்புணர்வு என பல அரசு விளம்பரங்களில் தோன்றியவர்.


ஒருமுறை அடிபட்டுச் சிகிச்சையில் இருந்தபோது ஈஷா தன்னைத் தனக்கு உணர்த்திய உன்னதத்தைப் பற்றி உரைத்தவர் விவேக். நிம்மதியும் சந்தோஷமும் நம்மகிட்டயேதான் இருக்கு. ஆனா அதை எங்கெல்லாமோ வெளியே தேடிக்கிட்டு இருக்கோம் என்ற உண்மையை உரத்துச் சொன்னவரும் கூட.


கலாம் காட்டிய வழியில் பசுமை உலகம் திட்டம் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற ஆசையுடன் இருந்தவர். இருக்கும் வரை நிறைய மரக்கன்றுகளை நட்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். எத்தனையோ நல்ல விஷயங்களை முன்னெடுத்த விவேக் இதயநோயால் சட்டென மறைந்தது எதிர்பாராத அதிர்ச்சிதான். சீர்திருத்தக் கருத்துகள் அரங்கேறும் இடங்களில் எல்லாம் அவரும் நினைவுகூரப்படுகிறார். இந்தப் பூமிப்பந்தில் அவர் நட்ட நிறைய மரங்கள் மூலம் இன்னும் ஜீவித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...